You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காரில் பயணம் செய்யும் முன்பு கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்
- 2021ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் 15,384 உயிரிழப்புகளுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. 21,792 உயிரிழப்புகளுடன் உத்தர பிரதேச மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.
- 2021ஆம் ஆண்டில் 53 பெருநகரங்களில் 55,442 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில், 5,034 விபத்துகள் சென்னையில் மட்டுமே நிகழ்ந்துள்ளன. அதிக சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ள பெருநகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.
- சாலை விபத்துகள் அதிகம் பதிவான மாநிலங்களில் 55,682 விபத்து சம்பவங்களுடன் முதலாவது இடத்தில் உள்ளது தமிழ்நாடு.
- இருசக்கர வாகன ஓட்டிகளால் ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டதிலும் தமிழ்நாடு (8,259) முதலிடத்தில் உள்ளது.
- மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை தமிழ்நாட்டில் 14,415 விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
- தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளில் 5,360 உயிரிழப்புகள் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளன.
- 18,560 விபத்து நிகழ்வுகளுடன் மாநில நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த விபத்துகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
- அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் நிகழ்ந்துள்ள உயிரிழப்புகளில் 11,419 உயிரிழப்புகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
- எழுதியவர், பிரவீன் சுபம்
- பதவி, பிபிசிக்காக
மாணவர்களுக்கு தேர்வு முடிந்து கோடை விடுமுறை வந்துவிட்டது. இந்த நேரத்தில், பலர் தங்கள் குடும்பத்துடன் கார், வேன் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் தொலைதூர பயணங்களைத் திட்டமிடுகிறார்கள்.
கோடை காலத்தில், வாகனங்களின் டயர் வெடிப்பது, இன்ஜின் சூடாவது, வாகனங்களில் திடீரென தீப்பிடிப்பது போன்ற காரணங்களால் சாலைகளில் விபத்துகள் ஏற்படுவதைப் பார்க்கிறோம்.
சமீபத்தில் ஆந்திர மாநிலம் ஆலூரைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ நீரஜா ரெட்டி பயணித்த காரின் டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்தார்.
அதனால் பயணத்தைத் தொடங்கும் முன் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும், பயணத்தின் போது விழிப்புடன் இருப்பதன் மூலமும் பெரும்பாலான சாலை விபத்துகளைத் தவிர்க்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வாகனத்தை இயக்க கற்றுத்தரும் அரசு தொழிற்கல்வி கல்லூரியின் முதல்வரான கே.பி.ராகவன், கோடைகாலத்தில் 100 கிலோ மீட்டருக்கு மேல் நான்கு சக்கர வாகனங்களில் நீண்ட பயணம் மேற்கொள்பவர்களுக்கு 5 ஆலோசனைகளை வழங்குகிறார்.
1. கார் கூலிங் சிஸ்டம்
கார் தொடர்ந்து இயங்குவதால் ஏற்படும் சூட்டை குறைக்க ஓவ்வொரு காரிலும் கூலிங் சிஸ்டம் என்று அழைக்கப்படும் குளிரூட்டும் அமைப்பு இருக்கும். நமது உடலின் வெப்ப நிலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வியர்வை அமைப்பு எப்படி செயல்படுகிறதோ, அதே போல இது காரில் செயல்படுகிறது.
காரின் கூலிங் சிஸ்டமில் மிக முக்கியமான பங்கு வகிப்பது ‘கூலன்ட்‘ (Coolant).
கூலன்டின் திரவ மட்டம் வரையறுக்கப்பட்ட அளவை விட குறைந்தால், இன்ஜின் அதிக சூடாகும். இப்படி நடக்கும் போது, இன்ஜின் முடங்கி விடும். எனவே ஒவ்வொரு முறை பயணத்தைத் தொடங்கும் முன்னரும் காரில் கூலன்ட் கேனில் அதன் அளவை சரிபார்க்கவும்.
அதே நேரத்தில், இன்ஜினில் உள்ள ரேடியேட்டரைச் சுற்றியுள்ள பல்வேறு குழாய்களில் (மேல் குழாய்கள், கீழ் குழாய்கள்) கசிவு இல்லை என்பதை உறுதிப்படுத்தவும். கசிவு கண்டறியப்பட்டால், அதை நீங்களே சரிசெய்ய முயற்சி செய்யுங்கள். அதைப் பற்றி தெரியாத நபர்கள் மெக்கானிக் உதவியை நாடலாம்.
2. டயரில் காற்றின் அளவு
டயர்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு காற்று எப்போதும் இருக்க வேண்டும். ஒவ்வொரு காருக்கும் நிரப்ப வேண்டிய முழு காற்றின் எடை மாறுபடும். அந்த விவரம் ஓட்டுநர் இருக்கை இருக்கும் கதவின் அருகே கார் தயாரிப்பாளரால் சிறிய தகட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
சிலர் மைலேஜ் அதிகம் கிடைக்கும் என்று நினைத்து, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக காற்று அடித்து வண்டியை ஓட்டுகிறார்கள். ஆனால் டயர்களில் அதிக காற்று இருந்தால் அதிக மைலேஜ் கிடைக்கும் என்பது தவறான கருத்து என்கிறார் ராகவன்.
கோடை காலத்தில் தார் சாலைகளில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். அந்த சாலைகளில் வாகனம் வேகமாகச் செல்லும்போது டயர்களிலும் வெப்பநிலை உயரும். இதனால் வாகனத்தை வேகமாக இயக்கும் போது அதிக வெப்பம் ஏற்பட்டு டயர் வெடித்து விபத்து ஏற்படும்.
வாகன டயர்களில் அதிகமாக காற்று நிரப்பி கோடை காலத்தில் இயக்கும் போது, டயர் வெடித்து விபத்து ஏற்படும் வாய்ப்பு சற்று அதிகமாக இருக்கிறது.
காரணம் என்னவாக இருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டி டயர்களில் காற்றை நிரப்புவது நல்லதல்ல என்கிறார் ராகவன்.
3. பேட்டரி
நீண்ட தூர பயணங்களின் போது எப்போதும் வாகனத்தின் பேட்டரி மற்றும் எலக்ட்ரிக்கல் சிஸ்டத்தில் ஒரு கண் வைத்திருக்க வேண்டும்.
குறிப்பாக வாகனத்தில் உள்ள மின்சார அமைப்பு தொடர்பான வயரிங்கில் ஏதாவது குறைபாடுகள் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
வயரிங் சேதமானால், ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு, வாகனத்தினுள் தீ விபத்து ஏற்படும். சாலையில் செல்லும் கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிவதற்கு இதுவே முக்கிய காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.
வாகனத்தில் அதிக திறனுள்ள ஹாரன், ஹெட்லைட் போன்ற கூடுதல் உபகரணங்களை நிறுவ வாங்கும் போது, ஏற்கெனவே இருக்கும் வயரிங்கில் மாற்றம் செய்யப்படுகிறது.
கூடுதலாக பொருத்தப்படும் சாதனங்களுக்கு ஏற்ப ஃபியூஸ் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வாகனத்தின் பேட்டரியில் உள்ள 'மேஜிக் ஐ' பச்சை நிறத்தில் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
'மேஜிக் ஐ' சிவப்பு நிறத்தில் தோன்றினால், பேட்டரியின் ஆயுள் முடிந்துவிட்டது என்று பொருள். அதனால் உடனடியாக பேட்டரியை மாற்ற வேண்டும்.
வயரிங், ஃபியூஸ், பேட்டரி சரியில்லாத போது கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் வாகனத்தில் தீ விபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
4. காரின் ஏ.சி
வெப்பம் அதிகமாக இருக்கும் போது, ஏசி சரியாக வேலை செய்யவில்லை என்றால் வாகனத்தை வசதியாக ஓட்ட முடியாது.
வாகனத்தில் உள்ள ஏசி சிஸ்டம் தொடர்பான கண்டன்சர், ஏர் ஃபில்டர்கள் சரியாக வேலை செய்யாவிட்டால் ஏசியில் இருந்து குளிர்ந்த காற்று வராது. இதன் காரணமாக நீண்ட தூர பயணங்களின் போது மன உளைச்சல் ஏற்படுகிறது. இதனால், விரைவாக சோர்வடைந்து கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே கண்டன்சர், ஏர் ஃபில்டர்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். கோடை காலத்தில் காரில் உள்ள ஏசி கேஸ் குழாய்களில் கசிவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதை சரிபார்ப்பது அவசியம்.
5. ஓட்டுநரின் உடல்நிலை
வாகனம் மட்டுமின்றி, அதை இயக்கும் ஓட்டுநரின் உடல்நிலையும், மன நிலையும் சாலை விபத்துகளைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்கின்றனர் நிபுணர்கள்.
கோடையில் 3-4 மணி நேரம் நிறுத்தாமல் வாகனம் ஓட்ட வேண்டியிருந்தால், ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒருமுறை நிறுத்தி 10 நிமிடங்கள் ஓய்வெடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.
ஓய்வின்றி வாகனம் ஓட்டுவதும், கோடை காலத்தில் சாலையில் காணப்படும் அதிக வெளிச்சம், கானல் நீரை தொடர்ந்து பார்த்தபடி வண்டியை இயக்குவது போன்றவைகள் கண்களை சோர்வடையச் செய்யும்.
எனவே, சாலையின் ஒரு பக்கத்தில் இருந்து தவறி மறுபக்கத்திற்கு சென்று விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தொடர்ந்து வாகனத்தை இயக்கும் போது அடிக்கடி ஓய்வு எடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சாலை விபத்துகளும், மரணங்களும்
தமிழ்நாட்டில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து வெளியாகியிருக்கும் சமீபத்திய புள்ளிவிவரம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. சாலை பாதுகாப்பில் அரசும் பொதுமக்களும் அதிகவனம் செலுத்த வேண்டும் என்பதையும் உணர்த்துவதாக உள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில், சாலை விபத்துகள் குறித்த சில கவலைதரத்தக்க புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த சில எண்களை முதலில் காணலாம்:
இந்த எண்கள் அனைத்தும் இந்தியாவில் விபத்துகளின் தலைநகரமாக தமிழ்நாடு ஆகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
அதனால் சாலைகளில் வாகனத்தை இயக்கும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியமான ஒன்று.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்