You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சைரஸ் மிஸ்திரி மரணம்: சாலை விபத்துகள் பற்றிய புள்ளி விவரங்கள் கூறுவது என்ன?
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார். அவருக்கு வயது 54. அவரது மரணம் சாலை விபத்துகள் பற்றிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
அவரது கார் சாலை டிவைடர் மீது மோதியதில் விபத்து நடந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி முகமை பிடிஐ தெரிவித்துள்ளது.
சைரஸ் மிஸ்திரி தனது மெர்சிடிஸ் காரில் அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்தபோது விபத்து நேரிட்டதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.
"பிற்பகல் 3.15 மணியளவில் இந்த விபத்து நடந்தது. சூர்யா ஆற்றின் மீதுள்ள பாலத்தில் இந்த சம்பவம் நடந்தது. இது விபத்து போலத் தெரிகிறது" என்று பால்கர் காவல்துறை கண்காணிப்பாளர் பாலாசாகேப் பாட்டீல் கூறினார்.
கார் ஓட்டுநர் உட்பட மிஸ்திரியுடன் பயணித்த இருவர் காயமடைந்ததாக பாலாசாகேப் பாட்டீல் கூறினார்.
காயமடைந்தவர்கள் குஜராத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அவர்களிடம் இருந்து கூடுதல் தகவல்கள் பெறப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தங்கள் காவல் நிலையத்தின் கீழ் வரும் சூர்யா நதியின் பாலத்தில் உள்ள சரோடி நாகா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று காசா காவல் நிலைய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
சைரஸ் மிஸ்திரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக காசா ஊரக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
'இந்தியாவில் ஒரு மணிநேரத்துக்கு 18 பேர் பலி'
- தொழில்துறையின் முக்கிய நபரான சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் உயிரிழந்திருப்பது, சாலை விபத்துகள் பற்றிய விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. அண்மையில் வெளியான தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி 2021-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு 18 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
- அதாவவது அந்த ஆண்டு முழுவதும் 1.55 லட்சம் பேர் சாலை விபத்துகளால் உயிரைப் பறிகொடுத்திருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 326 பேர் சாலை விபத்துகளால் மரணமடைகிறார்கள். இதுவரை இந்தியாவில் சாலை மரணங்கள் அதிகமாகப் பதிவானது இந்த ஆண்டில்தான்.
- சாலையில் பயணிக்கும் ஆயிரம் வாகனங்களில் 0.53 விகித உயிரிழப்புகள் நேரிடுவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இது முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அதிகம்.
சைரஸ் மிஸ்திரி யார்?
அயர்லாந்தில் பிறந்த சைரஸ் மிஸ்திரி லண்டன் பிசினஸ் ஸ்கூலில் பயின்றார். அவர் ஷாபூர்ஜி பல்லோன்ஜியின் இளைய மகன்.
இவரது குடும்பம் அயர்லாந்தில் உள்ள செல்வந்த இந்திய குடும்பங்களில் ஒன்றாகும். சைரஸ் 1991 இல் ஷாபூர்ஜி பல்லோன்ஜி & கம்பெனியில் பணியாற்றத் தொடங்கினார்.
அவர் 1994 இல் ஷாபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். சைரஸின் தலைமையின் கீழ் இந்த நிறுவனம் பெரும் லாபம் ஈட்டியது. அதன் விற்றுமுதல் 2 கோடி பவுண்டுகளில் இருந்து சுமார் 150 கோடி பவுண்டுகளாக அதிகரித்தது.
இந்த நிறுவனம் துறைமுகங்கள், எண்ணெய்-எரிவாயு மற்றும் ரயில்வே துறைகளில் பணிகளை விரிவுபடுத்தியது. இதன் போது, இந்த நிறுவனத்தின் கட்டுமான பணிகள் பத்திற்கும் மேற்பட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்டன.
சைரஸின் தலைமையின் கீழ் அவரது நிறுவனம் இந்தியாவில் மிக உயரமான குடியிருப்பு அடுக்குமாடி கோபுரத்தை உருவாக்குதல், மிக நீளமான ரயில் பாலம் கட்டுதல் மற்றும் மிகப்பெரிய துறைமுகத்தை அமைத்தல் உட்பட பல முக்கிய சாதனைகளை படைத்தது.
