You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆமதாபாத் விமான விபத்தை தவிர்த்திருக்க முடியுமா? உறவுகளை இழந்தவர்கள் கேள்வி
- எழுதியவர், சமீரா ஹுசைன்
- பதவி, பிபிசி தெற்காசியா செய்தியாளர்
கடந்த மாதம் ஆமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கையை இம்தியாஸ் அலி ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார். இந்த விபத்தில் அவரது சகோதரர், மைத்துனி மற்றும் அவர்களது இரு குழந்தைகள் உயிரிழந்தனர்.
வெள்ளிக்கிழமை இரவு வெளியான விபத்துகான காரணம் பற்றிய முதற்கட்ட விசாரணை அறிக்கையை அவர் கவனமாகப் படித்தார். அந்த அறிக்கை தனக்கு ஏமாற்றம் அளித்ததாக அவர் சொல்கிறார்.
"விமானிகளுக்கு இடையில் நடைபெற்ற கடைசி நிமிட உரையாடலைத் தவிர, விபத்துக்கான உண்மையான காரணத்தை சுட்டிக்காட்டும் எதுவும் அந்த அறிக்கையில் இல்லை," என்கிறார் அவர்.
வரும் மாதங்களில் விபத்து குறித்த கூடுதல் தகவல்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் என இம்தியாஸ் அலி நம்புகிறார்.
"இது எங்களுக்கு முக்கியமானது. உண்மையில் என்ன நடந்தது என தெரிந்துகொள்ள விரும்புகிறோம். இது எங்களுக்கு எதையும் மாற்றப் போவதில்லை. எங்களது அன்புக்குரியோரின் மரணத்திற்காக முன்பு வருந்தியதைப் போல் தொடர்ந்து வருந்துவோம். ஆனால் குறைந்தபட்சம் சில கேள்விகளுக்கு எங்களுக்கு விடை கிடைக்கும்." என்கிறார் அவர்.
ஆமதாபாத்திலிருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது.
விமானம் ஒரு குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. 2025 ஜூன் 12ஆம் தேதி நிகழ்ந்த இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேரும் தரையிலிருந்த 19 பேரும் உயிரிழந்தனர்.
கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட விபத்து பற்றிய விசாரணையின் முதற்கட்ட அறிக்கையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் என்ஜின்களுக்கு எரிபொருள் விநியோகம் தடைபட்டதாக கூறப்பட்டுள்ளது. இது ஏன், எப்படி நடந்தது என்பது தெளிவாக இல்லை.
காக்பிட் குரல் பதிவில், ஒரு பைலட் மற்றொருவரிடம், "நீங்கள் ஏன் கட்-ஆஃப் செய்தீர்கள்?" என்று கேட்பதைக் கேட்க முடிகிறது. அதற்கு மற்றொரு விமானி, "நான் அப்படி செய்யவில்லை" என பதிலளித்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விமான விபத்து பற்றிய முழு அறிக்கை ஒரு வருடத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
41 வயதான ஷ்வேதா பரிஹாரும் விபத்து தொடர்பான கேள்விகளுக்கு பதில் வேண்டும் என எதிர்பார்க்கிறார். அவரது கணவர் அபினவ் பரிஹாரும் இந்த ஏர் இந்தியா விமானத்தில் லண்டன் திரும்பிக் கொண்டிருந்தார்.
அபினவ் மாத இறுதியில்தான் லண்டன் திரும்ப வேண்டியிருந்தது, ஆனால் முன்கூட்டியே திரும்ப முடிவு செய்து இந்த விமானத்தில் டிக்கெட் பதிவு செய்திருக்கிறார்.
எந்த விசாரணையும் தன் கணவரை மீண்டும் கொண்டுவர முடியாது என்கிற சோகத்தில் இருக்கிறார் ஷ்வேதா.
"எங்கள் அன்புக்குரியவர்களை நாங்கள் இழந்துவிட்டோம், அவர்கள் திரும்ப வரமாட்டார்கள்," என்கிறார் ஷ்வேதா
"விசாரணையில் என்ன செய்வார்கள், விபத்து எப்படி ஏற்பட்டது என்பதை எங்களுக்கு சொல்வார்களா? எவ்வளவு பேர் உயிர்களை இழந்திருக்கின்றனர்? அவர்கள் மன்னிப்பு கேட்பார்களா? என்ன நடந்ததோ அது நடந்துவிட்டது, எல்லாம் முடிந்துவிட்டது," என கூறுகிறார் ஷ்வேதா.
இந்த விபத்து தனது 11 வயது மகன் விஹான் மீது ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி பேசும் போது ஷ்வேதா பரிஹார் உணர்ச்சிவயப்படுகிறார், "அவன் தன் தந்தை இல்லாமல் அதிகம் வேதனையடைகிறான்." என்கிறார் அவர்.
இனி தான் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்யப் போவதில்லை என விஹான் தன்னிடம் கூறுவதாக சொல்கிறார் ஷ்வேதா.
59 வயதான படாசாப் சையத் தனது சகோதரர், மைத்துனி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளை இந்த விமான விபத்தில் இழந்துள்ளார்.
விபத்து பற்றிய தனது கேள்விகளுக்கு முதற்கட்ட அறிக்கை பதிலளிக்கும் என அவர் நம்பினார், ஆனால் அது தொடர்பான செய்திகளைப் பார்த்த பிறகு, அவரது மனதில் மேலும் பல கேள்விகள் எழுந்துள்ளதாக அவர் சொல்கிறார்.
"அறிக்கையில், பைலட்டுகளுக்கு இடையே எரிபொருள் சுவிட்சை யார் கட் ஆஃப் செய்தது என்று உரையாடல் நடந்ததாகவும், எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சில் பிரச்னை ஏற்பட்டிருக்க சாத்தியம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவென்று எங்களுக்கு தெரியவில்லை. இந்த விபத்தை தவிர்த்திருக்க முடியுமா?" என்று அவர் கேட்கிறார்.
தனது இளைய சகோதரர் இனாயத் சையத், குடும்பத்தின் இதயத் துடிப்பாக இருந்ததாக படாசாப் சையத் கூறுகிறார்.
இனாயத், அவரது மனைவி மற்றும் குழந்தைகளை விபத்தில் இழந்த பின்னர் மொத்த குடும்பமும் உடைந்து போயிருப்பதாக அவர் சொல்கிறார். தனது 83 வயதான தாய் பிபி சாப்பிற்கு இந்த அதிர்ச்சியை தாங்கிக் கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது.
"தனது மகனையும், பேரக் குழந்தைகளையும் இழந்த பின்னர், அவர் தனது உணர்வுகள் கூட சொல்லமுடியாத அளவு பலவீனமடைந்திருப்பதாக படாசாப் சொல்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு