You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வதற்கு யார் காரணம்?
இதற்கு முன்பு தங்கத்தின் விலை இவ்வளவு உயர்வைக் கண்டிருக்க வாய்ப்பில்லை.
சில மாதங்களுக்கு முன்பு தங்க நகைகளை வாங்கியவர்கள் அல்லது தங்கத்தில் முதலீடு செய்தவர்கள், இன்னும் அதிகமாக வாங்கியிருக்க வேண்டும் என்று இப்போது வருத்தப்படுகிறார்கள்.
அவ்வாறு முதலீடு செய்யாதவர்கள், தங்கத்தின் விலை இப்படியே உயர்ந்துகொண்டே செல்லுமா என்று கேட்கிறார்கள்.
உடனடியாக தங்க நகைகளை வாங்குவது அல்லது தங்க ஈடிஎஃப்-களில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமா என்றும் அவர்கள் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை, தங்கத்தின் தேவை குறைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதை உணர்த்துகிறது. உண்மையில் தங்கத்திற்கான தேவை அதிகரித்திருக்கிறதா அல்லது வேறு ஏதாவது காரணமா?
உலக தங்க கவுன்சிலின் சமீபத்திய தரவுகளின்படி, உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தங்களது தங்க இருப்புகளை அதிகரித்து வருகின்றன, மேலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்க ஈடிஎஃப்-களில் அதாவது பரிமாற்ற வர்த்தக நிதிகளில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
செப்டம்பர் மாதத்தில் தங்க ஈடிஎஃப்-களில் பதிவாகியுள்ள முதலீடுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. ஜூலை-செப்டம்பர் காலாண்டிலும், தங்க ஈடிஎஃப்-களில் அதிக முதலீடுகள் பதிவாகியுள்ளன.
தங்கம் குறித்த கதையைத் தொடர்வதற்கு முன், தங்க ஈடிஎஃப் என்றால் என்ன என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
தங்க ஈடிஎஃப் என்றால் என்ன?
நீங்கள் தங்க ஈடிஎஃப்-ஐ டிஜிட்டல் தங்கம் என்று அழைக்கலாம்.
இது 99.5 சதவீத தூய தங்கத்தின் விலையைக் கண்காணிக்கும் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் போன்றது. ஒவ்வொரு யூனிட்டும் தோராயமாக ஒரு கிராம் தங்கத்தின் மதிப்புடையது.
இந்த நிதிகளை பங்குச் சந்தையில் வாங்கவும் விற்கவும் முடியும்.
தங்க ஈடிஎஃப்-களில் முதலீடு செய்ய, ஒரு டீமேட் கணக்கு வைத்திருப்பது அவசியம், ஏனெனில் வாங்குதல் மற்றும் விற்பது பங்குச் சந்தை மூலம் நடக்கிறது.
பங்குச் சந்தையின் வர்த்தக நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் இந்த யூனிட்களை வாங்கலாம் அல்லது விற்கலாம்.
தங்கத்தின் விலையை உன்னிப்பாகக் கண்காணிக்க விரும்புவோருக்கும், தங்கள் முதலீடுகளைக் கட்டுப்படுத்த விரும்புவோருக்கும் இந்த முதலீடு பொருத்தமானது.
தங்க ஈடிஎஃப்-களில் அதிக முதலீடு
இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும், பொதுவான முதலீட்டாளர்கள் ஈடிஎஃப்-கள் மூலம் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள்.
ஜூலை-செப்டம்பர் காலாண்டைப் பொறுத்தவரை, தங்க ஈடிஎஃப்-களில் சுமார் 26 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
உலக தங்க கவுன்சிலின் கூற்றுப்படி, இந்த காலாண்டில், அமெரிக்காவில் உள்ள மக்கள் தங்க ஈடிஎஃப்-களில் $16 பில்லியன் முதலீடு செய்துள்ளனர், அதே நேரத்தில் ஐரோப்பியர்கள் சுமார் $8 பில்லியன் முதலீடு செய்துள்ளனர்.
இந்தியாவில் மட்டும், $902 மில்லியன் அல்லது தோராயமாக ரூ.8,000 கோடி மதிப்புள்ள ஈடிஎஃப்-கள் வாங்கப்பட்டன.
ஆசியாவைப் பொறுத்தவரை, சீனா $602 மில்லியனுடன் இரண்டாவது இடத்தையும், ஜப்பான் $415 மில்லியன் மதிப்புள்ள ஈடிஎஃப் கொள்முதலுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
மக்கள் தங்க ஈடிஎஃப்-களில் முதலீடு செய்யும் விதத்தைப் பார்க்கும்போது, தங்கம் தங்களிடம் இருந்தால், 'அது பிரகாசித்துக் கொண்டே இருக்கும், அது தங்களைக் கைவிடாது' என்றும் அவர்கள் நம்புகிறார்கள் என்பது தெளிவாகிறது.
ஒட்டுமொத்தமாக, உலகளவில் தங்க ஈடிஎஃப்-களின் மொத்த அளவு $472 பில்லியனை எட்டியுள்ளது, இது முந்தைய காலாண்டை விட 23 சதவீதம் அதிகமாகும்.
இந்த தங்க ஈடிஎஃப்-களின் அளவு உலகின் பல நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விட அதிகம் என்பதை தனியாக சொல்லத் தேவையில்லை.
தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடா?
தங்கத்தின் மீதான அதிக முதலீடுகளுக்குப் பின்னால் வேறு பல காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர், உதாரணமாக, டிரம்பின் வரி கொள்கை உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்களின் கணக்கீடுகளை புரட்டிபோட்டுள்ளது. ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையிலான போர் தொடர்கிறது, அதேசமயம் மத்திய கிழக்கிலும் பதற்றம் நிலவுகிறது.
டாலரின் மதிப்பு பலவீனமடைந்து வருகிறது, அமெரிக்காவில் சமீபத்திய 'அரசு முடக்கம்' (Shutdown) நடவடிக்கை அதன் நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதங்களை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்துள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒன்று அல்லது இரண்டு கூடுதல் வட்டி விகிதக் குறைப்புகளை நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதன் பொருள் பங்குச் சந்தைகள் நிலையற்றதாகவே இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதுகிறார்கள்.
இருப்புகளை அதிகரித்து வரும் மத்திய வங்கிகள்
மற்றொரு காரணம், உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்குகின்றன.
உலக தங்க கவுன்சில் அறிக்கையின்படி, ஆகஸ்ட் மாதத்தில் மத்திய வங்கிகள் 15 டன் தங்கத்தை வாங்கியுள்ளன.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், கஜகஸ்தான், பல்கேரியா மற்றும் எல் சால்வடார் போன்ற நாடுகள் தங்கம் வாங்கும் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. தங்க இருப்பை அதிகரித்த நாடுகளில் இந்தியா, சீனா மற்றும் கத்தார் ஆகியவையும் அடங்கும்.
ஆனால், தங்க இருப்பைப் பொறுத்தவரை, உலக தங்க கவுன்சிலின் புள்ளிவிவரங்கள் வேறு ஒரு பார்வையை அளிக்கின்றன. டிசம்பர் 2024 நிலவரப்படி, அமெரிக்கா 8133 டன் தங்க இருப்பைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது, ஜெர்மனி 3,351 டன்களுடன் இரண்டாவது இடத்திலும், இத்தாலி மூன்றாவது இடத்திலும், பிரான்ஸ் நான்காவது இடத்திலும், சீனா 2280 டன்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
இந்தப் பட்டியலில் இந்தியா 876 டன் தங்க இருப்புடன் ஏழாவது இடத்தில் இருந்தது.
தங்கம் எப்போதாவது முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளதா?
தங்கத்தின் மீது தற்போது முதலீட்டாளர்களுக்கு இருக்கும் மோகத்தைக் கருத்தில் கொண்டு, அதிகமாக தங்கம் வாங்குவது நஷ்டத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயமாக எப்போதாவது இருந்திருக்கிறதா என்ற கேள்வி எழுவது நியாயமானதே.
கடந்த 20 ஆண்டுகளில் தங்கத்தின் விலைகளைப் பார்த்தால், நான்கு குறிப்பிட்ட ஆண்டுகளில் மட்டுமே தங்கத்தின் விலைகள் சரிந்து முதலீட்டாளர்கள் சில இழப்புகளைச் சந்தித்துள்ளன.
இருப்பினும், இந்த இழப்பு ஒற்றை இலக்க சதவீதத்திற்குள் மட்டுமே இருந்தது.
உதாரணமாக, 2013 ஆம் ஆண்டில், தங்கத்தின் விலை 4.50 சதவீதம் குறைந்துள்ளது, அதே நேரத்தில் 2014 இல் 7.9 சதவீதம், 2015 இல் 6.65 சதவீதம் மற்றும் 2021 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை 4.21 சதவீதம் குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை விரைவில் குறையுமா?
இறுதியில் ஒரே கேள்வி மீண்டும் எழுகிறது, தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்குமா அல்லது அதன் விலைகள் இப்போது குறையத் தொடங்குமா?
2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதிவாக்கில், தங்கத்தின் விலைகள் மேலும் 6 சதவீதம் அதிகரிக்கும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் தனது ஆய்வு ஒன்றில் மதிப்பிட்டுள்ளது.
இருப்பினும், எந்தவொரு நிபுணரிடமும் இதற்கு சரியான பதில் இல்லை.
ஆனால் தங்க ஈடிஎஃப்-கள் மீதான மக்களின் நாட்டம் அதிகரித்துள்ளதைப் பார்த்தால், இந்த ஒளிரும் உலோகத்தின் மீதான அவர்களின் நம்பிக்கை முன்பை விட பன்மடங்கு அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு