12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்திய ராணுவத்தில் சேர்வதற்கான வழிகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரியங்கா ஜா
- பதவி, பிபிசி
உலக மக்கள்தொகை மதிப்பாய்வு அறிக்கையின்படி, இந்திய ராணுவம் உலகின் ஐந்து மிகப்பெரிய ராணுவங்களில் ஒன்றாகும்.
2024-ஆம் ஆண்டில் ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய அனைத்தையும் சேர்த்து இந்திய ராணுவத்தில் சுமார் 15 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.
இவ்வளவு பிரமாண்டமான இந்திய ராணுவத்தில் சேர பல வழிகள் உள்ளன. இருப்பினும் ராணுவ அதிகாரியாக பணியாற்ற விரும்புபவர்கள், தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA), ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (CDS) போன்றத் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெறவேண்டும்.
இந்தத் தேர்வுகளில் கலந்துக் கொள்வதற்கான தகுதிகள் யாவை? தேர்வில் எளிதில் தேர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும்?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களை மேஜர் ஜெனரல் (ஓய்வு) சஞ்சீவ் டோக்ராவிடமிருந்து பெற்றோம், அவர் பணி ஓய்வு பெறுவதற்கு முன்பு NDA-வில் துணைத் தளபதி மற்றும் தலைமை பயிற்றுவிப்பாளர் போன்ற முக்கியமான பதவிகளை வகித்தவர்.

பட மூலாதாரம், Getty Images
NDA மற்றும் CDS தேர்வுகள்
NDA மற்றும் CDS தேர்வுகள் மூலம் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கான கேடட்கள் (cadets) தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பின்னர், அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. NDA பயிற்சி நிறுவனம் புனேவில் அமைந்துள்ளது.
NDA மற்றும் CDS நுழைவுத் தேர்வுகள் இரண்டையும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுக்கு இருமுறை நடத்துகிறது.
தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) தேர்வுக்கான முதல் அறிவிப்பு ஜனவரியில் வெளியாகிறது. இரண்டாவது தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் மாதத்தில் வெளியாகிறது.
CDS தேர்வுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெளியாகும்.
NDA மற்றும் CDS ஆகியவற்றுக்கிடையில் மிகப் பெரிய வித்தியாசம் என்னவெனில், NDA தேர்வு 12-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கானது.
16½ முதல் 19½ வயதுக்குள் உள்ள திருமணம் ஆகாத ஆண்களும் பெண்களும் NDA தேர்வை எழுதலாம். 12ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணாக்கர்களும் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, எழுத்துத் தேர்வை எழுதலாம்.
CDS என்பது பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கானது. இந்த வேறுபாடு இரண்டு தேர்வுகளுக்குமான தகுதிகளை வேறுபடுத்துகிறது.
CDS-க்கு விண்ணப்பிப்பவர்களின் வயது 19 முதல் 24-க்குள் இருக்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
விதிமுறைகள் என்ன?
வயதை தவிர NDA தேர்வு எழுதுவதற்கு பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்:
- இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்
- குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் நேபாள நாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம்.
- 1962 ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன் இந்தியாவிற்கு வந்த திபெத்திய அகதிகள் விண்ணப்பிக்கலாம்.
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், பாகிஸ்தான், பர்மா (மியான்மர்), இலங்கை, கென்யா, உகாண்டா, தான்சானியா, சாம்பியா, எத்தியோப்பியா அல்லது வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் நிரந்தரமாக குடியேறும் நோக்கத்துடன் வந்திருந்தால், அவர்களும் தகுதியுடையவர்கள்.
- வான்படை மற்றும் கடற்படைக்கான விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2 (12ஆம் வகுப்பு) தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி, விண்ணப்பதாரர் உடல் மற்றும் மன ரீதியாகத் தகுதியுடையவராக இருக்க வேண்டும்.
- எந்தவித நோய், சிண்ட்ரோம் (syndrome) உள்ளவர்கள், மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க முடியாது.
- ஒழுங்கு நடவடிக்கை காரணமாக ஏதேனும் ஆயுதப்படை பயிற்சி நிறுவனத்திலிருந்து முன்பு விலகியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது.
CDS தேர்வும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டிற்கு இரு முறை நடத்தப்படுகிறது. இதற்கான குடியுரிமை நிபந்தனைகள் NDA தேர்வுக்கானவற்றைப் போலவே இருக்கும்.
கல்வித்தகுதியை பொறுத்தவரை, இந்திய ராணுவக் கல்லூரி (Indian Military Academy) மற்றும் OTA-வில் (Officers Training Academy) சேர விரும்புவோர் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இந்திய கடற்படை அகாடமியில் சேர, பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விமானப்படை அகாடமியில் சேர, 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களை படித்திருப்பதும், பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்பதும் அடிப்படை தகுதிகள் ஆகும். சில தொழில்நுட்பப் பதவிகளுக்கு, பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
தேர்வில் என்ன நடக்கும்?
NDA-வில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு, எழுத்துத் தேர்வு, நுண்ணறிவு மற்றும் ஆளுமை தேர்வுகளை கொண்டுள்ளது.
எழுத்துத் தேர்வுகளில், கணிதம் மற்றும் பொதுத் திறன் சோதனை ஆகிய இரு தாள்கள் உள்ளன. CDS தேர்வில் எழுத்துத் தேர்வு, அதைத் தொடர்ந்து நேர்காணல் நடத்தப்படுகிறது. இதில் ஆங்கிலம், பொது அறிவு மற்றும் தொடக்கநிலை கணிதத் தேர்வுகள் அடங்கும். OTA-வுக்கான தேர்வில் கணித பரீட்சை இல்லை
எழுத்துத் தேர்வை நடத்தும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களைப் பெற்ற தேர்வர்களின் பட்டியலைத் தயாரிக்கிறது.
தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சேவைகள் தேர்வு வாரியம் (SSB), நுண்ணறிவு மற்றும் ஆளுமைத் தேர்வுகளை நடத்தும். SSB ஐந்து நாட்கள் நீடிக்கும் செயல்முறை.
CDS மூலம் OTA-வுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் குறுகிய சேவை பணிக்கு (SSC) தகுதியுடையவர்கள். அவர்களின் சேவை காலம் 10 ஆண்டுகளாக இருக்கும். இருப்பினும், இந்தக் காலத்திற்குப் பிறகு அவர்கள் நிரந்தர பதவியை பெற விரும்பினால், அவர்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம்.
மூன்று வருட NDA பயிற்சிக்குப் பிறகு, கேடட்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அகாடமியில் பயிற்சி பெறுகிறார்கள். NDA கேடட்டுகளுக்கு இந்தப் பயிற்சி ஓராண்டு காலம் வரை நீடிக்கும். அதாவது, NDA-வில் படித்த மாணவர்கள் முழு நான்கு வருட பயிற்சிக்குப் பிறகு அதிகாரிகளாக மாறுகிறார்கள்.
CDS பயிற்சியின் காலம் அகாடமியைப் பொறுத்து மாறுபடும். உதாரணமாக, இந்திய ராணுவ அகாடமி (IMA), இந்திய கடற்படை அகாடமி (INA) மற்றும் விமானப்படை அகாடமி ஆகியவற்றில் 18 மாதங்கள் பயிற்சி என்றால், அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் (OTA) 11 மாதங்கள் பயிற்சி கொடுக்கப்படும்.
ராணுவத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இந்திய ராணுவ அகாடமிக்கும் (IMA), விமானப்படைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் விமானப்படை அகாடமிக்கும் (AFA), கடற்படைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இந்திய கடற்படை அகாடமிக்கும் (INA) செல்கிறார்கள்.
NDA பயிற்சி முடிந்ததும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும் பெறுகிறார்கள். CDS படிப்பவர்களுக்கு மேலாண்மையில் டிப்ளமோ பட்டமும் வழங்கப்படுகிறது.

பட மூலாதாரம், Sunil Ghosh/Hindustan Times via Getty Images
கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
எழுத்துத் தேர்வு, SSB நேர்காணல்/ஆளுமைத் தேர்வு, ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செயல்முறை நடைபெறும்.
NDA-வில் சேர்பவர்களுக்கான தேர்வுகள், பயிற்சிகள் ஆகியவற்றை தெரிந்துக் கொண்டோம். தேர்வு மதிப்பெண்களுக்கு அப்பாற்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு இருக்க வேண்டிய திறன்கள் யாவை? என்பதையும் தெரிந்துக் கொள்வோம்.
ராணுவத்திற்கான தேர்வு செயல்முறை என்பது கல்வித் தகுதியை மட்டுமல்ல, தலைமைத்துவ குணங்களையும் கருத்தில் கொள்கிறது என்று மேஜர் ஜெனரல் (ஓய்வு) சஞ்சீவ் டோக்ரா கூறுகிறார். ஏனெனில் இந்த கேடட்கள் இறுதியில் ராணுவத்தின் உயரதிகாரிகளாக மாறுவார்கள்.
SSB-ல் ஐந்து நாட்கள் நீடிக்கும் இந்த செயல்முறையின் நோக்கம், விண்ணப்பதாரர்கள், அதிகாரி போல் பணியாற்றும் திறன்களை மதிப்பீடு செய்வதே ஆகும் என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images

எவ்வாறு தயார் செய்வது?
இந்திய ராணுவம் முதலிடம் பெறுபவர்களை விரும்பவில்லை, மாறாக பொறுப்பான மற்றும் ஒழுக்கமானவர்களையே விரும்புகிறது என்று சஞ்சீவ் டோக்ரா கூறுகிறார்.
ஒருவர், அவராகவே இருக்கவேண்டும் என்று கூறும் அவர், உங்கள் ஆளுமையில் உண்மையில் இல்லாத எந்த அம்சத்தையும் உங்களின் நடத்தையில் காட்ட முயற்சிக்கக்கூடாது என்கிறார்.
''எனவே, தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், உண்மையாகவும், நேர்மையாகவும், பொறுப்புடனும் இருக்க வேண்டும். கடின உழைப்பாளியாகவும், ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும். ஏதேனும் ஓர் ஹாபியை வளர்த்துக் கொள்ளுங்கள், விளையாட்டில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.''
மொபைல் போனில் நேரத்தை வீணாக்குவதற்குப் பதிலாக, புத்தகங்களைப் படிக்கலாம், மக்களுடன் இணையுங்கள் என்கிறார் அவர்
"ராணுவத்தில் சேர வேண்டும் என்று கனவு காணும் ஒவ்வொருவரும் தலைவராக நடந்து கொள்ளத் தொடங்க வேண்டும். ஆளுமையை சிறப்பாக வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்" என்று சஞ்சீவ் டோக்ரா கூறுகிறார்.
சஞ்சீவ் டோக்ராவின் கூற்றுப்படி, நேர்காணலின் போது விண்ணப்பதாரர்கள் தங்களை தெளிவாகவும் நேரடியாகவும் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். ராணுவத்தின் பயிற்சி, யாரையும் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கும் வகையில் உள்ளது.

பட மூலாதாரம், X/@praful_patel
வேறு வழிகள் உள்ளதா?
NDA மற்றும் CDS பயிற்சி இரண்டிற்கும் கட்டணம் இல்லை என NDA மூலம் ராணுவத்தில் சேர்ந்த ஒரு அதிகாரி விளக்கினார். கேடட்களின் பயிற்சி, தங்குமிடம் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளை அரசாங்கமே ஏற்கிறது.
இருப்பினும் இந்த ஆண்டு NDA தேர்வுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, கேடட்கள் மூன்று வருட பயிற்சி காலத்தில் ஆடைகள், பாக்கெட் அலவன்ஸ், குழு காப்பீடு போன்றவற்றுக்காக அகாடமிக்கு சுமார் 35,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
மூன்று வருட NDA பயிற்சிக்குப் பிறகு, சிறப்பு அகாடமியில் சேரும் கேடட்களுக்கு உதவித்தொகைக் கொடுக்கப்படும். CDS பயிற்சி பெறுபவர்களுக்கும் இது பொருந்தும்.
CDS மற்றும் NDA இரண்டிலும் பயிற்சி பெறுபவர்களுக்கு மாதந்தோறும் 56 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கொடுக்கப்படும்.
NDA மற்றும் CDS தவிர, ராணுவத்தில் அதிகாரியாக சேர்வதற்கு வேறு சில வழிகள் உள்ளன.
உதாரணமாக, ராணுவத்தில், PCM (Physics, Chemistry, Mathematics) மாணவர்களுக்கான தொழில்நுட்ப நுழைவுத் திட்டம் ஒன்று உள்ளது. சட்டப் படிப்பு முடித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன
கடற்படையில் குறுகிய கால சேவை பணிக்காக பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு இந்திய கடற்படை நுழைவுத் தேர்வு (INET) நடத்தப்படுகிறது. விமானப்படைக்கு விமானப்படை பொது சேர்க்கை தேர்வு (AFCAT) உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












