வீதியில் சென்ற பெண்ணை வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டவர் கைது - சட்டம் என்ன சொல்கிறது?

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி இந்தி

பெங்களூருவின் பரபரப்பான தெருக்களில் செல்லும் பெண்களை, அவர்களின் அனுமதியின்றி வீடியோ பதிவு செய்து அவற்றை சமூக ஊடகங்களில் வெளியிட்ட குர்தீப் சிங் என்ற இளைஞரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.

தனது அனுமதியின்றி 'மிகவும் தகாத முறையில் தன்னை வீடியோ பதிவு செய்துள்ளனர்', அதைத் தொடர்ந்து 'ஆபாசமான செய்திகள்' வரத் தொடங்கின என்று ஒரு பெண் தனது சமூக ஊடகப் பதிவில் பதிவிட்டு, அதில் காவல்துறையினரை டேக் செய்தார்.

இந்தநிலையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பெண்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பெங்களூருவில் பெண்களின் அனுமதியின்றி வீடியோக்களை பதிவேற்றும் போக்கு நீண்டகாலமாக தொடர்கிறது.

ஆறு வாரங்களுக்கு முன்பு, பெங்களூரு மெட்ரோவில் பயணிக்கும் இளம் பெண்களின் படங்களை எடுத்து @MetroChicks என்ற சமூக ஊடக தளத்தில் பதிவேற்றியதற்காக தனியார் நிறுவனத்தின் கணக்காளர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இரண்டு வீடியோக்களிலும், வீடியோவை உருவாக்கும் முறை ஒரே மாதிரியாக இருந்தது.

காவல்துறையினரின் கூற்று

பெங்களூரு துணை காவல் ஆணையர் (தெற்கு) லோகேஷ் ஜக்லாசர் பிபிசியிடம் பேசியபோது, "இந்த வீடியோக்கள் ஸ்லோமோஷனில் படமாக்கப்பட்டுள்ளன. மாலை நேரத்தில் சாலையில் நடந்து செல்லும் பெண்கள், விருந்துக்குச் செல்லும் உடைகளை அணிந்திருந்தனர். இரண்டு சந்தர்ப்பங்களிலும் எடுக்கப்பட்ட வீடியோக்களிலும் எந்த வித்தியாசமும் இல்லை." என்றார்

பெண்கள் நல ஆர்வலர் மற்றும் குளோபல் கன்சர்ன்ஸ் இண்டியா என்ற அமைப்பைச் சேர்ந்தவருமான பிருந்தா அடிகே இதனை "பெண்கள் விரோத சிந்தனையுடன் கூடிய சிதைந்த மனநிலை கொண்ட ஆணாதிக்கத்தின்" வெளிப்பாடு என்று விவரித்தார்.

தனது அனுமதியின்றி தன்னை வீடியோ எடுத்து வெளியிட்ட நபரை அந்த பெண் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவருக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

"நான் பல கணக்குகள் மூலம் அந்தப் பதிவு பற்றி புகாரளிக்க முயற்சித்தேன். ஆனால் அந்தப் பதிவு சமூக ஊடக வழிகாட்டுதல்களுக்கு எதிராக இல்லை என பதில் கிடைத்தது." என்று அந்தப் பெண் கூறினார்.

இந்த வீடியோவால் அவரது கணக்கை பார்ப்பவர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் கூடிக் கொண்டே சென்றதைக் கண்டபோது அவரது பிரச்னைகள் மேலும் அதிகரித்தன. அவரது கணக்கை மக்கள் இணையத்தில் தேடினார்கள்.

"எனக்கு ஆபாசமான செய்திகள் வர ஆரம்பித்தன," என்று அவர் கூறினார்.

தன்னைப் போலவே பல பெண்களுக்கும் நடக்கிறது என்று கூறும் பாதிக்கப்பட்டப் பெண், அவர்களுக்குத் தங்கள் வீடியோக்கள் ரகசியமாக உருவாக்கப்பட்டவை என்பது கூடத் தெரியாது என்றும் கூறினார்.

"அந்தக் கணக்கை பத்தாயிரம் பேர் பின்தொடர்கின்றனர். சமூக ஊடகங்களில் இதெல்லாம் சாதாரண விஷயமாக இருக்கக்கூடாது. நாம் குரல் எழுப்ப வேண்டும்" என்று பாதிக்கப்பட்ட பெண் கூறுகிறார்.

ஒளிந்து விளையாடும் வீடியோக்கள்

@IndianWalk என்று பெயரிடப்பட்ட இந்தப் பக்கத்தில், சாலையில் நடந்து செல்லும் பெண்களின் பல வீடியோக்கள் உள்ளன.

11,000க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட @IndianWalk கணக்கு, 'Street Fashion' எப்படி இருக்கிறது என்பதை காட்டுவதாகக் கூறுகிறது. பெங்களூருவின் பரபரப்பான சர்ச் தெரு மற்றும் பிரிகேட் சாலையில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் இந்தக் கணக்கில் வெளியிடப்படுகின்றன.

இந்த ஆண்டு மே மாதத்தில் பெங்களூரு மெட்ரோவில் பதிவு செய்யப்பட்ட பெண்களின் வீடியோக்களும் 'Metro_Chicks' என்ற பெயரை கொண்ட கணக்கில் பதிவிடப்பட்டன. அந்த வீடியோக்களுக்கு, "நமது மெட்ரோவில் அழகான பெண்களைக் கண்டறிதல்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

அந்தக் கணக்கு திகந்த் என்பவருடையது. கர்நாடகாவின் ஹாசனைச் சேர்ந்த 27 வயதான திகந்த், ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்.

திகந்த் கைது செய்யப்பட்ட போது அவரது கணக்கில் 13 வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன. இந்த வீடியோக்கள் 5900 க்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டிருந்தன. அனைத்து வீடியோக்களையும் தானே பதிவு செய்ததாக திகந்த் போலீசாரிடம் கூறினார்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 77 மற்றும் 78 (பின்தொடர்தல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 இன் பிரிவு 67 (மின்னணு வடிவத்தில் ஆபாசமான விஷயங்களை வெளியிடுதல் அல்லது பரப்புதல்) ஆகியவற்றின் கீழ், திகந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே பிரிவுகளின் கீழ் குர்தீப் சிங்கிற்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

"திகந்த் தற்போது ஜாமீனில் உள்ளார்" என்று காவல்துறை அதிகாரி கூறினார்.

சட்டம் என்ன சொல்கிறது?

பெண்களின் ஆடை அணியும் பாங்கே, இந்த வீடியோக்கள் உருவாக்கப்படுவதற்கான காரணம் என்ற கருத்தை பிருந்தா அடிகே முற்றிலும் மறுக்கிறார்.

"இது முற்றிலும் தவறு, ஏனென்றால் இது உண்மையாக இருந்தால் குழந்தைகளை ஏன் துஷ்பிரயோகம் செய்கின்றனர்? பெண்கள் ஏன் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர்? இதற்கும் உடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று அவர் கூறுகிறார்.

"முழுமையாக உடையணிந்த பெண்களையும் விட்டுவைக்கவில்லை. பர்தா அணிந்தவர்களைக்கூட விட்டுவைக்கவில்லை" என்றும் அவர் கூறுகிறார்.

முதல் முறையாக குற்றத்தைச் செய்வதற்கான தண்டனை குறைவாக இருப்பதால், தற்போதுள்ள சைபர் குற்றச் சட்டங்கள் கடுமையாக இல்லை என்று அவர் கூறுகிறார்.

"ஒருவர் முதன்முறை குற்றம் செய்தால் அதற்கு ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது. அப்படியென்றால், குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வழங்க இரண்டாவது முறையாக அவர் குற்றம் செய்யும் வரை நாம் காத்திருக்க வேண்டுமா?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

Alternative Law Forum (ALF) வழக்கறிஞர் பூர்ணா ரவிசங்கர் பிபிசியிடம் கூறுகையில், "நமது சட்ட அமைப்பில்தான் பிரச்னை உள்ளது. அது, இதுபோன்ற பிரச்னையை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. இந்த அமைப்பின் அலட்சியமே இதுபோன்ற குற்றங்கள் தொடர வழிவகுக்கிறது. 'Metro_Chicks' வழக்கில், காவல்துறை மிக விரைவாக நடவடிக்கை எடுத்தது எங்களுக்குத் தெரியும். பொதுமக்களின் சீற்றம் காரணமாக, தவறிழைத்தவரின் சமூக ஊடகக் கணக்கு உடனடியாக மூடப்பட்டது."

மற்றொரு இளம் வழக்கறிஞர் பிரஜ்வல் ஆராத்யா பிபிசி இந்தியிடம் கூறுகையில், "மன உளைச்சலுக்காக வழக்குத் தொடரும் வழக்கம் நம்மிடம் இல்லை. டார்க் வெப்பைக் கட்டுப்படுத்த தெளிவான சட்டம் எதுவும் இல்லை. காலப்போக்கில் எல்லாம் மறந்துவிடும் என்று மக்கள் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் இணையம் எதையும் ஒருபோதும் மறக்காது என்பதை யாரும் உணரவில்லை" என்றார்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு