மணிப்பூர்: குழு மோதல்களில் 'பெண் வன்கொடுமை' ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்படுவது ஏன்?

    • எழுதியவர், சரண்யா ஹிருஷிகேஷ் & ஜோயா மாட்டீன்
    • பதவி, பிபிசி செய்திகள், டெல்லி

எச்சரிக்கை: இந்தச் செய்தியில் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் இருக்கலாம்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வன்முறை தொடர்ந்து வருகிறது. இச்சூழலில், இரு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது, மோதல்களில் யார் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

பெண்கள் பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளான இச்சம்பவம் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்தேறியுள்ளது. எனினும், கடந்த வியாழனன்று ட்விட்டர் சமூக ஊடகத்தில் இது தொடர்பான வீடியோ வெளியான பின்னரே இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது வெளியுலகத்துக்கு தெரியவந்தது.

நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட பெண்களில் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை புகாரில் கூறப்பட்டுள்ளது. இருவர் மட்டுமல்லாமல் மூன்றாவதாக ஒரு பெண்ணையும் ஆடைகளை களையும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். எனினும், வீடியோவில் அவர் இல்லை.

மிரட்சியடைந்த பெண்களை அவர்களை சுற்றி இருந்தவர்கள் தள்ளுவதும், அவர்களிடம் சீண்டலில் ஈடுபடுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் பலர் ஈடுபட்டபோதிலும், 5 பேர் மட்டுமே தற்போதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மெய்தேய் இன மக்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு பழங்குடிகளான குகி சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக இரு இனக்குழுக்களுக்கும் இடையே தொடங்கிய மோதல் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. துப்பாக்கிச் சூடு, பொருட்களை சூறையாடுதல், பாலியல் வன்கொடுமை போன்றவை நிகழ்வதாக அங்குள்ள கள நிலவரம் கூறுகிறது.

தி பிரிண்ட் இணையதளம் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் , வன்முறை தொடங்கிய சிறிது நேரத்திலேயே மெய்தேய் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக போலி செய்திகள் பரவின என்றும் அதனை தொடர்ந்தே வீடியோவில் காட்டப்பட்டுள்ள பாலியல் வன்முறை நடந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. குகி இனப் பெண்கள் மீது மெய்தேய் கும்பலால் பழிக்குப்பழியாக கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒன்று என்றும் கூறப்பட்டுள்ளது.

நீண்ட காலமாகவே இதுபோன்ற மோதல் நிகழ்வுகளில் பாலியல் பலாத்காரம் ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.

மிகப் பெரிய அளவிலான வன்முறைச் சம்பவங்களில் பாலியல் வன்கொடுமை மற்றும் கூட்டு பலாத்காரம் போன்ற பயங்கரமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 1947 இந்தியப் பிரிவினை, 1971 பங்களாதேஷ் சுதந்திரப் போர், 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், இலங்கை உள்நாட்டுப் போர், 2002 குஜராத் கலவரம் என தெற்காசியாவிலிருந்து ஒரு சில உதாரணங்களைக் கூறலாம். சில சமயங்களில் இதுபோன்ற கொடூர சம்பவங்கள் பல ஆண்டுகள் கழித்தே வெளி உலகிற்கு தெரியவரும்.

பெண்களின் உடல் மீது நிகழ்த்தும் வன்முறை மூலம் மற்றவர்களை பழிவாங்குவது என்பது இந்த குற்றத்துடன் தொடர்புடையதாக இருப்பதை உயிர் பிழைத்தவர்கள் மூலம் அறிய முடிகிறது.

இந்தியாவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் போன்றவற்றில் மோதல்களை முடிவுக்கு கொண்டுவரும் பணிகளில் ஈடுபட்டுள்ள ராணுவம், பாதுகாப்பு படையினர் ஆகியோர் மீதும் பாலியல் வன்முறை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

“தங்கள் உடல் மீது நிகழ்த்தப்படும் இந்த வன்முறைகளுக்கு பெண்கள் கொடுக்கும் விலை பெரும்பாலும் மறைக்கப்படுகிறது, ரகசியமாக வைக்கப்படுகிறது. பல தசாப்தங்களாக பெண்களின் இயக்கங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் இதன் மீது கவனம் பெறவைத்துள்ளது” இது தொடரும் என்று கூறுகிறார் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியை அனுராதா செனாய்.

மாநில அரசின் அக்கறையின்மைதான் இதுபோன்ற விஷயங்களை மேலும் மோசமாக்குகிறது.

மணிப்பூரில் மே 4ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரின் உறவினர் போலீஸில் அளித்த புகாரின்படி, காங்போக்பி மாவட்டத்தில் வன்முறையில் இருந்து தப்பிக்க பழங்குடியான குகி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் காட்டை நோக்கி தப்பி சென்றப்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இவர்களை போலீஸார் மீட்டதாகவும் பின்னர் ஒரு கும்பல் அவர்களை இழுத்துச் சென்றதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

புகாரின்படி, அந்த கும்பல் இரண்டு ஆண்களைக் கொன்றதோடு பெண்களை அவர்களின் ஆடைகளை கழற்றுமாறு கட்டாயப்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான, 21 வயதுடைய பெண், "பகல் நேரத்தில் கொடூரமாக கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்", மற்ற இருவரும் தப்பி ஓடிவிட்டனர் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த , "அவமானகரமான" சம்பவம் காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் மீது கடுமையான கேள்விகளை எழுப்புகிறது என்று கூறுகிறார் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் காவல்துறைத் தலைவர் விக்ரம் சிங்.

" பெண்களை இப்படி நடத்தும் போது இந்தியா போன்ற ஒரு நாட்டில் எந்த நிர்வாகமும் எதுவும் செய்ய முடியாத அளவுக்கு கையறுநிலையில் இல்லை," என்று அவர் கூறுகிறார், குற்றவாளிகளைத் தவிர, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் விக்ரம் சிங் வலியுறுத்துகிறார்.

மே மாதமே இந்த சம்பவம் நிகழ்ந்திருந்தாலும், வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்ட பின்னரும் ஆழந்த மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது என்று உச்ச நீதிமன்றம் கூறிய பின்னருமே இந்த வழக்கில் முதல் கைது மேற்கொள்ளப்பட்டது.

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, அவர்களுக்கு கல்வி அளிப்பது குறித்து அடிக்கடி பேசி வரும் பிரதமர் நரேந்திர மோதி, நாட்டு மக்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலமுறை அழைப்பு விடுத்தும் மணிப்பூரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தார். இறுதியாக தனது மௌனத்தை கலைத்த அவர், தனது இதயத்தில் "வலியும் கோபமும் நிறைந்துள்ளது" என்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

எனினும், வீடியோவில் குற்றவாளிகளின் முகம் தெளிவாக தெரிந்தும் நடவடிக்கை எடுப்பதற்கு இவ்வளவு காலதாமதம் ஏன் என்ற கேள்வி எழுகிறது.

"நீதிக்கான அணுகலை உறுதி செய்வது அரசின் பொறுப்பு. ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நீதிக்கான போராட்டத்தில் அரசும் நிர்வாகமும் முற்றிலும் காணாமல் போய்விட்டன" என்று கூறுகிறார் வழக்கறிஞர் விருந்தா குரோவர். பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவ பலருக்காகவும் இவர் வாதாடி வருகிறார்.

ஒரு கைது மேற்கொள்ளப்படுவதற்கே உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டி இருக்கிறது என்றால், அது வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நம்பிக்கையையும் அளிக்காது என்றும் அவர் கூறுகிறார்.

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த குஷ்பு சுந்தர், இந்த வீடியோ "கொடூரமானது" மற்றும் "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று குறிப்பிட்டார்.

"இது சட்டம், ஒழுங்கின் முழுமையான தோல்வி. அதே நேரத்தில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதற்கான நேரம் இதுவல்ல, அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, மணிப்பூரில் வன்முறைக்கு எதிராக ஒன்றாக நிற்க வேண்டும்" என்றும் குஷ்பு கூறியுள்ளார்.

பீகார் மாநிலத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட 1989 பாகல்பூர் கலவரத்தை ஆய்வு செய்த வழக்கறிஞர் வாரிஷா ஃபராசத், இந்த வன்முறையை விசாரிக்க அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட இரண்டு ஆணையங்களும் தங்கள் அறிக்கைகளில் பாலியல் வன்கொடுமை அல்லது பலாத்காரம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்று கூறினார்.

"சம்பவம் நடந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு நான் எனது ஆய்வை மேற்கொண்டேன். மக்கள் இன்னும் அதைப் பற்றிப் பேசத் தயங்குகிறார்கள். பாலியல் வன்முறைக்கு உள்ளானவர்கள் உயிரிந்திருந்தால் ஒழிய, அது குறித்து குடும்பங்கள் பேசுவது இல்லை. ஏனென்றால் இதுபோன்ற சம்பவங்களில் சமூகக் களங்கம் இல்லை என்பதால்தான்" என்று அவர் கூறுகிறார்.

இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகள் குறித்து பெரும்பாலும் புகாரளிக்கப்படுவதில்லை. தங்கள் குடும்பத்தினரால் வெளியேற்றப்படுவோம், சமூகத்தால் ஒதுக்கப்படுவோம் என்று பாதிக்கப்பட்டவர்கள் பயப்படுகின்றனர்.

மோதல்கள் ஏற்படும் இடத்தில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், அதனோடு சேர்த்து வாழ்வாதார இழப்பு முதல் குடும்ப உறுப்பினர்களின் இறப்பு வரை பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர் என்று ஃபராசத் கூறுகிறார்.

எவ்வாறாயினும், தயக்கம் எப்போதும் அவமானத்திலிருந்து உருவாவதில்லை என்று அவர் மேலும் கூறுகிறார். "பிரச்சனை என்னவென்றால், பெண்கள் பேச வெளியே வரும்போது, அவர்களுக்கு நீதி கிடைப்பது இல்லை. அதைத்தான் மாற்ற வேண்டும்," என்கிறார் ஃபராசத்.

வழக்குகள் ஆங்காங்கே இருந்தாலும் , இதற்கு பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையின் பெரும்பகுதியும் அவர்களின் உறுதியும் தேவைப்படுகிறது. ஏற்கனவே பொருளாதாரத்தில் விளிம்பு நிலையில் உள்ள இவர்கள் பயம், அவமானம் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது.

உத்தரபிரதேசத்தில் 2013-ம் ஆண்டு நடந்த வகுப்புவாத கலவரத்தின் போது இஸ்லாமிய பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததாக இரண்டு இந்து ஆண்களுக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு ஒரு மைல்கல்லாக இருந்தது. எனினும், இந்த வழக்கில் முதலில் 7 பெண்கள் நீதிமன்றத்தை நாடிய நிலையில், இறுதியில் ஒரே ஒரு பெண் மட்டுமே குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியம் அளித்தார் என்று கூறுகிறார் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக வாதாடியவரான குரோவர்.

மற்றொரு உதாரணமாக, 2002 குஜராத் கலவரத்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் 14 பேரை இழந்து பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளான பில்கிஸ் பானுவை குறிப்பிடுகிறார் ஃபராசத். குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தின்போது இந்து கும்பலால் பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். ஆனால், இந்த வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரையும் குஜராத்தில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு விடுதலை செய்தது. இந்தியாவின் சுதந்திர தினத்தன்று அவர்கள் விடுதலையான போது, அவர்களின் குடும்பத்தினர் இனிப்புகள் பரிமாறி கொண்டாடியதோடு அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு மாலை அணிவித்ததாகவும் கூறப்படுகிறது.

"பில்கிஸ் பானு வழக்கில் நீதியின் சக்கரங்கள் அவருக்கு சாதகமாக திரும்பியது, ஆனாலும் தற்போது குற்றவாளிகள் மீண்டும் வெளியே வந்துவிட்டனர். இந்த வரையறுக்கப்பட்ட நீதிக்குக் கூட பில்கிஸ் ஒரு விதிவிலக்கு மட்டுமே. ஏனென்றால், தனக்கு நிகழ்ந்த கொடுமைகளுக்கு எதிரான துணிந்த போராடக் கூடிய ஒருசிலரில் அவரும் ஒருவர்" என்று ஃபராசத் குறிப்பிடுகிறார்.

பொதுவாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை மட்டுமே அரசு வழங்குகிறது. ஆனால் அவர்களுக்கு தேவையானது அவர்களின் பாதிப்பிற்கான இழப்பீடு என்று குரோவர் கூறுகிறார். "புனர்வாழ்வு, மீண்டும் ஒரு தாக்குதலுக்கு உள்ளாகாமல் இருப்பதற்கான உத்தரவாதம், சமூக மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு போன்றவை இதில் அடங்கும்" என்று அவர் விளக்குகிறார்.

தண்டனையில் இருந்து தப்பிக்கும் கலாச்சாரம் ஒவ்வொரு வழக்கிலும் வலுப்பெற்று வருகிறது. இது முடிவுக்கு வர வேண்டும் என்று ஃபராசத் வலியுறுத்துகிறார்.

"இச்செயலில் ஈடுபட்ட கும்பல் மட்டுமல்ல, காவல்துறை அதிகாரிகள், அரசியவாதிகள் என அனைவரும் இதற்கு பொறுப்பாக வேண்டும் "

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: