மெக்காவில் 'தகாத செயல்' குற்றச்சாட்டில் இருவருக்கு மரண தண்டனை - வங்கதேசத்தில் என்ன விவாதிக்கப்படுகிறது?

பட மூலாதாரம், Getty Images
மெக்காவில் உள்ள மசூதியில் "தகாத" செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட வங்கதேசத் தம்பதிக்கு செளதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டில் எதிர்வினைகள் வந்துள்ளன.
அந்த இரு குடிமக்களின் கைது, விசாரணை மற்றும் மரண தண்டனை குறித்து செளதி அரேபிய அதிகாரிகள் தங்களுக்குத் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்று ஜெட்டாவில் உள்ள வங்கதேசத் தூதரக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இது "துரதிர்ஷ்டவசமானது" என்று குறிப்பிட்ட வங்கதேச வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஹுமாயூன் கபீர், தகவல்களைப் பகிர்வதில் சில குறைபாடுகள் இருந்ததாகவும், அது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே, தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகுதான் அரசுக்குத் தகவல் கிடைத்தது என்றால், இந்த விவகாரத்தில் தூதரகத்துக்கும் என்ன பங்கு இருந்தது என்று வங்கதேச எதிர்க்கட்சித் தலைவரும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவருமான ஷஃபிகுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தத் தம்பதிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. எனினும், உச்ச நீதிமன்றம் முந்தைய தீர்ப்பை உறுதிசெய்து, மரண தண்டனையையும் உறுதி செய்தது.
இதையடுத்து, அக்டோபர் 14-ஆம் தேதி இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த விவகாரம் வங்கதேசத்தின் முக்கிய ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் என்ன கூறினார்?

பட மூலாதாரம், Getty Images
வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் ஷஃபிகுர் ரஹ்மான், தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த விவகாரத்தில் வங்கதேசத் தூதரகம் தனது பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றியதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் தனது பதிவில், ''சமீபத்தில், செளதி அரேபியாவின் புனித நகரமான மெக்காவில் இரண்டு வங்கதேசக் குடிமக்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரம் குறித்து அந்நாட்டின் பல்வேறு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் விவாதங்களும் விமர்சனங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
செளதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் வங்கதேச மக்கள் கணிசமான எண்ணிக்கையில் பணியாற்றி வருகின்றனர். வெளிநாடுகளில் வசிக்கும் அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகள் குறித்து அவ்வப்போது விவாதங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.'' என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ''வெளிநாடுகளில் வசிக்கும் குடிமக்களின் நலன்களைப் பாதுகாப்பதுடன், நாட்டின் கண்ணியத்தையும் நலன்களையும் காப்பதற்காகவே பல்வேறு நாடுகளில் நமது தூதரகங்களும் துணைத் தூதரகங்களும் செயல்படுகின்றன. இந்த இருவரின் நீதிமன்ற நடவடிக்கைகளில் நமது தூதரகம் அல்லது துணைத் தூதரகம் பங்காற்றியதா என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகுதான் இந்த விவகாரம் குறித்துத் தங்களுக்குத் தெரியவந்ததாக அரசின் பல்வேறு அதிகாரிகள் கூறியிருப்பது இயல்பாகவே கேள்விகளை எழுப்புகிறது.'' என கூறியுள்ளார்.
''ஒவ்வொரு நாடும் தனது சட்டங்களின் அடிப்படையில் நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரித்து முடிவெடுக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், இந்த இருவரும் வெளிநாட்டில் வசிக்கும் வங்கதேசக் குடிமக்கள் என்பதாலும், இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாலும், இந்த விவகாரத்தில் தூதரகம் தனது பொறுப்புகளை நிறைவேற்றியதா என்பதை அரசு பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்குக் காரணமான குற்றம் தொடர்பாகக் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், வெளிநாடுகளில் வசிக்கும் வங்கதேசக் குடிமக்களிடையே இத்தகைய செயல்கள் நடைபெறுவதைத் தடுக்க அரசு அல்லது தூதரகம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்பதையும் அறிந்துகொள்வது அவசியம். இந்த விவகாரத்தில் அரசும் வங்கதேசத் தூதரகமும் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்.'' என பதிவிட்டுள்ளார்.
அத்துடன்,''எதிர்காலத்தில், சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் எந்தவொரு வெளிநாட்டுவாழ் வங்கதேசக் குடிமகனும் அவருக்குக் கிடைக்க வேண்டிய தூதரக உதவியை இழக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேபோல், நாட்டின் கண்ணியத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் மற்றும் தாங்கள் வசிக்கும் நாடுகளின் சட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்து வெளிநாட்டுவாழ் குடிமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அரசின் முக்கியப் பொறுப்புகளில் ஒன்றாகும்
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அந்த இருவரின் வழக்குகளைப் பற்றி விவாதித்து மறுஆய்வு செய்வதைவிட, ஒவ்வொருவரும் இந்த விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டையும் பங்கையும் மறுபரிசீலனை செய்வது சிறந்தது.'' என கூறியுள்ளார்
வங்கதேச அரசின் கருத்து

