'யாரை நம்புவது?' - இருமல் மருந்துக்கு குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் கண்ணீர்
மத்தியப் பிரதேசத்தில் செப்டம்பர் 7 முதல் இதுவரை சிந்த்வாரா, பெதுல் மற்றும் பந்தூர்னா மாவட்டங்களில் குறைந்தது 20 குழந்தைகள் கலப்பட இருமல் சிரப்பைக் பருகியதால் உயரிழந்தனர். குழந்தைகளை இழந்து வேதனையில் இருக்கும் பெற்றோர்களை பிபிசி நேரில் சந்தித்து பேசியது.
"எங்கள் கைகளாலேயே குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொண்டிருந்தோம்", " உயிர்களைக் காப்பாற்றுபவர்களே உயிரைப் பறித்துவிட்டார்கள். யாரை நம்புவது?" , "எங்கோ தவறு நடந்துள்ளது." என்று பெற்றோர்கள் தங்கள் ஆதங்கத்தையும் தீராத சோகத்தையும் வெளிப்படுத்தினர்.
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாராவில் உள்ள பராசியாவில், ஷிவானி தாக்கரேவின் இரண்டு வயது மகள் யோஜிதாவின் சளி மற்றும் இருமலுக்கு மருத்துவர் இருமல் மருந்தை பரிந்துரைத்தார். ஆனால் யோஜிதா இறந்துவிட்டார். தனது மகளின் மரணம் குறித்த துயரத்தை சிவானி, "உயிர்களைக் காப்பாற்றுபவர்களே உயிரைப் பறித்துவிட்டார்கள். யாரை நம்புவது? நாங்கள் குழந்தையை காய்ச்சலைக் குணப்படுத்தத்தான் அழைத்துச் சென்றோம். இறுதியில் எங்கள் குழந்தையின் உயிரைப் பறித்துவிட்டனர்" என்று புலம்பினார்.
"அவளுக்கு மருத்துவர் கூறியபடியே 8 மில்லி அளவில் மட்டுமே சிரப் கொடுத்தேன். அதன் பிறகு அவளுடைய சிறுநீரகங்கள் வேலை செய்யவில்லை. அவள் குணமடைவாள் என்று நினைத்தோம், ஆனால் குணப்படுத்த வேண்டியவர்களே அவளின் உயிரைப் பறித்துவிட்டனர்" என்று அவர் கூறினார்.
மத்தியப் பிரதேச காவல்துறை சென்னையைச் சேர்ந்த ஸ்ரீசன் பார்மாவின் உரிமையாளர் எஸ். ரங்கநாதனை கைது செய்துள்ளதாக சிந்த்வாரா காவல் கண்காணிப்பாளர் அஜய் பாண்டே தெரிவித்தார். "சிந்த்வாராவிலிருந்து சென்ற சிறப்பு விசாரணைக் குழு, ஸ்ரீசன் பார்மா உரிமையாளர் ரங்கநாதனை கைது செய்தது. நள்ளிரவில் அவரை சுற்றி வளைத்து பின்னர் கைது செய்தோம்." என்றார்.
மத்தியப் பிரதேச சுகாதார அமைச்சர் ராஜேந்திர சுக்லாவின் கூற்றுப்படி, செப்டம்பர் 7 முதல் இதுவரை சிந்த்வாரா, பெதுல் மற்றும் பந்தூர்னா மாவட்டங்களில் குறைந்தது 20 குழந்தைகள் கலப்பட இருமல் சிரப்பைக் பருகியதால் உயரிழந்தனர்.
அதிகப்பட்சமாக சிந்த்வாராவில் 17 குழந்தைகள் இறந்துள்ளனர். அவர்களில் யோஜிதாவும் ஒருவர். யோஜிதாவின் தந்தை சுஷாந்த் தாக்கரே இதைப்பற்றி பேச முடியாத அளவுக்கு வேதனையில் உள்ளார்.
யோஜிதாவின் தந்தையாயான சுஷாந்த் தாக்கரே, " ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவர்களின் குழந்தைகள் தான் எல்லாமே. என் மகள் இப்போது இல்லை. வேறு யாருக்கும் இப்படி நடக்கக்கூடாது.
மிகவும் சுறுசுறுப்பாக இருந்தாள். நாள் முழுவதும் விளையாடி, பேசிக்கொண்டே இருப்பாள். தாத்தா, அப்பா, அம்மா… அவளை நாங்கள் மிகவும் இழந்து தவிக்கிறோம்…" என்றார்.
விசாரணையில், இருமல் சிரப்பை பருகிய பிறகு குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் இறந்தது கண்டறியப்பட்டது. இந்த சிரப் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்த சிரப் சிந்த்வாராவிலும் அருகிலுள்ள நகரங்களிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது..
தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் அறிக்கையில், அந்த நிறுவனத்தின் ஒரு தொகுதி சிரப்பில் 48.6 சதவீதம் டைஎதிலீன் கிளைக்கால் இருப்பது கண்டறியப்பட்டது.
இது முன்னர் காம்பியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் இந்தியாவில் குழந்தை இறப்புகளுக்கு காரணமான அதே நச்சு ரசாயனமாகும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



