சீனாவும் ஏ.ஐ.யும் உலக நிதித்துறை தலைவர்களை கவலைப்படுத்துவது ஏன்?

பட மூலாதாரம், AFP via Getty Images
- எழுதியவர், ஃபைசல் இஸ்லாம்
- பதவி, பிபிசி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலப் போக்கு எப்படி இருக்கும் என்பதைத் தீர்மானிப்பதில் தற்போது இருவேறு சக்திகளுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது.
ஒருபுறம், வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தும் சக்திகளாக எரிசக்தி நெருக்கடி, வர்த்தக மோதல்கள், நேரடிப் போர் போன்ற தொடர்ச்சியான நெருக்கடிகள் உள்ளன. உலகின் வளர்ச்சியடைந்த பொருளாதாரங்களின் வட்டி செலவுகள் கடுமையாக அதிகரித்து வருவது இதை மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.
மறுபுறம், செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தில் பெருமளவில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கின்றன. மேலும், குறிப்பாகச் சிறிய பொருளாதாரங்களின் வியக்கத்தக்க மீண்டெழும் திறனும் கவனிக்கத்தக்கதாக உள்ளது. எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பொருட்களை வர்த்தகம் செய்வதற்கான புதிய வழித்தடங்கள், தேவையின் கட்டாயத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் பாங்காக்கில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டங்களில், இந்த விவகாரங்கள் மீண்டும் மீண்டும் விவாதிக்கப்பட்டன. மிக உயர்ந்த நிலையில் உள்ள தலைவர்களிடையேயும் இவை பேசப்பட்டன. இருப்பினும், உலகப் பொருளாதாரம் எந்தத் திசையில் செல்லப்போகிறது என்பது அவர்களுக்கே உறுதியாகத் தெரியவில்லை.

பட மூலாதாரம், Aaron Schwartz/Getty Images
இதற்கிடையில், பத்திரச் சந்தைகள் அடுத்ததாக எந்த நாட்டின் மீது கவனம் செலுத்தும் என்பதை ஊகிப்பது ஒரு சூதாட்டத்தைப் போன்றதாக உள்ளது. தற்போது அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் மீது அந்தச் சந்தைகள் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது.
இருப்பினும், பிரான்ஸ் நிதியமைச்சர் ரோலண்ட் லெஸ்க்யூர், கடன் பத்திரங்களை விற்பதில் தமக்குப் பிரச்னை எதுவும் இல்லை என்று உலக நாடுகளிடம் கூறி வருகிறார். அவற்றை விற்பதற்கான செலவு அதிகரித்திருந்தாலும், விற்பனையில் சிக்கல் இல்லை என்பதே அவரது கருத்து. பிரான்ஸ் அரசின் பட்ஜெட்டிலும் எந்தப் பிரச்னையும் இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப்பால் உருவான பதற்றங்களுக்கு மத்தியில், ஓராண்டுக்கு முன்பு சிதைவடையும் அபாயத்தில் இருந்த வளர்ச்சியடைந்த நாடுகளின் ஜி7 கூட்டமைப்பு தொடர்ந்து செயல்படுவதற்குத் தாம் உதவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு வகையில் பார்த்தால், உலகளாவிய பொருளாதார மந்தநிலையோ அல்லது பெரிய வளர்ந்து வரும் பொருளாதார நாடு ஒன்றில் கடன் நெருக்கடியோ இதுவரை ஏற்படாதது ஆச்சரியமளிக்கிறது.
குறிப்பாக, தாய்லாந்து நிதியமைச்சர் என்னிடம் பேசும்போது, அந்நாட்டின் கடன் பெறுவதற்கான வட்டி செலவுகள் மிகக் குறைவாகவே அதிகரித்துள்ளதாகப் பெருமிதத்துடன் தெரிவித்தார். குறிப்பாக, அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இந்த அதிகரிப்பு மிகக் குறைவாக இருப்பதாக அவர் கூறினார்.

பட மூலாதாரம், Leon Neal/Getty Images
மற்றொரு ஆச்சரியம் பிரிட்டன் தொடர்பானது. கடன் பத்திரச் சந்தைகளால் முன்பு மோசமான நிலையில் வைக்கப்பட்டிருந்த பிரிட்டன், தற்போது அந்தப் பட்டியலிலிருந்து வெளியேறியுள்ளது. அதற்குப் பதிலாக, சர்வதேச நாணய நிதியம் பிரிட்டனை ஒரு முன்மாதிரியாக சுட்டிக்காட்டியுள்ளது.
பிரிட்டன் அரசின் பட்ஜெட் திட்டங்களைச் சரிபார்க்கப்பட்ட உண்மைகளாகவும் நம்பிக்கையின் அடிப்படையிலும் சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொண்டுள்ளது. உண்மையில், ஜி7 கூட்டமைப்பில் உள்ள மற்ற நாடுகளுக்கு இதுபோன்ற நம்பிக்கைக்குரிய நிலைகூட இல்லை.
இந்தச் சூழல், பிரிட்டன் நிதித்துறை சான்சிலர் ஜான் ஹீலிக்கு தனது கருத்துகளை எடுத்துரைப்பதற்கான வாய்ப்பை வழங்கியது. பிரிட்டனின் உண்மையான பொருளாதார வளர்ச்சிப் புள்ளிவிவரங்கள் எதிர்பார்ப்புகளைத் தொடர்ந்து விஞ்சி வருவதாகவும், 2026-ஆம் ஆண்டில் இதுவரை பதிவான வளர்ச்சியை வலுவானதாகக் குறிப்பிடலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத் துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள், பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கத் தொடங்கியிருப்பதற்கான முதல் அறிகுறியாக இந்தப் புள்ளிவிவரங்களைப் பார்ப்பதாக ஹீலி என்னிடம் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டங்களில் பங்கேற்றிருந்த நிதிச் சந்தை முதலீட்டாளர்கள், பல ஆண்டுகளாக நெருக்கடிகளைச் சந்தித்து வந்த பிரிட்டனை மீண்டும் ஒருமுறை கவனிக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

பட மூலாதாரம், Ken Ishii - Pool/Getty Images
ஆனால், புவிசார் அரசியல் நிலையற்ற தன்மை, கடன் பத்திரச் சந்தைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றுடன் சேர்த்து, உலகப் பொருளாதாரம் எதிர்கொள்ள வேண்டிய மூன்றாவது பெரிய சவாலும் உள்ளது.
கூட்டத்தில் பங்கேற்க வந்த வங்கியாளர்களையும் நிதியமைச்சர்களையும் அவர்களது ஓட்டுநர்கள் பாங்காக் வீதிகளில் இறக்கிவிட்டபோதே, அந்தச் சவாலைத் தெளிவாகக் காண முடிந்தது.
மற்ற நாடுகளைப் போலவே, சீன மின்சார வாகனங்களின் விற்பனையில் ஏற்பட்டுள்ள வியக்கத்தக்க வளர்ச்சியைத் தாய்லாந்தும் நேரடியாக அனுபவித்துள்ளது.
வாகன உற்பத்தியில் தனக்கென நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதால், தாய்லாந்து சில நேரங்களில் 'ஆசியாவின் டெட்ராய்ட்' என்று அழைக்கப்படுகிறது. ஆனால், இப்போது அந்நாட்டில் விற்பனையாகும் கார்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு சீன மின்சார வாகனங்களாக உள்ளன.
'சீன அதிர்ச்சி 2.0' அழைக்கப்படும் நிகழ்வுக்கு இது மிகத் தெளிவான உதாரணமாகும். அதாவது, மேம்பட்ட உற்பத்தித் துறைகளில் சீனா மிகக் குறுகிய காலத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருப்பதே இதன் பொருள்.
2000-களில் அடிப்படை உற்பத்தித் துறைகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தபோது ஏற்பட்ட மாற்றம், முதல் 'சீன அதிர்ச்சி' என அழைக்கப்பட்டது.
இந்த இரண்டாவது அலை மாற்றம், கடந்த சில மாதங்களிலேயே உலக வர்த்தகம் எவ்வாறு செயல்படுகிறது, இனி அது எவ்வாறு நிர்வகிக்கப்பட வேண்டும் என்பது குறித்த மறுமதிப்பீட்டுக்கு வழிவகுத்துள்ளது.

பட மூலாதாரம், NICOLAS TUCAT/AFP via Getty Images
குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியம் இந்த விவகாரத்தில் தீவிரமாக மறுபரிசீலனை செய்து வருகிறது. சீனாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான வர்த்தகம் ஒருதலைப்பட்சமாகச் செல்வதாகத் தோன்றும் தற்போதைய சூழலை எவ்வாறு மாற்றுவது என்பதில் அந்தக் கூட்டமைப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கி வரும் கூடுதல் 'ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்டது' பாதுகாப்பு விதிகள், பிரிட்டனிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
பிரிட்டன் இந்தப் புதிய விதிகளுக்கு வெளியே இருந்தால், சீனாவில் உற்பத்தியாகும் உபரி கார்கள் பிரிட்டனுக்குத் திருப்பிவிடப்படலாம். தாய்லாந்தைப் போலவே, பிரிட்டனிலும் தற்போது இறக்குமதி வரிகள் குறைவாக இருப்பதுடன், மானியங்களும் வழங்கப்படுகின்றன.
மாறாக, ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டனை இந்த விதிகளுக்குள் இணைத்துக்கொள்ளலாம். ஆனால், அதற்குப் பதிலாக, ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் அளவுக்கு இறக்குமதி வரிகளை உயர்த்துமாறு பிரிட்டனிடம் கோரலாம்.
இதற்கிடையில், பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான உறவு தொடர்பான மற்றொரு விவகாரமும் உள்ளது. பாங்காக்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இந்த விவகாரம் பேசப்பட்டது. சிலருக்கு இது சுவாரசியத்தையும் அளித்தது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, இந்த விவகாரம் குறித்து சிரித்துக் கொண்டே பேசினார். பிரெக்சிட் காரணமாகப் பிரிந்தவர்கள் இப்போது மீண்டும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர் என்று அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், JUSTIN TALLIS / AFP via Getty Images
பின்லாந்து நிதியமைச்சர் என்னிடம் பேசும்போது, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் 'காதல் வயப்படத் தொடங்கியுள்ளது' என்று தெரிவித்தார். முக்கிய வங்கிகளும்கூட பிரிட்டன் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கைகளை வெளியிட்டு வந்தன. இதனை 'பிரெக்சிட் மீண்டும் திரும்புதல்' என்று சிலர் குறிப்பிடுகின்றனர்.
எனினும், பல்வேறு நெருக்கடிகள் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள தற்போதைய சூழலிலிருந்து உலகப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கத் தேவையான ஊக்கத்தை வழங்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுவது செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஏற்பட்டுள்ள முதலீட்டு வளர்ச்சிதான்.
இந்த நெருக்கடிகளில் பல, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முடிவுகளுடன் தொடர்புடையவை.
ஆனால், செயற்கை நுண்ணறிவு தொடர்பான எதிர்பார்ப்புகளும்கூட முழுமையாகத் தெளிவானவை அல்ல.
ஒரு கூட்ட அரங்கில், பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் செயற்கை நுண்ணறிவின் ஆற்றலை நிதியமைச்சர்கள் பெரிதும் பாராட்டுகின்றனர். அடுத்த அறையில், வங்கித் துறையின் பெரும்பகுதியில் இணையப் பாதுகாப்பைச் சிதைக்கும் அளவுக்கு அந்தத் தொழில்நுட்பத்துக்கு ஆற்றல் இருக்கலாம் என்று மத்திய வங்கிகளின் தலைவர்கள் கவலைப்படுகின்றனர்.
செயற்கை நுண்ணறிவைச் சுற்றி உருவாகியுள்ள நிதிச் சந்தை ஏற்றம் என்றென்றும் நீடிக்க முடியாது.
இதுவரை அந்த ஏற்றம் நீடித்து வருவதற்காகவே, நிதியுலகின் அதிகார மையங்களில் இருப்பவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































