"கண்டெய்னர்களைத் தொடாதீர்கள்" கேரள மக்களுக்கு எச்சரிக்கை

காணொளிக் குறிப்பு, கப்பல்
"கண்டெய்னர்களைத் தொடாதீர்கள்" கேரள மக்களுக்கு எச்சரிக்கை

கேரளாவில், ஆபத்து விளைவிக்கக் கூடிய பொருட்கள் அடங்கிய சரக்கு கன்டெய்னர்களையும், எண்ணெயையும் சுமந்து சென்ற கப்பல் ஒன்று கடலில் கவிழ்ந்தது. கடந்த மே 24 சனிக்கிழமை அன்று நடந்த இந்த சம்பவத்தின் காரணமாக தற்போது கண்டெய்னர்கள் கரை ஒதுங்கி வருகின்றன. அவற்றிடம் இருந்து விலகி இருக்கும்படி அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரம் சில கவலைகளையும் எழுப்பியுள்ளது. என்ன நடந்தது?

கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சிக்கு சென்ற லைபீரியாவின் MSC ELSA 3 என்ற சரக்குக் கப்பல் அரேபிய கடலில் நேற்று முன்தினம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஞாயறன்று இந்த கப்பல் முழுவதும் மூழ்கியது. கப்பலில் இருந்த ஆட்களின் நிலை குறித்து கவலை எழுந்த நிலையில், அதில் இருந்த 24 பேரும் உயிருடன் மீட்கப்பட்டதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்தது.

கேரளாவின் நீண்ட கடற்கரை பகுதி பல்லுயிர் செழித்திருக்கும் ஒரு முக்கியமான பகுதி. இது இந்தியாவின் முக்கியமான சுற்றுலா பகுதிகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.

சுமார் 640 கன்டெய்னர்களை சுமந்து சென்று கொண்டிருந்த MSC ELSA 3 சரக்கு கப்பல் கவிழ்ந்ததில், சில கன்டெய்னர்கள் கடற்கரையை நோக்கி அடித்துவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய அதிகாரிகள் உஷார் ஆகியுள்ளனர்.

இது குறித்து இந்திய கடலோர காவல்படை எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில் சரக்கு கப்பலில் அபாயகரமான சரக்குகள் கொண்ட 13 கண்டெய்னர்கள் மற்றும் 12 கால்ஷியம் கார்பைடு கண்டெய்னர்கள் இருந்ததாக தெரிவித்துள்ளது. மேலும் கப்பலின் டேங்கில் 84.44 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 367.1 மெட்ரிக் டன் உலை எண்ணெய் இருந்தது என குறிப்பிட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு சாதனங்களுடன் சம்பவ பகுதிக்கு இந்திய கடலோர காவல் படையின் கப்பல் அனுப்பப்பட்டுள்ளது.

மாநில நிர்வாகத்தின் ஒருங்கிணைப்புடன் இந்த விவகாரத்தை கையாண்டு வருவதாகவும், பாதிப்புக்குள்ளான பகுதியில் எண்ணெய் கசிவை கண்டறியும் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான விமானம், கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை எண்ணெய் கசிவு ஏதும் இல்லை என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள துறைமுக அமைச்சர் வி.என். வசவனும் எண்ணெய் கசிவு ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார் .

அதே சமயம், இந்திய கடலோர கடற்படைக்கு சொந்தமான விக்ரம், சக்‌ஷம், சமர்த் ஆகிய மூன்று கப்பல்கள் மாசு கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு அந்த பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. எண்ணெய் கசிவு ஏதும் ஏற்படுகிறதா என நிலைமையை வான்வழியாக கண்காணிக்க Dornier விமானம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கப்பலில் இருந்தும் அதன் சரக்குகளில் இருந்தும் கசிந்த எண்ணெய், எரிபொருள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அப்பகுதி மக்களுக்கும் கடல்வாழ் உயிரினங்களின் ஆரோக்கியத்துக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடும் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

"கேரள கடற்கரையில் எங்கும் எண்ணெய் படலம் பரவக்கூடும் என்பதால், கடலோரப் பகுதி முழுவதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என கேரள முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்தது.

இந்நிலையில், தெற்கு கொல்லம் மற்றும் தெற்கு ஆலப்புலா மாவட்டங்களின் கடற்கரை பகுதிகளில் சில கண்டெய்னர்கள் கரை ஒதுங்கியதாக போலீசார் தெரிவித்தனர். குறைந்தது 10 கண்டெய்னர்கள் கரை ஒதுங்கியதாக தரவுகளை குறிப்பிட்டு பிடிஐ செய்தி முகமை கூறியுள்ளது.

இந்த கப்பலின் கன்டெய்னர்களில் உள்ள கால்சியம் கார்பைட், கடல்நீருடன் சேரும்போது எரியக்கூடிய வாயுயை வெளியிடும். அது வெடிக்கக்கூடிய அபாயமும் உள்ளது.

கடலோரத்தில் வாழும் மக்கள் கன்டெய்னர்களை தொடக்கூடாது என்றும், மீனவர்கள் கவிழ்ந்த கப்பலின் அருகே செல்லக்கூடாது என்றும் அதிகாரிங்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு