ராஜேந்திர சோழன் கடல் கடந்து தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது படையெடுத்தது ஏன்? என்ன கிடைத்தது?

ராஜேந்திர சோழன் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

வர்த்தகத்திற்கு ஏற்பட்ட இடையூறுகளே சோழர்களின் கடல் கடந்த படையெடுப்புகளுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்கிறது சமீபத்திய ஆய்வுக் கட்டுரை ஒன்று. இந்தப் படையெடுப்புகளால் என்ன நடந்தது? வரலாற்று ஆசிரியர்கள் கூறுவது என்ன?

ராஜேந்திர சோழன் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்று மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றதாக அவரது மெய் கீர்த்திகள் கூறுகின்றன. ஆனால், இந்தப் படையெடுப்புகள் ஏன் நடந்தன என்பது குறித்து வரலாற்று ஆசிரியர்களிடம் பல்வேறு கருத்துகள் இருக்கின்றன.

தென்னிந்திய பகுதிகளில் இருந்து தென்கிழக்கு ஆசியாவுடன் நடந்த வர்த்தகத்திற்கு ஏற்பட்ட இடையூறின் காரணமாகவே இந்தப் படையெடுப்புகள் நடந்திருக்கலாம் என்கிறது சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்று.

சென்னையில் தமிழ்நாடு அரசின் மாநில தொல்லியல் துறை சமீபத்தில் நடத்திய தமிழ் கல்வெட்டியல் தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்கில், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்களான வீ. செல்வகுமாரும் கார்த்திகேயனும் இணைந்து 'இடைக்காலத்தில் தமிழ்நாடு வணிகர்கள், வணிகக் குழுக்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள்' (Merchants, Merchant Guilds and Trade Activities in Medieval Tamil Nadu) என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தனர்.

அந்தக் கட்டுரை, சோழர்கள் காலத்தில் இருந்த வர்த்தகக் குழுக்கள் குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களை அளிக்கிறது.

"தென்னிந்திய நிலப்பகுதியை ஒட்டி அமைந்திருந்த இந்திய பெருங்கடலால் ஏற்பட்ட சாதகமான சூழலின் காரணமாக, வரலாற்றின் ஆரம்பக் காலத்தில் இருந்தே தென்னிந்தியாவின் வணிக சமூகத்தினர் கடல் கடந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தனர். சோழர்கள் காலத்தில் திசையாயிரத்து ஐந்நூற்றுவர், வளஞ்சியர், பதினெண்விஷயத்தார் போன்ற கடல் கடந்த வணிகக் குழுக்கள் இலங்கை, தென்கிழக்கு ஆசியா, கிழக்காசிய நாடுகளுக்குப் பயணம் செய்து வணிகத்தில் ஈடுபட்டனர். இவர்கள் சோழர்களின் கடல்வழி விரிவாக்கத்திற்கும் ஆதரவாக நின்றனர்" என்கிறது அந்தக் கட்டுரை.

இந்த நிலையில், சோழ அரசர்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்றது ஏன்? இதற்குச் சில காரணங்களை முன்வைக்கிறார் செல்வகுமார்.

"ஸ்ரீவிஜயத்தின் மன்னர் நாகப்பட்டனத்தில் சைலேந்திர சூளாமணி வர்ம விகாரை என்ற புத்த விகாரையைக் கட்டினார். அந்தக் காலகட்டத்தில் இருந்த சோழ மன்னரான ராஜராஜ சோழனோடு ஸ்ரீவிஜயத்திற்கு நல்ல உறவு இருந்தது. ஸ்ரீவிஜய மன்னரின் முகவர்களும் இங்கே நன்றாகவே நடத்தப்பட்டனர். 1017-18 வரை எல்லாம் சுமூகமாகவே இருந்தது. ஆனால், அதற்குப் பிறகு அனைத்தும் மாறத் துவங்கின," என்கிறார் செல்வகுமார்.

ராஜேந்திர சோழனின் ஸ்ரீவிஜயம் மீதான படையெடுப்பு குறித்த செய்திகளை தஞ்சை பெரிய கோவிலில் காணப்படும் 1031 - 32ஆம் ஆண்டைச் சேர்ந்த "..அலைகடல் நடுவுட் பலகலஞ்செலுத்திச் சங்கிராம விசையோத்துங்க வந்மனாகிய கடாரத்தரசனை வாகயம் பொரு கடல் கும்பக் கரியோடு" என்று நீளும் மெய் கீர்த்தி கல்வெட்டு ஒன்று விரிவாக விவரிக்கிறது. சோழர் காலத்தைச் சேர்ந்த சில செப்பேடுகளும் இந்தப் படையெடுப்புகள் குறித்துப் பேசுகின்றன.

ராஜேந்திர சோழன் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சோழ மற்றும் கெமர் சாம்ராஜ்ஜியங்கள் இடையிலான ஒத்துழைப்பின் அடையாளமாக அங்கோர்வாட் கோவில் உள்ளது.

ஹெர்மன் எழுதிய ஆசிய வரலாற்றில் சோழர்களின் கடல் பயணங்கள் கட்டுரை இந்தக் கல்வெட்டின் பொருளை விவரிக்கிறது. அதாவது, "அலை நிறைந்த கடலின் நடுவே பல கப்பல்களை அனுப்பிய அவன்; கடாரத்து மன்னன் சங்கிரம விஜயதுங்க வர்மனையும், புகழ் வாய்ந்த அவனுடைய படையில் இருந்த யானைகளையும் பிடித்துக் கொண்டான். நேர்மையான வழியில் அந்த அரசன் சேர்த்து வைத்திருந்த செல்வக் குவியலையும் எடுத்துக் கொண்டான்; பரந்து விரிந்திருந்த அவனுடைய நகரமான ஸ்ரீவிஜயாவின் "போர் வாயிலில்" நின்றிருந்த வித்தியாதர தோரணம் என்ற வளைவை வெற்றி முழக்கத்துடன் கைப்பற்றினான்.

ஜொலிக்கும் ரத்தினங்கள் பதித்த சிறுவாயிலையும் பெரிய ரத்தினங்களால் ஆன வாயிலையும் சேர்த்துக் கொண்டான். தீர்த்த படித்துறைகளில் நீர் நிறைந்திருந்த பண்ணை; பாதுகாப்பு அரணாக வலிமையான மலையைப் பெற்றிருந்த மலையூர்; அகழிபோல ஆழ்கடலால் சூழப்பட்டிருந்த மயூரடிங்கம்; எத்தகைய போருக்கும் அஞ்சா இலங்கசோகர; ஆழ்கடலால் பாதுகாக்கப்பட்ட மாப்பாலம்; வலிமையான சுவரைப் பாதுகாப்பு அரணாகக் கொண்டிருந்த மேவிலிம்பங்கம்; வலைப்பந்தூரு என்ற விலப்பந்தூர்; அறிவியல் புலமை வாய்ந்தவர்களால் புகழப்பெற்ற தலைத்தக்கோலம்; மூர்க்கமான, பெரிய போர்களிலும் நிலைகுலையாத மாடமாலிங்கம்; போரினால் வலிமை கூடிய இளமுரிதேசம்; பூந்தோட்டங்களில் தேன் தேங்கி நின்ற மானக்கவரம்; அத்துடன் ஆழ்கடலால் பாதுகாக்கப்பட்டதும் மிகவும் சக்தி வாய்ந்ததுமான கடாரம்." என்கிறது இந்தக் கல்வெட்டு.

இந்தக் கல்வெட்டை அடிப்படையாக வைத்து, எந்தெந்த நாடுகளின் மீது படையெடுத்து, என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்பதை 'இராஜேந்திர சோழன்' என்ற தனது நூலில் விவரிக்கிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன். கடாரத்து அரசனான சங்கிராம விஜயோதுங்க வர்மனின் அரண்மனையில் இருந்து, அதன் தோரண வாயில், நிலை வாயில், மணிகளை உடைய கதவுகள் போன்றவை கைப்பற்றப்பட்டன.

ராஜேந்திர சோழன் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தஞ்சை பெரிய கோவில்

ஸ்ரீ விஜயப் பேரரசின் சக்ரவர்த்தியாக இருந்த சூளாமணிவர்மன், அவன் மகன் விஜயோதுங்க வர்மன் ஆகியோர் சோழ மன்னர்களுடன் நட்புணர்வுடன் இருந்தனர் என்றும் குலோத்துங்க சோழன் காலத்திலும் அது தொடர்ந்தது என்றும் குறிப்பிடும் குடவாயில் பாலசுப்ரமணியன், நடுவில் ராஜேந்திர சோழன் காலத்தில், அவனது ஆட்சியின் இடைப் பகுதியில் விஜய நாட்டின் மீது படையெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்கிறார்.

"இந்தப் படையெடுப்பின் நோக்கம் நாடுகளைப் பிடித்து அங்கு தனது ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதன்று. தனது படைபல வலிமை எத்தகையது என்பதை கீழ்த்திசை நாடுகளுக்கு காட்ட வேண்டிய கட்டாயம் ராஜேந்திர சோழனுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டு வணிகர்களின் செல்வாக்கும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் அங்கு வலுவுடன் திகழ வேண்டும் என ராஜேந்திர சோழன் கருதியிருக்க வேண்டும்" என்கிறார் பாலசுப்ரமணியன்.

ஆனால், இந்தப் படையெடுப்பிற்கான காரணம் தெளிவாக இல்லை என்கிறார் வரலாற்று ஆசிரியர் கனகலதா முகுந்த். அவர் எழுதிய 'தமிழக வணிகர்கள்: சர்வதேச வர்த்தகத்தின் முன்னோடிகள்' (Merchants of Tamilakam: Pioneers of International Trade) என்ற நூல் 'தமிழக வர்த்தகர்களின் நலனைப் பாதுகாக்க இந்த படையெடுப்பு நடத்தப்பட்டது என்பது பெரும்பான்மை கருத்து' என்று குறிப்பிடுகிறது.

"ராஜேந்திர சோழன் கடாரத்தைத் தாக்க 1017-18இல் தனது கடற்படையை அனுப்பினார். பல வருடங்கள் நடந்த இந்தப் போர்களில் சோழர் படை கடாரத்தையும் மற்ற முக்கியத் துறைமுகங்களையும் கைப்பற்றி, ஏராளமான செல்வத்தையும் கையகப்படுத்தியது. இந்தப் படையெடுப்புக்கு சரியான காரணம் எதையும் வரலாற்று ஆசிரியர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

சைலேந்திரர்கள் முக்கியமான இடங்களில் அவர்களுக்கு இருந்த துறைமுகங்களைக் கொண்டு கிழக்கு நாடுகளின் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த முயன்றதால் அதை எதிர்த்து தமிழக வர்த்தகர்களின் நலனைப் பாதுகாக்கவே இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது என பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள்.

ஆனால், சோழர்களின் கடற்படையெடுப்பு நீண்டகால நோக்கில் கடல்வழி வர்த்தகத்தை மாற்றி, தமிழக வணிகர்களுக்கு அனுகூலமாகத் திருப்பிவிட்டதா, தமிழர் வர்த்தகத்தின் அளவை அதிகரித்ததா என்பது கேள்விக்குறிதான்" என்கிறார் கனகலதா முகுந்த்.

இந்தோனீசியாவில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரம்பன்னன் கோவில்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தோனீசியாவில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரம்பன்னன் கோவில்

அப்படியானால், இந்தப் படையெடுப்புகளால் சோழப் பேரரசு அடைந்தது என்ன?

"ஸ்ரீ விஜயத்தில் இருந்தும் இலங்கையில் இருந்தும் கொண்டு வரப்பட்ட அதிகளவு செல்வம், சோழப் பேரரசின் செல்வச் செழிப்பை உயர்த்தியது. அது அரச குடும்பமும் படைகளும் கோவில்களைக் கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் உதவியது. தமிழ் வர்த்தகர்களின் நலன்களைப் பாதுகாப்பது இரண்டாவது முக்கியமான நோக்கமாக இருந்ததா என்பது தெரியவில்லை" என்கிறார் கனகலதா முகுந்த்.

ஆனால், இந்தப் படையெடுப்புகள் குறித்து வேறு சில கேள்விகளை எழுப்புகிறார் சோழ வரலாற்றில் நிபுணரும் மூத்த கல்வெட்டு ஆய்வாளருமான ஒய். சுப்பராயலு.

"ராஜேந்திர சோழன் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றார் என அவருடைய மெய் கீர்த்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், சம்பந்தப்பட்ட நாடுகளில் இது தொடர்பான குறிப்புகள் ஏதும் இல்லை. இங்கிருந்து படையெடுத்துச் சென்றவர்கள் விட்டு வந்த ஆதாரங்களும் இல்லை.

மெய் கீர்த்திகளில் பல நாடுகளின் பெயர்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், மெய் கீர்த்திகளில் குறிப்பிடப்படும் தகவல்களில் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது," என்கிறார் ஒய். சுப்பராயலு.

இருந்தபோதும், சோழ மன்னர்களிடம் ஒரு கடற்படை இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் இருந்ததைத் தன்னுடைய 'சோழ நாட்டின் கடற்படையைப் பற்றிய குறிப்பு' என்ற கட்டுரையில் கூறுகிறார் ஒய். சுப்பராயலு.

இலங்கையில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமான பொலன்னறுவா, இலங்கை மற்றும் சோழப் பேரரசின் பழமையான அரச நகரம்

பட மூலாதாரம், Universal Images Group via Getty Images

படக்குறிப்பு, இலங்கையில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமான பொலன்னறுவா, இலங்கை மற்றும் சோழப் பேரரசின் பழமையான அரச நகரம்

"சீர்காழியில் கண்டுபிடிக்கப்பட்ட கி.பி. 1187ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று அரையன் கடல்கோலமிட்டாந்தான் என்ற அமரகோன் பல்லவராயன் பற்றிக் கூறுகிறது. அவர் கரைப்படையிலாரைச் சேர்ந்த தண்டல்நாயகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கரைப்படையிலார் என்பது கடற்கரையை ஒட்டிய ராணுவத்தைக் குறிக்கும். அதனால் அதை கடற்படையாகக் கருதலாம்.

ராஜராஜன் கைப்பற்றிய பன்னிரண்டாயிரம் பழந்தீவுகள் தற்போது மாலத் தீவுகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. அதற்காக 800 முதல் 1000 கி.மீ. தூரம் வரை சோழர் படை பயணம் செய்திருக்க வேண்டும். ஆகவே 1026-ஆம் ஆண்டில் ராஜேந்திர சோழன் ஸ்ரீ விஜயத்திற்கு தன்னுடைய கடற்படையை அனுப்பியபோது வெகுதூரம் பயணம் செய்யும் ஆற்றல் சோழ கடற்படைக்கு ஏற்கெனவே இருந்தது. ஆனால், இத்தகைய யூகங்களைத் தவிர சோழ கடற்படையைப் பற்றிய விரிவான தகவல்கள் எங்கும் இல்லை." என்கிறார் அவர்.

தென்னிந்தியாவில் இருந்து வணிகர்கள் சென்றதற்கான ஆதாரங்கள் இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து போன்ற இடங்களில் கிடைக்கின்றன என்கிறார் அவர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"இங்கிருந்து வணிகர்கள் சென்றதற்கான ஆதாரங்கள், இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து போன்ற இடங்களில் கிடைக்கின்றன. தாய்லாந்தின் தென்முனையான தக்குவாபா என்ற இடத்தில் கி.பி. 900வது ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு கிடைத்திருக்கிறது. அதற்குப் பிறகு 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள், அதாவது குலோத்துங்க சோழன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இங்கிருந்து சென்ற வர்த்தகர்கள் சுமத்திராவின் மேற்குக் கரையில் உய்யக்கொண்ட சோழபட்டணம் என ஒரு குடியிருப்பையே உருவாக்கியிருந்தார்கள்.

அந்தத் தீவிலிருந்து கற்பூரம் போன்ற வாசனைப் பொருட்களை இறக்குமதி செய்தார்கள். அங்கு தங்கமும் கிடைத்தது. சீனாவை பொருத்தவரை, 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அங்கு சம்பந்தப் பெருமாள் என்பவர் திருக்கானீஸ்வரர் கோவில் என்ற ஒரு கோவிலைக் கட்டினார். அது, குப்ளாய்கான் பெயரில் கட்டப்பட்ட கோவில். ஆகவே, இதுபோல வர்த்தகர்கள் இங்கிருந்து சென்றதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன" என்கிறார் ஒய். சுப்பராயலு.

நாகப்பட்டினம் முதல் சுவர்ணதீபம் வரை: தென்கிழக்கு ஆசியாவிற்கான சோழர்களின் கடற்படைப் பயணங்கள் பற்றிய பிரதிபலிப்புகள் (Nagapattinam to Suvarnadwipa: Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia) என்ற புத்தகத்தில் டான்சென் சென் எழுதிய 'சோழ - ஸ்ரீ விஜய - சீன முக்கோண உறவில் ராஜேந்திர சோழனின் ராணுவ முற்றுகைகள்' என்ற கட்டுரையும், "வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கத்திலேயே ஸ்ரீ விஜயம் மீது ராஜேந்திர சோழன் படையெடுத்துச் சென்றான்" எனக் குறிப்பிடுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு