இந்தியாவில் எதிர்பார்ப்புடன் தொடங்கி ஏமாற்றம் தந்த 5 விமான நிறுவனங்கள்

இந்தியாவில் இதற்குமுன் நிறுத்தப்பட்ட ஐந்து விமான நிறுவனங்கள்

பட மூலாதாரம், Getty Images

இந்திய வான்பரப்பு ஒரு காலத்தில் துடிப்பாக இருந்தது. விமான பயணம் மேலும் எளிதாகிவிடும் என்று மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

விமான நிறுவனங்களில் சிலர் ஆடம்பரத்தைப் பற்றி பெருமிதம் கொண்டனர். மற்றவர்கள் மலிவான டிக்கெட்டுகள் என்ற கனவை விற்றனர். ஆனால், இந்தக் கதை விரைவில் மாறத் தொடங்கியது.

அதிகரித்த கடன், அதிகரித்த எரிபொருள் விலை மற்றும் தவறான முடிவுகள் முக்கிய விமான நிறுவனங்களைத் தரையிறக்கின

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸின் ஆடம்பரமோ, 'கோஃபர்ஸ்ட்' நிறுவனத்தின் மலிவான விமானங்களோ, ஒவ்வொருவரின் கதையும் வித்தியாசமானது. ஆனால் வானத்தை வெல்வது எளிதானதல்ல என்ற பாடத்தைத்தான் அனைத்துமே உணர்த்துகிறது.

1. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ்

இந்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின்படி, கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸுக்கு 2003-ம் ஆண்டு விமானம் இயக்க அனுமதி வழங்கப்பட்டது.

அதிகரித்த எரிபொருள் விலைகள், அதிகரித்த செலவுகள் மற்றும் டிக்கெட் வருவாய் குறைந்தது அந்நிறுவனத்தை பெரும் நஷ்டத்திற்கு இட்டுச் சென்றன. அதனால் அந்நிறுவனத்துக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் சேர்ந்தது.

ஏர் டெக்கான் நிறுவனத்தை கையகப்படுத்தி, சர்வதேச வழித்தடங்களில் வேகமாக விரிவடைந்த போதிலும், அவர்களால் லாபம் ஈட்ட முடியவில்லை.

இந்தியாவில் இதற்குமுன் நிறுத்தப்பட்ட ஐந்து விமான நிறுவனங்கள்

பட மூலாதாரம், Getty Images

ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத, வங்கிகளுக்கு பணத்தை சரியான நேரத்தில் செலுத்த முடியாத அளவுக்கு அந்நிறுவனத்தின் நிலைமை மோசமாக, விமானங்கள் ரத்தாக தொடங்கின.

இறுதியாக, பாதுகாப்பு மற்றும் நிதி பிரச்னைகளைக் காரணம் காட்டி விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) அவர்களின் விமான அனுமதியை 20 அக்டோபர் 2012 அன்று ரத்து செய்தது.

மக்களவையில் அளிக்கப்பட்ட பதிலின்படி, அக்டோபர் 2, 2012 அன்று அந்த விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் டிஜிசிஏ தலைவர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதற்குப் பிறகு, கிங்ஃபிஷர் விமான சேவையை மீண்டும் தொடங்க பல முயற்சிகளை மேற்கொண்டது, ஆனால் அதன் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அதனால் அந்நிறுவனத்தால் மீண்டும் திரும்ப முடியவில்லை.

கிங்ஃபிஷரின் அந்த நிலைக்கு உலகளாவிய பொருளாதார மந்தநிலையும் காரணமாக கருதப்படுகிறது.

இந்தியாவில் இதற்குமுன் நிறுத்தப்பட்ட ஐந்து விமான நிறுவனங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல்

2. ஜெட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ் மே 5, 1993-ல் விமான-டாக்ஸி சேவையாக அதன் செயல்பாடுகளைத் தொடங்கியது. அந்த நேரத்தில், அந்நிறுவனம் நான்கு போயிங் 737 விமானங்களை குத்தகைக்கு எடுத்து விமானங்களை இயக்கத் தொடங்கியது.

ஜனவரி 1995-ல் அதற்கு வழக்கமான விமான சேவை அந்தஸ்து (scheduled airline status) வழங்கப்பட்டது. அதாவது, அவர்களால் வழக்கமான பயணிகள் விமானங்களை இயக்க முடியும்.

ஜெட் ஏர்வேஸ் 2000களின் முற்பகுதியில் வேகமாக வளர்ந்தது. மேலும், உள்நாட்டு வழித்தடங்களுடன் சர்வதேச விமானங்களையும் தொடங்கியது.

2004-ம் ஆண்டில், அது தனது முதல் சர்வதேச விமானத்தை சென்னையில் இருந்து கொழும்புக்கு அறிமுகப்படுத்தியது. 2005-ல் அந்நிறுவனம் இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.

விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின்படி, அந்நிறுவனம் மார்ச் 2018-ல் குறிப்பிடத்தக்க இழப்பைச் சந்தித்தது. அது தொடர்ந்து நான்கு காலாண்டுகளாக நஷ்டத்தில் இருந்தது. அதனால் அதன் பண இருப்பு குறைந்து, விமான சேவையை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

அரசாங்கத்தின் கூற்றுப்படி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான வங்கிகள் அந்த நிறுவனத்தைக் காப்பாற்ற பல்வேறு வழிகளை ஆராய்ந்தன. ரிசர்வ் வங்கியின் 'புராஜெக்ட் ஷக்தி'யின் கீழ் விமான நிறுவனத்திற்கான ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது.

ஆனால், ஜெட் ஏர்வேஸின் கூட்டாளியான எதிஹாட் மற்றும் இந்திய வங்கிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. மார்ச் 2019-ல், நிதி பற்றாக்குறையால் பல விமானங்கள் தரையிறக்கப்படும் அளவுக்கு நிலைமை மிகவும் மோசமானது.

அரசாங்கத்தின் கூற்றுப்படி, ஏப்ரல் 10, 2019 அன்று, அந்நிறுவனம் சர்வதேச விமானங்களை நிறுத்தியது. ஏப்ரல் 17, 2019 அன்று, ஜெட் ஏர்வேஸ் அதன் அனைத்து விமானங்களையும் நிறுத்தியது.

அதன்பிறகு, புதிய உரிமையாளர் அல்லது புதிய நிர்வாகத்திற்கான ஏலத்துக்கு வங்கிகள் அழைத்தன. ஆனால் பலன் கிடைக்கவில்லை.

ஒவ்வொரு விமான நிறுவனமும் அதன் சொந்த வணிகத் திட்டத்தை உருவாக்குகிறது என்பதையும் அரசு தெளிவுபடுத்தியது. நிதி திரட்டுதல் மற்றும் செயல்பாடுகளை பராமரிப்பது அந்தந்த நிறுவனத்தின் சொந்தப் பொறுப்பு என்றும், எந்தவொரு தனியார் விமான நிறுவனத்திற்கும் நிதி திரட்டுவதில் அரசு எந்தப் பங்கும் வகிக்காது என்றும் அரசு கூறியது.

இந்தியாவில் இதற்குமுன் நிறுத்தப்பட்ட ஐந்து விமான நிறுவனங்கள்

பட மூலாதாரம், Reuters

3. கோ ஃபர்ஸ்ட்

கோஏர் நவம்பர் 2005 முதல் இயங்கி வந்த குறைந்த கட்டண விமான நிறுவனம். இது மே 2021-ல் கோ ஃபர்ஸ்ட் என பெயர் மாற்றப்பட்டது.

அந்நிறுவனம் திவால் சட்டத்தின் கீழ் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (என்சிஎல்டி) மே 2023-ல் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. அந்த நிறுவனம் நிதிச் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும், திவால் செயல்முறையில் நுழைய விரும்புவதாகவும் கூறியது.

இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிறுவனம் என்று சொல்லிக்கொண்ட கோ ஃபர்ஸ்ட், 2010 முதல் ஜனவரி 2021 வரை 83.8 மில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்றதாகவும் தெரிவித்தது. அந்த நேரத்தில், அது வாரத்திற்கு 2,290 விமானங்களை இயக்கியது.

அந்நிறுவனம் 2009 முதல் 2018 வரை தொடர்ந்து லாபம் ஈட்டியதாகவும், 2019-20 இல் கூட சேமிப்பில் பணம் இருப்பதாகவும் கூறியது.

சுமார் 7,000 ஊழியர்கள் நேரடியாகவும், சுமார் 10,000 பேர் மறைமுகமாகவும் தங்களை நம்பியிருப்பதாக அந்த விமான நிறுவனம் தெரிவித்தது.

லே மற்றும் போர்ட் பிளேயர் போன்ற கடினமான விமான நிலையங்களுக்கும் சேவை செய்ததாகவும், ஜம்மு காஷ்மீரில் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமாக விளங்கியதாகவும் அந்நிறுவனம் கூறியது.

சரியாக பணம் செலுத்த முடியாத பிரச்னை 2022-ல் தொடங்கியதாக அந்நிறுவனம் கூறியது. விமான குத்தகை நிறுவனங்கள் மற்றும் பிற சப்ளையர்களுக்கு பணம் செலுத்த முடியவில்லை என கூறியது அந்நிறுவனம். மேலும் வணிக கூட்டாளர்கள் மற்றும் குத்தகைதாரர்களிடமிருந்து பலமுறை நோட்டீஸ்களைப் பெற்றது.

எஞ்சின் பிரச்னைகள் மிகவும் கடுமையாகி, அவர்களது பல விமானங்கள் பறக்க முடியாமல் போனது. மொத்தம் 54 விமானங்கள் இருப்பதாகவும், அதில் 28 விமானங்கள் தரையிறக்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் கூறியது.

தங்கள் ஒப்பந்தத்தின்படி எஞ்சின் உற்பத்தியாளர் பிராட் & விட்னி எஞ்சின்களைப் பழுது பார்க்கவில்லை அல்லது புதிய எஞ்சின்களை வழங்கவில்லை என்று அந்த விமான நிறுவனம் குற்றம் சாட்டியது.

வெறும் 30 நாட்களில் 4,118 விமானங்களை ரத்து செய்ததாகவும், இதனால் 77,500 பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

பார்ச்சூன் இந்தியாவின்படி, ஆகஸ்ட் 2024-ல் கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்துக்காக தயாரிக்கப்பட்ட மீட்புத் திட்டம் கடன் வழங்கும் வங்கிகளின் குழுவால் நிராகரிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, ஜனவரி 20, 2025 அன்று, கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தை லிக்விடேஷன் செய்ய என்சிஎல்டி உத்தரவிட்டது. அதாவது, கடனை அடைப்பதற்காக அந்நிறுவனம் அதன் சொத்துக்களை விற்கும்.

அதன்மூலம் 17 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸின் கதை முடிவுக்கு வந்தது.

4. ஏர் டெக்கான்

இந்தியாவில் இதற்குமுன் நிறுத்தப்பட்ட ஐந்து விமான நிறுவனங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்

டெக்கான் ஏவியேஷன் லிமிடெட் என்ற நிறுவனம், ஏர் டெக்கானை இயக்கியது. அந்நிறுவனம் 1997 இல் ஒரு சார்ட்டர்ட் விமான சேவை நிறுவனமாக செயல்படத் தொடங்கியது.

ஆரம்பத்தில், அந்நிறுவனம் ஹெலிகாப்டர்களை மட்டுமே குத்தகைக்கு விட்டது. இது ஆகஸ்ட் 2003-ல் செயல்படத் தொடங்கியது. ஆரம்பத்தில் ஒரு சிறிய ஏடிஆர் விமானத்தை பெங்களூரு-ஹூப்ளி வழித்தடத்தில் இயக்கியது.

அந்நிறுவனத்தின்படி, மார்ச் 2006 வரை, 41 லட்சம் பயணிகளை அந்நிறுவனம் ஏற்றிச் சென்றது. மேலும், 29 விமானங்களைக் கொண்டிருந்தது. தினசரி 226 விமானங்களை இயக்கிய அந்நிறுவனம் 52 விமான நிலையங்கள் வரை விரிவடைந்தது.

ஆசியா பசிபிக் ஏவியேஷன் மையத்தின்படி, பிப்ரவரி 2006-ல் இது சுமார் 14 சதவிகித சந்தைப் பங்கைக் கொண்டிருந்தது. மேலும், 2,410 பணியாளர்களுடன் இந்தியாவின் இரண்டாவது பெரிய தனியார் விமான நிறுவனமாக மாறியது.

சிறிய, மக்கள் தொகை அதிகம் கொண்ட நகரங்களை பெரிய நகரங்களுடன் இணைப்பதே அந்த விமான நிறுவனத்தின் நோக்கமாக இருந்தது. விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) கருத்துப்படி, அந்த நேரத்தில் நாட்டில் சில விமான நிலையங்களால் மட்டுமே பெரிய ஜெட் விமானங்களைக் கையாள முடியும்.

இத்தகைய சூழ்நிலையில், டெக்கான் ஏர்லைன்ஸ் ஏடிஆர் போன்ற சிறிய டர்போபிராப் விமானங்களை விமானப் பயணத்திற்குப் பயன்படுத்தியது.

விமான போக்குவரத்து மையத்தின்படி, 2007-ல், ஏர் டெக்கான் நிறுவனத்தில் 26 சதவிகித பங்குகளை கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் வாங்கி, அதன் பிராண்டை சிம்ப்ளிஃபை டெக்கான் என மாற்றியது.

2008-ம் ஆண்டில், மீண்டும் அதன் பெயர் மாற்றப்பட்டது. சிம்ப்ளிஃபை டெக்கான் கிங்ஃபிஷர் ரெட் உடன் இணைக்கப்பட்டாலும் அந்த விமான நிறுவனத்தின் பிரச்னைகள் குறையவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அரசாங்கத்தின் உடான் பிராந்திய இணைப்புத் திட்டத்தின்கீழ், ஏர் டெக்கான் டிசம்பர் 22, 2017 அன்று மீண்டும் செயல்படத் தொடங்கியது. இது சிறிய நகரங்களை பெரிய நகரங்களுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டது.

ஏப்ரல் 2020-ல், கொரோனா காரணமாக, அந்நிறுவனம் காலவரையின்றி மூடப்படும் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அருண் குமார் சிங் அறிவித்தார்.

5. பாரமவுண்ட் ஏர்வேஸ்

இந்தியாவில் இதற்குமுன் நிறுத்தப்பட்ட ஐந்து விமான நிறுவனங்கள்

பட மூலாதாரம், Paramount Airways

மலிவு விலையில் பயணிகளுக்கு வணிக வகுப்பு சேவைகளை வழங்கும் நோக்கத்துடன், நவீன "புதிய தலைமுறை எம்ப்ரேயர் 170/190 சீரிஸ்" விமானத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்திய முதல் விமான நிறுவனம் இது.

விமானப் போக்குவரத்து மையத்தின்படி, அந்நிறுவனம் அக்டோபர் 2005 முதல் விமான சேவைகளைத் தொடங்கியது.

இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் அதுவரை முன்வைக்கப்படாத ஒரு தனித்துவமான யோசனையை அடிப்படையாகக் கொண்டதாக அந்த நிறுவனம் கூறியது.

நிறுவனம் தனது ஆடம்பர விமானங்களை குத்தகைக்கு எடுத்திருந்தது. ஆனால் குத்தகை கட்டணங்களில் தவறுதல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள விவாதங்கள் காரணமாக விமான நிறுவனம் மற்றும் குத்தகை நிறுவனங்களுக்கு இடையே ஒரு சட்ட வழக்கு உருவானது.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின்படி, அந்நிறுவனம் பல வங்கிகள் இணைந்த குழுவுக்கு ரூ.400 கோடிக்கு மேல் கடன் வைத்திருந்தது.

சட்டச் சிக்கல்களால் குத்தகை நிறுவனங்கள் அதன் விமானங்களைக் கைப்பற்றின. அந்த நிறுவனம் 2010-ல் அனைத்து விமானங்களையும் நிறுத்தியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு