கடல் அரிப்பு: 30 ஆண்டுகளில் 1,974 ஹெக்டேர் நிலத்தை இழந்த தமிழ்நாடு – அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எவை?

பட மூலாதாரம், Getty Images
திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடு ஏரிக்கும் வங்கக் கடலுக்கும் இடையே அமைந்துள்ள மீனவ கிராமங்களில் ஒன்று கோரைக்குப்பம். கடல் அரிப்பால் இந்தப் பகுதியில் கடற்கரை நிலப்பரப்பு சுருங்கி வருவது அங்குள்ள மீனவ மக்களின் குடியிருப்புகளுக்கும் வாழ்வாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
ஆனால், கோரைக்குப்பம் மக்களின் பிரச்னை கடல் அரிப்புடன் மட்டும் நின்றுவிடவில்லை. பாதுகாப்பான இடத்திற்கு அவர்களை மாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட மறுகுடியமர்வுத் திட்டமே அவர்களது வாழ்வாதாரத்திற்கு மற்றொரு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மறுவாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கோரைக்குப்பம் மீனவ மக்களுக்காகத் தாங்கல் பெரும்புலம் பகுதியில் 2007ஆம் ஆண்டு 101 குடியிருப்புகள் கட்டப்பட்டன. சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்தில் வீடுகளுடன் சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.
ஆனால், அந்த வீடுகளில் குடியேற மீனவ மக்கள் மறுத்துவிட்டனர்.
புதிய குடியிருப்புகளில் இருந்து மீன்பிடித் தொழிலுக்காகக் கடலுக்குச் செல்ல சுமார் 15 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால், அது தங்களது தொழிலுக்கும் வருமானத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கோரைக்குப்பத்தைச் சேர்ந்த மீனவர் மூர்த்தி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
அந்த வீடுகள் பயன்படுத்தப்படாமல் இருப்பதுடன், அவற்றிலிருந்த கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்ட பொருட்களும் சேதமடைந்திருப்பதை பிபிசி தமிழ் நேரில் கண்டது.

பட மூலாதாரம், Getty Images
காட்டுப்பள்ளி கடற்கரைப் பகுதியில் கடல் அரிப்பு அதிகரித்து வருவதால் கோரைக்குப்பம், சாத்தாங்குப்பம் உள்ளிட்ட கிராமங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறும் மீனவர்கள், துறைமுகக் கட்டுமானங்களால் கடலோர மணல் நகர்வில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால், கடல் அரிப்பால் பாதிக்கப்படுவது பழவேற்காட்டைச் சுற்றியுள்ள இந்த மீனவ கிராமங்கள் மட்டுமல்ல.
தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள நிலப்பரப்பு மாற்றங்கள் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின் தரவுகளை பிபிசி தமிழ் தொகுத்துக் கணக்கிட்டதில், 1992 முதல் 2022 வரையிலான 30 ஆண்டுகளில் சுமார் 1,974 ஹெக்டேர் கடற்கரையோர நிலப்பரப்பைத் தமிழ்நாடு இழந்துள்ளது தெரியவருகிறது.
தமிழ்நாட்டில் கடல் அரிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எவை? கடற்கரையோர நிலப்பரப்பு குறைவதற்குத் துறைமுகங்களும் பிற கடலோரக் கட்டுமானங்களும் காரணமாக இருக்கின்றனவா?
கடல் அரிப்பால் எவ்வளவு நிலத்தை தமிழ்நாடு இழந்துள்ளது?
தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் ஆதரவுடன், அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் 2024ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில், தமிழ்நாட்டின் கடற்கரையோர நிலப்பரப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அதில், செயற்கைக்கோள் படங்களையும் புவிசார் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி 1992 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில், கடற்கரையோரத்தில் ஏற்பட்ட நில இழப்பு மற்றும் புதிதாக உருவான நிலப்பரப்பு ஆகியவற்றை ஆய்வாளர்கள் கணக்கிட்டனர்.
அந்த ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள 14 கடலோர மாவட்டங்களின் தரவுகளைத் தொகுத்துக் கணக்கிட்டதில், தமிழ்நாடு சுமார் 1,974 ஹெக்டேர், அதாவது 19.74 சதுர கிலோமீட்டர் கடற்கரையோர நிலப்பரப்பை இழந்துள்ளது தெரிய வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 558.16 ஹெக்டேர் நிலப்பரப்பு இழக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் 204.9 ஹெக்டேரும், நாகப்பட்டினத்தில் 198.2 ஹெக்டேரும், திருவள்ளூரில் 197.1 ஹெக்டேரும் இழக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் 166.62 ஹெக்டேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 155.7 ஹெக்டேரும், கடலூரில் 123 ஹெக்டேரும் கடற்கரையோர நிலப்பரப்பு இழக்கப்பட்டுள்ளது.
அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டின் கடற்கரையோரப் பகுதிகளில் சுமார் 1,618 ஹெக்டேர் நிலப்பரப்பு புதிதாக உருவாகியிருப்பதும் அந்த ஆய்வின் தரவுகள் மூலம் தெரிய வருகிறது. இழக்கப்பட்ட நிலப்பரப்பில் இருந்து புதிதாக உருவான நிலப்பரப்பைக் கழித்தால், தமிழ்நாட்டின் கடற்கரையோரத்தில் சுமார் 357 ஹெக்டேர் நிகர நில இழப்பு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், ஓரிடத்தில் புதிதாக உருவாகும் நிலப்பரப்பு, மற்றொரு பகுதியில் மீனவர்கள் தங்களது குடியிருப்புகளையும் வாழ்வாதாரத்தையும் இழப்பதால் ஏற்படும் பாதிப்புகளை ஈடுசெய்வதில்லை.
தமிழ்நாட்டின் 39% கடற்கரையில் கடல் அரிப்பு
தமிழ்நாட்டில் கடல் அரிப்பு எந்த அளவுக்கு ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பான மற்றொரு முக்கியமான தகவலை 2026 மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்டது.
மார்ச் 30ஆம் தேதி மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் மு. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் இணை அமைச்சர் ராஜ் பூஷண் சௌதரி எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் (NCCR), 1990 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டின் கடற்கரையில் ஏற்பட்ட மாற்றங்களை ஆய்வு செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆய்வின்படி, தமிழ்நாட்டின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட கடற்கரையில் 39.23% பகுதிகள் அரிப்புக்கு உள்ளாகியுள்ளன. 20.18% பகுதிகளில் மணல் படிவு அதிகரித்துள்ளது. 40.59% பகுதிகள் நிலையான நிலையில் உள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு
இதே தரவுகள் கடந்த மார்ச் 27ஆம் தேதி மக்களவையில் அளிக்கப்பட்ட மற்றொரு பதிலில் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டன. அதன்படி, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 991.48 கிலோமீட்டர் நீளமுள்ள தமிழ்நாட்டின் கடற்கரையில், 388.96 கிலோமீட்டர் கடற்கரை அரிப்புக்கு உள்ளாகியுள்ளது.
மாவட்டத்தின் கடற்கரை நீளத்தில் எவ்வளவு பகுதி அரிப்புக்கு உள்ளாகியுள்ளது என்ற அடிப்படையில் பார்த்தால், மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளது. அம்மாவட்டத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 48.88 கிலோமீட்டர் கடற்கரையில் 34.70 கிலோமீட்டர், அதாவது 71% கடற்கரைப் பகுதி கடல் அரிப்புக்கு உள்ளாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 67.2 சதவிகிதமும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 61.7 சதவிகிதமும், விழுப்புரத்தில் 56.4 சதவிகிதமும், திருவாரூரில் 53.8 சதவிகிதமும் கடல் அரிப்புக்கு உள்ளாகியுள்ளன.
சென்னை மாவட்டத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 43.94 கிலோமீட்டர் கடற்கரையில் 17.64 கிலோமீட்டர், அதாவது 40.1% பகுதி கடல் அரிப்புக்கு உள்ளாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 7.74 கிலோமீட்டர் கடற்கரை கடல் அரிப்புக்கு உள்ளாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆய்வு இழக்கப்பட்ட நிலப்பரப்பின் அளவைக் குறிப்பிடும் நிலையில், தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின் இந்தத் தரவுகள் அரிப்புக்கு உள்ளாகியுள்ள கடற்கரையின் நீளத்தைக் குறிப்பிடுகின்றன.
வடசென்னை சாலைக்குள் புகுந்த கடல்
கடந்த அக்டோபர் 27ஆம் தேதி, அர்னாப் புயலின் தாக்கத்தால் வடசென்னையின் கடலோரப் பகுதிகளில் கடுமையான கடல் சீற்றம் ஏற்பட்டது.
எண்ணூர் விரைவுச் சாலையை ஒட்டியுள்ள கடற்கரையில் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்த பாறைகளைத் தாண்டி அலைகள் சாலைக்குள் புகுந்தன. சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் கடல் அலைகளின் தாக்கத்திற்கு உள்ளாகின. சில இருசக்கர வாகனங்கள் கவிழ்ந்தன. சாலையோரக் கடைகளும் பாதிக்கப்பட்டன.
பாரதியார் நகர், பர்மா நகர், நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், இந்திரா காந்தி குப்பம், பெரியகுப்பம், சின்னக்குப்பம் உள்ளிட்ட கடலோர குடியிருப்புப் பகுதிகளிலும் கடல் சீற்றத்தின் தாக்கம் உணரப்பட்டதாக எண்ணூர் காட்டுக்குப்பத்தைச் சேர்ந்த மீனவர் ஆர். எல். சீனிவாசன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"கடந்த காலங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டாலும் பெரும்பாலான நேரங்களில் அலைகள் சாலை வரை வந்ததில்லை. 1990களில் இருந்து தற்போது வரை தீவிரமடைந்து வரும் கடல் அரிப்பின் காரணமாகவே தற்போது கடல் சாலைக்கு மிக நெருக்கமாக வந்துவிட்டது" என்கிறார் ஆர்.எல். சீனிவாசன்.
எண்ணூரில் உள்ள நெட்டுக்குப்பம் மற்றும் பெரியகுப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பிபிசி தமிழ் நேரில் சென்றபோது, பெரியகுப்பத்தில் சில குடியிருப்புகளுக்கும் கடலுக்கும் இடையே சுமார் 10 முதல் 20 மீட்டர் தொலைவே இருந்ததைக் காண முடிந்தது.
மேலும், எண்ணூர் விரைவுச் சாலையில் நிகழ்ந்ததைப் போலவே, "பழவேற்காடு–காட்டுப்பள்ளி சாலையிலும் கடல் சீற்றத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக சில பகுதிகளில் கடல்நீர் சாலையைக் கடந்து பழவேற்காடு ஏரிக்குள் சென்றதுடன், சாலையில் மணல் குவிந்ததால் போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்பட்டது" என்று அவர் விவரித்தார்.
அதுகுறித்துப் பேசிய முனைவர் கிருத்திகா முருகேசன், "இந்த நிகழ்வுகளுக்கு முற்றிலுமாக கடல் அரிப்புதான் காரணம் எனக் கூறிவிட முடியாது என்றாலும், ஏற்கெனவே கடந்த முப்பது ஆண்டுகளில் கடல் அரிப்பு பாதிப்புகளை அதிகமாக எதிர்கொண்டு வரும் எண்ணூர் விரைவுச் சாலையில், கடற்கரைப் பரப்பு குறைந்திருக்கும் பகுதிகளில் இத்தகைய கடல் சீற்றத்தின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும்" என்று கூறினார்.
மெரினாவில் குவிந்த மணல், வடசென்னையில் ஏற்பட்ட கடல் அரிப்பு
கடற்கரை என்பது நிலையான அமைப்பு அல்ல. கடல் அலைகள், நீரோட்டங்கள், பருவகாலக் காற்று உள்ளிட்ட இயற்கைக் காரணிகளால் கடற்கரையோர மணல் தொடர்ந்து ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகர்த்தப்படுகிறது.
ஓரிடத்திலிருந்து வெளியேறும் மணலின் அளவை ஈடுசெய்யும் வகையில் புதிதாக அந்த இடத்திற்கு மணல் வந்து சேராதபோது கடல் அரிப்பு ஏற்படலாம்.
புயல்கள், கடல் மட்ட உயர்வு போன்ற காரணிகளால் இயற்கையாகவே சிறுசிறு அளவில் ஒருபுறம் கடல் அரிப்பும், மறுபுறம் கரை பெரிதாவதும் நடப்பது இயல்புதான் எனக் கூறிய வளம்குன்றா நகரங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆராய்ச்சியாளரான முனைவர் கிருத்திகா முருகேசன், "துறைமுகங்கள், அலைத்தடுப்புச் சுவர்கள் உள்ளிட்ட கடலோரக் கட்டுமானங்கள் போன்ற செயற்கையான பொறியியல் கட்டுமானங்களும் மனித நடவடிக்கைகளும் கடல் அரிப்பை ஒரு தீவிர பிரச்னையாக மாற்றுகின்றன" என்றார்.

இத்தகைய சிக்கல்கள், கடற்கரைகளின் நிலப்பரப்பையே மாற்றுவதாகவும், சென்னையின் மெரினா கடற்கரை மிகப் பெரியதாக வளர்ந்தமைக்கும் அதுவே முக்கியக் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2008ஆம் ஆண்டு 'நேச்சர் என்விரான்மென்ட் அண்ட் பொல்யூஷன் டெக்னாலஜி' ஆய்விதழில் வெளியான வடசென்னை கடலோரப் பாதுகாப்பு குறித்த ஆய்வில், 19ஆம் நூற்றாண்டில் சென்னை துறைமுகக் கட்டுமானம் தொடங்கப்பட்ட பின்னர் கடலோர மணல் நகர்வில் மாற்றங்கள் ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் பி. ஸ்ரீனிவாஸ் மற்றும் ஏ. ஸ்ரீனிவாசுலு குறிப்பிட்டுள்ளனர்.
சென்னை துறைமுகத்தின் தெற்குப் பகுதியில் மணல் படிவு அதிகரித்தது, மெரினா கடற்கரை விரிவடைவதில் பங்காற்றியதாகவும், மறுபுறம் வடக்குப் பகுதியில் கடல் அரிப்பு தீவிரமடைய அது வித்திட்டதாகவும் அந்த ஆய்வு விளக்குகிறது.
இதேபோன்ற மாற்றங்கள் எண்ணூர் துறைமுகத்தைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. எண்ணூர் கழிமுகத்தில் இருந்து கருங்காலி வரையிலான சுமார் 15 கிலோமீட்டர் கடற்கரையில், 1991 முதல் 2019 வரை ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த ஆய்வு 2022ஆம் ஆண்டு 'மெரைன் ஜியோடெசி' ஆய்விதழில் வெளியானது.
அந்த ஆய்வின்படி, 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு காட்டுப்பள்ளி முதல் கருங்காலி வரையிலான கடற்கரைப் பகுதியில் ஆண்டுக்கு சராசரியாக 16.85 மீட்டர் வீதம் கடற்கரைக் கோடு நிலப்பகுதியை நோக்கி நகர்ந்துள்ளது.
அதே காலகட்டத்தில் எண்ணூர் துறைமுகத்தின் தெற்குப் பகுதியில் ஆண்டுக்கு சராசரியாக 12.43 மீட்டர் வீதம் மணல் படிவால் கடற்கரைக் கோடு கடலை நோக்கி நகர்ந்துள்ளது. மேலும், 2026ஆம் ஆண்டு 'என்விரான்மென்டல் சேலஞ்சஸ்' ஆய்விதழில் வெளியான மற்றோர் ஆய்வில், 1990 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள 86 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட கடற்கரையில் 58.65% பகுதிகளில் அரிப்பு காணப்பட்டதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
கடலோரக் கட்டுமானங்கள் மணலின் இயற்கையான நகர்வில் குறுக்கிடுவதால் அதன் ஒரு பகுதியில் மணல் குவிவதற்கும், மற்றொரு பகுதியில் மணல் வரத்து குறைந்து கடல் அரிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளதை இத்தகைய ஆய்வுகள் சுட்டிக் காட்டுவதாகக் கூறுகிறார் முனைவர் கிருத்திகா முருகேசன்.

இதைக் குறிப்பிட்டுப் பேசிய கோரைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் மகேஷ், "காட்டுப்பள்ளியில் இருந்து பழவேற்காடு வரையிலான கடலோரப் பகுதியில், துறைமுகங்கள் கட்டமைக்கப்பட்ட பிறகு கடல் அரிப்பு மிகவும் தீவிரமடைந்துவிட்டது. ஒவ்வோர் ஆண்டும் புயல் நேரத்தில் கிராம மக்கள் அனைவரையும் தற்காலிக நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள்" என்று கூறினார்.
கடல் அரிப்பால் சிறுகச் சிறுகத் தங்களது நிலப்பரப்பை இழந்து வருவதால் கிராமத்தை இடமாற்றுமாறு பல ஆண்டுகளாக கோரைக்குப்பம் மக்கள் கோரி வருகின்றனர். அதற்கென சுனாமிக்குப் பிறகு அமைக்கப்பட்ட குடியிருப்புகள் பழவேற்காடு ஏரிக்கு மறுபுறம் இருப்பதாகவும் அங்கிருந்து நீண்ட தூரம் பயணித்து வர வேண்டியிருப்பதால் அதை இக்கிராம மக்கள் ஏற்க மறுப்பதாக மீனவர்கள் மூர்த்தி மற்றும் மகேஷ் கூறினர்.
"குறைந்தபட்சம் ஏரியைக் கடந்து கடலுக்கு வருவதற்கு உதவும் வகையில் பாலம் அமைத்துக் கொடுக்குமாறுகூடக் கோரினோம். ஆனால் அதுவும் செய்து கொடுக்கப்படவில்லை," என்று கூறினார் மகேஷ்.
கடல் அரிப்பைத் தடுக்க எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?
வடசென்னையில் பதிவாகும் கடல் அரிப்பும் கடல் சீற்றத்தின் தாக்கமும் தமிழ்நாட்டின் பிற கடலோர மாவட்டங்களிலும் வெவ்வேறு அளவுகளிலும் வடிவங்களிலும் காணப்படுகின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழிக்கால், பிள்ளைத்தோப்பு உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்தின்போது குடியிருப்புகளுக்குள் கடல்நீர் புகுந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலை ஒட்டியுள்ள கடற்கரையிலும் 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் கடுமையான அரிப்பு ஏற்பட்டது.
கடல் அரிப்பின் தாக்கத்தில் இருந்து மீனவ கிராமங்களைப் பாதுகாக்கப் பல ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அண்ணா பல்கலைக் கழகம் 2024ஆம் ஆண்டு வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு நீர்வளத் துறையின் தகவல்படி, எண்ணூர்குப்பம், நெட்டுக்குப்பம், தாழங்குப்பம் ஆகிய பகுதிகளில் சுமார் 1.5 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை கடுமையான கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டிருந்தது. இப்பகுதிகளைப் பாதுகாப்பதற்காக 31.82 கோடி ரூபாய் மதிப்பில் பத்து தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று பெரியகுப்பம், சின்னக்குப்பம், எர்ணாவூர்குப்பம் ஆகிய பகுதிகளில் 1.45 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையைப் பாதுகாப்பதற்காகச் சுமார் 38.4 கோடி ரூபாய் மதிப்பில் ஒன்பது தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டுமானங்கள் மூலம் கடல் அரிப்பு கட்டுப்படுத்தப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.
கடலோரப் பாதுகாப்புப் பணிகளுக்காக அண்மைக் காலங்களில் ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான தகவல்களும் 2026 மார்ச் 30ஆம் தேதி மாநிலங்களவையில் வெளியிடப்பட்டுள்ளன. 2022-23 முதல் 2024-25 வரையிலான மூன்று நிதியாண்டுகளில், சென்னை மாவட்டத்தில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்தைத் திறந்த நிலையில் பராமரிப்பதற்கான கட்டுமானப் பணிகளுக்கு 70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
தூண்டில் வளைவுகளும் அலைத்தடுப்புச் சுவர்களும் நிரந்தரத் தீர்வா?
கடல் அரிப்பைத் தடுக்கக் கடற்கரையில் பாறைகளைக் குவித்தல், கடலுக்குள் தூண்டில் வளைவுகள் அமைத்தல், அலைத்தடுப்புச் சுவர்களைக் கட்டுதல் உள்ளிட்ட முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால், "சில இடங்களில் இத்தகைய கட்டுமானங்கள் கடல் அலைகளின் நேரடித் தாக்கத்தைக் குறைக்க உதவினாலும், அனைத்து பகுதிகளிலும் கடற்கரைகளில் இத்தகைய ஒரே மாதிரியான கட்டுமானம் பொருத்தமானதாக இருக்காது. கடற்கரையோர மணல் நகர்வைத் தடுக்கக்கூடிய கட்டுமானங்களின் ஒரு பகுதியில் மணல் குவிவதற்கும், மற்றொரு பகுதியில் மணல் வரத்து குறைவதற்கும் வாய்ப்புள்ளது" என்று முனைவர் கிருத்திகா குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி, இதனால் ஒரு கிராமத்தின் கடற்கரையைப் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கையால் அருகிலுள்ள மற்றொரு கிராமத்தில் கடல் அரிப்பு ஏற்படும் சாத்தியமும் உள்ளதாகக் கூறினார் அவர்.

மக்களவையில் 2026 மார்ச் மாதம் அளிக்கப்பட்ட பதிலின்படி, தமிழ்நாடு அரசின் கோரிக்கையின் அடிப்படையில் மாநிலத்தின் முழுக் கடற்கரைக்குமான மேலாண்மைத் திட்டத்தைத் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் தயாரித்துள்ளது. கடற்கரையின் நிலவியல், அலைகள் மற்றும் நீரோட்டங்கள், கடலோரக் கட்டுமானங்கள், அப்பகுதி மக்களின் சமூகப் பொருளாதாரச் சூழல் உள்ளிட்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்திற்கு ஏற்ப சுற்றுச்சூழலுக்கு உகந்த முறைகளில் கடற்கரையோர வாழ்விடங்களை மீட்டெடுப்பது தொடர்பான ஆய்வறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு அறிக்கைகளும் தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இவைபோக, கடல் அரிப்பால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு மாற்று வீடுகளை வழங்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் கோரைக்குப்பம் மக்களின் அனுபவம் காட்டுகிறது.
கடல் அரிப்பால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு மாற்று வீடுகளை வழங்குவது மட்டுமே தீர்வாகாது என்பதை கோரைக்குப்பம் மக்களின் அனுபவம் காட்டுகிறது. படகுகளை நிறுத்துவது, மீன்களைத் தரையிறக்குவது, வலைகளைப் பராமரிப்பது என மீன்பிடித் தொழில் கடற்கரையோடு நெருக்கமாகப் பிணைந்துள்ளதாகக் கூறுகிறார் ஆர்.எல். சீனிவாசன்.
எனவே, "கடலில் இருந்து வெகுதொலைவில் வீடுகள் கட்டப்படும்போது அங்கிருந்து மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தொடர முடியுமா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டுமென" மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.
கடல் அரிப்பால் இழக்கப்பட்ட நிலப்பரப்பை ஹெக்டேரிலும் சதுர கிலோமீட்டரிலும் கணக்கிட முடியும். ஆனால் அந்தக் கடற்கரைகளைச் சார்ந்து தலைமுறைகளாக வாழும் மக்களின் வாழ்வாதார இழப்பை அதே அளவீடுகளால் கணக்கிட முடியாது.
இந்தச் சூழலில், "கடற்கரையில் வசிக்கும் மக்களைக் கடலால் ஏற்படும் ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் அதே வேளையில், நாங்கள் கடலை நம்பி வாழ்வதற்கான வாய்ப்புகளையும் எவ்வாறு பாதுகாக்கப் போகிறோம்?" என்பதற்கான தீர்வையும் அரசு கண்டறிய வேண்டும் என்கிறார் கோரைக்குப்பம் மீனவர் மூர்த்தி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































