You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருவனந்தபுரம் மாநகராட்சி வெற்றி கேரளாவில் பாஜகவுக்கு திருப்புமுனையா?
கேரள உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு (எல்டிஎஃப்) பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த இரண்டு கூட்டணிகளின் வெற்றி-தோல்விகள் தவிர, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி திருவனந்தபுரம் மாநகராட்சியில் பெற்ற வெற்றி குறித்தும் விவாதம் எழுந்துள்ளது.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் என்டிஏ மிகப்பெரிய கூட்டணியாக உருவெடுத்துள்ளது. எல்டிஎஃப் ஆளும் இந்த மாநகராட்சியில் என்டிஏ 101 வார்டுகளில் 50 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றி விவாதிக்கப்படுவதற்கு ஒரு காரணம், திருவனந்தபுரம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரின் தொகுதி என்பதுதான். மேலும் மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. திருவனந்தபுரத்தில் பெற்ற வெற்றியை, கேரளாவில் 'ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக' பாஜக பார்க்கிறது.
பிரதமர் நரேந்திர மோதி இந்த வெற்றியை "கேரள அரசியலில் ஒரு வரலாற்று தருணம்" என்று அழைத்ததுடன், வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதே நேரம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி யுடிஎஃப்-ன் வெற்றியை 'உற்சாகம் அளிக்கும்' வெற்றி என்று விவரித்துள்ளார்.
நாட்டின் இரண்டு முக்கியக் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தாங்கள் பெற்ற வெற்றியை, மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்கான 'சாதகமான சூழல் நிலவுவதாக' சித்தரிக்கின்றன.
இதற்கிடையில், அரசியல் கருத்துப் போர்களும் தொடங்கியுள்ளன. திருவனந்தபுரத்தில் கிடைத்த வெற்றியை பாஜக 'முன்னிலை' என்று சித்தரிப்பதை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் விமர்சித்துள்ளார்.
அதே நேரம், திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், தனது தொகுதியில் பாஜக பெற்ற வெற்றியை 'ஜனநாயகத்தின் சிறப்பு' என்று வர்ணித்தார். திருவனந்தபுரத்தின் 'அரசியல் நிலப்பரப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம்' என்று பாஜகவின் வெற்றியை அவர் கூறினார்.
கேரள உள்ளாட்சித் தேர்தலில் யார் யாருக்கு எத்தனை இடங்கள் கிடைத்தன?
கேரளாவில் டிசம்பர் 9, டிசம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களின் முடிவுகள் சனிக்கிழமை வெளியாகின. மாநிலத்தில் ஆறு மாநகராட்சிகள், 14 மாவட்டப் பஞ்சாயத்துகள், 87 நகராட்சிகள், 152 ஒன்றிய பஞ்சாயத்துகள் மற்றும் 941 கிராமப் பஞ்சாயத்துகளில் தேர்தல் நடைபெற்றது.
இவற்றில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான எல்டிஎஃப்-ஐ வீழ்த்தி பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. யுடிஎஃப் நான்கு மாநகராட்சிகள், 7 மாவட்டப் பஞ்சாயத்துகள், 54 நகராட்சிகள், 79 ஒன்றிய பஞ்சாயத்துகள் மற்றும் 505 கிராமப் பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றுள்ளது.
கொல்லம், கொச்சி, திருச்சூர், கண்ணூர் ஆகிய நான்கு மாநகராட்சிகளில் யுடிஎஃப் வெற்றி பெற்றுள்ளது.
எல்டிஎஃப் ஒரு மாநகராட்சி, ஏழு மாவட்டப் பஞ்சாயத்துகள், 28 நகராட்சிகள், 63 ஒன்றிய பஞ்சாயத்துகள் மற்றும் 340 கிராமப் பஞ்சாயத்துகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2020 தேர்தலில் எல்டிஎஃப் ஐந்து மாநகராட்சிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் இந்த முறை கோழிக்கோட்டில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
பாஜக தலைமையிலான என்டிஏ ஒரு மாநகராட்சி, இரண்டு நகராட்சிகள் மற்றும் 26 கிராமப் பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றுள்ளது.
பாஜக திருவனந்தபுரம் மாநகராட்சியில் 50 இடங்களை வென்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக எல்டிஎஃப் 29 இடங்களையும் யுடிஎஃப் 19 இடங்களையும் பெற்றுள்ளன. இதற்கு முன்பு திருவனந்தபுரத்தில் பாஜக எதிர்க்கட்சியாக இருந்தது.
இது தவிர, ஒரு நகராட்சி, 10 ஒன்றிய பஞ்சாயத்துகள் மற்றும் 64 கிராமப் பஞ்சாயத்துகளில் முடிவுகள் சமநிலையில் உள்ளன. அதே நேரம், மற்ற கட்சிகளும், சுயேச்சைகளும் ஆறு கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் ஒரு நகராட்சியில் வெற்றி பெற்றுள்ளன.
திருவனந்தபுரத்தில் பெற்ற வெற்றி குறித்து பாஜக கூறியது என்ன?
கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, பாஜக-என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்களித்த கேரள மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி நன்றி தெரிவித்தார். "கேரள மக்கள் யுடிஎஃப் மற்றும் எல்டிஎஃப் கூட்டணிகளால் சலிப்படைந்துள்ளனர்," என்று அவர் கூறினார்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திருவனந்தபுரத்தில் பாஜக பெற்ற வெற்றியை 'ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம்' என்று விவரித்தார்.
"திருவனந்தபுரம் நம்பிக்கை மற்றும் உறுதியுடன் குரல் கொடுத்துள்ளதுடன், மாநகராட்சியில் பாஜகவின் அற்புதமான முடிவை உறுதி செய்து ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இது மாற்றம், வளர்ச்சி மற்றும் தூய்மையான நிர்வாகத்திற்கான ஆதரவு" என்று அவர் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கேரள மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அவர், "உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மற்றும் என்டிஏ-வுக்கு மகத்தான வெற்றியை கேரள மக்கள் வழங்கியுள்ளனர். திருவனந்தபுரம் தனது முதல் பாஜக மேயரை பெறும்" என்று கூறினார்.
கேரள பாஜக தலைவர் ராஜிவ் சந்திரசேகர் இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து, "மலையாள மக்கள் ஊழலற்ற ஆட்சி, வளர்ச்சி மற்றும் பொறுப்புக் கூறலை விரும்புகிறார்கள். அவர்கள் பல தசாப்தங்களாக நீடித்த பயனற்ற மற்றும் ஊழல் நிறைந்த இடது-வலது அரசியலைத் தாண்டிச் செல்லத் தயாராக உள்ளனர்" என்று கூறினார்.
"இந்த மாற்றத்தை நம்பிய ஒவ்வொரு வாக்காளருக்கும் நான் நன்றி கூறுகிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.
தங்கள் வெற்றி குறித்து காங்கிரஸ் என்ன கூறியது?
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி யுடிஎஃப்-ன் வெற்றிக்காகக் கேரள மக்களுக்கு நன்றி தெரிவித்தார். இது "திட்டவட்டமான உற்சாகம் அளிக்கும் முடிவு," என்று அவர் கூறினார்.
"இந்த முடிவுகள் யுடிஎஃப் மீதான அதிகரித்து வரும் நம்பிக்கையின் தெளிவான அறிகுறியாகும். மேலும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஒரு பெரிய வெற்றிக்கு வழி வகுக்கும்" என்று ராகுல் காந்தி கூறினார்.
அதே நேரம் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், யுடிஎஃப்-இன் பெரிய வெற்றியை வெறும் 'டிரெய்லர்' என்று விவரித்தார்.
அவர், "இதுவோர் ஆரம்பம் மட்டுமே, 2026இல் பல 'கோட்டைகள்' இடிந்து விழும், யுடிஎஃப் கொடி உயரும், பாஜகவின் பிளவுபடுத்தும் அரசியலைத் தீர்க்கமாக நிராகரிக்கும் தனது பாரம்பரியத்தை கேரளா முன்னோக்கி எடுத்துச் செல்லும்" என்று அவர் கூறினார்.
திருவனந்தபுரத்தில் பாஜக பெற்ற வெற்றி குறித்த ஊடகங்களின் செய்தியையும் கே.சி. வேணுகோபால் விமர்சித்தார். பாஜகவின் வெற்றியை ஊடகங்கள் "அலை" என்று சித்தரிப்பது கேலிக்குரியது என்று அவர் கூறினார்.
"இறுதி முடிவுகளில், என்டிஏ-விடம் மாவட்டப் பஞ்சாயத்துகள், ஒன்றிய பஞ்சாயத்துகள் எதுவும் இல்லை, மேலும் அது இரண்டு நகராட்சிகளில் மட்டுமே உள்ளது. ஒரு மாநகராட்சியில் மட்டுமே பெற்ற வெற்றி 'திருப்புமுனை' என்று சித்தரிக்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.
மேலும், "2024 மக்களவைத் தேர்தலில் திருச்சூரில் பெற்ற வெற்றியையும் அவர்கள் ஒரு பெரிய வெற்றியாகச் சித்தரித்தனர், ஆனால் இன்று அதே மாநகராட்சியில் மக்கள் யுடிஎஃப்-க்கு அமோக வெற்றியை அளித்துள்ளனர். 2024 மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது பாஜகவின் வாக்கு 5 சதவிகிதம் குறைந்துள்ளது," என்று வேணுகோபால் கூறினார்.
"அதிகரிப்பு' என்று வரும்போது, கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது அவர்களால் 7 கிராமப் பஞ்சாயத்துகளை மட்டுமே அதிகரிக்க முடிந்தது. 941இல் 19இல் இருந்து 26 ஆக உயர்ந்துள்ளது."
"யுடிஎஃப் ஆறு மாநகராட்சிகளில் நான்கில் வெற்றி பெற்றுள்ளது. அதாவது 3 இடங்கள் அதிகம். 14 மாவட்டப் பஞ்சாயத்துகளில் 7இல் முன்னிலை பெற்றுள்ளது, அதாவது 4 இடங்கள் அதிகம். 86 நகராட்சிகளில் 54இல் வெற்றி பெற்றுள்ளது, அதாவது 12 இடங்கள் அதிகம். ஒன்றிய பஞ்சாயத்துகளில் 79ஐ எட்டியுள்ளது, அதாவது 39 இடங்கள் அதிகம். கிராமப்புற கேரளாவில் 505 கிராமப் பஞ்சாயத்துகளுடன் வலுவான பிடியை நிலைநிறுத்தியுள்ளது, அதாவது 164 இடங்கள் அதிகம்" என்று அவர் கூறினார்.
திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினரான காங்கிரஸை சேர்ந்த சசி தரூர், கேரள மக்களின் முடிவு மாநிலத்தில் உள்ள ஜனநாயக உணர்வை முழுமையாகப் பிரதிபலிக்கிறது என்று கூறினார். 2020ஐ விட யுடிஎஃப்-க்கு மிகவும் சிறந்த முடிவுகள் வந்துள்ளன என்று அவர் கூறினார்.
மேலும், திருவனந்தபுரத்தில் பாஜக பெற்ற வெற்றி குறித்து, "திருவனந்தபுரத்தில் பாஜகவின் வரலாற்றுச் செயல்பாட்டை நான் ஒப்புக் கொள்கிறேன், மாநகராட்சித் தேர்தலில் அவர்களின் குறிப்பிடத்தக்க வெற்றிக்கு வாழ்த்துகிறேன். இதுவொரு வலுவான செயல்பாடு, இது திருவனந்தபுரத்தின் அரசியல் பரப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது" என்று அவர் கூறினார்.
"எல்டிஎஃப்-இன் 45 ஆண்டு கால மோசமான ஆட்சியில் இருந்து ஒரு மாற்றத்திற்காக நான் பரப்புரை செய்தேன், ஆனால் வாக்காளர்கள் வேறொரு கட்சிக்கு வெகுமதி அளித்துள்ளனர். இதுதான் ஜனநாயகத்தின் சிறப்பு. மாநிலம் முழுவதும் யுடிஎஃப்-க்கு சாதகமாக இருந்தாலும் அல்லது எனது தொகுதியில் பாஜகவுக்கு சாதகமாக இருந்தாலும், மக்களின் முடிவு மதிக்கப்பட வேண்டும்" என்று சசி தரூர் கூறினார்.
திருவனந்தபுரம் வெற்றி பாஜகவுக்கு திருப்புமுனையா?
பத்து ஆண்டுகளுக்கு முன்னர்கூட பாஜக திருவனந்தபுரம் மாநகராட்சியில் பல இடங்களை வென்றது, ஆனால் இந்த முறை பெற்றுள்ள வெற்றி கேரளாவில் ஒரு "சாத்தியமான திருப்புமுனையாக" பார்க்கப்படுகிறது.
அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் ஜே பிரபாஷ் பிபிசி ஹிந்திக்கு அளித்த பேட்டியில், "இது எல்டிஎஃப்-இன் நம்பகத்தன்மையைக் குறைக்கும் விஷயம். திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை, எல்டிஎஃப் ஆட்சிக்கு எதிரான மனநிலை உள்ளது. திருவனந்தபுரத்தில்கூட, பாஜக பெரும்பான்மை பெற்ற இடத்தில், பலவீனமான காங்கிரஸ் இந்த முறை தனது இடங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது" என்று கூறினார்.
மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் திருவனந்தபுரத்தில் பாஜக பெற்ற வெற்றியை 'திருப்புமுனை' என்று விவரித்தார்.
"நிலவரம் தெளிவாக உள்ளது. ஹரியாணா போன்ற ஒரு தவற்றை அது தானே செய்யாதவரை சட்டமன்றத் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் வலுவான நிலையில் உள்ளது. எல்டிஎஃப்-க்கு பெரிய இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், பாஜக மெதுவாக வளர்ச்சி பெறுகிறது" என்று அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு