இரான் லட்சக்கணக்கான ஆப்கானியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது ஏன்?

    • எழுதியவர், நஜியா குலாமி
    • பதவி, பிபிசி செய்திகள் பெர்சியன்

சுட்டெரிக்கும் ஜூலை மாத வெயிலில், இஸ்லாம் காலா - தோகரூன் எல்லையில் பேருந்துகள் ஒவ்வொன்றாக வந்த வண்ணமும், சென்ற வண்ணமும் இருக்கின்றன. இந்த எல்லைப் பகுதியில் தான் இரானின் நிலப்பரப்பு முடிந்து, ஆப்கானிஸ்தானின் நிலப்பரப்பு ஆரம்பமாகிறது. அந்த பேருந்துகளில் இரானில் இருந்து ஆப்கானியர்கள் கொத்துக் கொத்தாக கொண்டு வந்து இறக்கிவிடப்படுகின்றனர்.

அவர்கள் யாரும் விருப்பத்தின் பேரில் இரானை விட்டு வெளியேறவில்லை. மாறாக கட்டாயப்படுத்தப்பட்டு நாட்டைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர். பலர் இன்னும் கலக்கமான மன நிலையில்தான் இருக்கின்றனர்.

பலமாக காற்றுவீச, புழுதியும் தூசியும் மேல் எழும்புகிறது. நமக்கு முன்னால் நின்று கொண்டிருப்பவர்கள் யார் என்று கூட தெரியாத அளவுக்கு அந்த தூசிப்படலம் பார்வையை மறைக்கிறது.

இந்த கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் ஒரு பதின்ம வயது பெண் பேருந்தில் இருந்து கீழே இறங்கினார். அங்கு அவர் கண்ட காட்சிகள் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கின.

சிறிது நேரத்தில், யாரும் எதிர்பாரத வண்ணம் கத்த ஆரம்பித்த அவர், தலையில் அடித்துக் கொண்டு அழுத்தார். இரானிய வட்டார வழக்கில், "கடவுளே... எந்த மாதிரியான ஒரு நரகத்திற்கு என்னை அனுப்பி வைத்திருக்கிறாய்?" என்று தனக்குத் தானே பேசிய படி அழுது கொண்டிருந்தார்.

அவர் ஒரு ஆப்கானியர். ஆனால் அவர் ஆப்கானிஸ்தானை பார்த்ததே இல்லை. இரானில் பிறந்து வளர்ந்த ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களில் அவரும் ஒருவர். ஆனால் தற்போது, இஸ்ரேல் - இரான் யுத்தம் மற்றும் எழுந்து வரும் சந்தேகங்களைத் தொடர்ந்து, அகதிகள் உளவு பார்ப்பவர்கள் என்று கூறி முத்திரை குத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இரானில் இருந்து துரத்தப்பட்டு, அவர்களாக விரும்பித் தேர்வு செய்யாத ஒரு நிலத்திற்குள் தள்ளிவிடப்பட்டுள்ளனர். அவர்கள் முன் பின் அறிந்திராத நிலம் அது.

நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் ஆப்கானியர்கள் வெளியேற்றம்

சில நாட்களில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஆப்கானியர்கள் இரானில் இருந்து இங்கே கொண்டு வந்து விடப்படுகின்றனர். உதவி அமைப்புகள், இந்த வருட முடிவுக்குள் இந்த எண்ணிக்கை 40 லட்சத்தை தொடும் என்று எச்சரிக்கின்றனர்.

கொளுத்தும் வெயில் பகலில் 43 முதல் 45 டிகிரி செல்சியஸை எட்டுகிறது. ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமை மற்றும் உள்ளூரில் செயல்படும் அரசு சாரா அமைப்புகள் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் நபர்களுக்கு தேவையான அளவில் கூடாரங்களை அமைத்துத் தந்துள்ளன. ஆனால் தற்போது இங்கே வரும் அகதிகளின் எண்ணிக்கை பல்லாயிரத்தை தாண்டியுள்ளது.

ஆப்கானிய புகைப்படக் கலைஞர் முகமது பலாபுலுக்கி அந்த எல்லைப் பகுதியில் நடக்கும் அனைத்தையும் ஆவணப்படுத்தி வருகிறார். தடி ஒன்றைப் பிடித்துக் கொண்டு ஒரு மூலையில் அமைந்திருக்கும் வயதான ஒருவர், "நான் நடைப்பயிற்சி மேற்கொள்ளச் சென்றேன். அவர்கள் என்னை கைது செய்து இந்த முகாமிற்கு அழைத்து வந்தனர். நான் இப்போது இங்கே இருக்கின்றேன். என் மனைவிக்கும் மகள்களுக்கும் இது தெரியாது," என்று அவர் தெரிவிக்கிறார்.

புகைப்படக் கலைஞரின் போன் வேண்டும் என்று கேட்டார். பிறகு அமைதியான அவர், "எனக்கு அவளுடைய போன் நம்பர் ஞாபகத்தில் இல்லை," என்று கூறினார்.

இரானில் இருந்து வெளியேற்றப்படும் பலரும் இன்னும் இரானிய சிம் கார்டுகளையே பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு ஆப்கானிஸ்தானில் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. பலரும் கையில் பணம் இல்லாமல், எந்த உடமையும் இன்றி இங்கே இறக்கிவிடப்பட்டுள்ளனர். பலர் அவர்கள் பணியாற்றிய இடங்களில் சம்பளத்தைப் பெறவில்லை என்று கூறுகின்றனர்.

நாங்கள்உளவாளிகளா?

தங்களின் நான்கு குழந்தைகளின் மீது வெயில் படாத வண்ணம், ஒரு தம்பதி போர்வையை பிடித்த வண்ணம் நின்று கொண்டிருந்தனர்.

பல மணி நேரம் சுட்டெரிக்கும் வெயிலில் வியர்வையுடன் அவர்கள் தங்களின் குழந்தைகளுக்காக அப்படி நின்று கொண்டிருந்தனர். குழந்தைகளோ ஒருவரை ஒருவர் இறுகப் பற்றிக் கொண்டு, அகல விரிந்த கண்களுடன், அச்சத்துடன் அங்கே அமர்ந்திருந்தனர். தங்களின் "தாய்நாடான" ஆப்கானிஸ்தானிற்கு இவர்கள் முதன்முறையாக வருகை புரிகின்றனர்.

அந்த குழந்தைகளில் ஒரு பெண் குழந்தையும் இருந்தார். அவருக்கு வயது எட்டு அல்லது ஒன்பது இருக்கலாம். கையில் ஒரு பொம்மையை இறுகப் பிடித்தவண்ணம் இருந்தார்.

"நான் உயிருடன் இருக்கும் வரை என்னுடைய பொம்மை என்னுடன் இருக்கும்," என்று அவர் கூறினார். "என்னுடைய பொம்மை இரானிய பொம்மை. ஆனால் நான் இப்போது ஒரு குடியேறியாக மாறிவிட்டதால் அந்த பொம்மையும் ஒரு குடியேறி தான்."

இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக தங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது என்று பலரும் கூறுகின்றனர். அதிகாரிகள் மட்டுமல்ல, தெருவில் வசிப்பவர்களும் கூட அவ்வாறே கருதினர் என்று கூறுகிறார்.

"எங்களின் வாழ்நாள் முழுவதும் கூலிகளாக வேலைப் பார்த்து வந்தோம். கிணறு வெட்டினோம். வீடுகள் கட்டினோம். வீடுகளை சுத்தம் செய்தோம். ஆனால் உளவு? அதை நாங்கள் எப்போதும் செய்ததில்லை," என்று கூறுகிறார் ஒருவர்.

"நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவது ஒருபுறம். ஆனால் அவமானமும், தாக்குதலும், வன்முறையும் தான் மன தைரியத்தை குலைக்கிறது," என்று மற்றொருவர் கூறுகிறார்.

அரசு தரப்பில் இருந்து கிடைக்கும் குறைந்தபட்ச ஆதரவைக் கொண்டு உள்ளூர் மக்கள் உதவ முன்வந்துள்ளனர். தண்ணீர், உணவு போன்றவற்றை அவர்கள் வழங்குகின்றனர்.

சிலர் அவர்களை அருகில் உள்ள நகரங்களில் இறக்கிவிடுகின்றனர். ஆனால் இங்கு வரும் மக்கள் தொகையின் எண்ணிக்கையானது மிக அதிகம். ஆப்கானிஸ்தான் ஏற்கனவே வறுமை, வறட்சி மற்றும் பசியால் மோசமான சூழலை சந்தித்து வருகிறது. தற்போது இந்த குடியேற்றப் பிரச்னையும் அதில் இணைந்துள்ளது.

ஆப்கானிய புகைப்படக் கலைஞர் முகமது பலாபுலுக்கி இஸ்லாம் காலாவில் நடைபெறுவதை ஆவணப்படுத்தி வருகிறார். இது போன்ற ஒரு சூழலை எப்போதாவது பார்த்ததுண்டா என்று கேள்வி எழுப்பிய போது அவர் இல்லை என்று மறுக்கிறார்.

"இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஹெராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பிறகான சூழலை ஆவணப்படுத்தச் சென்றிருந்தேன். கிட்டத்தட்ட 2 ஆயிரம் பேர் மாண்டுபோயினர். ஆனால் முன்பின் தெரியாத, வாழ விரும்பாத இடத்தில் ஆயிரக் கணக்கானோர் கைவிடப்படுவதையும் தொலைந்து போவதையும் பார்ப்பது மிகவும் கவலையை ஏற்படுத்துகிறது," என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு