பிரபாகரன் உடல் எங்கே? புலிகள் இயக்கத்தில் என்ன நடந்தது? பிபிசி தமிழுக்கு கருணா அம்மான், பிள்ளையான் பேட்டி
இலங்கையின் இன்றைய அரசியல் களம் குறித்தும், கடந்து வந்த தங்களின் பாதைகள் குறித்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளும் அந்த இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களுமான கருணா அம்மான் (விநாயகமூர்த்தி முரளிதரன்) மற்றும் பிள்ளையான் (சிவநேசத்துரை சந்திரகாந்தன்) கூறுவது என்ன?
போர் முடிந்து 15 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் அனைவரின் மனதிலும் எழும் ஒரு கேள்வியானது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் எங்கே? அவரின் உடல் எப்படி அடையாளம் காணப்பட்டது என்ற கேள்வி பிபிசி தமிழால் முன்வைக்கப்பட்டது.
புலம் பெயர்ந்த தமிழர்கள் பலரும் தன்னிடம் கேட்கும் முக்கியமான கேள்வி இதுவென்று கூறிய கருணா அம்மான், பிரபாகரனின் உடலை அடையாளப்படுத்தும் பணிக்காக சென்றிருந்தேன் என்று தெரிவித்தார். அடையாளம் காட்டிவிட்டு வந்த பிறகு, என்ன நடந்தது என்று எனக்கு உண்மையாகவே தெரியவில்லை என்று பதில் அளித்தார்.
"அவரின் உடலை அடையாளப்படுத்தி உலகுக்கு அவர் மரணித்த செய்தியை தெரிவித்தேன். உடல் எங்கே என்பதை அறிந்து கொள்வதற்கான அதிகாரம் கொண்டு செயல்படும் சூழலும் அன்று இல்லை. ராணுவ மேலாதிக்கம் அங்கே மேலோங்கி இருந்தது. அந்த ராணுவ கட்டமைப்பை உடைத்துவிட்டு ஆராய்வதற்கான வாய்ப்புகளும் இருக்கவில்லை என்பது தான் உண்மை," என்று கூறினார் அவர்.
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில், பலர் அவர்களின் வீடுகளில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் அழைத்துச் செல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பிய போது, "ஒரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கட்டாய ஆள்சேர்ப்பு இருந்தது என்பதை பல இடங்களில் இயக்கம் ஒப்புக் கொண்டது. ஆயுத இயக்கத்தில் விரும்பி இணைந்தவர்களும் உண்டு. வயதில் சிறியவர்கள் இணைந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு வந்த போது, அவர்களை நாங்கள் தேடிக் கண்டறிந்து வீட்டிற்கு அனுப்பியும் வைத்துள்ளோம். ஆனால் அது தொடர்பான முறையான தகவல்களை போலீஸுக்கு அவர்கள் வழங்கியதில்லை," என்று பிள்ளையான் பதில் கூறினார்.
ஒரு சூழ்ச்சி மூலமாக இருவரையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து முன்னாள் அதிபரும், பிரதமராகவும் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கே பிரித்து வந்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அது குறித்து உங்களின் கருத்து என்ன என்ற கேள்வியை முன்வைத்தது பிபிசி தமிழ்.
"சூழ்ச்சி மூலம் இயக்கத்தில் இருந்து வெளியேறினேன் என்று கூறுவது மிகவும் தவறானது. போராளிகளும் தளபதிகளும் உண்மையில் இயக்கத்தின் மீது வெறுப்படைந்திருந்தனர். தலைவருக்கு நெருக்கடி வரும் போதெல்லாம் எங்களின் அணி தான் அவரை காப்பாற்றியது. மெய்க்காவலர்களைக் கூட நாங்கள் தான் தேர்வு செய்து அனுப்புவோம். 25-க்கும் மேற்பட்ட கட்டமைப்புகளை இயக்கம் கொண்டிருந்தாலும் கிழக்கு மாகாண பொறுப்பாளர்கள் இல்லை. இந்த சமமற்ற சூழலை நான் வேலுப்பிள்ளையிடம் நான் அடிக்கடி சுட்டிக்காட்டினேன். ஆனால் என்னைத் தவிர முக்கியப் பொறுப்பில் கிழக்கு மாகாணத் தமிழர்கள் இடம் பெறவில்லை.
மேலும் தளபதி மாத்தையா பிரபாகரனை கொலை செய்ய முயன்ற சம்பவத்திற்கு பிறகு, தலைமைக்குழுவில் இருந்த சந்தேகம் காரணமாக பிரபாகரன் யாரையும் வளர விரும்பவில்லை. மேலும் கிழக்கு மாகாண 'ஜெயந்தன் படை' மக்கள் மத்தியில் பெற்ற வரவேற்பைப் இயக்கத்தில் பலரும் விரும்பவில்லை. அவர்கள் தக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தனர். சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டதை காரணம் காட்டவே நாங்கள் அப்படியே இயக்கத்தில் இருந்து வெளியேற நேரிட்டது," என்று கருணா அம்மான் தெரிவித்தார்.
20 ஆண்டுகளாக அரசியல் ரீதியாக பிரிந்திருந்த இருவரும் இணைய காரணம் என்ன? இது குறித்து கருணா அம்மானும், பிள்ளையானும் கூறுவதும் என்ன? முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



