You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'2004-ல் பறக்கும் தட்டை பார்த்தேன்' - அமெரிக்க முன்னாள் கடற்படை தளபதி சாட்சியம்
- எழுதியவர், கைலா எப்ஸ்டீன்
- பதவி, பிபிசி நியூஸ்
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை கடந்த புதன்கிழமையன்று ஒரு முக்கியமான கூட்டத்தைக் கூட்டியது. அதில், ஏலியன்கள் பற்றியும் யுஎஃப்ஓ என்று அழைக்கப்படும் அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
அந்தக் கூட்டத்தின்போது விசாரிக்கப்பட்ட சாட்சிகள் அளித்த வாக்குமூலம் ஏலியன் மர்மங்கள் பற்றிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.
அரசின் உயர் மட்டம் வரைக்கும், மர்மம் விலகாத இந்த விஷயங்கள் பற்றிய ஆய்வுக்கு உட்படுத்தத் தகுதியானவை என்பதை ஒப்புக்கொள்ளும் விதமாக இந்தக் கூட்டம் அமைந்தது.
"சிறிய பச்சை மனிதர்களையோ, பறக்கும் தட்டுகளையோ அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசாரணைக்கு கொண்டுவரப் போவதில்லை. உண்மைகளைக் கண்டறியவே நாம் கூடியுள்ளோம்," என்று கூட்டத்தின் தொடக்கத்தில் குடியரசுக் கட்சியின் டிம் புர்செட் கூறினார்.
இருப்பினும் அந்தக் கூட்டத்தின்போது பேசிய சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் நமக்குத் தெரியாத ஒன்றை நோக்கிச் சென்றன.
பூமியின் இயக்கவியலின் அடிப்படையாக விளங்கும் இயற்பியல் விதிகளை மீறக்கூடிய சில பொருட்களுடன் தங்களுக்கு ஏற்பட்ட சந்திப்புகள் குறித்த அனுபவங்களை அந்த மூன்று சாட்சிகளும் பகிர்ந்துகொண்டனர்.
இரண்டு மணிநேரம் நீடித்த அந்தக் கூட்டத்தில், அதுவரை வெளியே சொல்வதற்கே பயந்த விஷயங்களை அந்த விமானிகள் பகிர்ந்துகொண்டனர்.
விமானங்களில் இருந்து மீட்கப்பட்ட உயிரியல் பொருட்கள் பற்றிய உண்மைகளை வெளியே சொல்பவர்களுக்கு எதிராக நடப்பதாகக் கூறப்படும் பழிவாங்கள் நடவடிக்கைகள் குறித்தும் அப்போது தெரிவிக்கப்பட்டது.
இந்த அசாதாரண நிகழ்வுகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவை என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டனர்.
இந்தக் கூட்டத்தின்போது பேசப்பட்ட விஷயங்களில் அதிர்ச்சியூட்டும் எந்தத் தகவலும் வெளியாகவில்லை. வேற்றுகிரகவாசிகள் இருப்பதும் உறுதி செய்யப்படவில்லை.
ஆனால், அவற்றை நேரில் பார்த்ததாகச் சொல்லும் சாட்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டமியற்றுபவர்களும் சாட்சிகளும், ராணுவத்திடம் இருந்த UAPகளைப் பற்றிய அதிக வெளிப்படைத்தன்மையைக் கோருவதற்கு இந்த கூட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டனர்.
அடையாளம் காணப்படாத பறக்கும் தட்டு ஒன்றை 2004ஆம் ஆண்டு தான் பார்த்தது குறித்து ஓய்வுபெற்ற அமெரிக்க கடற்படை தளபதி டேவிட் ஃப்ரேவர் விவரித்தார்.
ஓய்வுபெற்ற அமெரிக்க கடற்படை தளபதி டேவிட் ஃப்ரேவர், 2004ஆம் ஆண்டில் "டிக்-டாக்"(Tic tac) வடிவிலான UAPஐ தான் பார்த்ததை மீண்டும் ஒருமுறை விவரித்தார்.
அது டிக்-டாக் வடிவில் இருந்தது என்றும் விமானிகளைக் குழப்பும் விதமாக அதன் நகர்வு இருந்தது என்றும் அவர் விளக்கினார். அதன் வீடியோ பதிவு 2017இல் வெளியிடப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க கடற்படையால் அது வெளிப்படையாக சரிபார்க்கப்பட்டது.
அதுகுறித்து விவரித்த ஃப்ரேவர், அவர்கள் எதிர்கொண்ட அந்தத் தொழில்நுட்பம், இன்று மனிதர்களிடம் உள்ளவை மட்டுமின்றி அடுத்த பத்து ஆண்டுகளில் நாம் உருவாக்கத் திட்டமிட்டுள்ள எதையும்விட மிகவும் உயர்தரமான தொழில்நுட்பமாக இருந்தது என்று கூறினார்.
அரசு அதிகாரிகள் இந்தத் தகவல்களை வெளியாகவிடாமல் அடக்கி வைத்ததோடு, அதை வெளியிட முயன்றவர்களைத் தண்டித்தனர் என்று விமானப்படையின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி டேவிட் க்ரூஷ் சுட்டிக்காட்டினார்.
அதேவேளையில், ரகசியத்தன்மை தொடர்பான சட்டங்கள் காரணமாக இதுகுறித்துப் பொதுவெளியில் மேற்கொண்டு விவரிக்க முடியாது எனவும் அவர் கூறினார்.
வேற்று கிரக உயிர்கள் மீட்கப்பட்டனவா?
ஒரு குறிப்பிடத்தக்க பரிமாற்றத்தில், தென் கரோலினாவை சேர்ந்த குடியரசுக் கட்சியின் நான்சி மேஸ், ’இந்த பூமியை சேராத பொருட்கள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்’ என்று க்ரூஷிடம் கேட்டார்.
அரசாங்கத்தால் மீட்கப்பட்ட எந்தவொரு வானூர்தியிலாவது "உயிரியல்" பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதா என்றும் அவர் வினவினார்.
தனது முந்தைய ஊடக நேர்காணல்களைக் குறிப்பிட்ட க்ருஷ் "இந்த மீட்டெடுப்புகள் சிலவற்றுடன் உயிரியல் பொருட்களும் இருந்தன” என்று பதிலளித்தார்.
’அவை மனிதர்களா அல்லது மனிதர் அல்லாத வேறு உயிரியல் பொருட்களா’? என்று மேஸ் கேட்டார்.
"மனிதர் அல்லாதவை. இந்தத் திட்டம் பற்றிய நேரடி தகவல் உள்ளவர்களின் மதிப்பீடு இது. அவர்களுடன் நான் பேசியபோது இது தெரிய வந்தது,” என்று க்ரூஷ் பதிலளித்தார். மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், வேற்றுகிரக பொருள் எதையும் தான் தனிப்பட்ட முறையில் பார்த்ததில்லை என்பதை உறுதி செய்தார்.
ராணுவப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள், ’விளக்கம் இல்லாத காட்சிகள்’ பற்றி அறிக்கையைப் பதிவு செய்யும் விதமாக, அதிகாரப்பூர்வ தகவல் அளிக்கும் செயல்முறை இருக்க வேண்டும் என்று நேரில் கண்ட சாட்சிகள் அழைப்பு விடுத்தனர்.
"விமானிகள் தங்கள் வேலையை இழக்கும் அச்சம் இல்லாமல், இது பற்றி தெரிவிக்கக்கூடிய ஓர் அமைப்பு தேவை" என்று அமெரிக்கன்ஸ் ஃபார் சேஃப் ஏரோஸ்பேஸ் அமைப்பின் இயக்குநர் ரியான் கிரேவ்ஸ் கூறினார்.
அந்தக் கோரிக்கையை கூட்டத்தொடரின் முடிவில் நிறைவேற்ற காங்கிரஸ் ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது.
"யுஏபிகள், அவை எதுவாக இருந்தாலும், நமது ராணுவம் மற்றும் சிவிலியன் விமானங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கலாம். அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்" என்று கலிஃபோர்னியாவை சேர்ந்த ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ராபர்ட் கார்ஸியா கூறினார்.
"யுஏபிகள் குறித்து அதிக அறிக்கையிடலை நாம் ஊக்குவிக்க வேண்டும். நாம் எவ்வளவு அதிகமாக அவற்றைப் பற்றிப் புரிந்துகொள்கிறோமோ, அவ்வளவு பாதுகாப்பாக இருப்போம்," என்றார் அவர்.
குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் இது தீவிர விஷயம் என்று கருதினாலும் வேற்றுகிரக செயல்பாடுகள் நடைபெறுவதாக ஒரு சிலர் சந்தேகம் தெரிவித்தனர்.
வேற்றுக்கிரக உயிரின் திறமையின்மை
விமானிகள் வேற்றுக்கிரக பொருட்களைப் பார்த்தார்கள் என்ற கருத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்த மிசோரியை சேர்ந்த குடியரசுக் கட்சி உறுப்பினர் எரிக் பர்லிசன் முயற்சி செய்தார்.
"நம்மை அடைய பில்லியன்கணக்கான மைல்கள் பயணிக்கக்கூடிய உயிரினங்கள், பூமியில் விபத்துக்குள்ளாகும் அளவுக்கு 'திறமையற்றவை'யாக இருக்கும் என்று நம்புவது கடினம் என்று அவர் கூறினார்.
யுஏபிகள், ராணுவ ஒப்பந்தக்காரர்களால் உருவாக்கப்பட்ட வானூர்திகளா அல்லது வேறு அரசு நிறுவனங்கள் மறைத்து வைத்திருக்கும் ரகசிய ஏஜென்சி திட்டங்களைச் சேர்ந்தவையா என்று அவர் வினவினார்.
பறக்கும் தட்டுகளை பகிரங்கமாக ஒரு கொள்கை விஷயமாக வாஷிங்டன் ஏற்றுக்கொண்ட விஷயமும், மர்மமாக இருக்கும் அவற்றைப் போலவே வியக்க வைக்கும் வேகத்தில் நடந்தது.
ஒரு சில ஆர்வலர்களுடன் முன்பு மறைவாக நடந்து வந்த சந்திப்புகள் இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அளவிற்கு முன்னேறியுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான வேறு எந்தவொரு விஷயத்தையும் போலவே தீவிரமான கேள்விக் கணைகள் இந்தக் கூட்டத்தில் தொடுக்கப்பட்டன.
அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வை ஆராயும் ஒரு ரகசிய பென்டகன் திட்டம் இருப்பதாக 2017ஆம் ஆண்டில் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டபோது இந்த விஷயம் பகிரங்கமானது.
இந்தத் திட்டத்தை முன்னாள் செனட் பெரும்பான்மை தலைவர் ஹாரி ரீட் ஆதரித்தார். அவர் நெவாடா மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
நியூயார்க் டைம்ஸ் மற்றும் டு தி ஸ்டார்ஸ் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் என்ற அமைப்பும், யுஏபிகளுடன் விவரிக்கப்படாத சந்திப்புகளைக் காட்டும் மூன்று வீடியோக்களை வெளியிட்டது. அப்போதிலிருந்து அமெரிக்க ராணுவம், இந்த சந்திப்புகளை படிப்படியாக ஒப்புக்கொண்டது, அதே நேரத்தில் அவற்றின் தோற்றம் பற்றிய ஊகங்களை வெளியிட மறுக்கிறது.
இப்போது UAP கள் என பலரால் அறியப்படும் UFO கள் பற்றி விசாரிப்பது, அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு அரிய இருகட்சி விஷயமாக மாறியுள்ளது. ஆய்வுகள் மற்றும் ராணுவ வெளிப்படைத்தன்மைக்கு இரு கட்சிகளின் உறுப்பினர்களும் அழைப்பு விடுத்துள்ளனர். 2022 இல் ஹவுஸ் இன்டலிஜென்ஸ் கமிட்டி, ரகசிய பென்டகன் திட்டத்தைப் பற்றி விசாரணை நடத்தியது. நாஸா அமைப்பு ஜூன் மாதம் இது தொடர்பாக பொது விசாரணை நடத்தியது.
முன்னாள் அதிபர்களான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பராக் ஒபாமாவும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்பும் பொது நேர்காணல்களில் இவ்விவகாரம் பற்றி பேசியுள்ளனர். தான் திறந்த மனதுடன் இருப்பதாக தேசிய பாதுகாப்பு சபையின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறினார்.
"கடற்படை மற்றும் விமானப்படையின் பைலட்டுகள் கண்ட மற்றும் அறிக்கை பதிவுசெய்த, ’விவரிக்கப்படாத வான்வழி நிகழ்வுகள்’ சரிதான் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கிர்பி கூறினார். "ஆனால் இந்த நிகழ்வுகள் என்ன என்பதற்கான பதில்கள் எங்களிடம் இல்லை." என்றார் அவர்.
புதன்கிழமையன்று தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பான காங்கிரஸ் விசாரணையில் ஏறக்குறைய எல்லா உறுப்பினர்களும் இந்த விஷயம் தொடர்பாக தங்கள் கேள்விகளை கேட்டனர்.
ஃப்ளோரிடாவை சேர்ந்த ஜனநாயக கட்சி உறுப்பினர் ஜாரெட் மாஸ்கோவிட்ஸ், "பல அமெரிக்கர்கள் இந்த விஷயம் குறித்து மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர். இதுபோன்ற ’வேற்றுக்கிரகவாசி’ விஷயம், நம்மை ஒன்றிணையச்செய்யும் வழியாக இருக்கக்கூடாது,” என்று குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்