ஏமனில் ரமலான் நன்கொடை பெற குவிந்த கூட்டம்- நெரிசலில் 78 பேர் உயிரிழப்பு

ஏமன் தலைநகர் சனாவில் உள்ள பள்ளி ஒன்றில் ரமலான் பண்டிகைக்காக நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட மோதலில் குறைந்தது 78 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நகரில் பாப்-அல்-ஏமன் பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன. கூட்ட நெரிசல் ஏற்பட்டது தொடர்பான காட்சிகள் Al Masirah தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பட்டுள்ளது.

நன்கொடையை பெற நூற்றுக்கணக்கான நபர்கள் பள்ளியில் குவிந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு அரசை ஆட்சியில் இருந்து அகற்றியதில் இருந்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் இந்நகரை நடத்தி வருகின்றனர்.

உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக, நன்கொடை விநியோகத்திற்கு பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் 13 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சனாவில் உள்ள சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கூட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஹூதி போராளிகள் வானை நோக்கி சுட்டதாகவும், அப்போது, மின்கம்பியை தோட்டா தாக்கியதில் வெடிப்பு ஏற்பட்டது என்றும் இதனால் மக்கள் பீதியடைந்து அங்குமிங்கும் ஓடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த இரண்டு பேர் தெரிவித்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்லாமிய மக்களின் புனித மாதமான ரமலான் மாதத்தின் இறுதி நாட்களில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதலால் ஏமன் பேரழிவிற்குள்ளானது. ஹௌதி போராளிகள் நாட்டின் மேற்குப் பகுதியின் பெரும் பகுதியைப் கைப்பற்றினர்.

அதிபர் மன்சூர் ஹாதி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். சௌதி தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டணி இந்த விவகாரத்தில் தலையிட்டு அவரது ஆட்சியை தொடர வழி வகுத்தது. எனினும், பல ஆண்டுகளாக மோதல்கள் காரணமாக நெருக்கடியான நிலை தொடர்கிறது.

இந்த மோதலில் 1,50,000க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும், 2 கோடியே 30 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு (மொத்த மக்கள் தொகையில் முக்கால்வாசி பேர்) ஏதாவது வகையில் உதவிகள் தேவைப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த வாரம் ஏமனில், போரில் ஈடுபட்டுவரும் இரண்டு தரப்புகளுக்கும் இடையே ஒரு பெரிய கைதிகள் இடமாற்றம் தொடங்கியது. இது, பேரழிவுகரமான எட்டு ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீவிர முயற்சிகளின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: