You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிராகன் விமர்சனம்: படம் எப்படி இருக்கிறது? கல்லூரி நாயகனாக பிரதீப் ரங்கநாதன் கவர்ந்தாரா?
இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'டிராகன்' திரைப்படம் இன்று (பிப்ரவரி 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், வி.ஜே. சித்து, மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன் என நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
இந்தப் படத்தின் டிரெய்லர் சமூக ஊடகங்களில் சில விவாதங்களை எழுப்பியது. இந்நிலையில் வெளியான இந்தப் படம் எப்படி இருக்கிறது? ஊடகங்கள் டிராகன் படம் குறித்துக் கூறுவது என்ன?
படத்தின் கதை என்ன?
கல்லூரியில் படிப்பில் கவனம் செலுத்தாமல், ஒழுங்கீனமாக இருக்கும் டிராகன் என்கிற ராகவன் (பிரதீப் ரங்கநாதன்) 48 அரியர் வைத்திருக்கிறார். அவர் கீர்த்தி (அனுபமா பரமேஸ்வரன்) என்ற பெண்ணைக் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில், ராகவனுடனான காதலை முறித்துக் கொண்டு கீர்த்தி வேறொருவரைத் திருமணம் செய்து கொள்கிறார்.
தனது முன்னாள் காதலியின் கணவரைவிட குறைந்தது ஒரு ரூபாய் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் போலிச் சான்றிதழ் தயாரித்து ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்க்கிறார் ராகவன்.
இதனிடையே ராகவனுக்கு பல்லவி (கயாடு லோகர்) என்ற பெண்ணோடு திருமணம் முடிவாகிறது. இந்தச் சூழலில் அவர் செய்த ஏமாற்று வேலை பற்றித் தெரிய வருகிறது.
அதை அவர் எவ்வாறு கையாள்கிறார், அவரது திருமணம் என்ன ஆனது என்பதே படத்தின் மீதி கதை.
'காதல், நகைச்சுவை படமாக மட்டுமில்லை'
"கல்லூரிக் காலத்தில் கெத்தாக இருக்க வேண்டும் என நினைத்து ஒழுங்காகப் படிக்காமல் இருந்தால் வாழ்க்கையில் என்னென்ன சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்பதை நகைச்சுவை பாணியில் இயக்குநர் சிறப்பாகக் காட்சிப்படுத்தியுள்ளார். இந்தப் படத்தை முழுமையாக ஒரு காதல், நகைச்சுவைப் படமாக மட்டும் கையாளாமல் இன்றைய இளைஞர்கள் எதை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற புரிதலுடன் படத்தை அவர் அணுகியுள்ளார்", என்று தினமணி பாராட்டியுள்ளது.
"இயக்குநரின் முதல் படமான ஓ மை கடவுளேவை போலவே இந்தப் படத்திலும் பல மாயாஜால விஷயங்கள் இருக்கின்றன. இந்தப் படத்தின் கதாபாத்திரங்களுடன் பார்வையாளர்கள் உணர்ச்சிபூர்வமான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும். இரண்டாம் பாதியில் உள்ள திருப்புமுனைக் காட்சிகள் படத்தை சுவாரஸ்யமாக்குகின்றன" என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
"ராகவன் மற்றும் கீர்த்தியின் காதல் கதை சற்று சிக்கலானதாக இருக்கிறது. முதல் பாதியில் நகைச்சுவைக் காட்சிகள் ஒரு சில இடங்களில் எடுபடுகின்றன. படத்தில் முதல் பாதியில் வரும் பிரச்னைகள், இரண்டாம் பாதியில் சரியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன" என்று இந்தியா டுடே அதன் விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.
மீண்டும் ஒரு பிளாக்பஸ்டரா?
"ராகவன் கதாப்பாத்திரம் ஒரு வழக்கமான தமிழ் சினிமா ஹீரோ போலவே கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் எப்போதும் சினிமாவில் மற்ற கதாபாத்திரங்கள் ஹீரோவுக்கு கண்மூடித்தனமாக உறுதுணையாக, அவரது பேச்சுக்குக் கட்டுப்படுவது போல அல்லாமல் இந்தப் படத்தில் ஹீரோவுக்கு அறிவுரை கூறி அல்லது கண்டித்த பிறகே அவருக்கு உதவுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
"கீர்த்தியாக வரும் அனுபமா பரமேஸ்வரன் தனது பாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார். கயாடு லோஹர், ஒரு அன்பான காதலியாகத் தனது கதாபாத்திரத்தில் மிகவும் பொருத்தமாக நடித்துள்ளார். ராகவனின் நண்பர்களான வி.ஜே.சித்து, ஹர்ஷத் கான் ஆகியோர் டிராகன் படத்தில் மிக முக்கியப் பாத்திரங்களில் பணியாற்றியுள்ளனர்," என்று இந்தியா டுடே பாராட்டியுள்ளது.
"நடிகர் பிரதீப், லவ் டுடே படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு பிளாக்பஸ்டரை கொடுத்துள்ளார். அவர் பல இடங்களில் தனுஷை நினைவுபடுத்துகிறார். அவரது திரை வாழ்க்கையில் டிராகன் திரைப்படம் ஒரு முக்கிய இடத்தைக் கொடுத்திருக்கிறது" என்று தினமணி பாராட்டியுள்ளது.
இளம் தலைமுறையினரை கவருமா?
இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸின் இசையும் பின்னணி இசையும் டிராகன் போன்ற படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் என்று இந்தியா டுடே பாராட்டியுள்ளது.
அதோடு, "நிகேத் பொம்மிரெட்டியின் சிறப்பான ஒளிப்பதிவும், பிரதீப் இ ராகவின் படத்தொகுப்பும் டிராகன் படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளதாகவும்" அதன் விமர்சனத்தில் கூறியுள்ளது.
"இளம் தலைமுறையினரை இயக்குநர் எல்லா வழிகளிலும் திருப்திப்படுத்தியுள்ளார். படத்தின் மற்றொரு பெரிய பலம் அதன் உணர்ச்சிப்பூர்வமான வசனங்கள், அவை மிகவும் கவனமாக எழுதப்பட்டுள்ளன" என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
"தமிழ் சினிமாவில் நகைச்சுவைப் படங்களுக்குப் பெரிய தேவை உருவாகியுள்ளது. வெறும் நகைச்சுவையாக ஒரு கதையைச் சொன்னாலே படம் வெற்றியை நோக்கி நகர்ந்துவிடும். ஆனால், டிராகனில் சிரிக்க வைப்பதுடன் கல்லூரிக் காலம் எப்படி வாழ்க்கைக்கு முக்கியம் என்பதையும் நுட்பமாக இயக்குநர் பதிவு செய்திருக்கிறார்.
முதல் பாதியில் சின்னச் சின்ன தொய்வுகள் இருந்தாலும் முழுமையாக நல்ல படம் என்கிற திருப்தியையே டிராகன் கொடுக்கிறது" என்று தினமணி குறிப்பிட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)