You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஷ்ய ராணுவத்தில் சேர கடத்தப்பட்ட இந்தியர்கள்: தேடுதல் வேட்டையில் இறங்கிய சிபிஐ - இதுவரை தெரிய வந்த தகவல்கள்
- எழுதியவர், செரிலன் மோலன்
- பதவி, பிபிசி நியூஸ், டெல்லி
ரஷ்யாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்தியர்களை ஏமாற்றி ரஷ்யா - யுக்ரேன் போர் எல்லைக்கு அனுப்பிய முகவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேடி தீவிரமான தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ.
சமீபத்தில் ரஷ்யாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்ட இரண்டு இந்தியர்கள் ரஷ்யா - யுக்ரேன் போரில் கொல்லப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.
இந்நிலையில் இவர்களோடு சேர்த்து, இந்த வலையில் மேலும் 35 பேர் சிக்கியுள்ளதும் சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆசை காட்டி மோசடி
இந்தியாவில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களில் "முகவர்கள் மற்றும் நிறுவனங்கள் வழியாக இந்த மனிதக் கடத்தல்" நிகழ்வு நடந்துள்ளது. "வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களை சமூக ஊடகங்கள் வாயிலாக வரவழைத்து அவர்களை ஏமாற்றி இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளதாக" சொல்லப்படுகிறது.
இதற்கு முன்னதாக பிபிசியிடம் பேசிய உத்தர பிரதேசத்தில் இருந்து மாஸ்கோ அனுப்பப்பட்ட நபர் ஒருவர், தங்களையும் இதேபோல் மாதம் 1,50,000 ரூபாய் சம்பாதிக்கலாம் என்று வாக்குறுதி அளித்து அனுப்பி வைத்ததாகக் கூறியுள்ளார்.
மேலும், “ராணுவத்தில் தாங்கள் பணியாற்றப் போகிறோம் என்று முன்கூட்டியே எங்களிடம் சொல்லப்படவில்லை,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியர்களுக்கு ரஷ்ய ராணுவத்தில் வேலை
இதுகுறித்து விசாரணை செய்துள்ள சிபிஐ, இந்த மனிதக் கடத்தல் சம்பவம் ஒருங்கமைக்கப்பட்ட வலையமைப்பின் வழியாகவே நடந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
அவர்களது கூற்றுப்படி, குறிப்பிட்ட விசா நிறுவனங்கள் அல்லது முகவர்கள் வேலை தேடும் இளைஞர்களைக் கவரும் வகையில், சமூக ஊடகங்கள் வாயிலாக ரஷ்யாவில் நல்ல சம்பளத்தில் வேலை என்று விளம்பரம் கொடுத்து அவர்களை வலையில் வீழ்த்துகின்றனர்.
பின்னர் அவர்களை ரஷ்யா அனுப்பி அங்கு அவர்களுக்கு ராணுவ பயிற்சி அளித்து, அவர்களது விருப்பமே இல்லாமல், ஆபத்தான முன்கள போர்ப் பகுதிகளுக்கு அவர்களை அனுப்பிவிடுகின்றனர். அப்படித்தான் ரஷ்யாவில் சமீபத்தில் நடந்த இந்தியர்களின் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.
சிபிஐ சோதனை
இந்தச் சம்பவங்களுக்குப் பின் விழித்துக்கொண்ட சிபிஐ, கடந்த 6ஆம் தேதியன்று இந்தியாவில் டெல்லி, திருவனந்தபுரம், மும்பை, அம்பாலா, சண்டிகர், மதுரை, சென்னை ஆகிய நகரங்களில் உள்ள 13 முக்கிய இடங்களில் சோதனை நடத்தியுள்ளது.
இந்தச் சோதனையில் சில முகவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சிலர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். மேலும், இந்தக் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீதான தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையில் இதுவரை 50 லட்சம் பணம், ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட பலவற்றை சிபிஐ கைப்பற்றியுள்ளது. மேலும், 35 பாதிக்கப்பட்டவர்களையும் அடையாளம் கண்டுள்ளது.
வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சமீபத்தில் ரஷ்ய ராணுவத்தில் உள்ள இந்தியர்களை அங்கிருந்து வெளிக் கொண்டுவர ரஷ்ய அதிகாரிகளுடன் பணியாற்றி வருவதாகத் தெரிவித்திருந்தது.
அதேபோல், இந்தியர்கள் இந்தப் பிரச்னையில் இருந்து விலகி இருக்குமாறும், எதிலும் சிக்கிக் கொள்ளாமல் இருக்மாறும் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள பொதுமக்கள் யாரும் இதுபோன்ற போலி மோசடியில் சிக்கிக்கொண்டு உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)