காலநிலை மாற்றத்துக்குத் தீர்வு நிலத்தடியில் வாழ்வதா? துருக்கியின் பழங்கால நகரம் கூறும் ரகசியம்

கப்படோசியா பிராந்தியத்துக்கு அடியில் தோண்டி அமைக்கப்பட்ட டெரின்குயு நிலத்தடி நகரம், ஆண்டு முழுவதும் சீரான வெப்பநிலையைப் பேணுகிறது.
படக்குறிப்பு, கப்படோசியா பிராந்தியத்துக்கு அடியில் நிலத்தில் தோண்டி அமைக்கப்பட்ட டெரின்குயு நிலத்தடி நகரம், ஆண்டு முழுவதும் சீரான வெப்பநிலையைப் பேணுகிறது.
    • எழுதியவர், செலின் உகுர்தாஸ்
    • பதவி, பிபிசி ஃபியூச்சர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

லட்சக்கணக்கான ஆண்டுகளாகக் காற்றும் மழையும் செதுக்கிய பாறை அமைப்புகள், துருக்கியின் மத்திய அனடோலியா பகுதியில் உள்ள கப்படோசியா (Cappadocia) சமவெளிக்கு மேலே கம்பீரமாக உயர்ந்து நிற்கின்றன. அவற்றின் பிரமாண்டமான கூம்பு வடிவப் பாறைகள் பூமியின் ஆழத்தில் இருந்து மேலெழுந்து வருவது போலத் தோற்றமளிக்கின்றன.

அறிவியல்பூர்வமான விளக்கங்கள் கிடைப்பதற்கு முன்பு, இந்தப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள், இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளே இத்தகைய விசித்திரமான பாறை அமைப்புகளை உருவாக்கியதாக நம்பினர். அதனால்தான் அவை 'தேவதைகளின் புகைப்போக்கிகள்' (Fairy chimneys) என்று அழைக்கப்பட்டன. ஆனால், இந்த அசாதாரண நிலப்பரப்புக்கு அடியில் இதைவிட வியப்பூட்டும் மற்றொரு விஷயம் மறைந்திருக்கிறது. அதுதான் டெரின்குயு (Derinkuyu) என்று அழைக்கப்படும் பழமையான நிலத்தடி நகரம்.

அதன் இருண்ட சுரங்கப் பாதைகளுக்குள் நீங்கள் செல்லும்போது, உங்கள் உணர்வுகள் கூர்மையடைகின்றன. குளிர்ந்த காற்று உங்கள் சருமத்தைத் தீண்டுகிறது. கல் சுவர்கள் உங்களைச் சுற்றி நெருங்கி வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. குறுகலான, மங்கலான வெளிச்சம் கொண்ட பாதைகள், உங்கள் காலடிச் சத்தத்தின் எதிரொலியைத் தவிர மற்ற எல்லா ஒலிகளையும் விழுங்கிவிடுவது போலத் தோன்றுகின்றன.

நீங்கள் இப்போதுதான் பனிப்புயலில் இருந்து வெளியேறி வந்திருக்கலாம் அல்லது ஜூலை மாதத்தில் அந்தப் பகுதி மீண்டும் ஒரு வெப்ப அலையை எதிர்கொண்டிருக்கலாம். உங்கள் கைகளில் கையுறைகள் இருக்கலாம் அல்லது வெப்பத்தால் உங்கள் முகம் வியர்வையில் நனைந்திருக்கலாம். ஆனால், துருக்கிய மொழியில் 'ஆழமான கிணறு' என்று பொருள்படும் டெரின்குயுவின் உள்ளே ஆண்டு முழுவதும் வெப்பநிலை 15 முதல் 17 டிகிரி செல்ஷியஸ் வரை இதமான நிலையில் இருக்கிறது.

ஏழாம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் 11ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இந்தப் பகுதியைச் சூறையாடிய அரபுப் படைகளின் படையெடுப்புகளின்போது மக்கள் தஞ்சமடைவதற்காகவே இந்த நிலத்தடி நகரம் முதலில் உருவாக்கப்பட்டது. ஆனால், இன்று முற்றிலும் மாறுபட்ட ஓர் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் இடமாக இது பார்க்கப்படுகிறது.

அதிகரித்து வரும் தீவிரமான காலநிலை மாற்றங்களைச் சமாளிப்பதற்கான பாதுகாப்பு மையங்களை வடிவமைக்க, கப்படோசியாவின் நிலத்தடி கட்டடக் கலை அமைப்புகளில் உள்ள ரகசியங்கள் உதவுமா என்று காலநிலை ஆராய்ச்சியாளர்களும் நகரத் திட்டமிடுபவர்களும் ஆராய்ந்து வருகின்றனர்.

கப்படோசியா அதன் அசாதாரணமான பாறை அமைப்புகளுக்காக அறியப்படுகிறது; இதில் "தேவதை புகைபோக்கிகள்" (fairy chimneys) என்று அழைக்கப்படுபவை அடங்கும், இவை தனித்துவமான புவியியல் தன்மையைக் கொண்டுள்ளன.
படக்குறிப்பு, கப்படோசியா 'தேவதை புகைபோக்கிகள்' (fairy chimneys) என்று அழைக்கப்படும் அதன் அசாதாரணமான பாறை அமைப்புகளுக்காக அறியப்படுகிறது.

தீவிர வெப்பநிலையில் இருந்து தப்பிக்க ஒரு வழி

ஒப்ருக் குகைகள் ஆராய்ச்சிக் குழு (Obruk Caves Research Group) என்பது குகைகள் மற்றும் நிலத்தடி அமைப்புகளை ஆராயும் நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு. தன்னார்வ அடிப்படையில் செயல்படும் இந்தக் குழு, துருக்கியின் முக்கியமான பல நிலத்தடிக் கட்டமைப்புகளை வரைபடமாகப் பதிவு செய்துள்ளது. ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய தேவாலயமாக இருந்த ஹாகியா சோஃபியாவின் (Hagia Sophia) அடியில் உள்ள நிலத்தடி அமைப்புகளும் இதில் அடங்கும்.

இந்தக் குழுவின் நிறுவனர்களில் ஒருவரான அலி யமாச், கடந்த 15 ஆண்டுகளாக கப்படோசியாவின் குகைகள் மற்றும் நிலத்தடி கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். இந்தப் பகுதிகளில் பல குகைகள் அமைந்துள்ள கெய்செரி (Kayseri) நகராட்சி மற்றும் ஒப்ருக் குகைகள் ஆராய்ச்சிக் குழு இணைந்து மேற்கொள்ளும் ஆய்வின் ஒரு பகுதியாக இந்தப் பணிகள் நடைபெறுகின்றன.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

நிலத்துக்கு அடியில் என்னென்ன இருக்கின்றன என்பதை இவரைவிட நன்றாக அறிந்தவர்கள் மிகக் குறைவு. யமாச்சின் குழுவைப் பொறுத்தவரை, ஒரு குகையைக் கண்டுபிடிப்பது என்பது வெளிப்புறத்தில் நிலவும் கடுமையான வெப்பநிலையில் இருந்து தப்பிப்பதற்கான நிம்மதியை அளிக்கிறது.

"இயற்கையாக உருவான குகைகளாக இருந்தாலும், மனிதர்களால் உருவாக்கப்பட்ட குகைகளாக இருந்தாலும், அவற்றின் வெப்பநிலை ஆண்டு முழுவதும் ஓரளவுக்கு ஒரே சீராக இருக்கும். கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்கும். இது மிகப்பெரிய நன்மை" என்று அவர் விளக்குகிறார்.

கோடையின் நடுப்பகுதியில் மிகவும் சோர்வடையச் செய்த ஓர் ஆய்வுப் பயணத்தின்போது நடந்த சம்பவத்தை யமாச் நினைவுகூர்கிறார். அப்போது, கடுமையான வெப்பத்தில் இருந்து தப்பிக்க ஏதாவது ஒரு குகையையோ நிலத்தடி தங்குமிடத்தையோ கண்டுபிடிக்க வேண்டும் என்று அவரது குழுவினர் விரும்பினர்.

"அந்த நேரத்தில், 'கடவுளே, தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள். ஒரு குகையில் அமைந்துள்ள குடியிருப்பை, நிலத்தடி தங்குமிடத்தை கண்டுபிடிக்க உதவுங்கள். ஒரு பாறைக்குள் சென்று தஞ்சமடையக் கூடிய ஏதாவது ஓர் இடத்தைக் காட்டுங்கள்' என்று நான் வேண்டிக் கொண்டது நினைவிருக்கிறது" என்கிறார் அவர்.

இந்தத் தொன்மையான நிலத்தடி நகரம், சுரங்கங்கள் மற்றும் அறைகளின் சிக்கலான வலைப்பின்னலால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பல அடுக்குகளைக் கொண்டுள்ளது.
படக்குறிப்பு, இந்தத் தொன்மையான நிலத்தடி நகரம், சுரங்கங்கள் மற்றும் அறைகளின் சிக்கலான வலைப்பின்னலால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பல அடுக்குகளைக் கொண்டுள்ளது.

அதிகரிக்கும் வெப்பநிலையின் தாக்கங்கள்

தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது, துருக்கியின் வெப்பநிலை ஏற்கெனவே 2.1 டிகிரி செல்ஷியஸ் அதிகரித்துள்ளது. இதனால் வெப்ப அலைகளின் தீவிரம் அதிகரித்துள்ளதுடன், வறட்சியும் அடிக்கடி ஏற்படுகிறது. மழைப்பொழிவு முறைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.

சமீபத்திய மாதிரி கணிப்பு ஆய்வு ஒன்றின்படி, இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் இஸ்தான்புல் நகரில் கடுமையான வெப்பத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் பத்து மடங்கு அதிகரிக்கக்கூடும். ஆனால், குளிர்காலத்திலும் சவால்கள் உள்ளன.

கப்படோசியாவில் குளிர்காலத்தில் வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்ஷியஸுக்கும் கீழே அடிக்கடி செல்கிறது. இதனால், அதிக செலவு பிடிப்பதுடன், அதிக அளவில் கரிம வாயுவை வெளியிடும் வெப்பமூட்டும் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்த ஆய்வுப் பயணத்தின்போது யமாச் முன்வைத்த வேண்டுகோள் இப்போது புதிய அர்த்தத்தைப் பெறுகிறது.

நிலத்தடியில் ஒரு நகரம்

விரிவான நிலத்தடி குகைகள் நிறைந்த ஒரு பகுதியில், டெரின்குயு அதன் பிரமாண்டமான அளவால் தனித்துவம் பெறுகிறது. அதன் ஆழம் மற்றும் தளங்களின் எண்ணிக்கை குறித்த மதிப்பீடுகள் வெவ்வேறாக உள்ளன. சில தகவல்கள் ஆறு முதல் 12 தளங்கள் வரை இருப்பதாகக் குறிப்பிடுகின்றன. மற்ற சில தகவல்களின்படி, இது 18 தளங்கள் வரை கொண்டதாகவும், 85 மீட்டர் ஆழம் வரை விரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சுமார் 2.5 கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள டெரின்குயு, சுமார் 20,000 பேருக்குத் தங்குமிடம் அளிக்கும் திறன் கொண்டதாக இருந்தது. மேலும், இங்கு சுமார் 53 நீர்க் கிணறுகளும் காற்றோட்டத்துக்கான குழாய்களும் இருந்தன. படையெடுப்புக் குழுக்களிடம் இருந்து தப்பித்து, ஆபத்தான கோடை மாதங்களில் இங்கு தஞ்சமடைந்த மக்களுக்கு, ஆண்டு முழுவதும் நிலவும் இதமான வெப்பநிலை மிகப்பெரிய நிம்மதியை அளித்திருக்க வேண்டும்.

தற்போது டெரின்குயுவின் சுரங்கப் பாதைகள் காலநிலை மாற்றத்தில் இருந்து தப்பிப்பதற்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், உலகின் பிற பகுதிகளில் உள்ள நிலத்தடி இடங்கள் எதிர்காலத்தில் இத்தகைய தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கப்படோசியாவில் குளிர்காலத்தின் போது வெப்பநிலை பொதுவாக பூஜ்ஜியத்துக்குக் கீழே சென்றுவிடும். இருப்பினும், டெரின்குயு நிலத்தடி நகரத்தில், ஆண்டு முழுவதும் மிதமான வெப்பநிலையே நிலவுகிறது.
படக்குறிப்பு, கப்படோசியாவில் குளிர்காலத்தின் போது வெப்பநிலை பொதுவாக பூஜ்ஜியத்துக்குக் கீழே சென்றுவிடும். இருப்பினும், டெரின்குயு நிலத்தடி நகரத்தில், ஆண்டு முழுவதும் மிதமான வெப்பநிலையே நிலவுகிறது.

ரோமில் அடையாளம் காணப்பட்ட 7,000 நிலத்தடி கட்டமைப்புகள்

"பொதுவாக, நகரங்கள் மேல்நோக்கி வளர்வதற்கும், நிலத்துக்கு மேலே விரிவடைவதற்கும் நாம் பழகிவிட்டோம். ஆனால், நிலத்துக்கு அடியில் உள்ள பகுதிகளையும் ஒரு வளமாகப் பார்க்கத் தொடங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இதற்கு, நமது சிந்தனையில் ஒரு கலாசார மாற்றம் தேவைப்படலாம்," என்கிறார் இத்தாலிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISPRA) ஆராய்ச்சியாளரும், யூரோஜியோசர்வேஸ் நகர்ப்புற நிலவியல் நிபுணர் குழுவின் (EuroGeoSurveys Urban Geology Expert Group) தலைவருமான ஃபிரான்செஸ்கோ லா வின்யா.

இத்தாலியின் தலைநகரான ரோமில் உள்ள நிலத்தடி இடங்களை அவரது ISPRA சக ஆராய்ச்சியாளர்கள் சிலர் நீண்டகாலமாக வரைபடமாகப் பதிவு செய்து வருகின்றனர். அதேநேரத்தில், காலநிலை பாதுகாப்பு மையங்களாக மாற்றியமைக்கக் கூடிய நிலத்தடி இடங்களைக் கண்டறிவதற்காக அவரது குழு ரோம் நகர நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு டெரின்குயுவில் வாழ்ந்த மக்கள் செய்ததைப் போல, மனிதர்கள் வசிக்கக்கூடிய இடங்கள் குறித்த நமது புரிதலை விரிவுபடுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். நிலத்தடி குடியிருப்புகளின் வரலாற்றில் டெரின்குயு ஒரு முக்கிய மைல்கல் என்று ஃபிரான்செஸ்கோ லா வின்யா கருதுகிறார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட வரைபடப் பணிகளின் மூலம், ரோம் நகரில் 7,000க்கும் மேற்பட்ட நிலத்தடி கட்டமைப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பழங்காலக் கற்சுரங்கங்கள், கல்லறைச் சுரங்கங்கள் (Catacombs), நீர்வழிச் சுரங்கங்கள் மற்றும் நிலத்தடியில் அமைக்கப்பட்ட அறைகள் (Hypogea) உள்ளிட்டவை இதில் அடங்கும். இவை நகரின் அடியில் சுமார் 350 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளன.

"இந்த வெற்றிடமான நிலத்தடி இடங்களைத் துல்லியமாக வரைபடமாகப் பதிவு செய்து, அவற்றை நகராட்சி நிர்வாகத்தின் நகரத் திட்டமிடலில் இணைப்பது முக்கியம்" என்கிறார் அவர்.

பின்லாந்தில் நிலத்தடியில் செழித்தோங்கும் நகரம்

இத்தகைய திட்டத்தை உருவாக்குவதில் ஹெல்சின்கி முன்னோடியாகத் திகழ்கிறது.

பின்லாந்தின் தலைநகரான ஹெல்சின்கியில், நகர வாழ்க்கை நிலத்துக்கு அடியிலும் விரிவடைந்துள்ளது. சுமார் 200 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப் பாதைகளின் வலையமைப்பில் விளையாட்டு மைதானங்கள், கலைக்கூடங்கள், நீச்சல் குளங்கள், அருங்காட்சியகம், தேவாலயம் என பல வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கப்படோசியாவைப் போலவே, இந்த நிலத்தடி இடங்களில் பலவும் இரண்டாம் உலகப் போரின்போதும், அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளிலும் தற்காப்பு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டவை.

ஒரு நெருக்கடியைச் சமாளிப்பதற்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள், அடுத்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கும் எவ்வாறு உதவக்கூடும் என்பதற்கு இவை சிறந்த உதாரணமாக உள்ளன.

ஆனால், நிலத்தடியில் வசிப்பதன் நன்மைகளைக் கண்டறிய எப்போதும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் அவசியமில்லை.

ஆஸ்திரேலியாவில் உள்ள சுரங்க நகரமான கூபர் பெடியில் (Coober Pedy), அங்கு வசிப்பவர்கள் மிகவும் இயல்பான ஒரு தீர்வைக் கண்டறிந்துள்ளனர். கடுமையான வெப்பநிலையிலிருந்து தப்பிக்கவும், மின்சாரப் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்கவும், நிலத்துக்கு அடியில் உள்ள மென்மையான பாறைகளைத் தோண்டி அதற்குள் தங்கள் வீடுகளை அமைத்துள்ளனர்.

டெரின்குயு நிலத்தடி நகரத்திலுள்ள சில பாதைகள் மிகவும் குறுகலானவை.
படக்குறிப்பு, டெரின்குயு நிலத்தடி நகரத்திலுள்ள சில பாதைகள் மிகவும் குறுகலானவை.

அபாயங்களும் சவால்களும்

பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய காலநிலை பாதுகாப்பு மையங்களாக நிலத்தடி இடங்களை மாற்றுவதற்கு பல்வேறு மாற்றியமைக்கும் பணிகள் தேவைப்படும் என்கிறார் லா வின்யா.

எல்லா நிலத்தடி இடங்களும் ஒரே மாதிரியானவை அல்ல. பழைய கற்சுரங்கங்கள், கல்லறைச் சுரங்கங்கள் முதல் சமீபத்திய காலங்களில் கட்டப்பட்ட பதுங்கு குழிகள் (Bunkers) வரை பல்வேறு வகைகள் உள்ளன.

பதுங்கு குழிகளைப் பொறுத்தவரை, அவற்றை மாற்றியமைப்பது ஒப்பீட்டளவில் எளிதானது. கான்கிரீட் கட்டமைப்புகள் உறுதியாக உள்ளனவா, காற்றோட்ட அமைப்புகள் சரியாகச் செயல்படுகின்றனவா என்பதைச் சரிபார்த்தால் போதுமானது.

ஆனால், பழைய கற்சுரங்கங்கள், கல்லறைச் சுரங்கங்கள் மற்றும் கப்படோசியாவில் உள்ள நிலத்தடி தங்குமிடங்களைப் போல நேரடியாகப் பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட இடங்களை மாற்றியமைப்பது மிகவும் சிக்கலானது.

கப்படோசியாவின் குகைகள் மற்றும் சுரங்கப் பாதைகள், பெரிய நிலத்தடி இடங்களைப் பாதுகாப்பு மையங்களாகப் பயன்படுத்துவதில் உள்ள இரண்டு முக்கியமான சவால்களை எடுத்துக்காட்டுகின்றன. அவை, இடிந்து விழும் அபாயம் மற்றும் போதுமான காற்றோட்டத்தை உறுதிசெய்வது ஆகியவையாகும்.

கப்படோசியா, 64 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட வடக்கு அனடோலியப் பிளவுப் பகுதியில் (North Anatolian Fault) அமைந்துள்ளது.

இந்தப் பிளவுப் பகுதியில் கடந்த 17,000 ஆண்டுகளாக நிலநடுக்கம் ஏற்படவில்லை என்றாலும், துருக்கி அதிக நில அதிர்வுகள் ஏற்படும் நாடாகும். எனவே, இயற்கைப் பேரிடர்களின் அபாயம் எப்போதும் கவலைக்குரியதாக உள்ளது.

"எரிமலைகள் மற்றும் அரிப்புச் செயல்முறைகளின் காரணமாகவே கப்படோசியா உருவானது. இப்போது அதே செயல்முறைகள் கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பகுதியைச் சிதைத்தும் வருகின்றன" என்கிறார் யமாச். இடிந்து விழும் அபாயம் உண்மையானது; அது தொடர்ந்து நிலவுகிறது என்றும் அவர் எச்சரிக்கிறார்.

லா வின்யாவும் இதே கவலையைப் பகிர்ந்துகொள்கிறார். ஒவ்வொரு நிலத்தடி கட்டமைப்பையும் நிபுணர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

கட்டமைப்பில் உறுதியற்ற தன்மைக்கான அறிகுறிகள் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்ட பின்னரே, அவற்றைப் பாதுகாப்பான இடங்களாகச் சான்றளிக்க முடியும்.

மற்றொரு முக்கியமான சவால் காற்றோட்டம்.

டெரின்குயுவில் சிக்கலான காற்று சுழற்சி அமைப்பு உள்ளது. இருப்பினும், தற்போதைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த இடங்களில் காற்றின் தரத்தை மேலும் மேம்படுத்த முடியும்.

மின்விசிறிகள், காற்று குழாய்கள் மற்றும் காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் உணர்விகள் (Sensors) ஆகியவற்றைப் பயன்படுத்தி, இந்த அமைப்புகள் உள்ளே தேங்கியிருக்கும் காற்றை வெளியேற்றி, வெளியில் இருந்து சுத்தமான காற்றைக் கொண்டுவர முடியும்.

ஹெல்சின்கியின் நிலத்தடி பாதுகாப்பு மையங்கள் இத்தகைய முறையில்தான் செயல்படுகின்றன. அங்குள்ள பதுங்கு குழிகளில் அவசரநிலை ஏற்பட்டாலும், பாதுகாப்பான சூழலில் ஒரே நேரத்தில் 6,000 பேர் வரை தங்க முடியும்.

பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட வீடுகள்: எதிர்காலத்தின் குடியிருப்புகளா?

கப்படோசியாவில் பயன்பாட்டில் இல்லாமல் காலியாக இருக்கும் பழைய பாறை குடியிருப்புகளில் பல, தற்போது உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சைப் பழங்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படுவதாக யமாச் கூறுகிறார்.

உண்மையில், இந்த இயற்கையான நிலத்தடி அமைப்புகளை குளிர்பதனக் கிடங்குகளாக வாடகைக்கு விடுவது அந்தப் பகுதிக்கு வருமானம் ஈட்டித் தரும் தொழிலாக மாறியுள்ளது.

உதாரணமாக, 3,000-க்கும் சற்றே அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட ஓர்தஹிசார் (Ortahisar) நகரில், சுமார் 1,000 குகைகள் வாடகைக்கு விடப்படுகின்றன. இவற்றில் 50 லட்சம் பெட்டிகள் வரையிலான சிட்ரஸ் பழங்களைச் சேமிக்க முடியும்.

இருப்பினும், கோடை காலங்களில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் பாதிக்கப்படும் மக்களுக்கு இந்தக் குகைகள் சிறந்த புகலிடமாகவும் அமையக்கூடும் என்று யமாச் நம்புகிறார்.

"ஒவ்வொரு அறையிலும் குளிர்சாதனப் பெட்டியை இயக்க வேண்டிய ஒரு வீட்டை வாங்குவதற்குப் பதிலாக, பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்ட வீட்டில் வசதியாக வாழ்வதையே நான் விரும்புவேன்" என்கிறார் அவர்.

கடந்த காலத்தின் நினைவுச் சின்னங்களாக மட்டும் இந்த இடங்களைப் பார்க்காமல், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்குத் தேவையான உள்கட்டமைப்பின் ஒரு பகுதியாகக் கருத வேண்டும் என்ற இந்தப் பார்வை மாற்றத்தையே லா வின்யா போன்ற ஆராய்ச்சியாளர்கள் நகரத் திட்டமிடலில் கொண்டுவர முயற்சிக்கின்றனர்.

கப்படோசியாவின் பழமையான நிலத்தடி நகரங்கள் பல நூற்றாண்டுகளாக நிரூபித்துள்ளதைப் போல, இதற்குத் தேவையான கட்டடப் பொறியியல் நுட்பங்கள் ஏற்கெனவே நம்மிடம் உள்ளன.

இப்போது நமக்குத் தேவை, நிலத்துக்கு மேலே பார்ப்பதைவிட கீழே பார்க்கத் தொடங்குவதற்கான மனநிலைதான்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு