You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
13 அடி நீள ராட்சத முதலையின் வாயில் பெண் உடல் - எங்கே? என்ன நடந்தது?
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்துக்குட்பட்ட லார்கோ காவ்வாயில், 13 அடி ( 4 மீட்டர்) நீளமுள்ள முதலை கொல்லப்பட்டதாக போலீசார் கூறினர். அதன் வாயில் ஒரு பெண்ணின் எச்சங்கள் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து முதலை கொல்லப்பட்டதாக அவர்கள் கூறினர்.
லார்கோ கால்வாய் வழியே ஒரு நபர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கால்வாயில் ஒரு முதலையின் வாயில் ஒரு மனித உடல் சிக்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக ஜாமர்கஸ் புல்லார்ட் அந்த நபர் உள்ளூர் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
அந்த நீர்வழித் தடத்தில் கண்டெடுக்கப்பட்டது 41 வயதான ப்ரினா பெக்காமின் என்ற பெண்ணின் உடல் எச்சங்கள்தான் என்பதை பினெல்லாஸ் கவுண்டி பகுதியைச் சேர்ந்த காவல் துறை உயரதிகாரி தெரிவித்தார்.
அத்துடன் முதலை கொல்லப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தினார். மேலும் ப்ரினாவின் மரணத்துக்கான காரணம் என்ன என்பது விசாரணையில் தெரிய வரும் என்றும் அவர் கூறினார்.
உள்ளூர் நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 1:50 மணியளவில், கால்வாயில் மனித உடல் ஒன்று மிதப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஜாமர்கஸ் புல்லார்ட் என்ற அந்த நபர், வேலைக்கான நேர்காணலுக்காக லார்கோ காவ்வாயின் வழியாக சென்று கொண்டிருந்தபோது தான் அந்த அதிர்ச்சிகரமான காட்சியை கண்டதாக கூறினார்.
இளைஞரின் கண்ணில் பட்ட முதலை
“முதலை தனது வாய்க்குள் ஒரு மனித உடலை கவ்விக் கொண்டிருந்ததை நான் கவனித்தேன். உடனே தகவல் தெரிவிக்க தீயணைப்புப் படையினரை நோக்கி ஓடினேன்” என்று ஃபாக்ஸ் 13 எனும் ஊடகத்திடம் ஜாமர்கஸ் புல்லார்ட் கூறினார்.
“என் வாழ்க்கையில் முதலையை பார்ப்பது இதுதான் முதல் முறை. அதனால் மிகவும் வியப்பாக உணர்ந்தேன். அது வெளிர் மற்றும் வெள்ளை நிறத்தில் இருந்தது. கால்வாயின் அடிப்பகுதியை நோக்கி அது பின்னோக்கி நீந்தி கொண்டிருந்தது” என்று அதிர்ச்சி கலந்த வியப்புடன் அவர் கூறினார்.
முதலைக்கு இரையான பெக்காமுக்காக, சமூக ஊடகங்களில் அவரது குடும்பத்தினர் நிதி திரட்டும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
அவர் இறக்கும்போது, மரங்கள் நிறைந்த பகுதிக்கு அருகில் இருந்த வீடற்ற ஒரு முகாமில் வசித்து வந்ததாக பெக்காமின் மகள் கூறியுள்ளார்.
இறந்த ப்ரினா பெக்காமின் மகள் என்று கூறிய ப்ரூனா டோரிஸ் ஃபேஸ்புக்கில் இவ்வாறு எழுதியுள்ளார்.
“ இருள் சூழ்ந்த நேரத்தில் அவர் (பெக்காம்) சிற்றோடைக்கு அருகில் உள்ள தனது முகாமை நோக்கியோ அல்லது முகாமில் இருந்து வெளியேவோ நடந்து சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அப்போது தண்ணீரில் இருந்த முதலைக்கு அவர் இரையாகி இருக்கலாம். யாருக்கும் இப்படியொரு மரணம் நிகழக் கூடாது” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் டோரிஸ்.
உள்ளூர்வாசிகள் அச்சம்
பெக்காமின் உடல் எச்சங்களை மீட்டெடுக்கப்படுவதற்கு முன்பு, முதலை கொல்லப்பட்டு நீர்வழியில் இருந்து அகற்றப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருத்துவர் பரிசோதனை அறிக்கை வெளியான பின்பே பெண்ணின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்றும் அவர்கள் கூறினர்.
இதற்கு முன் சிறிய முதலைகளை பார்த்திருப்பதாக கூறும் அப்பகுதிவாசிகள், ப்ரினா பெக்காமை பலி கொண்டு முதலையை போல் இவ்வளவு பெரிய முதலையை தாங்கள் கண்டதில்லை என்கின்றனர்.
“என் குழந்தைகள் எப்போதும் அந்த பகுதியில் தான் நடமாடி கொண்டிருப்பார்கள். இந்தச் செய்தி கேட்டதும் எங்களுக்கு மிகவும் பயமாக உள்ளது” என்கிறார் அப்பகுதிவாசியான ஜெனிஃபர் டீன்.
நான்கு அல்லது ஐந்து அடி நீள முதலைகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த அளவு பெரிதான முதலையை இப்போதுதான் பார்க்கிறேன் என்று மேலும் அவர் கூறினார்.
கால்வாயில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட முதலையை காண, கரையோரம் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர்.
இதனிடையே, “ லார்கோ காவ்வாய் வழியே நடந்து செல்வதற்கு பாதை இருந்தாலும், முதலையிடம் சிக்கி ஒருவர் இறந்துவிட்டார். எனவே பைக்கிலோ, பேருந்திலோ தான் நான் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று கூறினார் சம்பவத்தை நேரில் கண்ட நபரான புல்லார்ட்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்