காணொளி: இரானை வழிநடத்த போகும் மொஜ்தபா காமனெயி யார்?
இரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அந்நாட்டின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்ட நிலையில், இரானை அடுத்து வழிநடத்த போகும் அடுத்த அதி உயர் தலைவராக மொஜ்தபா காமனெயி தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். யார் இந்த மொஜ்தபா காமனெயி, அதிகம் அறியப்படாதவரான அவரின் பின்னணி என்ன? இந்த காணொளியில் பார்க்கலாம்.
மொஜ்தபா காமனெயி யார்?
1969 ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி இரானின் வடகிழக்கு நகரமான மஷாத்தில் பிறந்த மொஜ்தபா காமனெயி, அயதுல்லா அலி காமனெயியின் இரண்டாவது மகனாவார். டெஹ்ரானில் உள்ள அலவி பள்ளியில் இடைநிலைக் கல்வியைப் பெற்றார் அவர் , தனது 17வது வயதில் இரான்–இராக் போரின் போது குறுகிய காலத்திற்கு அவர் ராணுவத்தில் பணியாற்றியதாக இரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
1999-ஆம் ஆண்டு ஷியா இறையியலின் முக்கிய மையமாகக் கருதப்படும் கோம் நகரத்தில் அவர் மதப் படிப்பைத் தொடங்கியதாகவும் ,2000களின் பிற்பகுதியில் அமெரிக்க ராஜ்ஜிய நடவடிக்கைகள் பற்றி விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசியங்களில் மொஜ்தபா காமனெயியை "திரைக்கு பின்னால் இருக்கும் அதிகாரம்" என்று விவரித்ததாகவும் , அவர் ஆட்சிக்குள் "திறமையான மற்றும் வலிமையான தலைவராக" பரவலாகக் கருதப்பட்டதாக ஏ.பி. (AP) செய்தி முகமை குறிப்பிடுகிறது.
56 வயதான மொஜ்தபா காமனெயி தனது தந்தையைப் போல் பெரிதாக அறியப்பட்டவர் அல்ல. அவர் இதுவரை எந்த அரசுப் பதவியையும் வகித்ததில்லை.
பொது உரைகள் நிகழ்த்தியதில்லை; ஊடகங்களுக்கு நேர்காணல்கள் அளித்ததுமில்லை.
அவரைப் பற்றிய புகைப்படங்களும் வீடியோக்களும் மிகவும் குறைந்த அளவில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.
சமீபத்திய நாட்களில், சில ஊடக நிறுவனங்களும் இரானில் உள்ள அதிகார மையங்களுக்கு நெருக்கமான அதிகாரிகளும் மொஜ்தபா காமனெயியை "ஆயதுல்லா" என்று குறிப்பிடத் தொடங்கியுள்ளனர். " ஆயுதுல்லா" என்பது மூத்த மதகுருமார் வழங்கப்படும் பட்டமாக கருதப்படும் நிலையில் , இந்த மாற்றம் அவரது நிலையை உயர்த்தி அவரை நம்பகமான தலைவராகக் காட்டும் முயற்சியாக இருக்கலாம் என சில பார்வையாளர்கள் கருதுகின்றன.
ஆயதுல்லா பதவி என்பது என்ன?
1979 ஆம் ஆண்டு இரானில் முடியாட்சி தூக்கியெறியப்பட்ட பிறகு இஸ்லாமிய குடியரசு நிறுவப்பட்டது. அந்த அமைப்பின் அடிப்படை கொள்கை என்னவென்றால் — அதி உயர் தலைவர் என்பது வாரிசுரிமை மூலம் அல்லாமல், மதப்பண்பு, நிரூபிக்கப்பட்ட தலைமைத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
காமனெயி தனது ஆட்சிக் காலத்தில், இஸ்லாமிய குடியரசின் எதிர்காலத் தலைமை குறித்து பொதுவான சொற்களில் மட்டுமே பேசியிருந்தார்.
அதிஉயர் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் மதகுரு அமைப்பான இரான் நிபுணர்கள் சபையின் ஒரு உறுப்பினர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, காமனெயி தனது மகன் எதிர்காலத் தலைமைக்கான வேட்பாளராக இருப்பதற்கான யோசனையை எதிர்த்ததாகக் கூறியிருந்தார் , ஆனால் அவர் அத்தகைய ஊகங்களை ஒருபோதும் பொதுவெளியில் கூறியதில்லை.
மதப் பள்ளி அமைப்பில் “ஆயத்துல்லா” என்ற பட்டமும், உயர்நிலை வகுப்புகளை கற்பிப்பதும் ஒருவரின் அறிவு மற்றும் மதப் படிப்பின் அளவை காட்டும் முக்கிய அடையாளங்களாக பார்க்கப்படுகின்றன.
அவை எதிர்காலத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேவைகள் மற்றும் முன்நிபந்தனைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.
அரசியல் தலையீடு குற்றச்சாட்டுகள்
2005 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது மொஜ்தபாவின் பெயர் முதன்முதலில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் அந்த தேர்தலில் தீவிரப் போக்காளராக அறியப்பட்ட மெஹ்மூத் அஹ்மதி நிஜாத் (Mahmoud Ahmadinejad) வெற்றி பெற்றார்.
அப்போது சீர்திருத்தவாத வேட்பாளரான மெஹ்தி கரூபி காமனெயிக்கு எழுதிய கடிதத்தில், மொஜ்தபா தேர்தலில் தலையிட்டதாக குற்றம் சாட்டினார்.
Islamic Revolutionary Guard Corps மற்றும் Basij போன்ற அமைப்புகள் மூலம் மதக் குழுக்களுக்கு பணம் வழங்கி அஹ்மதினெஜாத் வெற்றி பெற மொஜ்தபா உதவியதாக அவர் கூறினார்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மொஜ்தபா மீது அதே குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. அஹ்மதினெஜாத் மீண்டும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தன. அது Green Movement protests in Iran 2009 என அழைக்கப்பட்டது.
அந்த போராட்டங்களில் சிலர் — மொஜ்தபா தந்தையின் பதவியை மரபுரிமையாகப் பெறக்கூடாது என்று முழக்கமிட்டனர்.
அப்போதைய துணை உள்துறை அமைச்சர் முஸ்தபா தஜ்ஜாதே, தேர்தல் முடிவை "தேர்தல் சதி" என்றும் , இதற்கு "மொஜ்தபா காமனெயியின் விருப்பமே" காரணம் என்று விமர்சித்த நிலையில் அதன் பிறகு ஏழு ஆண்டுகள் முஸ்தபா சிறையில் அடைக்கப்பட்டார்
2009 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு இரண்டு சீர்திருத்த வேட்பாளர்களான மிர்-ஹொசைன் மௌசவி மற்றும் மெஹ்தி கரூபி ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட நிலையில் , 2012 ஆம் ஆண்டு பிப்ரவரியில், மௌசவியை நேரில் சந்தித்து போராட்டத்தை கைவிடுமாறு மொஜ்தபா வலியுறுத்தியதாக இரானிய வட்டாரங்கள் பிபிசி பாரசீக சேவையிடம் தெரிவித்தன.
சர் கடந்த வாரம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



