காணொளி: உத்தரப் பிரதேசத்தில் மரத்தில் கட்டி வைத்து தலித் இளைஞர் மீது தாக்குதல்
உத்தரப் பிரதேசத்தின் பஸ்தி மாவட்டம், கல்வாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பத்பூர்வா கிராமத்தில், தலித் இளைஞர் ஒருவர் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு தாக்கப்பட்டார்.
தன்னை குறித்து தரக்குறைவாக பேசியது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டவரின் வீட்டில் புகார் அளிக்க சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக பாதிக்கப்பட்ட தலித் இளைஞர் கூறுகிறார். ஒரு பிராமண குடும்பத்துக்கு எதிராக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசிய பாதிக்கப்பட்ட ஸ்ரீசந்த், "நானும் என் அண்ணனும் பஸ்தியில் இருந்து வந்து கொண்டிருந்தோம். அப்போது, ஷிவ்ஷாந்த் உள்ளிட்ட நபர்கள் எங்களைத் திட்டத் தொடங்கினர். இது தொடர்பாக அவரின் தந்தையிடம் பேசச் சென்றோம். 'ஏன் உங்கள் மகன் எங்களை இகழ்ந்தார்? இது சரியல்ல' என சொல்ல சென்றோம். ஆனால், அவர்கள் என் சகோதரியை வண்டியில் இருந்து வெளியே இழுத்து அடிக்கத் தொடங்கினர். அதன் பிறகு என்னை மரத்தருகே இழுத்துச் சென்று கயிற்றால் கட்டி கடுமையாக தாக்கினர்." என்றார்.
பிர்ஹா பாடகியான ஸ்ரீசந்தின் சகோதரி சீமா தானும் தாக்கப்பட்டதாக கூறுகிறார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுவரை, இந்த வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



