ரோபோ சங்கர்: கிடைத்த கதாபாத்திரங்களை மறக்க முடியாததாக மாற்றிய கலைஞன்

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

ரோபோ சங்கர் மிகக் குறைவான திரைப்படங்களிலேயே நடித்திருந்தாலும், தான் ஏற்ற பாத்திரங்களுக்கு வித்தியாசமான நடிப்பைக் கொடுத்து கவனிக்க வைத்தவர். குழந்தைகளாலும் ரசிக்கப்பட்டவர்.

தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களுக்கு என ஒரு நீண்ட பட்டியல் உண்டு. சினிமா தமிழ் பேச ஆரம்பித்த சில ஆண்டுகளிலிருந்தே நகைச்சுவை நடிகர்களின் ஆதிக்கமும் துவங்கியது. காளி என். ரத்தினத்தில் துவங்கி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நகைச்சுவை நடிகர் முன்னணியில் இருந்தாலும் இதற்கடுத்தடுத்த நிலையில் இருந்து, ரசிகர்களை சிரிக்க வைத்த நடிகர்களின் பட்டியல் மிகவும் பெரியது. அந்தப் பட்டியலில் இணையக்கூடியவர்தான் ரோபோ சங்கர்.

12 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியானது 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' திரைப்படம். விஜய் சேதுபதி, ஸ்வாதி ரெட்டி, நந்திதா, பசுபதி, அஸ்வின், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தில் ரோபோ சங்கருக்கு ஒரு சின்ன ரோல். கட்டப் பஞ்சாயத்து செய்யும் பசுபதியின் தலைமை அடியாளாக வருவார். அறிமுக காட்சியில் பசுபதி போன் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு அடியாளாக பின்னால் நின்றுகொண்டிருப்பார் ரோபோ சங்கர். பசுபதிக்குத்தான் ஃபோகஸ் இருக்கிறதென்றாலும், அந்தக் காட்சியில் ரோபோ சங்கரைக் கவனிக்காதவர்கள் இருக்கவே முடியாது. ஒரு நொடிகூட அவரது உடல் சும்மா இருக்காது. ஏதோ ஒன்றைச் செய்துகொண்டேயிருப்பார். பசுபதி போன் பேசி முடித்துவிட்டு, ஒரு பிரச்சனையைத் தீர்க்க தன்னிடம் வந்திருக்கும் பட்டிமன்ற ராஜாவுடன் பேச ஆரம்பிப்பார். இரண்டு பேரும் சீரியஸாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால், படம் பார்ப்பவர்களின் கவனம் முழுவதும் ரோபோ சங்கர் மீதுதான் இருக்கும். ஓரமாக நின்றபடியே ஏதையோ செய்துகொண்டேயிருப்பார் ரோபோ சங்கர்.

பிறகு திடீரென சுகர் மாத்திரையை பசுபதியின் வாயில் திணித்து தண்ணீரைக் குடிக்கச் செய்துவிட்டு, காலரைத் தூக்கிவிட்டுக்கொள்வார். பஞ்சாயத்து நடக்கும்போது ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதி, "குமுதாவோட எல்லா படமும் செல்போன்ல இருக்கு" என்பார். அடுத்த ஃப்ரேமில் ரோபோ சங்கர் காட்டும் பாவனை, அபாரமாக இருக்கும். பிறகு அந்தப் படங்களைப் பார்க்க அவர் ஆர்வம் காட்டாததுபோல, ஆர்வம் காட்டுவதை மிக நுணுக்கமாகச் செய்திருப்பார். இந்த ஒட்டுமொத்தக் காட்சியிலும் பசுபதி, விஜய் சேதுபதி, பட்டிமன்ற ராஜா ஆகிய மூன்று பேர்தான் முக்கியப் பாத்திரங்கள். ஆனால், பார்ப்பவர்களின் மனதைக் கவர்வதென்னவோ ரோபோ சங்கர்தான்.

சின்ன கதாபாத்திரங்களிலும் கவனம் ஈர்த்தவர்

இதற்கடுத்ததாக, 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்படம். எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தில் ரோபோ சங்கருக்கு 'ஜாக்கெட் ஜானகிராமன்' என்ற எம்.எல்.ஏ. பாத்திரம். ஹீரோ என்னவோ விஷ்ணு விஷால்தான் என்றாலும், படத்தின் மையச் சரடாக ஜானகிராமன் பாத்திரம் அமைந்திருக்கும். அந்த ரோலில் படம் முழுக்க கலக்கியிருப்பார் ரோபோ சங்கர். நினைவுதப்பிப்போன ரோபோ சங்கருக்கு, நினைவு திரும்பும் தருணத்தில் அவரைக் கடத்திக்கொண்டு போகும் ரவி மரியா, தன் மாமா அவரிடம் என்ன சொன்னார் என்று கேட்பார். அதற்கு ரோபோ சங்கர், "அன்னைக்குக் காலையில ஆறு மணியிருக்கும். கோழி கொக்கரக்கோனு கூவுச்சு" என்று ஆரம்பிப்பார். கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு நீளும் இந்தக் காட்சியில் பிய்த்து உதறியிருப்பார் ரோபோ சங்கர்.

அதேபோல, தனுஷ் நடித்த 'மாரி' திரைப்படத்திலும் ரோபோ சங்கரின் காமெடி வெகுவாகக் கவனிக்கப்பட்டது.

தான் நடித்த ஒவ்வொரு படத்திலும் மறக்க முடியாதபடி ஏதாவது செய்திருப்பார் ரோபோ சங்கர். தனக்கு வலுவான பாத்திரங்கள் கிடைக்காதபோது, கிடைக்கும் சிறிய பாத்திரத்தையே கவனத்தை ஈர்க்கும் பாத்திரமாக மாற்றுவதில் வல்லவர் அவர்.

ஏன் 'ரோபோ' சங்கர் என்று அழைக்கப்படுகிறார்?

ரோபோ சங்கருக்கு சொந்த ஊர் மதுரை. உடற்பயிற்சியின் மீது ஆர்வம் கொண்டிருந்த அவர், ஒரு நடனக் குழுவிலும் இணைந்து செயல்பட்டுவந்தார். ஒரு முறை உடல் முழுக்க பெயிண்ட் அடித்து, ரோபோவைப் போல அவர் ஆடிய நடனம் பிரபலமாகவே, சாதாரண சங்கர் 'ரோபோ' சங்கரானார். 90களின் பிற்பகுதியில் இருந்து சினிமாவில் சின்னச் சின்னப் பாத்திரங்களில் நடித்து வந்தார் ரோபோ சங்கர். இந்த நிலையில்தான், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு தமிழ்நாடு முழுவதும் நல்ல அறிமுகமும் கிடைத்தது. அதையடுத்து மேலும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வாய்ப்புகள் கிடைத்தன.

இந்த நிலையில், கோகுல் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியான 'ரௌத்திரம்' படத்தில் ஒரு பெரிய பாத்திரம் கிடைத்தது. ஆனால், படம் வெளியானபோது, இவரது பாத்திரம் அதில் பெரிதாக இல்லை. இதனால், தனது அடுத்த படமான 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் ரோபோ சங்கருக்கு ஒரு நல்ல ரோலைக் கொடுத்தார் கோகுல். எதிர்பார்த்தபடியே, அவருக்கு பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துத் தந்தது அந்தப் படம். இதற்குப் பிறகு 'வாயை மூடிப் பேசவும்' படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் இயக்குநர் பாலாஜி மோகன், தனுஷை வைத்து 'மாரி' படத்தை எடுத்தபோது, அதில் ரோபோ சங்கருக்கு பெரிய வாய்ப்பளித்தார். இதற்குப் பிறகு விஜய்யுடன் 'புலி' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது.

நடிப்பு மட்டுமல்ல, அவருக்கு தனித்துவமான குரல் வளமும் இருந்தது. இதனால், 'தி லயன் கிங்', 'முஃபாசா' ஆகிய படங்கள் தமிழில் வெளியானபோது, 'பும்பா' பாத்திரத்திற்கு குரல் கொடுத்தார் ரோபோ சங்கர். இந்தப் படங்களில் அவரது குரல் குழந்தைகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான டாப் குக்கு டூப் குக்கு - சீஸன் 2வில் பங்கேற்றிருந்தார் ரோபோ சங்கர்.

படப்பிடிப்பின் போது மயங்கிய ரோபோ சங்கர்

2023ஆம் ஆண்டில் ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது, உடல் எடை வெகுவாகக் குறைந்தது. அதற்குப் பிறகு உடல் நலம் தேறிய அவர் திரைப்படங்களில் நடித்துவந்தார்.

இந்த நிலையில், சென்னையில் ஒரு படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துவந்தபோது புதன்கிழமையன்று திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் பெருங்குடியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலை பின்னடைவைச் சந்தித்த நிலையில், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமையன்று மாலையில் ரோபோ சங்கர் உயிரிழந்தார்.

மருத்துவமனை வெளியிட்ட செய்திகுறிப்பில், சங்கருக்கு உணவுப்பாதை உள்ளுறுப்புகளில் கடுமையான ரத்தக்கசிவு மற்றும் சிக்கலான அடிவயிற்று பிரச்னையால், பல உறுப்புகளின் செயல்பாடு நிறுத்தம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா. ஒரே மகள் இந்திரஜா. இவர் அட்லீ இயக்கத்தில் வெளியான 'பிகில்' படத்தில் 'பாண்டியம்மா' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு, திருமணமாகி குழந்தை இருக்கிறது.

அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அவரது உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் தனுஷ் உள்ளிட்ட திரைத்துறையினர் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் அவருக்கு இரங்கல் தெரிவித்தார். சிம்ரன், வரலக்‌ஷ்மி சரத்குமார், சாந்தனு என பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு