கார், பைக்கிற்கு மூன்றாம் தரப்பு காப்பீடு ஏன் அவசியம்? அதன் கீழ் எதற்கெல்லாம் இழப்பீடு கிடைக்கும்?

கார், பைக்கிற்கு மூன்றாம் தரப்பு காப்பீடு

பட மூலாதாரம், Getty Images

உங்களுக்கு வாகனம் ஓட்டுவது பிடிக்கும் அல்லது வாகனம் ஓட்டுவது உங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தால், இன்றைய சாலைகளில் என்னவெல்லாம் நடக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியும்.

யார் - எப்போது - எங்கிருந்து குறுக்கே வருவார்கள் என்றோ எப்போது என்ன நடக்கும் என்றோ சொல்ல முடியாது. இதன் விளைவாக வாகனம் மோதி விபத்து ஏற்பட்டு, வாகனத்திற்குச் சேதம் ஏற்பட்டால் என்ன செய்வது?

அத்தகைய நேரத்தில், உங்களிடம் மூன்றாம் தரப்பு காப்பீடு (Third Party Insurance) இருக்க வேண்டும்.

ஆனால் இந்தக் காப்பீடு என்பது என்ன, அது உங்களுக்கு ஏன் அவசியம் என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

மூன்றாம் தரப்பு காப்பீடு ஏன் அவசியம்?

மோட்டார் வாகன சட்டம் 1988இன் படி, இந்தியாவில் உள்ள அனைத்து கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கும் மூன்றாம் தரப்பு காப்பீடு இருப்பது அவசியம். ஆனால் அப்படி இருந்தும், பல வாகன உரிமையாளர்கள் இந்தக் காப்பீட்டை எடுப்பதில்லை.

இந்தியச் சாலைகளில் உள்ள மொத்த வாகனங்களில் சுமார் 50 சதவீதம் வாகனங்களுக்கு மூன்றாம் தரப்பு காப்பீடு இல்லை என்று இந்திய அரசு 2023ஆம் ஆண்டில் கூறியது.

இத்தகைய காப்பீட்டை எடுக்காமல் இருப்பது விதிகளை மீறுவது மட்டுமல்ல, இது வாகன உரிமையாளர் மற்றும் பாதிக்கப்பட்டவர் இருவருக்கும் சிக்கல்களை உருவாக்குகிறது.

கார், பைக்கிற்கு மூன்றாம் தரப்பு காப்பீடு

பட மூலாதாரம், Getty Images

மூன்றாம் தரப்பு காப்பீடு என்பது என்ன?

  • இதில் முதல் தரப்பு பாலிசிதாரர்.
  • இரண்டாம் தரப்பு காப்பீட்டு நிறுவனம்.
  • மூன்றாம் தரப்பு உரிமை கோரும் நபர். அதாவது முதல் தரப்பால் சேதம் ஏற்பட்டதாகக் கூறி நிவாரணம் கேட்கும் நபர். அதாவது, உங்கள் கார் அல்லது இருசக்கர வாகனத்தால் சேதத்தை ஏற்படுத்திய நபர்.

இந்த மூன்றாம் தரப்பு காப்பீடு, இந்த மூன்றாவது நபரின் சேதத்தை ஈடு செய்வதற்காகவே எடுக்கப்படுகிறது.

அதாவது, உங்கள் வாகனத்தால் மற்றொரு நபருக்கு காயம் ஏற்பட்டால், விபத்தில் மரணம் ஏற்பட்டால், அதனுடன் எதிரே உள்ள கார் அல்லது மோட்டார் சைக்கிளுக்கு ஏற்பட்ட சேதம், சாலையோர கட்டுமானங்களுக்கு ஏற்பட்ட சேதம் ஆகியவற்றிற்கும் இந்த காப்பீடு மூலம் இழப்பீடு வழங்கப்படுகிறது.

காப்பீட்டுக்கான உரிமை கோரலை யார் அளிப்பது?

மூன்றாம் தரப்பு காப்பீட்டில், காப்பீடு கேட்டு மூன்றாம் தரப்பு உரிமை கோரலை தாக்கல் செய்கிறார்.

முதல் தரப்பால் அதாவது பாலிசிதாரரால் ஏற்பட்ட சேதத்தை இரண்டாம் தரப்பு அதாவது காப்பீட்டு நிறுவனம் ஈடுசெய்ய வேண்டும் என்று அவர் கேட்பார்.

கார், பைக்கிற்கு மூன்றாம் தரப்பு காப்பீடு

பட மூலாதாரம், Getty Images

இதை நாம் ஓர் உதாரணத்துடன் புரிந்து கொள்ளலாம்.

'A' என்ற நபர் - 'X' என்ற நிறுவனத்திடம் இருந்து மூன்றாம் தரப்பு காப்பீட்டை எடுத்தார். இந்த நபரின் கார், 'B' என்பவரின் கார் மீது மோதியது. இதனால் 'B' நபரின் காருக்குச் சேதம் ஏற்பட்டது. இப்போது, உண்மையில் 'A' வின் தவறு இருந்தால், அந்த நபர் சேதத்தை ஈடுசெய்ய வேண்டும். ஆனால் 'A' மூன்றாம் தரப்பு காப்பீடு எடுத்திருப்பதால், 'B' என்ற நபர் 'X' என்ற நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு பெறமுடியும்.

ஆனால் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும். உங்கள் சொந்த வாகனத்திற்கு ஏற்பட்ட சேதம் அல்லது உங்களுக்கு ஏற்பட்ட காயம் இந்த மூன்றாம் தரப்பு காப்பீட்டில் உள்ளடங்காது. இதற்கு Comprehensive Insurance எனப்படும் 'விரிவான காப்பீடு' உள்ளது.

மொத்தத்தில், இந்த காப்பீடு வாகன ஓட்டிகளுக்கு முக்கியமானது.

மூன்றாம் தரப்பு காப்பீடு ஏன் எடுக்கப்படுவதில்லை?

மக்கள் ஏன் மூன்றாம் தரப்பு காப்பீட்டை எடுப்பதில்லை? அதற்கு பல காரணங்கள் உள்ளன.

பெரும்பாலான மக்கள் இந்தக் காப்பீடு செலவு மிக்கது என்று கூறுகின்றனர். சிலர் தங்களது வாகன ஓட்டும் திறனில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர். தங்களால் இதுபோன்ற தவறு - இதுபோன்ற விபத்து - ஒருபோதும் நடக்காது என்று அவர்கள் நினைக்கிறார்கள். சிலர் மூன்றாம் தரப்பு காப்பீட்டுக்காக செலவிட வேண்டிய தொகையில் ஒரு ஓட்டுநரையே அமர்த்திக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள்.

இதில் மற்றொரு வகையான காப்பீடு உள்ளது. மக்கள் ஆரம்பத்தில் மூன்றாம் தரப்பு காப்பீட்டை எடுக்கிறார்கள். ஆனால் அந்தக் காப்பீட்டு காலத்தில் தேவை ஏற்படவில்லை, பணம் வீணானது என்று நினைத்து அவர்கள் காப்பீட்டை புதுப்பிப்பதில்லை அல்லது புதிய பாலிசி எடுக்கப்படுவதில்லை.

மூன்றாம் தரப்பு காப்பீடு எடுப்பது கட்டாயம் என்று பலருக்குத் தெரிவதில்லை.

மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 146 இல் இது குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது காப்பீடு இல்லாமல் - நீங்கள் வாகனம் ஓட்டும்போது பிடிபட்டால், அதற்காக 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

விபத்துக்கு நீங்கள் காரணமாக இருந்தால் - அதன் விளைவு இன்னும் தீவிரமாக இருக்கும்.

மூன்றாம் தரப்பு காப்பீட்டின் கீழ் எதற்கெல்லாம் இழப்பீடு கிடைக்கும்?

