நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் சுஷிலா கார்க்கியின் இந்திய தொடர்பு என்ன?

நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக இருந்த சுஷிலா கார்க்கி, இப்போது நேபாளத்தின் முதல் இடைக்கால பெண் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். சுஷிலா கார்க்கிக்கு ஜனாதிபதி ராம் சந்திர பௌடெல் பதவி மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார்.

'ஜென் Z' போராட்டக்காரர்கள், தலைவர்கள், ஜனாதிபதி பௌடெல் மற்றும் பிற சட்ட நிபுணர்களுடன் பல நாட்கள் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை மாலை சுஷிலா கார்க்கி இடைக்கால பிரதமராக நியமிக்கப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் சமூக வலைத்தளத் தடைக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டங்களுக்கு மத்தியில், கடந்த செவ்வாய்க்கிழமை பதவி விலகிய கே.பி. ஷர்மா ஓலிக்கு பதிலாக சுஷிலா கார்க்கி பொறுப்பேற்கிறார்.

போலீசாரின் கூற்றுப்படி, போராட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல்வேறு சம்பவங்களில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுஷிலா கார்க்கி நேர்மையான தலைவர் என்று அறியப்படுகிறார். இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த, இளைஞர் போராட்டக்காரர்களின் ஒரு பிரிவினர் அவருக்கு ஆதரவு அளித்தனர்.

'ஜென் Z' இயக்கத்தில் இளைஞர்களிடையே பிரபலமான ராப் பாடகரும், காத்மாண்டு மேயருமான பாலேன் ஷா-வும் சுஷிலா கார்க்கியின் பெயரை ஆதரித்திருந்தார்.

"இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த நீங்கள் (இளைஞர்கள்) கொடுத்த முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி என்ற பெயரை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்" என்று அவர் தனது 'எக்ஸ்' பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து இந்திய செய்தி சேனலான சிஎன்என்-நியூஸ் 18-க்கு சுஷிலா கார்க்கி அளித்த பேட்டியில், "அவர்கள் (இளைஞர்கள்) என்னிடம் கோரிக்கை வைத்தார்கள், நான் ஏற்றுக்கொண்டேன்" என்று தெரிவித்தார்.

இளைஞர்கள் தன் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், தேர்தல் நடத்தப்பட்டு, நாட்டை குழப்பத்திலிருந்து வெளியே கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் விரும்புவதாகவும் கார்க்கி கூறினார்.

சிஎன்என்-நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சுஷிலா கார்க்கி பல விஷயங்களைக் கூறினார். நேபாளத்தின் தற்போதைய நிலைமை குறித்த அவரது பார்வை குறித்துப் பேட்டியின் தொடக்கத்தில் அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், "ஜென் Z குழு நேபாளத்தில் போராட்டத்தைத் தொடங்கியது. அவர்கள் என் மீது நம்பிக்கை இருப்பதாகச் சொன்னார்கள், மேலும், தேர்தல்கள் நடத்தப்படும் வகையில் ஒரு குறுகிய காலத்திற்கு அரசாங்கத்தை நான் நடத்த முடியும் என்றும் கூறினர். அவர்கள் என்னிடம் கோரிக்கை வைத்தார்கள், நான் அதை ஏற்றுக்கொண்டேன்," என்றார்.

"போராட்டத்தில் உயிரிழந்த அந்த இளைஞர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் உதவுவதே எனது முதல் கவனமாக இருக்கும். ஆழ்ந்த துயரத்தில் உள்ள அவர்களுக்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும்," என்று கார்க்கி கூறினார்.

போராட்டத்தின் முதல் கோரிக்கை பிரதமரின் ராஜினாமா என்றும், அது நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். "மீதி கோரிக்கைகள் ஒரு அரசாங்கம் அமைந்தால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்" என்று அவர் கூறினார்.

சுஷிலா கார்க்கி யார்?

நேபாள உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் உள்ள தகவல்படி, சுஷிலா கார்க்கி ஜூன் 7, 1952 அன்று நேபாளத்தின் பிராட்நகரில் பிறந்தார்.

'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியின்படி, அவர் 1972 இல் பிராட்நகரில் இளங்கலைப் படிப்பை முடித்தார்.

1975 இல், அவர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (BHU) அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும், 1978 இல் திரிபுவன் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தார்.

1979 இல் பிராட்நகரில் அவர் தனது வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார் என்று 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி கூறுகிறது.

அவரது நீதித்துறைப் பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனை 2009 இல் ஏற்பட்டது. அப்போது அவர் உச்ச நீதிமன்றத்தில் தற்காலிக நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

2010 இல் அவர் நிரந்தர நீதிபதியானார். 2016 இல் சிறிது காலம் தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகித்தார். அதன் பிறகு, ஜூலை 11, 2016 முதல் ஜூன் 6, 2017 வரை நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார்.

சுஷிலா கார்க்கியின் கண்டிப்பான அணுகுமுறைக்கு எதிர்ப்பு இருந்தது.

பதவி நீக்க விசாரணைக்கு ஆளானவர்

சுஷிலா கார்க்கி நேபாள காங்கிரஸ் தலைவர் துர்கா சுபேதியை மணந்தார். வழக்கறிஞராக இருந்து தலைமை நீதிபதியாக மாறிய அவரது பயணத்தில் தனது கணவரின் ஒத்துழைப்பும் நேர்மையும் முக்கியப் பங்கு வகித்ததாக அவர் கூறுகிறார்.

பிராட்நகர் மற்றும் தாரனில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வழக்கறிஞராகப் பணியாற்றிய பிறகு, அவர் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக நுழைந்தார்.

காங்கிரஸ் தலைவர் ஜே.பி. குப்தா தகவல் தொடர்பு அமைச்சராக இருந்தபோது, அவர் மீதான ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டபோது சுஷிலா கார்க்கி பிரபலமானார். தான் பெரும்பாலும் ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதாக பிபிசி நேபாளத்துக்கு அளித்த பேட்டியில் கார்க்கி தெரிவித்திருந்தார்.

இருப்பினும், தலைமை நீதிபதியாக சுமார் 11 மாதங்கள் அவர் பதவி வகித்தபோது, பதவி நீக்க விசாரணைக்கு உள்ளாகி, இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ஏப்ரல் 2017 இல், அப்போதைய அரசாங்கம் அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டுவந்தது.

அவர் ஒரு சார்பாகச் செயல்பட்டார் என்றும், அரசாங்கத்தின் பணிகளில் தலையிட்டார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. விசாரணை முடியும் வரை தலைமை நீதிபதி பதவியிலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

அப்போது, நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஆதரவாக மக்கள் குரல் எழுப்பினர். மேலும், உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தது.

அழுத்தம் அதிகரித்ததால், சில வாரங்களுக்குள்ளேயே நாடாளுமன்றம் தீர்மானத்தைத் திரும்பப் பெற வேண்டியிருந்தது. இந்தச் சம்பவம், அதிகாரத்தின் அழுத்தத்திற்குப் பணியாத நீதிபதி என்ற அடையாளத்தை சுஷிலா கார்க்கிக்கு உருவாக்கியது.

இந்தியாவுடனான உறவுகள் குறித்து சுஷிலா கார்க்கியின் கருத்து

இந்தியாவுடனான அவரது தொடர்பு குறித்துக் கேட்கப்பட்டபோது, "ஆம், நான் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படித்தேன். அதைப்பற்றி எனக்கு நிறைய நினைவுகள் உள்ளன. என் ஆசிரியர்கள், நண்பர்களை இப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன். கங்கை நதி, அதன் கரையில் உள்ள விடுதி, மற்றும் கோடை இரவுகளில் மாடியில் அமர்ந்து பாயும் கங்கையைப் பார்த்தது இப்போதும் நினைவில் உள்ளது," என்று அவர் கூறினார்

அவர் பிராட்நகரைச் சேர்ந்தவர் என்றும், அது இந்திய எல்லைக்கு மிக அருகில் இருப்பதாகவும் கூறினார். "என் வீட்டிலிருந்து எல்லை சுமார் 25 மைல் தொலைவில்தான் உள்ளது. நான் அடிக்கடி எல்லையோர சந்தைக்குச் செல்வேன். என்னால் இந்தி பேச முடியும், அவ்வளவு நன்றாக இல்லாவிட்டாலும் பேச முடியும்."

"இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான உறவுகள் மிகப் பழமையானவை. அரசாங்கங்கள் வேறுபட்டவையாக இருக்கலாம், ஆனால் மக்களின் உறவு மிகவும் ஆழமானது. எனது பல உறவினர்களும் தெரிந்தவர்களும் இந்தியாவில் உள்ளனர். அவர்களுக்கு ஏதாவது நடந்தால், நாங்களும் கண்ணீர் விடுவோம். எங்களுக்கு இடையே ஆழ்ந்த அன்பு மற்றும் பாசம் உள்ளது. இந்தியா எப்போதும் நேபாளத்திற்கு உதவியுள்ளது. நாங்கள் மிக நெருக்கமானவர்கள். சமையலறையில் பாத்திரங்கள் ஒன்றாக இருக்கும்போது சில சமயங்களில் சத்தம் வருவதுபோல, சிறிய கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் உறவு வலிமையானது" என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு