ரஷ்யாவில் நிலநடுக்கம்: அமெரிக்கா, ஜப்பானை தாக்கிய சுனாமி – நிலவரத்தை காட்டும் 10 படங்கள்

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், பசிபிக் பெருங்கடல் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் புதன்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 11:25 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், இதுவரை பதிவான மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்றாக நம்பப்படுகிறது.

ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர்.

சீனா, பிலிப்பின்ஸ் , இந்தோனீசியா, நியூசிலாந்து மற்றும் பெரு மற்றும் மெக்சிகோ வரை கூட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக அமெரிக்காவின் ஹவாயில் 4 முதல் 6 அடி உயரம் வரை அலைகள் பதிவாகியுள்ளது.

ஜப்பானில், சுமார் 19 லட்சம் மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வடக்கு இவாட் மாகாணத்தில் 4.3 அடி (1.3 மீ) உயர சுனாமி அலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹவாயில் இருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியேறத் தொடங்கினார்கள்.

ரஷ்யாவின் தூர கிழக்கில் 8.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஹவாய், வைக்கிகி, ஓஹுவில் உள்ள ஆலா போர் துறைமுகத்திலிருந்து ஒரு படகு புறப்பட்டது.

சுனாமி வெளியேற்றும் பாதையின் (Tsunami Evacuation Route) அறிவிப்புப் பலகை காணப்படுகிறது. ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, வால்பரைசோ பகுதி மற்றும் சிலிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தின் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அங்கிருந்த 4,000 தொழிலாளர்களும் வெளியேற்றப்பட்டதாக ஆலையின் இயக்குநர் கூறினார். மேலும் "அசாதாரணமாக" எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பிலிப்பின்ஸ் பல கடலோரப் பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கைகளை ரத்து செய்துள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தரவுகளின் அடிப்படையில், கடல் மட்டத்தில் குறிப்பிடத்தக்க சீற்றங்கள் அல்லது அழிவுகரமான சுனாமி அலைகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு