You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஷ்யா: தாகெஸ்தானில் தேவாலயங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் - 15க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
- எழுதியவர், ஹென்ரி ஆஸ்டியர்&ஸ்டீவ் ரோசென்பெர்க்
- பதவி, பிபிசி நியூஸ், லண்டன்&மாஸ்கோ
ரஷ்யாவின் வடக்கு காகசஸ் தாகெஸ்தான் குடியரசில் (Republic of Dagestan) காவல் துறையினர் மீதும், தேவாலயங்கள், யூத வழிபாட்டுத் தலங்களிலும் (synagogues) நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களில் பலர் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட துப்பாக்கிதாரிகள், ரஷ்ய மரபுவழித் திருச்சபையின் (Orthodox church) பெந்தகொஸ்ட் திருவிழாவின்போது, டெர்பென்ட் மற்றும் மகச்கலா ஆகிய நகரங்களைக் குறிவைத்தனர்.
இத்தாக்குதலில் காவல்துறையைச் சேர்ந்த குறைந்தது 15 பேர், ஒரு பாதிரியார், மற்றும் ஒரு பாதுகாவலர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். தாக்குதல் நிகழ்த்தியவர்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர், மற்றவர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்படவில்லை, ஆனால் தாகெஸ்தானில் கடந்த காலங்களில் இஸ்லாமியக் குழுக்கள் தாக்குதல்கள் நிகழ்த்தியுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) நடைபெற்ற இந்தத் தாக்குதல்களில், இரண்டு தேவாலயங்கள் மற்றும் இரண்டு யூத வழிபாட்டுத் தலங்கள் குறிவைக்கப்பட்டன. தாகெஸ்தானின் மிகப்பெரிய நகரமான மகச்கலாவில் மரபுவழி திருச்சபையின் பாதிரியார் ஒருவரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் 15 பேர் உயிரிழந்ததாக, தாகெஸ்தான் குடியரசு தலைவர் செர்ஜேய் மெலிகோவ் தெரிவித்துள்ளார்.
காவல்துறை வாகனம் மீது தாக்குதல்
இத்தாக்குதல் தொடர்பாக, சமூக வலைதளங்களில் வெளியான காட்சிகளின்படி, நிகழ்விடத்திற்கு அவசரக் காலச் சேவை வாகனங்கள் வருவதற்கு முன்பு, கருப்பு உடை அணிந்திருந்த தாக்குதல்தாரிகள் காவல்துறையினரின் வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
மரபுவழி யூதச் சமூகத்தினர் வாழ்ந்துவரும் டெர்பென்ட் நகரில் துப்பாக்கிதாரிகள் யூத வழிபாட்டுத் தலம் மற்றும் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தினர், பின்னர் அந்த வழிபாட்டுத் தலங்களுக்குத் தீ வைக்கப்பட்டது.
டெலிகிராம் மெசேஜ் செயலியில் அதிகாரபூர்வமற்ற மேஷ் (Mash) எனும் ஊடகம், டெர்பென்ட் நகரில் உள்ள ஒரு கட்டடத்தில் துப்பாக்கிதாரிகள் தடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளது.
செர்கோகல்-இல் உள்ள ஒரு கிராமத்தில் காவல்துறை வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மகச்கலா அருகே உள்ள செர்கோகலின்ஸ்கி மாவட்டத்தின் தலைவர் மகோமெத் ஒமரோவ் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை நிகழ்த்தியவர்களுள் அவருடைய இரண்டு மகன்களும் அடங்குவர் என கூறப்படுகிறது.
முந்தைய தாக்குதல்கள்
ரஷ்யாவின் ஏழ்மையான பகுதிகளுள் ஒன்றான தாகெஸ்தானில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
தாகெஸ்தான் மற்றும் அதன் அருகிலுள்ள செச்சினியக் குடியரசு, இங்குஷேத்தியக் குடியரசு, கபர்தினோ-பல்கேரியா குடியரசு ஆகியவற்றில் 2007 முதல் 2017 வரையில் காகசஸ் அமீரகம் மற்றும் காகசஸ் இஸ்லாமிய அமீரகம் ஆகிய ஜிகாதி அமைப்புகள் தாக்குதல் நிகழ்த்தியுள்ளன.
கடந்த மார்ச் மாதம் மாஸ்கோவுக்கு அருகே குரோகஸ் சிட்டி ஹால் பகுதியில் தாக்குதல் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, அதற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றாலும், அதிகாரிகள் யுக்ரேன் மற்றும் மேற்கு நாடுகள் மீது குற்றம்சாட்டினர்.
அப்போது அதிபர் விளாடிமிர் புதின், “மத நல்லிணக்கம் மற்றும் பல்வேறு மதங்கள், இனங்களுக்கு இடையில் ஒற்றுமைக்கு தனித்துவமான உதாரணமாக ரஷ்யா திகழ்வாதால்", “இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதத் தாக்குதலுக்கு ரஷ்யா இலக்காகாது,” என்றார்.
ரஷ்யாவின் உள்நாட்டுப் பாதுகாப்புச் சேவை அமைப்பான எஃப்.எஸ்.பி, மாஸ்கோவில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்தில் தாக்குதல் நிகழ்த்துவதற்கான ஐ.எஸ். அமைப்பின் முயற்சியை முறியடித்ததாக மூன்று மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தது.
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழுமையான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து, தங்களின் முதன்மையான எதிரிகள் யுக்ரேன் மற்றும் 'மேற்கு கூட்டணி' என்று ரஷ்ய மக்கள் நம்புகின்றனர். அதிகாரப்பூர்வ விவரங்கள் குறித்த சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காக, ரஷ்ய மக்களின் நம்பிக்கையை மாற்றுவதற்கு ரஷ்ய அதிகாரிகள் தயங்குகின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)