You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விகாஷ் யாதவிற்கு முன்பு இவர்கள் 'ரா' ஏஜென்டுகளாக வெளிநாடுகளில் செயல்பட்டார்களா?
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி ஹிந்தி
கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக இந்திய குடிமகன் விகாஷ் யாதவ் மீது அமெரிக்க நீதித்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, ஏப்ரல் 29 அன்று வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியான செய்தியில், ''வெள்ளை மாளிகையில் மோதியை, அதிபர் பைடன் வரவேற்கும் வேளையில், இந்திய உளவு அமைப்பான 'ரா' அதிகாரி ஒருவர் குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்வதற்காக ஏவிய கூலிபடைக்கு ஆலோசனைகளை வழங்கினார். குர்பத்வந்த் சிங் பன்னுன், அமெரிக்காவில் மோதியை கடுமையாக விமர்சிப்பவர்.”என குறிப்பிட்டுள்ளது
ரகசிய தகவலின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த செய்தியின்படி, இந்திய ஏஜென்ட் விக்ரம் என்ற விகாஷ் யாதவ், பன்னுனின் நியூயார்க் முகவரியை கூலிப்படைக்கு அனுப்பியுள்ளார்.
மேலும், பன்னுனை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த நடவடிக்கைக்கு அப்போதைய 'ரா’ தலைவர் சமந்த் கோயல் ஒப்புதல் அளித்தார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
''யாதவ் ஒரு சிஆர்பிஎஃப் அதிகாரி, எனவே அமெரிக்க உளவுத்துறை வலையமைப்பில் சிக்காமல் இருக்கும் தேவையான பயிற்சியும் திறமையும் அவருக்கு இல்லை” என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பன்னுனைக் கொல்ல ரா அதிகாரியால் அமர்த்தப்பட்ட நிகில் குப்தா, அமெரிக்க அரசாங்கத்தின் உளவாளியாக இருக்கும் ஒரு நபரிடம் தெரியாமல் இந்த கொலைக்கான திட்டம் பற்றி கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியான செய்தியை 'ஆதாரமற்றது மற்றும் உண்மையற்றது' என்று விவரித்தார்.
''ஆபரேஷன்களை செய்து முடிக்க பல மாதங்கள் ஆகும். சிலவற்றை முடிக்க வருடக்கணக்கு கூட ஆகும். ஆனால், ரா-வின் மூத்த அதிகாரிகள் மற்றும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய மூத்த அதிகாரிகள் ஆப்ரேஷன்களை உடனே முடிக்க வேண்டும் என நினைப்பார்கள். ரா அமைப்புக்கு அரசியல் அழுத்தங்கள் இருக்கலாம் என்பதையும் தவிர்க்க முடியாது'' என பெயர் கூற விரும்பாத முன்னாள் ரா சிறப்பு செயலாளர் ஒருவர் கூறுகிறார்.
''நிகில் குப்தா இதற்கு முன்பு ஆப்கானிஸ்தான் மற்றும் பிற நாடுகளில் ரா ஏஜென்சியின் செயல்பாடுகளில் உதவியவர். ஆனால், மேற்கத்திய நாடுகளில் நடந்த ஆபரேஷனில் அவர் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறை'' என்கிறார்கள் நிகிலின் பின்னணியை அறிந்தவர்கள்.
குல்பூஷன் ஜாதவ் வழக்கு
இந்தியர் ஒருவர் வெளிநாட்டில் கைது செய்யப்படுவது அல்லது நாடு கடத்தப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இதுபோன்ற சில சம்பவங்கள் நடந்துள்ளன.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, குல்பூஷன் ஜாதவ், இந்தியாவுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, பாகிஸ்தான் - இரான் எல்லையில் பிடிபட்டார்.
இந்தியக் கடற்படையின் முன்னாள் அதிகாரியான ஜாதவ் இன்னும் பாகிஸ்தான் சிறையில் இருக்கிறார். அவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டுமின்றி, ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளிலும், 'ரா’ ஏஜென்டுகள் என கூறப்படுபவர்களுக்கும், அந்தநாடுகளின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பினருக்கு இடையே பல மோதல்கள் நடந்துள்ளன.
இந்த நாடுகளில், ரா உளவாளிகள் என்று கூறப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
வாஷிங்டன் போஸ்டின் இந்திய செய்தி அலுவலகத்தின் தலைவர் கேரி ஷே, "காலிஸ்தான் இயக்கத்தை இந்திய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இந்திய அரசால் கருதப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள இந்திய புலனாய்வு அதிகாரிகள் காலிஸ்தான் இயக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்திய அதிகாரிகளின் இந்த செயல்பாடுகளை சில சமயங்களில் அந்த நாடுகளின் அரசுகள் விரும்புவதில்லை'' என 'தி வயர்' ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஜெர்மனியில் சிறையில் அடைக்கப்பட்ட 'ரா ஏஜென்டுகள்'
“2019-ஆம் ஆண்டில், ஜெர்மனியில் வசிக்கும் சில சீக்கியர்கள் ரா ஏஜென்டுகளாக நியமிக்கப்பட்டனர். அவர்களை ஜெர்மன் பாதுகாப்பு ஏஜென்சிகள் கைது செய்து வழக்கு தொடர்ந்தன. காலிஸ்தான் மற்றும் காஷ்மீர் செயற்பாட்டாளர்களை உளவு பார்த்ததற்காகவும், ரா அமைப்புக்கு தகவல் தெரிவித்ததற்காகவும் இந்தியத் தம்பதிகளான மன்மோகன் மற்றும் கன்வால்ஜித் ஆகியோருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது” என்றார் பெயர் கூற விரும்பாத முன்னாள் ரா அதிகாரி ஒருவர்.
ஜெர்மன் ஊடகமான Deutsche Welle ஒரு செய்தியில், "மன்மோகன் 2015 ஜனவரியில் ராவுக்காக உளவு பார்க்கும் பணியைத் தொடங்கினார். ஜூலை 2017 முதல் அவரது மனைவி கன்வால்ஜித்தும் அவருடன் இணைந்து பணியாற்ற தொடங்கினார். ரா ஏஜென்சி, அவர்களின் சேவைகளுக்கு ஈடாக 7,200 யூரோக்களை வழங்கியது. விசாரணையின் போது, இருவரும் இதனை ஒப்புக்கொண்டனர். அவர்கள் ரா அதிகாரிகளை பலமுறை சந்தித்ததையும் ஒப்புக் கொண்டனர்." என குறிப்பிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட இரண்டு ரா ஏஜென்டுகள்
2020-21-ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவிலும், 'ரா ஏஜென்டுகள்' என்று கூறப்படும் இரண்டு பேர், அங்குள்ள உளவுத்துறை அமைப்பால் பிடிபட்டனர். அவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படி ஆஸ்திரேலியா கேட்டுக் கொண்டது.
இந்த விவகாரம் நடந்த சமயத்தில் இரண்டு முன்னணி ஆஸ்திரேலிய ஊடகங்களான சிட்னி மார்னிங் ஹெரால்டு மற்றும் ஏபிசி நியூஸ் ஆகியவை ஒரே நாளில் பெரிய கட்டுரையை வெளியிட்டன. அதில், "ஒரு பெரிய உளவு நெட்வொர்க் நாட்டில் இருந்து அகற்றப்பட்டது. உளவாளிகள் நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது'' என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2024 ஆம் ஆண்டு ஏபிசி நியூஸ் வெளியிட்ட செய்தியில்,''இந்தியாவின் மோதி அரசாங்கம் ஆஸ்திரேலியாவில் உளவாளிகளின் நெட்வொர்க்கை அமைத்துள்ளது'' என குறிப்பிட்டுள்ளது.
''ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய மக்களைக் கண்காணித்ததாகவும், ஆஸ்திரேலியாவின் ரகசிய பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் அதன் வணிக உறவுகள் பற்றிய தகவல்களை சேகரித்ததாகவும் அந்த நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது'' என்கிறது அந்த செய்தி
பிரிட்டனில் காலிஸ்தான் செயற்பாட்டாளர்களை கண்காணித்த குற்றச்சாட்டு
“2014-15 இல், சமந்த் கோயல் லண்டனில் ரா ஏஜென்சியின் நிலையத் தலைவராக இருந்தபோது, பிரிட்டனின் உளவுத்துறை பிரிவான MI-5, சமந்த் லண்டனில் நிலையத் தலைவராக இருக்கும் வரம்புகளை மீறுவதாக எச்சரித்தது'' என வாஷிங்டன் போஸ்ட் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
''அந்த சமயத்தில் பிரிட்டன் அதிகாரிகள் அவரை நாட்டை விட்டு வெளியேற்றவும் நினைத்தனர். மேலும் இந்திய ஏஜென்டுகள் காலிஸ்தான் தலைவர் அவதார் சிங் கந்தாவை பின்தொடர்ந்ததாகவும் மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது'', எனவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் செய்தியின்படி, ''பிரிட்டன் அதிகாரிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, கோயல் கோபமாக, 'இந்தியப் பாதுகாப்புக்கு இவர்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள். எனவே அவர்களைக் கையாள்வது எங்கள் அதிகார வரம்பிற்கு உட்பட்டது' என்று கூறியுள்ளார்''.
கோயல் லண்டனில் இருந்து டெல்லி திரும்பினார். ரா பிரிவின் தரவரிசையில் உயர்ந்து, 2019 இல் அதன் தலைவர் பதவியை அடைந்தார்.
பிரிட்டன் ஊடகமான கார்டியனில், ஏப்ரல் 4, 2024 அன்று ஒரு செய்தி வெளியிடப்பட்டது. அதில், ''பாகிஸ்தானில் காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புடையவர்களை குறிவைத்து கொலை செய்யும் முயற்சியில் ரா பிரிவு ஈடுபட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் உடனான நேர்காணல்களின் அடிப்படையில், இந்த செய்தி தயாரிக்கப்பட்டதாக கார்டியன் கூறுகிறது.
இந்தியாவில் தேர்தல் பிரசாரத்தின் போது, ''நாங்கள் எதிரிகளின் பகுதிகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவோம் என்பது, எதிரிகளுக்கும் தெரியும்'' என பிரதமர் நரேந்திர மோதி பேசியது, இந்த குற்றச்சாட்டுக்கு மேலும் வலு சேர்த்தது.
ஆனால், இந்திய அரசு, 'நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கு' எங்களது கொள்கைகளில் இடமில்லை என்று கூறி வருகிறது.
அமெரிக்கா, கனடா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள், பன்னுன் மற்றும் நிஜ்ஜார் போன்ற காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்திய அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
1980ல் காலிஸ்தான் செயற்பாட்டாளர் தல்விந்தர் சிங் பர்மர் மீது இந்தியா புகார் அளித்தும் கனடா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதன் பின்னர் 1985 ஆம் ஆண்டு ஏர் இந்தியா கனிஷ்கா குண்டுவெடிப்புக்கு பர்மர் மூளையாக செயல்பட்டார். இதில் 329 பேர் கொல்லப்பட்டனர்.
பாபர் கல்சா என்ற கடும்போக்கு அமைப்பின் முதல் தலைவர் பர்மர் ஆவார். 1992 இல் இந்தியாவில் பஞ்சாப் காவல்துறையினருடன் நடந்த என்கவுன்டரில் பர்மர் கொல்லப்பட்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)