மத்திய பிரதேச தேர்தல் முடிவுகள்: பா.ஜ.க முன்னிலை, ஆட்சியை தக்க வைக்கிறது

மத்திய பிரதேச தேர்தல் முடிவுகள்

பட மூலாதாரம், ANI

மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க 166 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றது. காங்கிரஸ் 62 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றது.

பாஜக சுமார் 72% தொகுதிகளிலும், காங்கிரஸ் 28% தொகுதிகளிலும் பெற்றுள்ளன.

தற்போதைய முதல்வரும் பா.ஜ.க.வின் புத்னி தொகுதி வேட்பாளருமான சிவ்ராஜ் சிங் சவுகான் சுமார் 1 லட்சத்து 60 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

இதனால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பொய்யாகியிருக்கின்றன. பல கருத்துக்கணிப்புகள் காங்கிரஸுக்கு 120 இடங்கள் கிடைக்கும் என்று கூறியிருந்தன.

காங்கிரஸ் தலைவரும் சிந்த்வாரா தொகுதியின் வேட்பாளருமான கமல்நாத் முன்னிலையில் உள்ளார்.

இது குறித்து பேசிய மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, "பா.ஜ.க 125-150 இடங்களில் வெற்றி பெறும்," என்றார். மேலும், பா.ஜ.க மத்தியப் பிரதேசத்தில் மட்டுமல்லாமல், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரிலும் பா.ஜக ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய பிரதேச சட்டமன்றத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை சரியாக காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

பட மூலாதாரம், FB

பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்

முன்னிலை வகிக்கும் பா.ஜ.க.வின் தொண்டர்கள் மத்தியப் பிரதேசத்தில் கொண்டாட்டங்களை நடத்தித் தங்கள் மகிழ்ச்சியைத் வெளிப்படுத்தி வருகின்றனர்.

முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தனது குடும்பத்தினருடனும், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருடனும் சேர்ந்து தொண்டர்களைச் சந்தித்தார்.

பா.ஜ.க இந்தத் தேர்தலை, மகளிருக்கான தனது திட்டங்களை நம்பிச் சந்தித்தது. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாதம் 1,250 ரூபாய் வழங்கும் ‘லாட்லி பெஹ்னா யோஜனா’ போன்ற திட்டங்களை பா.ஜ.க செயல்படுத்தியிருந்தது.

காங்கிரஸ் கட்சி இதனை தேர்தல் விளம்பரம் என்று விமர்சித்திருந்தது.

மத்திய பிரதேசத்தில் போட்டியிட்ட முன்னணி தலைவர்களின் நிலை என்ன?

மத்திய பிரதேசத்தைப் பொறுத்தவரையில், சுமார் 17 நாடாளுமன்ற உறுப்பினர்களை, சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்களாக பா.ஜ.க அறிவித்தது. இதில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உட்பட மூன்று மத்திய அமைச்சர்களும் போட்டியிட்டனர்.

அவர்களில், டிமானி தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

நரசிங்பூர் தொகுதியில் பிரஹலாத் சிங் படேல் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

இந்தூர் 1 தொகுதியில் பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

சித்தி தொகுதியில் பாஜகவின் ரீத்தி பதக் மற்றும் காங்கிரஸின் கியான் சிங் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

நரசிங்பூர் தொகுதியில் பிரஹலாத் சிங் படேல் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

சத்னா தொகுதியில் பாஜகவின் கணேஷ் சிங் 5800 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

கதர்வாரா தொகுதியில் பாஜகவின் உதய் பிரதாப் சிங் 14 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

மத்திய பிரதேச தேர்தல் முடிவுகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பா.ஜ.க மத்திய பிரதேசத்தில் ஆட்சியைத் தக்க வைக்கிறது

மத்திய பிரதேச தேர்தல் களம்

மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 17-ஆம் தேதி நடைபெற்றது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 இடங்கள் உள்ள நிலையில், பெரும்பான்மைக்கு 116 இடங்கள் பெறவேண்டும்.

இந்தத் தேர்தலில் பிரதான கட்சிகளான காங்கிரசும் பா.ஜ.கவும் தனித்துப் போட்டியிட்டன. இரு கட்சிகளுமே 230 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தின.

மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் (பி.எஸ்.பி) துலேஷ்வர் சிங் மார்க்கம் தலைமையிலான கோண்ட்வானா கணதந்திரக் கட்சியும் (ஜி.ஜி.பி) கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஜிஜிபி கட்சியானது, கோண்ட் இன மக்களுக்கென தனியாக கோண்ட்வானா என்ற மாநிலத்தை அமைக்க வேண்டுமெனப் போராடிவரும் கட்சி. இந்தக் கூட்டணியில் ஜிஜிபி 52 இடங்களிலும் பிஎஸ்பி 178 இடங்களிலும் போட்டியிட்டது.

சமாஜ்வாதி கட்சி காங்கிரசுடன் இணைந்து போட்டியிடவே விரும்பியது. ஆனால், அது நடக்காத நிலையில் 80 இடங்களில் தனித்துப் போட்டியிட்டது. சந்திரசேகர ஆஸாத் தலைமையிலான ஆஸாத் சமாஜ் கட்சி 80 இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி 69 இடங்களிலும் போட்டியிட்டன. இவை தவிர, இடதுசாரிக் கட்சிகள், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவையும் சில இடங்களில் போட்டியிட்டன.

இந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் வாய்ப்பு பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கே இருக்கிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)