ஒரே தெருவில் 70 காதல் திருமணங்கள் - அந்த 'காதல் தெரு' எங்கே உள்ளது தெரியுமா?
சூரத் நகரின் இந்த குறுகிய தெரு பல காதல் கதைகளை கண்டது. இந்த தெருவின் பெயரே காதல் தெரு தான். இந்த ஒரு தெருவில் மட்டும் பல காதல் கதைகளை உங்களால் கேட்க முடியும்.
இந்த தெருவில் பலரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஐந்தல்ல, பத்தல்ல, இந்த தெருவில் வாழும் குடும்பங்களுக்குள்ளேயே 70 திருமணங்கள் நடந்துள்ளது. ஒரே தெருவில் புகுந்த வீடு, பிறந்த வீடு இரண்டும் கொண்ட பெண்கள் இங்கு ஏராளம். இங்கு அருகில் வசிப்பவர்கள் வெறும் அண்டைவீட்டார்கள் மட்டும் அல்ல. மாறாக பெரும்பாலோனோர் பெண்கொடுத்து , பெண் எடுத்த உறவினர்களாக உள்ளனர்.
கௌசிகாபென் என்ற பெண் கூறுகையில், "பெற்றோர்கள் பக்கத்திலேயே இருக்கிறார்கள் என்றால் மணமுடித்த பெண்களுக்கு மகிழ்ச்சிதானே? எனக்கு திருமணமாகி 42 ஆண்டுகள் ஆகிறது. எனது அம்மா வீடும், மாமியார் வீடும் நேர் எதிர் வீடுகள். அம்மா வீட்டிலிருந்து ஐந்தடி எடுத்து வைத்தால் என் மாமனார் வீடு வந்துவிடும். நான் வீட்டில் சமைத்துக்கொண்டிருக்கும் போது என் அம்மா ஒரு குரல் கொடுத்தால் போதும், உடனே ஓடி விடுவேன்." என்றார்.
இந்த குறுகிய தெரு பல காதல் கதைகளை கண்டது. காதல் மணம் புரிந்த ஜிதேந்திரபாய் என்பவரிடம் பேசிய போது, "நான் இந்த தெருவில் வசித்தபோது, நான் கீழே அமர்ந்திருப்பேன். இவர் மேலே அந்த ஜன்னல் வழியாக என்னை பார்ப்பார். ஏதாவது பேசிக்கொள்ள வேண்டுமானால் சைகை மூலம் நாங்கள் பேசிக்கொள்வோம்." என்று கூறினார்.
இந்த தெருவின் பெயர் கச்சியா தெரு. இங்கு கன்பி கச்சியா சமூகத்தை சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். இவர்களின் மொத்த மக்கள் தொகை 1850 பேர். இங்கு 327 குடும்பங்கள் உள்ளன. தோபி தெரு மற்றும் கச்சியா தெரு ஆகிய இரண்டும் சூரத்தின் சயத்புரா பகுதியில் அமைந்துள்ளன. இந்த இரண்டு தெருக்களிலும் எங்களை சேர்ந்த 70 ஜோடிகளின் வீடுகள் உள்ளது. இந்த 70 ஜோடிகளில் 42 ஜோடிகள் காதல் திருமணம் மூலம் திருமணம் செய்துக் கொண்டவர்கள். இந்த வழக்கம் 2 தலைமுகைளுக்கு முன்பிருந்தே இருந்து வருகிறது.
ஜிதேந்திரபாய் -பிரபோத்பாய் தம்பதியர் தங்களது காதல் கதையை பகிர்ந்து கொண்டனர். ஜிதேந்திர பாய் கூறுகையில், "இவருக்கு பொதுத்தேர்வு நெருங்கி கொண்டிருந்தது. ஆனால் அவர் கணக்கில் கொஞ்சம் மோசம். என்னிடம் அவர் கணிதம் படிக்க வருவார். அப்போது எங்களுக்கிடையில் காதல் என்று எதுவும் இல்லை. அவர் எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியிருந்தார் . எங்கள் அடுத்த வீட்டில் வசிப்பதால், அவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் கணிதம் சொல்லிக் கொடுத்தேன்.
அதன் பிறகு கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தோம். பின் நெருக்கம் அதிகரித்தது. அவருக்கு தைரியம் இல்லை. ஆனால் நான் தைரியமாக கடிதம் எழுதினேன். அதை அவரிடம் கொடுக்கும்போது தான் என் கைகள் நடுங்கின. இது என்னவென்று அவருக்குப் புரியவில்லை. அந்த கடிதத்தை தூக்கி நெருப்பில் வீசினார். அதற்கு பின் தான் இந்த பையனும் அண்டை வீட்டில் தான் வசிக்கிறான், நம் தாத்தாவும் கூட இங்கேயே அருகில் திருமணம் செய்துக் கொண்டவர்தான். எனவே நான் ஏன் இதற்கு மறுக்க வேண்டும் என்று என்னை திருமணம் செய்துக் கொள்ள ஒப்புக்கொண்டார்." என்றார்.
இந்த தெருவில் தனித்துவமான உறவுகளை பார்க்கமுடிகிறது. அது பெரியவர்களோ அல்லது இளைய தலைமுறையினரோ ஒவ்வொருவருக்கும் ஒரு தனிக் கதை இருக்கிறது. அப்படி ஒருவரின் கதையைக் கேட்டால், எல்லோருடைய கதைகளையும் கேட்ட உணர்வு வரும்.
காணொளியில் முழு விவரத்தை காணலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



