You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மிட்சுகோ டோட்டோரி: ஜப்பான் ஏர்லைன்ஸ் தலைவரான விமானப் பணிப்பெண் - சராசரி பெண்ணின் சாதனைக் கதை
- எழுதியவர், மரிகோ ஓய்
- பதவி, வணிகச் செய்தியாளர்
கடந்த ஜனவரி மாதம் ஜப்பான் ஏர்லைன்ஸின் (JAL) புதிய தலைவராக மிட்சுகோ டோட்டோரி (Mitsuko Tottori) நியமிக்கப்படார். அவரது நியமனம், அந்நாட்டின் பெருநிறுவனத் துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஜப்பான் ஏர்லைன்ஸின் முதல் பெண் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டோட்டோரியின் வாழ்க்கைப் பயணம் உத்வேகமானது. ஆரம்பத்தில் ஒரு சிறிய அளவிலான விமான நிறுவனத்தில் கேபின் குழு உறுப்பினராக (விமானப் பணிப்பெண்ணாக) அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
தற்போது ஜப்பான் ஊடகங்கள் டோட்டோரியின் நியமனம் பற்றி வெளியிட்டுள்ள தலைப்புச் செய்திகளில் 'முதல் பெண் தலைவர்' மற்றும் 'முதல் முன்னாள் விமானப் பணிப்பெண்' , 'அசாதாரண நியமனம்' என்று பலவாறு குறிப்பிட்டு வருகின்றனர்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான மிகச் சிறிய விமான நிறுவனமான ஜப்பான் ஏர் சிஸ்டம் (JAS) என்னும் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக டோட்டோரி பணிபுரிந்தார்.
அதைக் குறிப்பிட்டு, 'இவரெல்லாம் ஒரு விமான நிறுவனத்தின் தலைவரா?' எனும் தொனியில் விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ள ஒரு வலைதளம் அவரை 'ஒரு அந்நிய மூலக்கூறு' என்றும் 'ஒரு விகாரம்' என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது.
டோக்கியோவில் இருந்து பிபிசியிடம் உரையாடிய டோட்டோரி, "அந்நிய விவகாரம்’ பற்றியெல்லாம் தனக்குத் தெரியாது," என்று கூறி சிரிக்கிறார்.
இவ்வளவு விமர்சனங்கள் ஏன்?
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் விமான நிறுவனங்கள் வழக்கமாக உயர்மட்ட பதவிகளுக்கு வசதியான மேல்தட்டு பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும். டோட்டோரி இந்த ‘எலைட் (மேல்தட்டு)’ வரையறைக்குள் இல்லை.
இதற்கு முன் ஜப்பான் ஏர்லைன்ஸ் தலைவர்களாகப் பதவி வகித்த 10 பேரில் ஏழு பேர் நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள். ஆனால், டோட்டோரி மிகவும் சாதரணமான பெண்கள் ஜூனியர் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர்.
ஜப்பானை பொறுத்தவரையில், 1%-க்கும் குறைவான முன்னணி நிறுவனங்களில்தான் பெண்கள் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர். டோட்டோரியின் நியமனத்தைத் தொடர்ந்து, ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இந்த 1% நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.
மேலும் பேசிய டோட்டோரி, "நான் என்னை முதல் பெண் தலைவர் என்றோ தலைவரான முதல் விமான பணிப்பெண் என்றோ முன்னிறுத்த விரும்பவில்லை. நான் ஒரு தனிநபராகப் பணியாற்ற விரும்புகிறேன். ஆனால் என் மீது இவ்வளவு பேர் இந்த அளவு கவனம் செலுத்துவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை," என்கிறார்.
"மேலும், பெருநிறுவன பிரமுகர்கள் என்னை எப்படி நினைக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால், பொதுமக்களும் சக ஊழியர்களும் என்னை அப்படிப் பார்க்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்," என்றும் கூறுகிறார்.
ஜப்பான் மக்களின் அன்பைப் பெற்ற விமானப் பணிப்பெண்கள்
அண்மையில், ஜப்பான் ஏர்லைன்ஸின் விமானம் ஒன்று தரையிறங்கும்போது கடலோரக் காவல்படை விமானத்துடன் மோதியது. விமானத்தில் இருந்து பயணிகளை வெற்றிகரமாக வெளியேற்றியதற்காக ஜப்பான் ஏர்லைன்ஸின் விமானப் பணிப்பெண்கள் வெகுவாகப் பாராட்டப்பட்டனர். இந்தச் சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு டோட்டோரியின் நியமனம் அறிவிக்கப்பட்டது.
டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் 516, ஓடுபாதையில் காவல்படை விமானம் மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் கடலோர காவல்படை விமானத்தில் இருந்த ஆறு பணியாளர்களில் ஐந்து பேர் இறந்தனர் மற்றும் கேப்டன் படுகாயமடைந்தார்.
இருப்பினும், விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில், ஏர்பஸ் A350-900 விமானத்தில் இருந்த 379 பேரும் பத்திரமாக உயிர் தப்பினர். விமானப் பணிப்பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட தீவிரமான பயிற்சிதான் இந்த விபத்தில் இருந்து பயணிகள் காப்பாற்றப்படக் காரணம் என மக்கள் பாராட்டினர்.
முன்னாள் விமானப் பணிப்பெண்ணான, டோட்டோரி விமானப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்தவர். ஆரம்பக் காலகட்டத்தில் அவர் பணியில் இணைந்ததும் முதலில் கற்றுக் கொண்டது விமானப் பாதுகாப்பு பற்றித்தான்.
கடந்த 1985ஆம் ஆண்டில், அவர் விமான பணிப்பெண்ணாகப் பணியில் சேர்ந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு, ஜப்பான் ஏர்லைன்ஸ் விமான வரலாற்றின் மிக மோசமான விமான விபத்தில் சிக்கியது. ஒசுடாகா மலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் 520 பேர் உயிரிழந்தனர்.
அந்த நேரத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் பணியாற்றிய ஒவ்வொரு ஊழியருக்கும் ஒசுடாகா மலைக்குச் செல்லவும் அங்கு விபத்து நடந்ததை நேரில் பார்த்த மக்களிடம் பேசவும் வாய்ப்பளிக்கப்பட்டது."
"நாங்கள் எங்கள் பாதுகாப்பு மேம்பாட்டு மையத்தில் விபத்துப் பகுதியில் கிடந்த விமானப் பாகங்களையும் காட்சிப்படுத்தினோம், ஒரு பெரிய விபத்தைப் பற்றி ஒரு புத்தகத்தில் படிப்பதற்குப் பதிலாக எங்கள் சொந்தக் கண்களால் பார்த்தோம். விமான விபத்தின் நேரடிக் காட்சிகள், இழப்பு அனைத்தையும் எங்களால் அன்றைய தினத்தில் உணர முடிந்தது," என்று டோட்டோரி கூறினார்.
மாறிவரும் ஜப்பான் ஏர்லைன்ஸ்-இன் முகம்
உயர் பதவியில் அவர் நியமனம் செய்யப்பட்டது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், 2010இல் ஜப்பான் ஏர்லைன்ஸ் திவாலானதில் இருந்து அதன் நிலைமை வேகமாக மாறி வருகிறது. நாட்டின் மிகப்பெரிய பெருநிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனாலும், அரசாங்கம் கொடுத்த நிதி ஆதரவின் காரணமாக விமான நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டது. ஒரு புதிய செயற்குழு மற்றும் நிர்வாகத்துடன் ஜப்பான் ஏர்லைன்ஸ் பெரிய மறுசீரமைப்புக்கு உட்பட்டது.
மேலும், அந்நிறுவனத்தின் அப்போதைய 77 வயதான ஓய்வு பெற்ற அதிகாரியும் புத்த துறவியுமான கசுவோ இனாமோரியின் (Kazuo Inamori) நடவடிக்கைகளால்தான் ஜப்பான் ஏர்லைன்ஸ் புத்தாக்கம் பெற்றது. நிறுவன ஊழியர்கள் அவரை ஒரு மீட்பராகப் பார்த்தனர்.
அவர் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார். அவரது புரட்சிகரமான நிர்வாகம் இல்லாமல் டோட்டோரி போன்ற ஒருவர் ஜப்பான் ஏர்லைன்ஸ் தலைவராகி இருக்க வாய்ப்பில்லை.
'இது பெண்களுக்கான நம்பிக்கை'
கடந்த 2012ஆம் ஆண்டு ஒரு நேர்காணலின் போது இனாமோரியிடம் நான் பேசினேன், மனதில் பட்டதைப் பேசினார். அவர் தன் வார்த்தைகளைத் துளியும் பொருட்படுத்தவில்லை. ஜப்பான் ஏர்லைன்ஸ் `தனது வாடிக்கையாளர்களைப் பற்றிக் கவலைப்படாத ஒரு திமிர்பிடித்த நிறுவனம்` என்று கூறினார்.
இனாமோரியின் தலைமையின் கீழ், நிறுவனம் அதிகாரத்துவ பதவிகளில் இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், விமானிகள், பொறியாளர்கள் போன்ற முன்னணி நடவடிக்கைகளில் இருக்கும் ஊழியர்களை உயர்த்தியது.
"இந்த நிறுவனம் ஒரு தனியார் நிறுவனம் போன்று உணர்வை ஏற்படுத்தவில்லை. இதனால், நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். முன்னாள் அரசு அதிகாரிகள் பலர் சுலபமான அதிகார பலத்தைப் பயன்படுத்தி நிறுவனத்தில் உயர் பதவிகளில் அமர்ந்திருந்தனர்," என்று 2022இல் இனாமோரி என்னிடம் குறிப்பிட்டார்.
அதன்பிறகு ஜப்பான் ஏர்லைன்ஸ் நீண்ட தூரத்தைக் கடந்து வந்திருக்கிறது. தற்போது அதற்கு முதல் பெண் தலைவரும் கிடைத்துவிட்டார்.
நாட்டில் பெண் தலைமை நிர்வாகிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜப்பான் அரசாங்கம் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டளவில் நிர்ணயித்த இலக்கை அடையத் தவறிய பின்னர், எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில் முக்கிய வணிகங்களில் மூன்றில் ஒரு பங்கு தலைமைப் பதவிகள் பெண்களுக்குச் செல்ல வேண்டும் என்று அறிவித்துள்ளது.
"இது கார்ப்பரேட் தலைமை நிர்வாகிகளின் மனநிலையைப் பற்றியது மட்டுமல்ல, ஒரு மேலாளராக ஆவதற்கு பெண்களுக்கு நம்பிக்கை இருப்பதும் முக்கியம். யார் என்ன நினைத்தால் நமக்கென்ன?" என்கிறார் டோட்டோரி.
"எனது நியமனம், மற்ற பெண்கள் முன்பு முயற்சி செய்யப் பயந்த விஷயங்களை முயல ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்," என்கிறார் டோட்டோரி நம்பிக்கையுடன்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)