சைரஸ் 2006 இல் டாடா சன்ஸ் குழுவில் சேர்ந்தார். டாடா சன்ஸ் நிறுவனத்தின் பெருமளவு பங்குகள் சைரஸ் மிஸ்திரியின் குடும்பத்தினரிடம் உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் எம்.கே.வேணு கூறினார்.
2012-ம் ஆண்டு ரத்தன் டாடா ஓய்வு பெற்றபோது, டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்பை சைரஸ் மிஸ்திரி பெற்றார். டாடா சன்ஸ் நிறுவனத்தின் ஆறாவது தலைவராக அவர் இருந்தார்.
சைரஸ் மிஸ்திரியின் மரணத்திற்கு இரங்கல்
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி ஞாயிற்றுக்கிழமை சாலை விபத்தில் உயிரிழந்ததற்கு பிரதமர் நரேந்திர மோதி, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மிஸ்திரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஷிண்டே, இது அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தொழில்துறைக்கும் ஏற்பட்ட இழப்பு என்றார்.
54 வயதான தொழிலதிபரின் மரணம் "அதிர்ச்சியளிப்பதாக" தெரிவித்த ஷிண்டே, மிஸ்திரி ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் மட்டுமல்ல, ஒரு இளம் மற்றும் தொலைநோக்கு தொழில்முனைவோரும் கூட என்றார். வணிக உலகம் அவரை நம்பிக்கையுடன் பார்த்தது என்றார் அவர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் ஷரத் பவாரும் மிஸ்திரியின் திடீர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
"டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் அகால மரணம் குறித்த அதிர்ச்சியான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவர் ஒரு சிறந்த தொழில்முனைவோர். கார்ப்பரேட் உலகின் பிரகாசமான நட்சத்திரங்களில் ஒருவரை நாம் இழந்துவிட்டோம்" என்று ஷரத் பவார் குறிப்பிட்டுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பி சுப்ரியா சுலேவும் மிஸ்திரியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார், மிஸ்திரி தனது சகோதரர் போன்றவர் என்று அவர் கூறினார்.
"அவரது மறைவு எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் டாடா சன்ஸ் தலைவராக உயர்ந்ததையும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கொந்தளிப்பையும் நான் பார்த்தேன். அவரும் அவரது மனைவியும் கடந்த நான்கு ஆண்டுகளாக பல போராட்டங்களை சந்தித்தனர். அவர் மறைந்துவிட்டார் என்று என்னால் இப்போதுகூட நம்பமுடியவில்லை," என்று சுப்ரியா சுலே தெரிவித்தார்.
'ஆச்சரிய தேர்வு'
டாடா குழுமத்தின் தலைவராக வெளியில் இருந்து நியமிக்கப்பட்ட இரண்டாவது நபர் மிஸ்திரி. இருப்பினும், டாடா குடும்பத்துடன் மிஸ்திரிக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறுவது சரியாக இருக்காது.
மிஸ்திரியின் சகோதரி, ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரரை மணந்துள்ளார். சைரஸ் டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றபோது அவரை ஒரு 'ஆச்சரியமான தேர்வு' என்று ஊடகத்தின் ஒரு பகுதி விவரித்தது.
இருப்பினும், அவரது 43 ஆண்டுகால அனுபவம் மற்றும் சாதனைகளை உன்னிப்பாக ஆராய்ந்த பிறகு, அவர் ஒரு ஆச்சரியமான தேர்வு அல்ல, இந்தப்பதவிக்கு ஒரு சிறந்த மற்றும் பொருத்தமான நபர் என்று விவரிக்கப்பட்டார்.
தனிப்பட்ட முறையில், மிஸ்திரியின் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள் அவரை ஒரு மென்மையான மற்றும் வெளிப்படையான நபர் என்று வர்ணிக்கின்றனர். ஓய்வு நேரத்தில், அவர் கோல்ஃப் விளையாடுவதையும் புத்தகங்களைப் படிப்பதையும் விரும்பினார்.
பல உயர் பதவிகளை வகித்துள்ள மிஸ்திரி, எப்போதுமே மற்றவர்களின் கவனத்தில் இருந்து விலகி இருக்கவே விரும்பினார். 2016 அக்டோபரில் டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து மிஸ்திரி நீக்கப்பட்டார்.
கம்பெனி சட்டத்தை மீறி தான் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அப்போது மிஸ்திரி கூறினார். கூடவே டாடா சன்ஸ் நிர்வாகத்தில் குளறுபடிகள் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்