காணொளி: டிரம்ப் - ஷி ஜின்பிங் சந்திப்பு ஏன் முக்கியமானது?

காணொளிக் குறிப்பு, டிரம்ப் - ஷி ஜின்பிங் சந்திப்பு ஏன் முக்கியமானது?
காணொளி: டிரம்ப் - ஷி ஜின்பிங் சந்திப்பு ஏன் முக்கியமானது?

தற்போது உலகின் ஒட்டுமொத்த கவனமும் தென்கொரியாவின் சியோலை நோக்கி திரும்பியிருக்கிறது. இதற்கு காரணம், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் - சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே நடைபெறவுள்ள சந்திப்புதான்.

உலகின் இருபெரும் வல்லரசு நாடுகளான இவைகளுக்கு இடையே, பல ஆண்டுகளாக வர்த்தக மோதல் தொடர்ந்து வருகிறது. டிரம்ப் இரண்டாவது முறை அதிபரான பின் இது மேலும் தீவிரமானது. இந்நிலையில், சீனாவுடனான "குறிப்பிடத்தக்க" ஒப்பந்தத்தின் விதிமுறைகள் தயாராக இருப்பதாக டிரம்பின் குழு சுட்டிக்காட்டியுள்ளது, இது வியாழக்கிழமை ஷி ஜின்பிங்குடனான சந்திப்பின் போது இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த ஒப்பந்தம் ஏன் இத்தனை முக்கியமானது? இதன் மூலம் பலன் அடைவது யார்?

சியோலில் நடைபெறவுள்ள சந்திப்பில் பேசப்படவுள்ள முக்கிய அம்சங்களில், அமெரிக்காவில் டிக்டோக் செயல்பாடு, அமெரிக்காவின் வரி குறைப்புகள் மற்றும் சீனா விதித்துள்ள அரிய தாதுக்களின் தற்காலிக ஏற்றுமதி தடையும் அடங்கும் என அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீப நாட்களில் சீனாவும் பதற்றங்களைக் குறைக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவிலிருந்து மீண்டும் சோயாபீன் இறக்குமதி செய்வதாக அறிவித்துள்ளது.

கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் உச்சிமாநாட்டில், சீன மூத்த வர்த்தக பிரதிநிதிகள் ஸ்காட் பெசென்டை சந்தித்தனர். அங்கு பேசிய பெசன்ட், சீனா மீதான "வரிகள் ஒத்திவைக்கப்படும்" என்று கூறினார்.

ஒப்பந்தம் ஏற்படுவது சாத்தியமா?

பீஜிங்கை தளமாகக் கொண்ட சார்ஹார் (Charhar) நிறுவனத்தின் ஆய்வாளர் டேவிட் சென் (David Chen) இது தொடர்பாக பேசும்போது, "சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான தற்போதைய பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமாகவும் நேர்மறையாகவும் இருந்தது. இரு நாடுகளும் உள்நாட்டு அழுத்தங்கள், விநியோக சங்கிலி நெருக்கடிகள் காரணமாக தற்காலிக ஒப்பந்தத்தை நோக்கி நகர்கின்றன." என்கிறார்.

தென் கொரியாவில் நடைபெறும் சந்திப்பு தற்காலிக தீர்வைத் தரலாம். ஆனால், அதன் பின்னரும் இந்த வர்த்தக மோதல் தொடரும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். "ஏற்கனவே இரு நாடுகளும் இதற்கு தயாராகிவிட்டன. சீனா தொழில்நுட்பத்தில் தன்னிறைவை துரிதப்படுத்தி வருகிறது. அமெரிக்கா விநியோக சங்கிலியை சீரமைத்து வருகிறது." என டேவிட் சென் தெரிவித்தார்.

அரிய தாதுவில் ஆதிக்கம் செலுத்தும் சீனா

மின்சார கார்கள், ஸ்மார்ட்போன்கள், போர் விமானங்கள் — அனைத்திற்கும் அரியவகை தாதுக்கள் அவசியம். இது 21-ஆம் நூற்றாண்டின் தொழில்துறையில் அத்தியாவசியமாகப் பார்க்கப்படுகிறது.

டிரம்பின் வரி நடவடிக்கைக்குப் பின், சீனா இதன் ஏற்றுமதி மீது கட்டுப்பாடு விதித்தது. டிரம்ப் ஆதரவாளர்கள், சீனாவைச் சார்ந்திருப்பதை தவிர்க்க, ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா மற்றும் சமீபத்தில் இத்துறையில் செயல்பட துவங்கிய பாகிஸ்தானையும் கூட அமெரிக்கா நாடலாம் எனக் கூறுகிறார்கள்.

இதில், உண்மையான சிக்கல் இருப்பது அந்த தாதுக்களை சுத்திகரிப்பதில் தான். சீனாவின் நிலையை மற்ற நாடுகள் அடைய பல காலம் ஆகலாம். ஹாங்காங்கைச் சேர்ந்த புவிசார் அரசியல் ஆய்வாளர் ஹெய் சிங் தாவோ (Hei Sing Tao), சியோல் சந்திப்பு மூலம் டிரம்ப் "நற்பெயரைக் காப்பாற்ற" முயற்சிப்பதாகக் கூறுகிறார்.

டிரம்பால் இதனை எட்ட முடியாவிட்டால், அது கட்சியில் அவரது நம்பகத்தன்மையை பாதிக்கும் எனவும் அவர் கூறினார். "மந்தமான பொருளாதாரம் மற்றும் இளைஞர்களிடையே வேலையின்மையால் ஷி ஜின்பிங்கும் இந்தப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருப்பதாக" கூறுகிறார் ஹெய் சிங் தாவோ.

வரிகள் இருந்தபோதிலும், சீனாவின் ஏற்றுமதிகள் வளர்ந்து வருகின்றன. இது சீனா மீது விதிக்கப்பட்ட வரிகள் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்பதை காட்டுகிறது. 2024-ஆம் ஆண்டில் சீனா-அமெரிக்க வர்த்தகம் தோராயமாக 659 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட சற்று அதிகமாகும்.

ஒப்பந்தம் தொடருமா?

இரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றாமல், கால அவகாசம் பெற வெறுமனே அடிபணிவதாக நிபுணர்கள் நம்புகின்றனர். 'வரிகள் இப்போதைக்கு நிறுத்தப்படலாம், பேச்சுவார்த்தைகள் மென்மையாகலாம், ஆனால் போட்டி தொடரும்.வர்த்தகமும், வரியும் இதன் முக்கிய பிரச்னை இல்லை என்பதை இருதரப்பும் அறிவார்கள்' என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு