1,200 தீவுகளைக் கொண்ட சிறிய நாடான மாலத்தீவு இந்தியாவுக்கு ஏன் முக்கியமாகிறது?

காணொளிக் குறிப்பு, மாலத்தீவு இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?
1,200 தீவுகளைக் கொண்ட சிறிய நாடான மாலத்தீவு இந்தியாவுக்கு ஏன் முக்கியமாகிறது?

மாலத்தீவு 1,200 தீவுகளை உள்ளடக்கிய மிகச்சிறிய நாடு. 1965ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து மாலத்தீவு முழுமையாக சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் அடைந்த மூன்று ஆண்டுகளுக்குப் பின், மாலத்தீவு இஸ்லாமியக் குடியரசாக மாறியது. 2008ஆம் ஆண்டு அங்கு இஸ்லாம் அரசு மதமாக மாறியது. மாலத்தீவு உலகின் மிகச் சிறிய இஸ்லாமிய நாடு. மாலத்தீவின் 60வது சுதந்திர தினம் சனிக்கிழமையான இன்று கொண்டாடப்படுகிறது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். மாலத்தீவில் முய்சு முன்னெடுத்த India out என்ற பிரசாரம் அவர் ஆட்சிக்கு வர முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால், அதன் பின் மாலத்தீவு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டது. அந்த சமயத்தில் இந்தியா உதவிக்கரம் நீட்டியது. நெருக்கடிகளைச் சமாளிக்க இந்தியாவிடம் உதவி பெற்ற பிறகு, முய்சுவின் கடுமையான போக்கு குறையத் தொடங்கியது.

முன்னதாக இந்தியா குறித்து மாலத்தீவு அரசின் சார்பில் ஆக்ரோஷமான அறிக்கைகள் வந்தபோதும், இந்தியாவின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் பொறுமையும் நிதானமும் வெளிப்பட்டன.

இத்தகைய சூழ்நிலையில், ஏழரை பில்லியன் டாலர்கள் மட்டுமே பொருளாதாரம் கொண்ட ஒரு மிகச் சிறிய நாட்டின் மீது இந்தியா ஏன் இவ்வளவு நிதானத்தைக் காட்டியது என்ற கேள்வி எழுகிறது. இதற்கு 4 முக்கிய காரணங்கள் உள்ளன.

மாலத்தீவின் இருப்பிடம்

மாலத்தீவு அமைந்துள்ள இடம்தான் அந்நாட்டை சிறப்பு வாய்ந்ததாக மாற்றுகிறது. மாலத்தீவு இந்தியப் பெருங்கடலின் முக்கிய கடல் பாதைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.

இந்தியப் பெருங்கடலில் இந்தப் பாதைகள் வழியாக சர்வதேச வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த பாதை வழியாக வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு எண்ணெய் வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், மாலத்தீவுடனான இந்தியாவின் உறவுகள் மோசமடைவது எந்த வகையிலும் நல்லதாக கருதப்படாது.

மாலத்தீவு ஒரு முக்கியமான கடல்வழிப் பாதை என்றும், உலகளாவிய வர்த்தகத்தில் சிறப்புப் பங்கைக் கொண்டுள்ளது என்றும் வங்கதேசத்திற்கான இந்தியாவின் முன்னாள் தூதர் வீணா சிக்ரி கூறுகிறார்.

இந்தப் பாதை இந்தியாவின் பொருளாதார மற்றும் வியூக நலன்களுக்கு மிக முக்கியமானது. குறிப்பாக வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதி இந்தப் பாதை வழியாகவே நடைபெறுகிறது. மாலத்தீவுடனான நல்லுறவு இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பையும் உறுதி செய்யும். இந்தியாவின் கடல்சார் கண்காணிப்பிலும் மாலத்தீவின் ஒத்துழைப்பு முக்கியமானது என சிக்ரி கூறுகிறார்.

பூகோள ரீதியாக இந்தியாவுடனான நெருக்கம்

மாலத்தீவு இந்தியாவிற்கு மிக அருகில் உள்ளது. மாலத்தீவு இந்தியாவின் லட்சத்தீவிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது ஒரு புறமிருக்க, சீனா மாலத்தீவில் தனது இருப்பை அதிகப்படுத்த முயன்று வருகிறது.

இது பற்றி கூறும் சிந்தனைக் குழுவான ORF-இன் மூத்த உறுப்பினர் மனோஜ் ஜோஷி, சீனா மாலத்தீவில் கடற்படை தளத்தை அமைத்தால், அது இந்தியாவின் பாதுகாப்புக்குச் சவாலாக இருக்கும். சீனா மாலத்தீவில் வலுவாக மாறினால், போர் போன்ற சூழ்நிலையில் இந்தியாவை அடைவது சீனாவுக்கு மிகவும் எளிதாகிவிடும். சீனா மாலத்தீவில் பல திட்டங்களைக் கொண்டுள்ளது. சீனா மாலத்தீவில் கடற்படை தளத்தை உருவாக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியா எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்கிறார் அவர்.

தொடர்ந்து பேசிய மனோஜ் ஜோஷி, மாலத்தீவு இன்னும் இந்தியாவிற்கு சவாலாகவே உள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோதியை அழைத்திருந்தாலும், மாலத்தீவு அதிபர் முய்சு பொருளாதார நிர்ப்பந்தம் காரணமாக அவ்வாறு செய்துள்ளார். மாலத்தீவின் பொது மக்கள் கருத்து இன்னும் இந்தியாவிற்கு எதிராக உள்ளது. முய்சு இதைப் பயன்படுத்தி வெற்றி பெற்றார். முய்சு இந்தியாவுடனான உறவை மேம்படுத்தியிருப்பது, விருப்பத்தின் பேரில் அல்ல கட்டாயத்தால் நிகழ்ந்துள்ளது என்றார்.

மாலத்தீவில் அதிகரிக்கும் சீனா செல்வாக்கு

மாலத்தீவு சீனாவுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. சீனாவின் லட்சியத் திட்டமான பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை மாலத்தீவு வெளிப்படையாக ஆதரித்துள்ளது.

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை தடுக்க மாலத்தீவு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மாலத்தீவின் பல முக்கிய திட்டங்களில் இந்தியா முதலீடு செய்துள்ளது. இவற்றில், கிரேட்டர் மாலே இணைப்புத் திட்டம் சீனாவிற்கு எதிரானதாகக் கருதப்படுகிறது.

சீனா மாலத்தீவில் 200 மில்லியன் டாலர் செலவில் சீனா-மாலத்தீவு நட்புப் பாலத்தைக் கட்டி வருகிறது. மாலத்தீவில் சீனாவின் அதிகரித்து வரும் இருப்பு இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

இந்தியா மீதான முய்சுவின் நிலைப்பாடு

"மே 10 ஆம் தேதிக்குப் பிறகு, மாலத்தீவில் எந்த வடிவத்திலும் இந்திய ராணுவ வீரர்கள் இருக்க மாட்டார்கள். இதை நான் முழு உறுதியுடன் சொல்கிறேன்" என்று முய்சு கடந்த ஆண்டு மார்ச் மாதம் கூறியிருந்தார்.

கடந்த ஆண்டு சீனா சென்று வந்த பின் ஊடகங்களிடம் பேசிய முய்சு, மாலத்தீவு சிறிய நாடாக இருக்கலாம், ஆனால் அதுவே எங்களை அடக்க யாருக்கும் உரிமம் வழங்காது என இந்தியாவை நேரடியாக குறிப்பிடாமல் பேசினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், மிரட்டும் நாடு 4.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள உதவியை வழங்காது என்று கூறியிருந்தார்.

இது குறித்து கூறும் சிந்தனைக் குழுவான அனந்தா மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்திராணி பாக்சி, மாலத்தீவில் இந்தியாவுக்கு எதிரான உணர்வு இன்னும் இருப்பதால் இந்தியாவிற்கும் மாலத்தீவு முக்கியமானது. மாலத்தீவு இந்தியாவை நேசிக்காது, ஆனால் அது ஒரு பாதுகாப்பு சவாலாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு