You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்கா யுக்ரேனுக்கு ராணுவ உதவியை நிறுத்தியதன் பின்னால் உள்ள அரசியல் கணக்கு இதுவா?
- எழுதியவர், ஜொனாதன் பீல்
- பதவி, பாதுகாப்பு செய்தியாளர்
யுக்ரேனுக்கு அமெரிக்காவின் அனைத்து ராணுவ உதவிகளையும் நிறுத்தும் அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவு யுக்ரேனுக்கு மட்டுமல்லாது, உதவியை தொடரவேண்டும் என தொடர்ந்து அமெரிக்க நிர்வாகத்தை வலியுறுத்தி வரும் ஐரோப்பிய கூட்டாளிகளுக்கும் பேரிடியாக இறங்கியுள்ளது.
அமெரிக்கா ராணுவ உதவியை நிறுத்தியது இது முதல் முறையல்ல. 2023 கோடையில் அப்போதை அதிபர் ஜோ பைடன் யுக்ரேனுக்கு அளித்த மிகப்பெரிய ராணுவ உதவியை நாடாளுமன்றத்தில் உள்ள குடியரசு கட்சியினர் தடுத்து நிறுத்தினர்.
அப்போது யுக்ரேன் தனது தளவாட தேவைகளை ஐரோப்பாவின் உதவியுடன் சமாளித்தது.
இறுதியில் அமெரிக்க நாடாளுமன்றம் 60 பில்லியன் பவுண்ட் உதவியை வழங்க 2024 வசந்த காலத்தில் அனுமதி அளித்தது. அது சரியான நேரத்தில் அளிக்கப்பட்ட உதவியாக இருந்தது. கார்கிவ்வில் ரஷ்யாவின் புதிய தாக்குதலை சமாளிக்க முடியாமல் யுக்ரேன் திணறிக்கொண்டிருந்த தருணம் அது. தாமதமாக வந்துச் சேர்ந்த ஆயுதங்கள் நிலைமையை மாற்ற உதவியது.
கடந்த முறை நடந்ததைப் போலவே அமெரிக்கா உதவியை நிறுத்தியிருப்பதன் விளைவுகளை உணர பல மாதங்கள் ஆகலாம். குறைந்தது ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களுக்கு இது பொருந்தும்.
ஐரோப்பிய நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக பீரங்கி குண்டுகள் தயாரிப்பதை அதிகரித்து வந்திருக்கின்றன. ஒட்டுமொத்தமாக தற்போது யுக்ரேனுக்கு வழங்கப்படும் உதவியில் 60 விழுக்காட்டை ஐரோப்பிய நாடுகள் தருகின்றன. இது அமெரிக்கா அளிக்கும் உதவியை விட அதிகம்.
இருந்தாலும், அமெரிக்காவின் ராணுவ உதவி யுக்ரேனுக்கு முக்கியமானது. ஆயுதங்களைப் பொறுத்தவரை அவை மிகச் சிறந்தவை என ஒரு மேற்கத்திய அதிகாரி அண்மையில் விவரித்தார்.
யுக்ரேன் தனது மக்களையும், நகரங்களையும் காத்துக்கொள்ள ஆற்றல்மிக்க அமெரிக்க வான்வழி பாதுகாப்பு அமைப்புகளை அதிகம் சார்ந்திருக்கிறது. பேட்ரியட் ஏவுகணைகள் மற்றும் நார்வேயுடன் இணைந்து அமெரிக்கா உருவாக்கிய என்ஏஎஸ்ஏஎம்எஸ் போன்றவை இதில் அடங்கும்.
ஹெச்ஐஎம்ஏஆர்எஸ் மற்றும் ஏடிஏசிஎம் ஏவுகணைகள் மூலம் தொலைதூரத்தில் தாக்குதல் நடத்தும் ஆற்றலை யுக்ரேனுக்கு அமெரிக்கா அளித்துள்ளது. ரஷ்யாவுக்குள் அவற்றை பயன்படுத்தும் ஆற்றலை அமெரிக்கா தடுத்திருக்கிறது. இருந்தாலும் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளில் முக்கிய இலக்குகளை தாக்குவதற்கு அவை பயன்படுத்தப்பட்டன.
இது தரம் சார்ந்தது மட்டுமல்ல, அளவை சார்ந்ததும்தான். உலகிலேயே சக்திவாய்ந்த ராணுவம் என்ற முறையில், அமெரிக்க ராணுவத்தால் நூற்றுக்கணக்கான ஹம்வி மற்றும் கவச வாகனங்களை அனுப்ப முடிந்திருக்கிறது. இந்த எண்ணிக்கையை ஐரோப்பிய ராணுவத்தால் ஒருபோதும் ஈடுகட்ட முடியாது.
இந்த உதவிகள் இல்லாததன் விளைவுகள் போர்முனையை எட்ட சிறிது காலம் பிடிக்கலாம். ஆனால் அதைவிட முக்கியமாக உளவுத் தகவல்களை பரிமாறிக்கொள்வதில் உடனடித் தாக்கம் ஏற்படலாம்.
வான் வழி கண்காணிப்பு, உளவு சேகரிப்பு மற்றும் தகவல் தொடர்பில் எந்த நாடும் அமெரிக்காவுக்கு இணையாக இருக்கமுடியாது. இவை அமெரிக்க ராணுவத்தால் மட்டுமல்ல, வணிக நிறுவனங்களாலும் வழங்கப்படுகின்றன.
அமெரிக்கா அளித்த தளவாடங்கள் பராமரிப்பின் நிலை என்ன?
ஈலோன் மஸ்கின் ஸ்டார் லிங்க் தொலைத்தொடர்பு கட்டமைப்பை எடுத்துக்கொள்ளுங்கள். நான் சென்ற அனைத்து யுக்ரேன் முன்னணி நிலைகளிலும் ஒரு ஸ்டார்லிங்க் டிஷ் இருக்கிறது.
போர்க்களத்தில் அவ்வப்போது தகவல்களை உடனுக்குடன் கடத்துவதற்கு இவை பயன்படுத்தப்படுகின்றன.
இவை பீரங்கி தாக்குதலையும் டிரோன் தாக்குதல்களையும் ஒருங்கிணைப்பதற்கு அத்தியாவசியமானவையாக இருக்கின்றன. கடந்த காலங்களில் இந்த முக்கிய உயிர்நாடிக்கான நிதியை வழங்கியதாக அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.
அமெரிக்க நிர்வாகத்தில் ஈலோன் மஸ்க் ஒரு முக்கிய நபராக உள்ள நிலையில், அவர் தற்போது அந்த செலவை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வாய்ப்புகள் குறைவு. அவரும் யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியை கடுமையாக விமர்சிப்பவராக இருக்கிறார்.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களை ஐரோப்பிய நாடுகள் யுக்ரேனுக்கு அனுப்புவதை அமெரிக்கா தடுக்குமா? அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எஃப்-16 போர்விமானங்களை யுக்ரேனுக்கு அளிக்க ஐரோப்பா எண்ணியபோது, அது முதலில் அமெரிக்காவின் ஒப்புதலை பெறவேண்டியிருந்தது.
அமெரிக்கா யுக்ரேன் படைகளுக்கு பயிற்சி அளித்ததுடன், அமெரிக்கா அளித்த உபகரணங்களை பரமரிப்பதில் உதவியும் செய்கிறது.
தனது ஆட்சிக்காலம் நிறைவடையும் தருவாயில் இருந்த போது அமெரிக்க ஒப்பந்ததாரர்கள் யுக்ரேனில் பணிபுரிவதற்கு இருந்த தடைகளை பைடன் நீக்கினார்.
குறிப்பாக எஃப்-16 விமானங்கள் தொடர்ந்து இயங்க பொறியாளர்களும், உதிரி பாகங்களும் அவசியம். உதவியை நிறுத்தும் டிரம்பின் முடிவு யுக்ரேன் மட்டுமல்லாது அதை தாண்டியும் பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அவர்களை பேச்சுவார்த்தைக்கு சீக்கிரமே வரவைக்கவேண்டும் என்ற அரசியல் நோக்கமும் தெளிவாக இருக்கிறது.
இது தற்காலிக நிறுத்தமாக மட்டுகே இருக்கும் என்பதுதான் ஐரோப்பிய கூட்டாளிகளின் நம்பிக்கையாக இருக்கிறது. அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல், பிழைத்திருப்பதற்கான போராட்டம் யுக்ரேனுக்கு மேலும் கடினமானதாக இருக்கும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)