சைபர் கிரைம் மோசடி புகார் - அமலா ஷாஜியின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்படுமா?

    • எழுதியவர், மகாலட்சுமி தி ரா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

"எனது நண்பர் அனன்யா போரேக்ஸ்க்கு மெசேஜ் செய்தால் என்னைப் போலவே நீங்களும் வீட்டிலிருந்தே 20,000 முதல் 30,000 வரை சம்பாதிக்கலாம் நானும் இதில் முதலீடு செய்து அதிக லாபம் பெற்றுள்ளேன்.

இந்தப் பக்கம் 100 சதவிகிதம் நம்பகத்தன்மை உடையது," என தனது 4.1 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட கணக்கிலிருந்து பேசி விளம்பரம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்சர் அமலா ஷாஜி.

இதை நம்பி அமலா ஷாஜியை பின்தொடரும் ஒருவர் அந்தக் கணக்கிற்கு மெசேஜ் செய்து சுமார் 41,000 ரூபாய் வரை இழந்துள்ளார். இந்நிலையில் சென்னை ஐடி ஊழியர் ஒருவர் இதுகுறித்து போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் நடக்கும் பல மோசடிகளில் தற்போது கிரிப்டோ, மணி டபுளிங் மூலம் இரண்டு மடங்கு வருமானம் ஈட்டலாம் என அரங்கேறிய இந்த மோசடியில் நடந்தது என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

பாதிக்கப்பட்டது எத்தனை பேர்?

சமீபத்தில் இந்த மோசடியை யூடியூபில் காணொளி மூலம் மக்களுக்குக் கொண்டு சென்ற வழக்கறிஞர் விக்னேஷ் முத்துகுமாரிடம் பேசினோம்.

"பாதிக்கப்பட்டவர் அவராகத்தான் என்னை அணுகினர். 1000 ரூபாய் கொடுத்தால் 10,000 ரூபாயாக மாறுமா என்றுதான் முதலில் கேட்டேன். பின்பு அவர்கள் பேசிய உரையாடல்களைப் பார்த்த பின்புதான் அதை நம்பினேன்.

பாதிக்கப்பட்டவரிடம் அவர்கள் கூறிய 15 முதல் 30 நாட்கள் காத்திருங்கள் என்றேன். ஆனால் குறிப்பிடப்பட்ட நாட்கள் காத்திருந்த பின்னும்கூட பணம் திரும்பக் கிடைக்கவில்லை. அந்த இன்ஸ்டாகிராம் கணக்கையே அழித்துவிட்டனர்.

பின்னர் மக்களுக்கு இதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பாதிக்கப்பட்டவரின் ஒப்புதலோடு யூடியூபில் பகிர்ந்தேன்," என்று தெரிவித்தார்.

இதைப் பகிர்ந்த பின்னர் மேலும் ஐந்து பேர் தாங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக எனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகவும் முத்துகுமார் தெரிவித்தார்.

அமலா ஷாஜி வெளியிட்ட காணொளி மட்டுமின்றி அவரது சகோதரி அமிர்தா ஷாஜியின் விளம்பர காணொளியைப் பார்த்து ஏமாந்துள்ளதாகவும் மின்னஞ்சலில் ஒருவர் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

இதில் தனக்கு வந்த மின்னஞ்சலில் "ஒருவர் (பெயர் குறிப்பிடாமல்) 1,50,000 வரை நம்பி ஏமாந்துள்ளதாகக் கூறினார். பாதிக்கப்பட்டவர் சைபர் கிரைமில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார். இதுபோல் இன்னும் எத்தனையோ பேர் இதை நம்பி பணத்தை ஏமாந்திருக்கலாம்," எனத் தெரிவித்தார்.

ரேட்டிங் கொடுத்தால் பணம் சம்பாதிக்க முடியுமா?

கிரிப்டோ என்ற பெயரில் பணத்தை இழப்பது குறித்து சைபர் கிரைம் வழக்கறிஞர் கார்த்திகேயனிடம் பேசினோம். இந்தியாவில் கிரிப்டோவுக்கான வழிமுறைகள் எதுவும் இல்லை என்பதால், சமீப காலமாக அதன் பெயரில் பல மோசடிகள் நடந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அதில் குறிப்பாக, "யூடியூபில் நாங்கள் சொல்லும் வீடியோக்களை பார்க்க வேண்டும், ரேட்டிங் கொடுக்க வேண்டும் என்ற வடிவத்தில் மோசடி நடக்கிறது. இங்கு டெபாசிட் பணம் என்ற பெயரில் ஒருவரிடம் இருந்து பணத்தைப் பெற்று வேறு ஒருவருக்குக் கொடுக்கின்றனர்.

இந்தக் குறிப்பிட்ட விவகாரத்திகும் கிரிப்டோ என்ற பெயரில்தான் பண மோசடி நடந்துள்ளது. கிரிப்டோ மீதுள்ள மோகத்தால் மக்கள் சீக்கிரமே அதை நம்பி பணம் செலுத்தி விடுகின்றனர்," என்று விளக்கினார் சைபர் கிரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன்.

அமலா ஷாஜியின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்படுமா?

வழக்கறிஞர் கார்த்திகேயனின் கூற்றுப்படி, தற்போது மத்திய அரசு சார்பாக கூகுள், ஃபேஸ்புக் உட்பட சமூக ஊடக தளங்கள் அனைத்திலுமே இம்மாதிரியான விளம்பரங்களை அனுமதிக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி நேரடியாக விளம்பரம் செய்ய வழியில்லாதபோது அடுத்ததாக சைபர் கும்பல்கள் பிரபலங்களை அணுகி விளம்பரம் கொடுக்கிறார்கள்.

இத்தகைய விளம்பரத்தைச் செய்ததற்காக அமலா ஷாஜி மீது நடவடிக்கை எடுக்க முடியுமா எனக் கேட்டபோது, "ஒரு தவறான தகவலை மக்களிடம் கொண்டு சென்று விளம்பரப்படுத்தும் செயலுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அதோடு, அவர்களது சமூக ஊடக கணக்கை முடக்கவும் வாய்ப்புள்ளது," என்று கூறினார்.

மேலும், அதையே அடிக்கடி செய்தால் அதற்கு 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தவறான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களைத் தவறாக வழிநடத்திய காரணத்திற்காகவும் அமலா ஷாஜி மீது நடவடிக்கை எடுக்கப் பல வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் விளக்கினார்.

இத்தகைய குற்றங்களில் மோசடி கும்பல் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் பக்கத்தைக் கண்டுபிடித்து அவர்களைப் பிடிக்க முடியுமா என்ற சந்தேகம் பல நேரங்களில் எழுகிறது. ஆனால் அது சாத்தியமில்லை என்கிறார் சைபர் வழக்கறிஞர் கார்த்திகேயன்.

"ஒரு பயனர் தங்களது சமூக ஊடக கணக்கைத் தாங்களாகவே நீக்கிவிட்டால், அதைக் கண்டுபிடிப்பது கடினம். ஆனால், மோசடிக்குப் பாதிக்கப்பட்டோர் எந்த வங்கிக் கணக்கிற்கு பணத்தைச் செலுத்துகின்றனரோ அதன் அடிப்படையில் குற்றவாளிகளை நெருங்க வாய்ப்புள்ளது."

அடிப்படை நெறிமுறை தவறு

பல ஆண்டுகளுக்கு முன் ஈமு கோழிகள் வளர்ப்பில் பல லட்சம் சம்பாதிக்கலாம் எனக் கூறி பலர் ஏமாந்தனர். அது போலவே தற்போது நூதன முறையில் மோசடிகள் நடைபெறுகின்றன. இந்த விவகாரம் குறித்து முன்னாள் டிஜிபி ரவி கூறுகையில், அமலா ஷாஜியின் அடிப்படை நெறிமுறைகள் மிகவும் தவறாக இருப்பதாகவும் வெறுமென பணத்திற்காக மக்களைத் தவறாக வழிநடத்தக் கூடாது எனவும் கூறினார்.

மேலும், "அவரை பின்தொடர்பாளர்களை நானும் முதலீடு செய்தேன், நீங்களும் முதலீடு செய்யுங்கள் எனக் குறிப்பிடுவது சட்டப்படி குற்றம். பல பெருநிறுவனங்களேகூட விளம்பரத்தின் இறுதியில் ஆவணத்தை சரியாகப் படித்துப் பார்க்கவும். உங்கள் சொந்த விருப்பத்தில் முதலீடு செய்யவும் என்ற வாசகங்களைக் குறிப்பிடுகிறார்கள்.

இத்தகைய ஆன்லைன் சைபர் மோசடி கும்பல்களிடம் மக்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதேபோல், பிரபலங்களும் தாங்கள் செய்யும் விளம்பரங்களின் பின்புலத்தை ஆராய்ந்து விளம்பரப்படுத்த வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் குறித்து அமலா ஷாஜியிடம் பேச முயன்றபோது அவரது தந்தை பின்னர் பேசுவதாகக் கூறினார். ஆனால், அதைத் தொடர்ந்து பல முறை அழைத்தும் அழைப்பை ஏற்கவில்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)