பட மூலாதாரம், Getty Images
வங்கதேச வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஹுமாயூன் கபீர், இந்தச் சம்பவம் வங்கதேசத்துக்கு "துரதிர்ஷ்டவசமானது" என்று தெரிவித்துள்ளார்.
'ப்ரோதோம் ஆலோ' நாளிதழ் வெளியிட்ட செய்தியில், "கடந்த புதன்கிழமை, செளதி அரேபியா மற்றும் மத்திய கிழக்கின் பிற பகுதிகளில் உள்ள பல்வேறு ஊடகங்கள், புனித நகரமான மெக்காவில் உள்ள மசூதி வளாகத்தில் 'தகாத செயல்களில்' ஈடுபட்டதாக இரண்டு வங்கதேசக் குடிமக்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகச் செய்தி வெளியிட்டன. இதையடுத்து, வங்கதேச வெளியுறவு அமைச்சகம் டாக்காவில் உள்ள செளதி அரேபியத் தூதரகத்தைத் தொடர்புகொண்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்த தகவல்கள் தாமதமாகக் கிடைத்தது குறித்து ஹுமாயூன் கபீர் ஏமாற்றம் தெரிவித்தார். அவரது கருத்திலிருந்து, இந்த விவகாரம் குறித்து வங்கதேச அரசுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பது தெரிகிறது.
"இரு நாடுகளும் ஜெனீவா உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. இங்கு ஒரு செளதி அரேபியக் குடிமகன் குற்றவியல் வழக்கில் கைது செய்யப்பட்டால், நாங்கள் நிச்சயமாக செளதி அரேபிய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிப்போம். அந்த நபருக்குத் தூதரக உதவிகளைப் பெறும் உரிமை இருக்கும். அதாவது, தங்கள் நாட்டைச் சேர்ந்த ஒருவர் வங்கதேசத்தில் குற்றவியல் வழக்கில் சிக்கியுள்ளார் என்ற தகவலாவது செளதி அரேபிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படும்'' என ஹுமாயூன் கபீர் கூறியுள்ளார்.
''அதேபோல், எங்கள் குடிமக்களில் யாரேனும் கைது செய்யப்பட்டால், செளதி அரேபியா அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் எங்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இதுவே எங்களது எதிர்பார்ப்பு."

பட மூலாதாரம், FAYEZ NURELDINE/AFP via Getty Images
வங்கதேச ஊடகங்களில் என்ன பேசப்படுகிறது?
வங்கதேசத்தின் முன்னணி ஆங்கில நாளிதழான தி டெய்லி ஸ்டார் இணையதளத்தில் எழுதியுள்ள கான் காலித் அத்னான், இந்த மரண தண்டனைச் சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜீய நட்புறவின் வரம்புகளை வெளிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் வங்கதேசத்தின் தூதரகப் பணிகளின் செயல்பாடுகளை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தனது கட்டுரையில் அவர், "2025-ஆம் ஆண்டில் வங்கதேசம் 7.5 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களைச் செளதி அரேபியாவுக்கு அனுப்பியுள்ளது. ஹஜ், உம்ரா போன்ற பயணங்களும் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுக்கு அடிப்படையாக உள்ளன. இரு நாடுகளும் நம்பகமான முறையில் தூதரக ஒத்துழைப்பை வழங்கும் என்ற எதிர்பார்ப்பின் மூலம் இந்த உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.
சம்பந்தப்பட்ட நபர்களின் அடையாளங்கள், நீதிமன்றத் தீர்ப்புகள், கைது மற்றும் காவலில் வைக்கப்பட்ட தேதிகள், சட்ட உதவி மற்றும் மொழிபெயர்ப்பு வசதிகள் வழங்கப்பட்டனவா என்பது தொடர்பான ஆவணங்களை வங்கதேசம் கோர வேண்டும். தனிப்பட்ட தகவல்களின் ரகசியத்தன்மையைப் பாதுகாத்தபடி, விசாரணையின் முடிவுகளைச் சம்பந்தப்பட்ட குடும்பங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.'' என கூறியுள்ளார்.
''அதிகாரிகளுக்கு இந்த விவகாரம் உண்மையிலேயே தெரியாமல் இருந்திருந்தால், விசாரணை நடத்தாமல் அலட்சியம் நடந்ததாகக் கருதுவது சரியாக இருக்காது. விதிமீறல்கள் உறுதிசெய்யப்பட்டால், பொறுப்புக்கூறலை உறுதிசெய்யவும் உரிய இழப்பீடு வழங்கவும் வங்கதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க, கைது செய்யப்படும் வங்கதேசக் குடிமக்கள் குறித்த தகவல்களை உரிய காலத்துக்குள் தூதரகத்துக்குத் தெரிவிப்பதைக் கட்டாயமாக்கும் நடைமுறையை வங்கதேசம் பேச்சுவார்த்தை மூலம் உருவாக்க வேண்டும்.
இதற்கு, சட்ட உதவிக்குப் போதிய நிதி ஒதுக்குவதும், மரண தண்டனை தொடர்பான வழக்குகளைத் தொடர்ந்து கண்காணிப்பதும் அவசியம். அதுவரை, தூதரக அணுகல் உறுதிசெய்யப்படாத பிற வழக்குகளில் மரண தண்டனைகளை நிறுத்திவைக்குமாறு வங்கதேசம் கோர வேண்டும்." என கூறியுள்ளார்.

இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் என்ன?
செளதி அரேபியாவின் மெக்காவில் இரண்டு வங்கதேசக் குடிமக்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பாகக் கூடுதல் தகவல்களைக் கோருவதற்காக, டாக்காவில் உள்ள செளதி அரேபியத் தூதர் அப்துல்லா பின் ஜாஃபர் எச். பின் அபியாவை வங்கதேச வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை நேரில் அழைத்துப் பேசியது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இருவரில் ஒருவரின் குடும்பத்தினர், தங்கள் மகன் ஒரு வாரத்துக்கு முன்புகூட சிறையிலிருந்து தங்களைத் தொடர்புகொண்டதாக பிபிசி வங்க சேவையிடம் தெரிவித்தனர்.
ஆனால், தனக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக அவர் அப்போது எதையும் தெரிவிக்கவில்லை என கூறுகின்றனர்.
"மூன்று ஆண்டுகளும் மூன்று மாதங்களும் ஆகிவிட்டன; என் மகனின் முகத்தை நான் பார்க்கவில்லை. கடைசியாக ஒருமுறையாவது அவனைப் பார்க்க விரும்புகிறேன்" என்று கூறிய இந்த இளைஞரின் தாய், மகனின் உடலைத் தாய்நாட்டுக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.
அந்த நபருக்கு சுமார் 22 வயது இருக்கும் என்று உள்ளூர்வாசிகள் பிபிசி வங்க சேவையிடம் தெரிவித்தனர். அவரது தந்தை, பிறருக்குச் சொந்தமான நிலங்களில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். தற்போது வயது முதிர்வு காரணமாக அவரால் வேலை செய்ய முடியவில்லை.
குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக, முகவர் ஒருவர் மூலம் அந்த இளைஞர் வெளிநாட்டுக்கு சென்றார். ஆனால், செளதி அரேபியாவுக்குச் சென்ற ஆறே மாதங்களில், 2023-ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார்.
இரண்டு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் கொண்ட குடும்பத்தில் மூத்தவரான அவர், ரியாத்தில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்துவந்தார். அவர் மீது "தகாத செயல்களில்" ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட அதே மசூதியில் அவர் பணியாற்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
சிறைக்குச் சென்ற பிறகும், அவர் கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் சிறிது நேரமாவது தொலைபேசியில் குடும்பத்தினருடன் பேசியதாக உறவினர்கள் தெரிவித்தனர். அப்போது, அந்தப் பெண்ணுடன் தனக்குக் காதல் உறவு இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
"தொடக்கத்தில், மொழிப் பிரச்னை காரணமாக என் மகனால் யாரிடமும் எதையும் தெளிவாக விளக்க முடியவில்லை" என்று அவரது தாயார் பிபிசி வங்க சேவையிடம் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































