You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குஜராத் பள்ளியில் முதலிடம் பிடித்த முஸ்லிம் மாணவியை கௌரவிக்க மறுப்பா? நடந்தது என்ன?
- எழுதியவர், லஷ்மி படேல்
- பதவி, பிபிசி குஜராத்தி
குஜராத்தின் கெராலு தாலுகாவில் லுனாவா கிராமத்தில் உள்ள ஸ்ரீ கே டி படேல் ஸ்ம்ருதி வித்யாலயாவின் பெயர் நாடு முழுவதும் தற்போது செய்திகளில் அடிபடுகிறது. அது ஏன்? ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பள்ளி வளாகத்தில் நடந்த ஒரு சம்பவமே இதற்குக்காரணம்.
பள்ளியில் சிறந்து விளங்கும் மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்தது. பத்தாம் வகுப்புத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்ற சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி, நிகழ்ச்சியில் வேண்டுமென்றே கெளரவிக்கப்படவில்லை. கண்டிக்கப்பட வேண்டிய பள்ளி நிர்வாகத்தின் இந்தச்செயல் அனைவராலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்ட, குஜராத் அரசு, இது குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு மெஹ்சானா மாவட்ட கல்வி அதிகாரியிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
நடந்தது என்ன?
ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று பள்ளியில் மாணவர்கள் பாராட்டு விழா நடந்தது. படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு சிறப்பு விருந்தினர்களால் பாராட்டப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியின் போது SSC தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்ற அர்னாஸ் பானு மேடைக்கு அழைக்கப்படவில்லை. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த இந்த மாணவியிடம் பள்ளி ஊழியர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டனர்.
”லுனாவா பள்ளியில் நடந்த சம்பவம் என் கவனத்துக்கு வந்துள்ளது. அதிகாரிகள் ஆகஸ்ட் 21 ஆம் தேதி பள்ளிக்குச் சென்று விரிவான ஆய்வு நடத்துவார்கள். பள்ளி முதல்வர், நிர்வாகிகள் மற்றும் அர்னாஸ் பானுவின் பெற்றோருடன் அவர்கள் பேசுவார்கள். சம்பவம் குறித்து அதிகாரிகள் ஆலோனை கலப்புகளை நடத்துவார்கள்,” என்று பிபிசி குஜராத்திடம் பேசிய மாவட்ட கல்வி அதிகாரி ஏ கே படேல் தெரிவித்தார்.
”‘எங்கள் மகள் அர்னாஸ் பானு எஸ்எஸ்சி தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்றார். பெரிய சாதனை செய்த போதிலும் பள்ளி ஆசிரியர்கள் அவளை நிகழ்ச்சியில் பாராட்டவில்லை. இது குறித்து பள்ளி ஆசிரியர்களுடன் பேசினேன்,” என்று லுனாவா கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் ரஹிசாபென் பதான் பிபிசியிடம் கூறினார்.
”அர்னாஸ் பானு கஹோடா பள்ளியில் 11ம் வகுப்பில் சேர்ந்துள்ளார். லுனாவா பள்ளியின் மாணவர்களை மட்டுமே நாங்கள் கெளரவித்தோம் என்று ஆசிரியர்கள் என்னிடம் கூறினார்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்.
”அவள் 10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்தபோது உங்கள் பள்ளியில்தான் படித்தாள். எனவே நிகழ்ச்சியில் அவள் கெளரவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான் ஆசிரியர்களிடம் சொன்னேன்,” என்றார் அவர்.
லுனாவா கிராமத்தில் 5,000 பேர் வசிக்கின்றனர். அதில் 3,000 பேர் முஸ்லிம்கள் என்று ரஹிசாபென் கூறினார். இந்த கிராமத்தில் செளத்ரி, பஞ்சால், தாகூர், ரபாரி மற்றும் பிற சமூகத்தினரும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
மாணவியின் தந்தை சொல்வது என்ன?
”நான் ஒரு விவசாயி. நாங்கள் இந்த கிராமத்தில் பல தலைமுறைகளாக வசித்து வருகிறோம். எங்கள் முன்னோர் 1954 இல் சிப்பாய்களாக இருந்தனர். நாங்கள் கிராமத்தில் எந்த பாகுபாட்டையும் சந்தித்ததில்லை. முதல்முறையாக எங்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. என் மகள் 10ம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் பெற்றாலும், இரண்டாமிடம் பெற்ற மாணவிக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது,” என்று அர்னாஸ்பானுவின் தந்தை சனேவர் கான் பிபிசி குஜராத்தியிடம் தெரிவித்தார்.
”அர்னாஸ் பானு, லுனாவாவில் உள்ள ஸ்ரீ கே டி படேல் ஸ்ம்ருதி வித்யாலயாவில் 10 ஆம் வகுப்பு வரை படித்தாள். தேர்வில் 87% மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தாள். 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களைப் பாராட்ட ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பள்ளி நிர்வாகத்தால் ஒரு நிகழ்ச்சி நடத்தப்படும்.”
”2023 இல் நடந்த SSC தேர்வுகளில் அர்னாஸ் முதலிடம் பிடித்ததால் மிகவும் உற்சாகமாக பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டாள். அன்றைய தினம் பள்ளிக்கூடம் தன்னை கெளரவிக்கும் என்ற எண்ணத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். மகளின் சாதனையால் நாங்களும் மகிழ்ச்சியடைந்தோம்,” என்று சனேவர் கான் குறிப்பிட்டார்.
”ஆனால் என் மகள் அழுது கொண்டே வீடு திரும்பினாள். நாங்கள் அவளிடம் காரணத்தைக் கேட்டபோது, பள்ளி நிர்வாகம் தனது பெயரை அறிவிக்கவில்லை என்றும், அதற்கு பதிலாக இரண்டாவது இடத்தைப் பிடித்த மாணவிக்கு நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது என்றும் அவள் சொன்னாள். இதற்கான காரணத்தை பள்ளி நிர்வாகத்திடமும், ஆசிரியர்களிடமும் கேட்டபோது அவர்களால் திருப்திகரமான பதிலை அளிக்க முடியவில்லை. பள்ளி நிர்வாகிகளும் ஆசிரியர்களும் ஒருவர் மற்றவர் மீது குற்றம் சாட்டுகின்றனர்.”
"எங்களுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. ஜனவரி 26 ஆம் தேதி அவளை கெளரவிப்போம் என்று பள்ளி நிர்வாகிகளும் ஆசிரியர்களும் சொன்னார்கள். ஆனால் 'ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அர்னாஸ் ஏன் கௌரவிக்கப்படவில்லை என்பதே என் கேள்வி. எனக்கு இதற்கான பதில் தேவை,” என்றார் அவர்.
பள்ளிக்கூடம் என்ன சொல்கிறது?
”நாங்கள் மாணவர்களிடையே எப்போதும் பாரபட்சம் காட்டுவதில்லை. நாங்கள் ஜனவரி 26 அன்று மாணவியை கெளரவிப்போம். நிகழ்ச்சியில் அர்னாஸ் பானு கலந்து கொள்ளவில்லை. அதனால் அவர் கெளரவிக்கப்படவில்லை,” என்று ஸ்ரீ கே.டி.படேல் ஸ்ம்ருதி வித்யாலயாவின் நிர்வாகி பிபின் படேல் கூறினார்.
'ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று ஒரு சிறிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து எங்கள் பள்ளி மாணவர்களை கெளரவித்தோம். ஜனவரி 26 ஆம் தேதியும் நாங்கள் மாணவர்களை கெளரவிப்போம். எந்த மாணவராவது மன வருத்தம் அடைந்திருந்தால், ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று அந்த மாணவரை கெளரவிப்போம். அந்த நிகழ்ச்சிக்கு அர்னாஸ் பானுவின் பெயரை சேர்த்துள்ளோம்,” என்று பள்ளியின் முதல்வர் அனில் படேல் குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்