You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பிஎஸ்எஃப் வீரர்கள் காட்டிற்குள் தள்ளினர்' - வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட்டு இந்தியா திரும்பிய கர்ப்பிணி பட்ட பாடு
- எழுதியவர், இல்மா ஹசன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
தனது கர்ப்ப காலத்தின் இறுதி வாரங்களில் இருக்கிறார், 25 வயதான சுனாலி கதுன்.
"எனது குழந்தை வங்கதேசத்தில் பிறந்தால், அதன் குடியுரிமை மாறிவிடுமோ என்று அஞ்சினேன்" எனக் கூறுகிறார் சுனாலி.
இந்த ஆண்டு ஜூன் மாதம் அண்டை நாடான வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட்ட அவர், இந்த மாத தொடக்கத்தில் இந்தியா திரும்பினார்.
டெல்லியில் வீட்டு வேலை செய்து வாழ்க்கை நடத்தி வந்த, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரான சுனாலி, அவரது கணவர் டேனிஷ் ஷேக் மற்றும் எட்டு வயது மகனுடன் காவலில் வைக்கப்பட்டார். அவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டு வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட்டனர்.
வங்கதேச அதிகாரிகளோ அந்த குடும்பத்தினர் தங்கள் நாட்டின் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் குற்றம் சாட்டி சிறையில் அடைத்தனர்.
அவர் நாடு கடத்தப்பட்ட செய்தி தேசிய அளவில் தலைப்புச் செய்தியானது. மேற்கு வங்க அரசிடம் இருந்து கடுமையான எதிர்வினைகள் வந்தன.
பாஜக தலைமையிலான மத்திய அரசு எந்தக் காரணமும் இன்றி அவரை வங்கதேசத்திற்கு நாடு கடத்தியதாக மேற்கு வங்க அரசு குற்றம் சாட்டியது.
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த சில மாதங்களில் காவலில் வைக்கப்பட்டு வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களில் சுனாலியும் ஒருவர்.
இந்திய அரசு நாடு கடத்தப்பட்டவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை வழங்கவில்லை. ஆனால் மே மாதத்தில் மட்டும் 1,200க்கும் மேற்பட்டோர் தங்கள் நாட்டு எல்லை வழியாக "சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டதாக" வங்கதேச அரசின் உயர்மட்டத்தில் உள்ள வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளன.
அதே மாதத்தில், அரசு வானொலியான அகில இந்திய வானொலி, டெல்லியில் இருந்து சுமார் 700 பேர் வங்கதேசத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தது.
டெல்லியில் பிடிபட்டு வங்கதேசத்திற்கு நாடு கடத்தல்
இந்தியாவில் வங்கதேச குடியேறிகள் எனக் கூறப்படுவோர் மீதான ஒடுக்குமுறை என்பது புதிய விஷயமல்ல.
இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான கலாசார தொடர்புகளும், ஐந்து மாநிலங்கள் வழியாகச் செல்லும் 4,096 கிலோமீட்டர் நீளமுள்ள திறந்த எல்லையும் இருந்தபோதிலும், வேலை தேடியோ அல்லது சில நேரங்களில் மதத் துன்புறுத்தல்களில் இருந்து தப்பிக்கவோ மக்கள் நீண்டகாலமாக மேற்கு வங்கம் உள்ளிட்ட இந்திய பகுதிகளுக்குக் குடிபெயர்ந்து வருகின்றனர்.
இருப்பினும், சமீபத்திய இந்த ஒடுக்குமுறை நடவடிக்கை, மேற்கு வங்கம், வங்கதேசம் ஆகிய இரு இடங்களிலும் பேசப்படும் மொழியான வங்க மொழி பேசும் இஸ்லாமியர்களை மட்டுமே குறிவைப்பதாகவும், இது உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் மேற்கொள்ளப்படுவதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
டெல்லியில் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தின் (FRRO) கூற்றுப்படி, சுனாலி கதுன், அவரது குடும்பத்தினர் மற்றும் வங்காள மொழி பேசும் அவர்களது அண்டை வீட்டு இஸ்லாமியர்கள் மூவரிடமும், அவர்கள் சட்டபூர்வமாக இந்தியாவுக்குள் நுழைந்ததற்கோ அல்லது தங்கியிருப்பதற்கோ ஆதாரமான ஆவணங்கள் இல்லை.
இதைத் தொடர்ந்து அவர்கள் வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட்டனர். சுனாலியின் குடும்பத்தினர் கைது செய்யப்பட்ட போது அவரது ஏழு வயது மகள் உறவினர்களுடன் தங்கியிருந்ததால், அவர் மட்டும் இந்தியாவிலேயே தங்கிவிட்டார்.
விதிகளின்படி, சட்டவிரோதமாகக் குடியேறியவர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவரின் பூர்வீக மாநில அரசிடம் அதிகாரிகள் அவரது விவரங்களைச் சரிபார்க்க வேண்டும்.
ஆனால், சுனாலி விஷயத்தில் இது செய்யப்படவில்லை என்று மேற்கு வங்க புலம்பெயர் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் சமிருல் இஸ்லாம் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த நாடு கடத்தல் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் டெல்லி உள்துறையிடம், இந்த விவகாரம் குறித்து பிபிசி விளக்கம் கேட்டுள்ளது.
டிசம்பர் மாதம், சுனாலி மற்றும் அவரது மகனின் குடியுரிமை குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், "மனிதாபிமான அடிப்படையில்" அவர்கள் இந்தியா திரும்ப அனுமதிக்குமாறு இந்திய உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கேட்டுக்கொண்டது.
அதன் பின்னர், அவர் மேற்கு வங்கத்தில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். வங்கதேசத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட அவரது கணவர், உறவினர் ஒருவருடன் வசித்து வருகிறார்.
'எல்லையைத் தாண்டித் தள்ளப்பட்டோம்'
வரும் ஜனவரி மாதம் பிறக்கப் போகும் தனது குழந்தை, பிறப்பால் இந்திய குடிமகனாக இருக்கும் என்பதில் அவருக்கு நிம்மதி என்றாலும், தனது கணவரை நினைத்து சுனாலி கவலையில் இருக்கிறார்.
நாடு கடத்தப்பட்ட பிறகு வங்கதேசத்தில் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டதால், கடந்த மூன்று மாதங்களாக அவர் தனது கணவரைப் பார்க்கவில்லை.
வீடியோ கால் பேசும்போது அவரது கணவர் அடிக்கடி அழுவதாகவும், அவர் வீட்டிற்கு வர விரும்புவதாகவும் கூறுகிறார் என்றும் சுனாலி கூறுகிறார்.
"நாங்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, நாங்கள் இந்தியர்கள். அவர்கள் ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தார்கள்?" என்று சுனாலி கேள்வி எழுப்புகிறார்.
டெல்லி போலீசாரால் காவலில் வைக்கப்பட்ட சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு, தனது குடும்பத்தினரும் அண்டை வீட்டாரும் விமானம் மூலம் இந்தியா-வங்கதேச எல்லைக்குக் கொண்டு செல்லப்பட்டு, எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர்களால் எல்லையைத் தாண்டி 'தள்ளப்பட்டதாக' சுனாலி குற்றம் சாட்டுகிறார்.
"வங்கதேசத்தில் ஆறுகளும் ஓடைகளும் ஓடிக் கொண்டிருந்த அடர்ந்த காட்டில் எங்களை விட்டுச் சென்றார்கள்," என்கிறார் சுனாலி.
உள்ளூர்வாசிகள் சொன்ன வழியில் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற போது, பிஎஸ்எஃப் வீரர்கள் தனது கணவர் உள்பட அந்தக் குழுவில் இருந்த சிலரைத் தாக்கியதாகவும், பின்னர் தங்களை மீண்டும் அதே காட்டுப் பகுதியிலேயே விட்டுச் சென்றதாகவும் சுனாலி குற்றம் சாட்டுகிறார்.
சுனாலியின் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பிபிசி, எல்லை பாதுகாப்பு படையினரிடம் (பிஎஸ்எஃப்) கேள்விகளை அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.
பிறகு உள்ளூர் மக்களின் உதவியுடன் அவர்கள் டாக்காவை அடைந்துள்ளனர். அங்கு போதுமான உணவும் தண்ணீரும் இன்றி பல நாட்கள் அலைந்த பிறகு, போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறை உணவு ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்குப் போதுமானதாக இல்லை என்றும், அவர்கள் இருந்த அறையில் கழிப்பறைகூட இல்லை என்றும் சுனாலி கூறுகிறார்.
"நானும் எனது மகனும் மட்டுமே அங்கு இருந்ததால் நான் மிகவும் பயந்தேன். நாங்கள் அழுதுகொண்டே இருந்தோம்" என்று அவர் பகிர்ந்து கொண்டார்.
சுனாலியின் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து வங்கதேசத்தின் உள்துறை மற்றும் சிறைத் துறையிடமும் பிபிசி விளக்கம் கேட்டுள்ளது.
'நான் ஒருபோதும் டெல்லிக்கு திரும்பப் போக மாட்டேன்'
இந்தியாவில், அவரது குடும்பத்தினர் அவரது குடியுரிமையை நிரூபித்து, அவரை மீண்டும் இந்தியா அழைத்து வருவதற்காக நீதிமன்றங்களில் போராடி வருகின்றனர்.
அவரது வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள தனது பெற்றோரின் ஒற்றை அறை கொண்ட சிறிய குடிசையில், தனது இரண்டு இளம் குழந்தைகள் மற்றும் வயிற்றில் வளரும் குழந்தையுடன் அமர்ந்திருக்கும் சுனாலி, "எனது குடும்பமே சிதைந்துவிட்டது," என்கிறார்.
"அனைவரையும் எப்படி கவனித்துக் கொள்ளப் போகிறேன் என்று தனக்குத் தெரியவில்லை" என்கிறார் அவர்.
ஆனால், ஒரு விஷயம் குறித்து மட்டும் அவருக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
"நாங்கள் இங்கேயே இருந்தால், எங்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு கிடைக்காமல்கூட போகலாம், ஆனால் நான் ஒருபோதும் டெல்லிக்கு திரும்பிப் போகமாட்டேன்" என்கிறார் சுனாலி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு