You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வதோதரா படகு விபத்து: 12 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் பலியாக பாதுகாப்பின்றி சென்றதே காரணமா?
குஜராத் மாநிலம் வதோதரா ஹரனி ஏரியில் படகு சவாரி சென்ற 12 பள்ளி மாணவர்கள், 2 ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர்.
குழந்தைகளை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு சாயாஜி மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுகிறது என்றும் வதோதரா நகர காவல் ஆணையர் அனுபம் சிங் கெஹ்லாட் பிபிசியிடம் தெரிவித்தார்.
சுற்றுலாவுக்கு வந்த, தனியார் பள்ளியைச் சேர்ந்த 27 பேர் ஹரனி ஏரியில் படகு சவாரி செய்துள்ளனர். இதில் 23 பேர் பள்ளி மாணவர்கள், நான்கு பேர் ஆசிரியர்கள் ஆவர்.
படகில் அனுமதிக்கப்பட்ட நபர்களைவிட அதிகமான பேர் சவாரி செய்துள்ளனர். இதனால் நிலை தடுமாறிய படகு கவிழ்ந்து விபத்து நேர்ந்துள்ளது. உயிர் பாதுகாப்புக்காக அணிந்துகொள்ள வேண்டிய “லைஃப் ஜாக்கெட்” முறையாக அணிந்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
வியாழக்கிழமை மாலை சுமார் 4.30 மணி அளவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. சம்பவ இடத்தில் இருந்த பெற்றோர் ஒருவர், “படகில் 30 பேர் இருந்தனர். எங்களுக்கு விபத்து குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. உங்கள் குழந்தை பயப்படுகிறான் என்று கூறித்தான் வரவழைத்தனர்,” என்றார்.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய குஜராத் மாநில முதல்வர் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்குத் தனது இரங்கலை தெரிவித்தார்.
“அப்பாவி குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நடந்திருக்கக்கூடாது. அவர்களால் நீந்த முடியாது. சவாரிக்கான ஏற்பாடுகளைச் செய்பவர்கள் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருக்க வேண்டும். அதைக் கடைப்பிடிக்கவில்லை,” என்று தெரிவித்தார்.
அஸ்மா ஷேக் உயிரிழந்த மாணவியின் உறவினர் கூறுகையில், “12 பேர் மட்டுமே செல்லக்கூடிய படகில், 27 பேர் சென்றுள்ளனர்,” என்று தெரிவித்துள்ளார்.
“படகு முதலில் லேசாக ஒரு பக்கமாக சாய ஆரம்பித்தது. அதன்பின் திடீரென கவிழ்ந்துவிட்டது. எல்லோரும் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தனர்,” என்று படகில் சென்று மாணவி கூறியதாக அஸ்மா ஷேக் கூறினார்.
சம்பவ இடத்திலிருந்து மற்றொரு பெற்றோர் ஒருவர், “நான்கு லட்சம் ரூபாய் கொடுத்தாலும் யாருடைய குழந்தையும் திரும்பக் கிடைக்காது,” என்றார். மற்றொரு பெற்றோர், “இந்தச் சம்பவம் முழுக்க முழுக்க அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே நடைபெற்றுள்ளது,” என்றார்.
மற்றொருவர், “குஜராத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. கன்காரியா, டாக்சிலா, மோர்பி சம்பவங்களை இன்னும் நாங்கள் மறக்கவில்லை,” என்றார்.
“வடோதரா சூர்சாகர் ஏரியில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்தச் சம்பவத்திலிருந்து பாடம் கற்றிருந்தால், இந்தச் சம்பவம் இன்று நடைபெற்றிருக்காது,” என்று மற்றொரு பெற்றோர் தெரிவித்திருந்தார்.
குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்க்வி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம், “வதோதரா காவலர்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து இரண்டு பேரைக் கைது செய்துள்ளனர். விபத்துக்கு காரணமான மற்றவர்களைப் பிடிக்க ஒன்பது குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் மருத்துவர்களும் தயார் நிலையில் உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்னும் பத்து நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்,” என்றார்.
மேலும், “இந்த விவகாரத்தில், படகு பராமரிப்பவர்களுக்கும் மற்றும் ஓட்டுபவர்களுக்கும்தான் பிரதான பொறுப்பு உள்ளது. போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கவில்லை. சவாரி செய்தவர்களில் பத்து பேருக்கு மட்டுமே லைஃப் ஜாக்கெட் வழங்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “விபத்துக்கு பிறகு ஆறு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. படகுகளுக்கு பொறுப்பான ஒப்பந்ததாரரிடம் பேசியுள்ளோம்.
படகில் 15 குழந்தைகள் இருந்ததாக அவர் கூறியுள்ளார். சில ஒப்பந்ததாரர்கள் தலைமறைவாகியுள்ளனர். லைஃப் ஜாக்கெட் இல்லாமல் படகு சவாரி செய்தார்கள் என்பது விசாரணை செய்யப்படுகிறது,” என்று தெரிவித்தார்.
தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், உள்ளூர் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோதி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரண நிதியும் அறிவித்துள்ளார்.
தனது X தளத்தில் பதிவிட்ட அவர், “படகு விபத்து மிகவும் வருந்தத்தக்க நிகழ்வாகும். உயிரிழ்ந்த ஒன்றும் அறியாத குழந்தைகளின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்,” என்று பதிவிட்டிருந்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)