You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரிட்டன் தேர்தல் முடிவுகள்: ஆட்சியைப் பிடித்தது தொழிலாளர் கட்சி
(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது.
பிரிட்டன் தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு தோல்வியை கன்சர்வேடிவ் கட்சி சந்தித்திருக்கிறது. தற்போது பிரதமராக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சூனக் தனது பதவியை இழக்கிறார். தோல்வியை ஒப்புக்கொண்டு அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக ரிஷி சூனக் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தொழிலாளர் கட்சி தலைவர் கியர் ஸ்டாமர் பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸ்-ஐ பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்தித்தார். இதையடுத்து, புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு பிரிட்டன் அரசர் அதிகாரபூர்வமாக கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலகத்தில் ஸ்டாமர் உரை நிகழ்த்தினார். முதல் பிரிட்டிஷ் ஆசிய பிரதமராக இருந்த ரிஷி சூனக்கின் பணிகளையும் அவர் பாராட்டினார்.
மகிழ்ச்சி மிகுந்த தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய கியர் ஸ்டாமர், "நாம் சாதித்துவிட்டோம்" என்று குறிப்பிட்டதோடு, "மாற்றம் இப்போது தொடங்குகிறது" என்றும் கூறினார் ஸ்டாமர்.
தன்னுடைய ஆதரவாளர்களிடையே பிரதமரின் அதிகாரபூர்வ அலுவலகத்தில் பேசிய ஸ்டாமர், “மாற்றத்திற்கான பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். எனினும், “ஒரு நாட்டில் மாற்றம் என்பது உடனடியாக நிகழாது, அதற்கு நேரம் எடுக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.
பள்ளிகள் மற்றும் மலிவு விலை வீடுகளின் தேவைகள் குறித்துப் பேசிய அவர், “நாட்டின் உட்கட்டமைப்பை ஒவ்வொன்றாக மறு உருவாக்கம் செய்வதாக” உறுதியளித்தார்.
தேசத்தை மீட்டமைப்பதற்கான தேவை குறித்தும் ஸ்டாமர் பேசினார்.
“பாதுகாப்பற்ற உலகத்தின் சவால்களையும்” ஸ்டாமர் சுட்டிக்காட்டினார்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தேர்தல் முடிவுகள்
பெரும்பாலான முடிவுகள் வந்துவிட்டன. தொழிலாளர் கட்சி மொத்தமுள்ள 650 இடங்களில் 412 இடங்களை வென்றுவிட்டது.
கன்சர்வேடிவ் கட்சி இதுவரை 121 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.
கடந்த 2019 தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி 364 இடங்களைக் கைப்பற்றியதால், போரிஸ் ஜான்சன் பிரதமரானார். ஆனால் இம்முறை நிலைமை முற்றிலும் எதிர்மாறாக உள்ளது.
பிரிட்டனில் ஆட்சி அமைக்க 326 இடங்களைப் பெற வேண்டும்.
இதுவரை வெளியான முடிவுகள்:
தொழிலாளர் கட்சி - 412
கன்சர்வேடிவ் - 121
லிபரல் டெமாக்ரடிக் - 71
கடந்த 2019 தேர்தலில், எதிர்க்கட்சியான லேபர் கட்சி 203 இடங்களை மட்டுமே பெற்றது. பாரம்பரியமாக வெல்லக்கூடிய பல இடங்களிலும் தோற்றுப் போனது.
கருத்துக் கணிப்புகளின்படியே எல்லாம் நடந்தால், 1997-இல் டோனி பிளேர் பெற்ற வெற்றிக்கு சற்றே நிகரானதாக தற்போதைய தொழிலாளர் கட்சியின் வெற்றி இருக்கும்.
56 இடங்களைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படும் லிபரல் டெமாக்ராட் கட்சி இந்தத் தேர்தலில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கக்கூடும்.
கருத்துக் கணிப்புகளின்படி, ஸ்காட்டிஷ் தேசியக் கட்சியின் இடங்களின் எண்ணிக்கை 10 ஆகக் குறையக்கூடும்.
முஸ்லிம்களின் ஆதரவு இல்லையா?
பெரும்பாலான தொகுதிகளில் வென்றாலும், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதியில் தொழிலாளர் கட்சிக்கு அதிக ஆதரவு இல்லை.
அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட இடங்களில் தொழிலாளர் கட்சிக்கு ஆதரவு குறைவாக இருப்பது இதுவரையிலான முடிவுகளில் தெரியவந்திருக்கிறது.
தொழிலாளர் கட்சியின் வாக்குகள் 10% க்கும் அதிகமான மக்கள் முஸ்லிம்களாக அடையாளம் காணும் இடங்களில் சராசரியாக 10 புள்ளிகள் குறைந்துள்ளன என்று பிபிசி தலைமை அரசியல் செய்தியாளர் ஹென்றி ஷெப்மன் குறிப்பிட்டுள்ளார்.
லெஸ்டர் கிழக்கு தொகுதியை இழந்ததற்கு இதுவும் ஒரு காரணம். நிழல் கேபினட்டில் அங்கம் வகிக்கும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஜொனாதன் அஷ்வொர்த் லெஸ்டர் தெற்குத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளரிடம் இழந்திருக்கிறார்.
சீர்திருத்தக் கட்சிக்கு 4 எம்.பி.க்கள்
பிரிட்டன் சீர்திருத்தக் கட்சியின் தலைவர் நைஜல் ஃபரேஜ் முதல் முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவரது கட்சிக்கு மொத்தம் 4 எம்.பி.க்கள் கிடைத்துள்ளனர்.
கிளாக்டன் தொகுதியில் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளரைவிட 8,000 வாக்குகள் அதிகம் பெற்று வென்றுள்ளார் ஃபரேஜ்.
முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு பேசிய அவர், "உங்கள் அனைவரையும் திகைக்க வைக்கும் ஒன்றின் முதல் படி" என்று கூறினார்.
2018 இல் பிரெக்சிட் கட்சியாக சீர்திருத்தக் கட்சி உருவாக்கப்பட்டது.
கியர் ஸ்டாமர் யார்?
ஏப்ரல் 2020 இல், தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக கியர் ஸ்டாமர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்டாமருக்கு 61 வயது. வழக்கறிஞரான கியர் ஸ்டாமர், 2015ஆம் ஆண்டு முதல் முறையாக எம்.பி.யானார்.
தொழிலாளர் கட்சியின் தலைவருக்கான தேர்தலின்போது, முதல் சுற்றிலேயே கியர் ஸ்டாமர் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார்.
கட்சியின் தலைவரான பிறகு, "இந்த மாபெரும் கட்சியை புதிய நம்பிக்கையுடன் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி அழைத்துச் செல்வதே தனது நோக்கம்" என்று கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)