You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காட்டு சூழலை ஏற்றுக்கொள்ளாமல் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு இடம் மாறிய புலி- காரணம் என்ன?
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
(ஒவ்வொரு வருடமும் ஜூலை 29ஆம் தேதி சர்வதேச புலிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. புலிகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள், தனியார் அமைப்புகள் மற்றும் அரசாங்கங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.)
‘காடுகளின் காவலன்’ என அழைக்கப்படும் புலிகளின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது குறித்தும், மனிதர்கள்- புலிகள் மோதல்களைத் தவிர்ப்பது குறித்தும் பல்வேறு முயற்சிகள் மத்திய, மாநில அரசுகளால் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்த 3 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வனத்துறை கூறுகிறது.
இயற்கை இருப்பிடமான காட்டிலிருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஒரு புலி மாற்றப்பட்டது ஏன்?
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
‘முள்ளம்பன்றியை வேட்டையாடியதால் காயமடைந்த புலி’
வனத்துறை தகவலின்படி, கடந்த 2021 செப்டம்பர் 27, அன்று, வால்பாறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் தேயிலைத் தோட்டத்தில் சிக்கித் தவித்த எட்டு மாதப் புலிக்குட்டி ஒன்று வனத்துறையால் மீட்கப்பட்டது.
அந்த புலிக்குட்டி தாயைப் பிரிந்து தனியாக சுற்றிவந்துள்ளது. முள்ளம்பன்றி ஒன்றை வேட்டையாடியதால், முள்ளம்பன்றியின் முட்கள் குத்தி, முகம், வாய்ப்பகுதி மற்றும் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
பின்னர் கூண்டில் அடைக்கப்பட்டு வனக் கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. சில மாதங்கள் சிகிச்சைக்குப் பிறகு காயங்களிலிருந்து புலிக்குட்டி மீண்டது.
தாயைப் பிரிந்த குட்டி என்பதால், காட்டிற்குள் அதைத் தனியாக விடுவது பாதுகாப்பாக இருக்காது எனக் கருதி மானாம்பள்ளி அடுத்துள்ள மந்திரி மட்டம் பகுதியில் புலிக்குட்டியை பராமரிக்கவும், பயிற்சி அளிக்கவும் பத்தாயிரம் சதுரஅடி அளவில் ரூபாய் 75 லட்சம் மதிப்பில் இயற்கையான சூழலுடன் கூண்டு அமைக்கப்பட்டது. இந்தக் கூண்டில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டு அந்த புலிக்குட்டிக்கு வேட்டைப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்புலிக்குட்டியை ஓராண்டு வரை பராமரித்து, அதன் எடை 250 கிலோ எடை என்ற ஆரோக்கியமான அளவை எட்டிய பிறகு, புலியின் உடல்நிலை, வேட்டையாடும் தன்மையைப் பொறுத்து காட்டிற்குள் விடுவது குறித்து பரிசீலிக்கலாம் என வனத்துறை முடிவு செய்திருந்தது.
ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வனத்துறை கண்காணிப்பில் இருந்த புலி, கடந்த வாரம் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் பார்கவ் தேஜா, “தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் செயல்பாட்டு நடைமுறையின் படி, மந்திரிமட்டம் காப்புக் காடுகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கூண்டு கொண்டுவரப்பட்டது.”
''கடந்த இரண்டு ஆண்டுகளாக 10,000 சதுர அடி அரணில் வைக்கப்பட்டிருந்த புலி, அந்தக் கூண்டிற்குள் ஏற்றப்பட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு பத்திரமாகச் கொண்டுசெல்லப்பட்டது.” என்று தெரிவித்தார்.
‘புலிக்கு வேட்டைப் பயிற்சி’
இயற்கை அரணில் வைக்கப்பட்டிருந்த புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டது ஏன் என்பது குறித்து பிபிசியிடம் விளக்கினார் புலிகள் ஆராய்ச்சியாளர் முனைவர் குமரகுரு.
“தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக, வனப்பகுதியில் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டு, வேட்டைப் பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு புலி இதுதான்” என்று கூறினார்.
“கடந்த 2021ஆம் ஆண்டு, வால்பாறையில் கண்டெடுக்கப்பட்ட போது. அதற்கு வயிறு மற்றும் கணையத்தில் கடுமையான காயம் ஏற்பட்டிருந்தது. முள்ளம்பன்றியை வேட்டையாட முயற்சி செய்து, வாய்க்குள் சென்ற முட்களால் இந்தப் பிரச்னை ஏற்பட்டிருந்தது. பின்னர் வனத்துறை கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிறப்பாக தேறி வந்தது” என்கிறார் குமரகுரு.
அப்புலி வேட்டையாடுவதற்கு ஏதுவாக முயல், காட்டுப் பன்றி போன்ற மிருகங்கள் இயற்கை அரணிற்குள் விடப்பட்டதாகவும் ஆனால் அவற்றை வேட்டையாடுவதில் அந்த புலி ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறுகிறார் குமரகுரு.
“மருத்துவ கவனிப்பில் இருந்த காலம் அதிகம் என்பதால் அது மனிதர்களைச் சார்ந்தே வாழ்ந்து பழகிவிட்டது. உடல்நிலை முழுமையாக தேறியபிறகு அதை அப்படியே காட்டில் விட்டால், உணவின்றி இருக்கும் அல்லது பிற மிருகங்களின் தாக்குதலுக்கு ஆளாகும் என்பதால் வேட்டைப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.” என்று கூறினார்.
அக்குட்டிக்கு தாய் இருந்திருந்தால், விலங்குகளின் தாக்குதலில் இருந்து அதுவே சில வருடங்களுக்கு பாதுகாத்திருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் குமரகுரு.
மீட்கப்பட்ட போது என்ன மனநிலையில் இருந்ததோ அதே குழந்தை மனநிலையில் இரண்டு வருடங்களுக்குப் பிறகும் அந்தப் புலி இருந்ததால்தான், பாதுகாப்பு கருதி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டதாக அவர் கூறினார்.
வரும்காலத்தில் அந்த புலியை மீண்டும் காட்டில் விட வாய்ப்புகள் உள்ளதா எனக் கேட்டபோது, “இல்லை, புலி என்பது மிகப்பெரிய பரப்பளவை தனது வேட்டைக் களமாக வைத்திருக்கும் ஒரு மிருகம். இந்தப் புலிக்கு அத்தகைய திறன் இல்லை என்பதால் இயற்கைச் சூழலில் தனியாக அதிக காலம் தாக்குப்பிடிக்க முடியாது. ஒரு சராசரி காட்டுப் பன்றி கூட அதைக் கொன்று விடும்” என்று கூறினார்.
இந்தியாவில் எத்தனை புலிகள் உள்ளன?
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பாக 2006 முதல், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு நடந்து வருகின்றது. 2006ஆம் ஆண்டில் நடந்த கணக்கெடுப்பின் முடிவில் இந்தியக்காடுகளில் 1,411 புலிகள் உள்ளதாகவும், 2010 ஆண்டில் 1,706 புலிகள் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
பின்னர் 2014ஆம் வருடம் நடந்த புலிகள் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் 2,226 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது, பிறகு 2018ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் இது 2,967 ஆக உயர்ந்தது. இறுதியாக எடுக்கப்பட்ட 2022ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 3,167 புலிகள் உள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில், இந்தியாவில் மொத்தம் 628 புலிகள் இறந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், இந்த காலகட்டத்தில் புலிகளின் தாக்குதலில் 349 பேர் கொல்லப்பட்டுள்ளனர், குறிப்பாக மகாராஷ்டிராவில் மட்டும் 200 மனித இறப்புகள் பதிவாகியுள்ளன.
உலகில் வாழும் புலிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான புலிகள், இந்தியாவில் வாழ்கின்றன. இந்தியாவில் 3 ஆயிரத்திற்கு அதிகமாக புலிகள் இருந்தாலும், இன்னும் பல இடங்களில் மக்கள் தொகை நெருக்கம், வளர்ச்சித் திட்டங்கள் காரணமாக புலிகளுக்கு வாழ்விடங்கள் போதுமான அளவில் இருப்பதில்லை.
“புலிகளைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் பல முயற்சிகள் எடுத்துவருகின்றன. அதனால்தான் கடந்த சில வருடங்களாக புலிகளின் எண்ணிக்கை இந்தியாவில் உயர்ந்து வருகிறது. புலிகளைக் காப்பாற்றி என்ன செய்யப் போகிறோம் என சிலர் கேலி செய்வார்கள், ஆனால் புலிகள் இல்லையென்றால் காட்டின் சமநிலை தவறும்.”
“உதாரணத்திற்கு காட்டில் தாவர உண்ணிகளின் எண்ணிக்கை அதிகரித்து, தாவரங்கள் வளர்வது குறைந்து, மண்சரிவு, நீர்ச் சுழற்சியில் மாற்றம் என பல்வேறு விளைவுகள் உண்டாகும்.” என்று எச்சரிக்கிறார் குமரகுரு.
இதைக் கருத்தில் கொண்டுதான் வால்பாறையில் கண்டெடுக்கப்பட்ட புலியை மீண்டும் காட்டில் விட, பல லட்சம் செலவு செய்து முயற்சிகள் எடுக்கப்பட்டன என்றும், ஆனால் அது தோல்வியடைந்துவிட்டது என்றும் தெரிவித்தார் அவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)