You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் காவலில் எடுக்க உத்தரவு - என்ன நடந்தது?
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவருமான சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டுத் திட்ட முறைகேடு வழக்கில் ஆந்திர மாநில குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், விஜயவாடாவில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் அவரை செப்டம்பர் 22ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இருதரப்பினரின் வாதங்களும் காலை முதல் மதியம் 2:30 மணி வரை நடைபெற்றன. அதன் பிறகு நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து, அவர் ராஜமுந்திரியில் உள்ள மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்படுவார் எனத் தெரிய வந்துள்ளது.
சந்திரபாபு நாயுடு எப்படி கைது செய்யப்பட்டார்?
நந்தியாலாவில் அவர் பேருந்தில் இருந்தபோது போலீசார் வந்துள்ளனர். நேற்று காலை 6 மணியளவில், அவர்கள் சந்திரபாபு நாயுடுவை பேருந்தில் இருந்து வெளியே அழைத்து, கைது வாரன்டை கொடுத்தனர்.
அப்போது, சந்திரபாபு தரப்பு வழக்கறிஞர்களும், கட்சித் தலைவர்களும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 50(1)(2) பிரிவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் சந்திரபாபுவை எப்படி கைது செய்யலாம் என்று கூறி அவரது வழக்கறிஞர்கள் போலீசாரிடம் கேள்வி எழுப்பினர்.
விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது அனைத்து விவரங்களையும் தெரிவிப்பதாக சந்திரபாபுவிடம் போலீசார் தெரிவித்தனர்.
டிஐஜி ரகுராமி ரெட்டி தலைமையிலான போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்து, முதலில் முகாமில் இருந்து ஆர்வலர்கள் மற்றும் தலைவர்களை வெளியேற்றியது. சந்திரபாபுவுக்கு அளிக்கப்பட்ட சிஆர்பிசி நோட்டீசில், குற்ற எண். 29/2021 இன் கீழ் கைது செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஐபிசி 120பி மற்றும் 420 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கைது செய்வதற்கான ஆதாரம் கோரிய சந்திரபாபு
கைதின்போது, திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் தன் பெயர் எங்கே இருக்கிறது என்று சந்திரபாபு போலீசாரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த டிஐஜி ரகுராமி ரெட்டி , "எங்களிடம் ஆதாரம் உள்ளது. உயர் நீதிமன்றத்தில் கொடுத்திருக்கிறோம். ரிமாண்ட் அறிக்கையில் அனைத்து விவரங்களும் உள்ளன.'' என சந்திரபாபு தரப்பு வழக்கறிஞர்களிடம் விளக்கம் அளித்தார்.
போலீசார் சந்திரபாபுவை கைது செய்து விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால், காவல்துறை மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் தேசிய பாதுகாப்புப் படையின் கண்காணிப்பில் தனது கான்வாயில் வருவதாகவும் சந்திரபாபு தரப்பில் கூறப்பட்டது. இதனை காவல்துறையினர் ஏற்றுக்கொண்டனர்.
யாராலும் தடுத்து நிறுத்த முடியாது - சந்திரபாபு
இதனிடையே சந்திரபாபு நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த 45 ஆண்டுகளாக, நான் தன்னலமின்றி தெலுங்கு மக்களுக்கு சேவை செய்து வருகிறேன். தெலுங்கு மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக என் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன். தெலுங்கு மக்களுக்கும், எனது #ஆந்திரப்பிரதேசத்திற்கும், எனது தாய்நாட்டிற்கும் சேவை செய்வதை உலகில் உள்ள எந்த சக்தியாலும் தடுக்க முடியாது" என பதிவிட்டுள்ளார்.
கைது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “போலீசார் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்த முயற்சிக்கின்றனர். என்னை ஏன் கைது செய்கிறீர்கள், கைது செய்வதற்கான ஆதாரங்கள் எங்கே என்று அவர்களிடம் கேட்டேன். ஆனால் அவர்கள் எதுவும் சொல்லவில்லை. எங்களிடம் அதிகாரம் உள்ளது, உங்களை கைது செய்கிறோம் என்றார்கள். மிகவும் வேதனையாக உள்ளது. இன்று ஆந்திர போலீசார் ஜனநாயகத்தை பட்டப்பகலில் படுகொலை செய்துள்ளனர்.
பொது மக்களுக்கு என அடிப்படை உரிமைகள் உள்ளன. என்னை ஏன் கைது செய்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள எனக்கு உரிமை உள்ளது. அதேபோல், என்னை கைது செய்வதற்கான காரணத்தை சொல்ல வேண்டிய பொறுப்பு போலீசாருக்கு உள்ளது. என்னை கைது செய்வதற்காக நள்ளிரவில் அவர்கள் வந்தனர். நான்கரை ஆண்டுகளாக பொதுப் பிரச்னைகளுக்காகப் போராடி வருகிறேன். என்னைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். நேர்மை, நீதி வெல்லும். அவர்கள் என்ன செய்தாலும் நான் மக்கள் சார்பாக முன்னோக்கி செல்வேன்” என்று தெரிவித்தார்.
சிஐடி தரப்பு கூறுவது என்ன?
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டது தொடர்பாக ஆந்திர சிஐடி தலைவர் சஞ்சய் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஊழலுக்காகவே திறன் மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டது என்றும் அமைச்சரவையின் ஒப்புதலை பெறாமலேயே திறன் மேம்பாட்டு கழகத்தை சந்திரபாபு தொடங்கி இந்த அமைப்பின் பொறுப்பை காந்தா சுப்பாராவிடம் ஒப்படைத்தார். காந்தா சுப்பாராவுக்கு முதலமைச்சரின் ஆலோசகர் உட்பட 4 பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
“இது ரூ. 550 கோடி ஊழல். அரசுக்கு ரூ.371 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. போலி விலைப்பட்டியல் மூலம் போலி நிறுவனங்களுக்கு நிதி திருப்பி விடப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளி சந்திரபாபு நாயுடு. அதில் நடந்த பரிவர்த்தனைகள் அனைத்தும் அவருக்குத் தெரியும். இந்த வழக்கில் முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதுபற்றி ED மற்றும் GST அமைப்புகளும் விசாரணை செய்துள்ளன ” என்றும் அவர் கூறினார்.
இந்த வழக்கில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
விஜயவாடா ஏசிபி நீதிமன்றத்தில் சந்திரபாபு ஆஜர்படுத்தப்படுவார் என்றும் சஞ்சய் தெரிவித்தார். ஓர்வகல்லுவில் இருந்து விஜயவாடாவுக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்வதாக தாங்கள் கூறியதாகவும், ஆனால் சந்திரபாபு மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். அவரது வயது, உடல்நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் எனவும் கூறினார்.
பின்னணி என்ன?
ஒருங்கிணைந்த ஆந்திரபிரதேசம் இரு மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பின்னர் ஆந்திர பிரதேச திறம் மேம்பாட்டுக் கழகம் தொடங்கப்பட்டது. அரசு- தனியார் கூட்டுறவில் இது நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இளைஞர்களுக்கு பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பயிற்சி அளிப்பது திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நோக்கமாக கூறப்பட்டது. குறிப்பாக, பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதே இதன் முக்கிய நோக்கம்.
இதற்காக தொழில்நுட்ப நிறுவனங்களுடன் திறன் மேம்பாட்டு கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது. அவற்றில் சீமென்ஸ் மற்றும் டிசைன் டெக் சிஸ்டம்ஸ் போன்ற நிறுவனங்களும் உள்ளன.
நொய்டாவை தலைமையிடமாகக் கொண்ட சீமென்ஸ் இண்டஸ்ட்ரியல் சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஆந்திராவில் ஆறு இடங்களில் திறன் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். அங்கு இளைஞர்களுக்கு திறன்களை மேம்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசின் 10 சதவீத நிதி பங்களிப்புடனும் சீமென்ஸ் நிறுவனத்தின் 90 சதவீத நிதி பங்களிப்புடனும் இத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன் பிறகு, பிரகாசம் பொறியியல் கல்லூரி மற்றும் ஆதித்யா பொறியியல் கல்லூரி உட்பட பல பிரபலமான பொறியியல் கல்லூரிகளுடன் ஒப்பந்தம் செய்து இதற்கான சிறப்பு மையங்கள் நிறுவப்பட்டன.
குற்றச்சாட்டு என்ன?
சீமென்ஸ் நிறுவனம் 2017ஆம் ஆண்டு முதல் திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஒப்பந்தத்தின்படி, சீமென்ஸ் நிறுவனம் தொழில்நுட்ப உதவிகளை வழங்க வேண்டும். ஆனால், இதனை அந்நிறுவனம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. அதேநேரத்தில், தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டதாக பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக குற்ற புலனாய்வு துறையினர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீமென்ஸ் மற்றும் டிசைன் டெக் நிறுவனங்களுடன் ரூ.3,356 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒப்பந்தத்தின்படி, இந்த திட்டத்தில் தொழில்நுட்ப நிறுவனங்கள் 90 சதவீத பங்கை ஏற்க வேண்டும். ஆனால், அதுவும் நடக்கவில்லை.
மொத்தம் ஆறு கிளஸ்டர்கள் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு கிளஸ்டருக்கும் ரூ. 560 கோடி ரூபாய் செலவிடப்பட வேண்டும் . இதற்காக ஆந்திர அரசு தனது பங்காக 10 சதவிகிதம் அதாவது சுமார் ரூ. 371 கோடியை தருவதாக அப்போதைய முதலமைச்சராக இருந்த சந்திரபாபு அறிவித்தார்.
அதன்படி ஆந்திர அரசின் பங்கு செலுத்தப்பட்டது. ஆனால், நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி குற்றப் புலனாய்வுத் துறையினர் 2021ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி முதன்முதலாக வழக்கு பதிவு செய்தனர்.
சீமென்ஸ் நிறுவனமான வழக்கத்திற்கு மாறாக திட்டத்திற்கான மதிப்பை 3,300 கோடி ரூபாயாக உயர்த்தியது. இது தொடர்பாக, சீமென்ஸ் பிரதிநிதி ஜி.வி.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் மீது குற்றப் புலனாய்வுத்துறையினர் குற்றஞ்சாட்டினர்.
சீமென்ஸ் நிறுவனம் வழங்கிய மென்பொருட்களின் மதிப்பு 58 கோடி ரூபாய் மட்டுமே என்றும் ஆனால் ஆந்திர அரசு 371 கோடி ரூபாயை வழங்கியது என்றும் குற்றப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் முக்கியப் பங்கு வகித்த காந்தா சுப்பாராவ், லட்சுமிநாராயணா உள்ளிட்ட 26 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜெகன்மோகன் கூறியது என்ன?
வேலையற்றோர் மற்றும் மாணவர்களின் பெயரில் நடந்த மிகப்பெரிய மோசடி இது என்று ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் குற்றம் சாட்டினார். திறன் மேம்பாட்டுக் கழகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து ஆந்திர சட்டசபையில் மார்ச் 20-ம் தேதி அவர் பேசினார்.
அப்போது, “அமைச்சரவையில் கூறப்பட்டதற்கு மாறாக, ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. ஆந்திராவில் இருந்து வெளிநாடுகளில் உள்ள போலி நிறுவனங்களுக்கு பணம் அனுப்பப்பட்டு பின்னர் அங்கிருந்து மீண்டும் ஆந்திராவுக்கு வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஜிஎஸ்டி, உளவுத்துறை, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உட்பட அனைவரும் விசாரித்து வருகின்றனர். சந்திரபாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஒரு குழுவை உருவாக்கி 371 கோடி ரூபாயை கொள்ளையடித்துள்ளனர். ஒரு தனியார் நிறுவனம் எப்படி 3000 கோடி ரூபாயை மானியமாக தரும் என்பதை பற்றிக்கூட யோசிக்காமல் அவர்கள் விதிகளை மீறீயுள்ளனர்” என்று கூறினார்.
தமிழ்நாடு- ஆந்திரா இடையே பேருந்து சேவை பாதிப்பு
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தெலுங்கு தேசம் கட்சியினர் நடத்திய போராட்டத்தை அடுத்து, தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்குச் செல்லும் பேருந்துகள் மாநில எல்லையில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதேபோல், தமிழ்நாட்டில் இருந்து சித்தூர், திருப்பதி, கடப்பா, நகரி, புத்தூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு இயக்கப்படும் தமிழக மற்றும் ஆந்திர பேருந்துகள் அனைத்தும் அந்தந்த பேருந்து நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. 11 மணிக்கு மேல் பேருந்துகள் இயக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் செல்லக்கூடிய பேருந்துகள் மாநில எல்லையான காளி கோயில் பகுதி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அதேபோல் கிருஷ்ணகிரியில் இருந்து ஆந்திராவுக்கு செல்லக்கூடிய ஆந்திர மாநில பேருந்துகள் கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனத்துக்கு செல்வதற்கு உண்டான முன்பதிவு மையங்களும் முன் பதிவை நிறுத்தி வைத்துள்ளது.
சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு பேருந்து சேவைகள் பிற்பகலில் தொடங்கியது. சென்னையிலிருந்து திருத்தணி வழியாக திருப்பதி, சித்தூருக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பவன் கல்யாண் கண்டனம்
சந்திரபாபு கைதுக்கு நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆதாரங்களை காட்டாமலேயே கைது செய்யும்போக்கை ஆந்திர அரசு பின்பற்றுகிறது என்று விமர்சித்த அவர், “எந்த குற்றமும் செய்யாத ஜனசேனா கட்சி தலைவர்கள் மீதும் இவ்வாறு வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தற்போது சந்திரபாபுவும் இதேபோன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதை கண்டிக்கிறோம். இதுபோன்ற செயல்கள் மூலம் அமைதியையும் பாதுகாப்பையும் அரசு குலைக்கிறது” என அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
தெலுங்கு தேசம் தொண்டர்கள் கைது
தெலுங்கு தேச கட்சியின் தொண்டர்கள் ஆந்திர மாநிலத்தில் சித்தூர்,குடிபாலா,உள்ளிட்ட பல இடங்களில் தெலுங்குதேசம் கட்சியினர் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர் சில இடங்களில் பேருந்துகள் தாக்கப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்