இந்த மூன்றாம் தரப்பு காப்பீட்டின் கீழ் எவையெல்லாம் அடங்கும்?

  • உடல் காயம்
  • மருத்துவமனை செலவு
  • வருமான இழப்பு
  • சொத்து இழப்பு

இதற்கான இழப்பீடு இந்தக் காப்பீட்டின் கீழ் வழங்கப்படுகிறது. ஆனால் இதற்கு என்னென்ன விஷயங்கள் தேவை?

  • விபத்து ஏற்பட்டால், காப்பீட்டு நிறுவனத்திற்கு விரைவில் தெரிவிப்பது பாலிசிதாரரின் பொறுப்பாகும். இந்த விபத்தைப் பற்றிய அனைத்து அத்தியாவசியத் தகவல்களும் - சரியாக என்ன நடந்தது என்ற விளக்கம், அங்கு யார் இருந்தார்கள், நேரம், தேதி, இடம் போன்ற சரியான பதிவுகள் இருப்பது முக்கியம்.
  • ஓட்டுநர், பயணிகள் மற்றும் சொத்து அல்லது வாகனத்திற்கு எவ்வளவு சேதம் ஏற்பட்டது என்ற விவரம்
  • அப்போது அங்கு இருந்தவர்களைப் பற்றிய தகவல்
  • விபத்து நடந்தபோது நிலவிய சூழ்நிலை அல்லது சூழல்
  • விபத்து பற்றிய புகைப்படங்கள் - வீடியோக்கள்
  • காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தால் முதல் தகவல் அறிக்கை

இந்த எல்லா விஷயங்களும் காப்பீட்டு தொகை கேட்டு விண்ணப்பத்தை தாக்கல் செய்யும் போது தேவைப்படுகின்றன.

என்சிஆர்பி புள்ளிவிவரங்களின்படி, 2023 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 4,80,583 சாலை விபத்துகள் நடந்தன.

இதில் 1,72,890 பேர் உயிரிழந்தனர். 4,62,825 பேர் காயமடைந்தனர்.

மூன்றாம் தரப்பு காப்பீட்டின் சிறப்பு என்னவென்றால், இதில் இழப்பீட்டுத் தொகைக்கு உச்சவரம்பு இல்லை. அதாவது, உங்களுக்கு பல லட்சம் அல்லது கோடி ரூபாய் செலுத்த வேண்டியிருந்தால், காப்பீட்டு நிறுவனம் இந்தத் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும். ஆனால் பொருட்சேதத்தைப் பொருத்தவரை, அதன் உச்ச வரம்பு 7.5 லட்சம் ரூபாய் ஆகும்.

கார், பைக்கிற்கு மூன்றாம் தரப்பு காப்பீடு
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இழப்பீடு விண்ணப்பம் எப்போது நிராகரிக்கப்படலாம்?

ஆனால் ஒவ்வொரு முறையும் மூன்றாம் தரப்பு காப்பீட்டுத் தொகை கிடைக்குமா என்றால், இல்லை என்பதே இந்தக் கேள்விக்குப் பதில் .

அப்படியானால், உங்கள் மூன்றாம் தரப்பு காப்பீட்டு கோரிக்கை எப்போது நிராகரிக்கப்படலாம்?

  • நீங்கள் போதையில், மதுவின் தாக்கத்தில் வாகனம் ஓட்டினீர்கள் என்று நிரூபிக்கப்பட்டால்.
  • உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் காலம் முடிவடைந்திருந்தால்.
  • அத்தகைய சூழ்நிலையில், காப்பீட்டு நிறுவனங்கள் உங்களது இழப்பை ஈடு செய்ய மறுக்கலாம். இதில் இறுதி முடிவை நீதிமன்றம் எடுக்கும்.
  • ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உங்களிடம் மூன்றாம் தரப்பு காப்பீடு இருப்பதால், உங்கள் சொந்தப் பணத்திலிருந்து லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டியதில்லை. இது ஒரு நிதி பாதுகாப்பு ஆகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு