மாவோயிஸ்டுகளின் உடல் தகனத்தில் மனித உரிமை மீறலா? குடும்பத்தினர் குற்றச்சாட்டு
மே 21 ஆம் தேதி சத்தீஸ்கரின் அபூஜ்மாடில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட 7 மாவோயிஸ்டுகளின் உடல்கள் இங்கே தகனம் செய்யப்பட்டன. இவற்றில் நம்பல்லா கேசவ்ராவ் உடலும் அடங்கும். குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு பிறகு ஊடகங்கள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்புப் படையினர் இங்கு கண்ணிவெடிகள் மற்றும் அடையாள அட்டைகளைத் தேடி வருகின்றனர். இந்தக் காடு கடந்த நான்கு தசாப்தங்களாக மாவோயிஸ்டுகளின் கோட்டையாக இருந்து வருகிறது. கோவா மாநிலத்தின் அளவிற்கு இருக்கும் இந்தப் பகுதியின் பெரும்பகுதியை இந்திய அரசால் இதுவரையில் சர்வே செய்ய முடியவில்லை. இந்திய அரசின் நக்ஸல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் கீழ் கடந்த 15 மாதங்களில் இங்கு 400க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புப்படையினர் கூறுகின்றனர்.
இதுபோன்ற ஒரு மோதல் 2025 மே 21 ஆம் தேதியன்று நடந்தது. அதில் 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில் சிபிஐ மாவோயிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் நம்பல்லா கேசவ் ராவும் கொல்லப்பட்டார்.
பின்னர் 26 ஆம் தேதி உடல்களின் மோசமான நிலையைக் காரணம் காட்டி நாராயண்பூரிலேயே இறுதிச் சடங்குகளை செய்யுமாறு குடும்பத்தினரிடம் போலீசார் கூறினர். இதன் பிறகு சில மணி நேரங்களுக்குள் பலத்த மழைக்கு இடையே உடல்களை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்திருந்த நிலையில் ஊடகங்கள் அங்கு நுழைய அனுமதிக்கப்படவில்லை. மாலையில் கேசவ்ராவ் உட்பட 7 மாவோயிஸ்டுகளின் உடல்கள் ஆதிவாசி முக்திதாமில் போலீசாரால் தகனம் செய்யப்பட்டன.
இதை மனித உரிமை மீறல் என்று கூறியுள்ள குடும்ப உறுப்பினர்கள் தாங்கள் மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்லப்போவதாக கூறியுள்ளனர்.
இந்தியாவில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் மோதல் ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கியுள்ளது. 2000 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மாவோயிஸ்டுகளுடனான மோதல்களில் 11,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த பொதுமக்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதே காலகட்டத்தில் குறைந்தது 6,160 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



