You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா-கனடா மோதலால் பிரதமர் மோதிக்கு என்ன சிக்கல்?
- எழுதியவர், ராகவேந்திர ராவ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
இந்தியாவுக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த போதிலும், அதற்கான ஆதாரங்களை கனடா இந்தியாவுடன் பகிரவில்லை, அல்லது பகிரங்கமாக அறிவிக்கவில்லை.
இந்த விவகாரம் தொடங்கியதில் இருந்தே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.
கனடாவில் மக்கள் செல்வாக்கு மதிப்பீடுகளில் பின்தங்கியிருக்கும் ட்ரூடோ, அவரது உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்காக நிஜ்ஜார் கொலைப் பிரச்னையை எழுப்புவதாகக் கூறப்படுகிறது.
ஜஸ்டின் ட்ரூடோவின் அரசியல் கூட்டாளியான New Democratic Party - NDPயின் தலைவர் ஜக்மீத் சிங், காலிஸ்தானுக்கு ஆதரவானவர். அதனால்தான் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மீதான ட்ரூடோவின் நிலைப்பாடு மென்மையானதாகக் கருதப்படுகிறது.
இந்த மோதலின் ஒரு பகுதியாக, இந்தியாவில் தேடப்படும் நபர்கள் கனடாவில் தஞ்சம் புகுவதாகவும், இவர்களுக்கெதிராக கனடா எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும், அவர்களை நாடு கடத்துவதில் எந்த உதவியும் செய்வதில்லை எனவும் இந்தியா குற்றம் சாட்டியிருக்கிறது.
அனைவரும் ட்ரூடோவின் அடுத்த கட்ட நடவடிக்கையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான இந்த சர்ச்சையால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு என்ன சிக்கல் ஏற்படும் என்பதைப் புரிந்துகொள்வதும் அவசியம்.
2024 பொதுத்தேர்தல் மீது முழு கவனம்
அரசியல் நிபுணர்களின் கூற்றுப்படி, கனடாவுடனான மோதல் இந்தியாவில் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதை பிரதமர் மோதி உன்னிப்பாக கவனிக்கிறார்.
2019 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில், அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானின் பாலகோட்டில் இந்திய விமானப்படை மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையை பாரதிய ஜனதா கட்சி மீண்டும் மீண்டும் குறிப்பிட்டது.
இதனால் அக்கட்சிக்குப் பலன் கிடைத்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அப்படியென்றால் கனடாவுடன் நிலவி வரும் மோதலால் இதே பா.ஜ.க.வுக்கு மீண்டும் ஆதாயம் கிடைக்குமா?
கனடாவின் குற்றச்சாட்டுகளை இந்தியா முற்றிலுமாக நிராகரித்துள்ளது. ஆனால் உண்மையில் இந்தியாவின் ரகசிய முகவர்கள், கனேடிய மண்ணில் இத்தகைய ஒரு கொலை நடவடிக்கையை மேற்கொண்டிருப்பார்களா என்பது குறித்த விவாதங்களும் எழுந்துள்ளன.
மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு
எழுத்தாளரும் அரசியல் ஆய்வாளருமான நிலஞ்சன் முகோபாத்யாய், பாபர் மசூதி இடிப்பு மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் முக்கிய நபர்களைப் பற்றிப் புத்தகங்களை எழுதியுள்ளார்.
அவர், பிரதமர் மோதி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்ள பார்ப்பதாகக் கூறுகிறார். “அதனால் அவர் வெளிநாடுகளுடனான உறவைப் பற்றி கவலைப்பட மாட்டார். இந்த ஆண்டு ஜனவரியில் இருப்பதாகத் தோன்றியதைப் போல விஷயங்கள் சுமுகமாக இல்லை. மோதி தனது வெற்றி வாய்ப்பு குறித்து கவலைப்படுவார். அதுவே அவரது கவனமாக இருக்கும்," என்கிறார்.
இந்த முறை 2019-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்தது போல ‘உள்ளே புகுந்து தாக்கியதாக’ விளம்பரப்படுத்திக்கொள்ள மோதியால் முடியாது, என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
"கனடாவிற்குள் நுழைந்து கொன்றதாக இந்தியா பொது மன்றங்களில் சொல்லிக்கொள்ள முடியாது. மூடிய கதவுகளுக்கு பின்னால் சொல்லலாம்ம்," என்கிறார் முகோபாத்யாய்.
இந்த சம்பவத்தின் மூலம், இந்தியாவ்ன் ரகசிய முகவர்கள் மேற்கத்திய நாடுகளிலும் இதுபோன்ற செயல்களைச் செய்கிறார்கள் என்பதைக் காட்டி, அரசாங்கம் நாட்டில் ஒரு வீரமான பிம்பத்தைக் கட்டமைக்க முயற்சிக்கும் என்று முகோபாத்யாய் கூறுகிறார்.
மென்மையான நாடு என்ற பிம்பத்தை மாற்ற முயற்சியா?
இந்த விஷயத்தில் இந்தியாவின் இதுவரையிலான நிலைப்பாடு, இந்தியா மென்மையன நாடு அரசு என்ற தனது பிம்பத்தை மாற்ற முயல்கிறதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாகக் குற்றம் சாட்டியபோது, இந்தியா அதை அபத்தமானது, மற்றும் உள்நோக்கம் கொண்டது என்று கூறி நிராகரித்தது.
நிஜ்ஜார் கொலை தொடர்பாகக் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் திங்கள்கிழமை கேட்கப்பட்டபோது, ‘இது (அத்தகைய கொலைகள்) இந்திய அரசின் அணுகுமுறை இல்லை என்று இந்தியா கனடாவிடம் கூறியுள்ளதாகக் கூறினார்.
மேலும், அவர்களிடம் இதுகுறித்து குறிப்பிட்ட தகவல்கள் இருந்தால், அதை தம்மிடம் தெரிவிக்குமாறும், அதைப் பரிசீலிக்க இந்தியா தயாராக இருப்பதாகவும் இந்தியா கனடாவிடம் கூறியுள்ளது.
திட்டமிட்ட குற்றச் செயல்களின் பின்னுள்ளப் பிரிவினைவாத சக்திகள் பற்றிய பல தகவல்களை கனடாவுக்கு இந்தியா அளித்துள்ளது என்றும் ஜெய்சங்கர் கூறினார்.
மேலும் பேசிய ஜெய்சங்கர், இச்சம்பவத்தின் முழு பின்னணியும் இல்லாமல் இது முழுமைபெறாது என்றும், கடந்த சில ஆண்டுகளில் பிரிவினைவாத சக்திகள், வன்முறை மற்றும் தீவிரவாதம் தொடர்பான பல திட்டமிடப்பட்டக் குற்றங்களை கனடா கண்டுள்ளது என்றும் இவை அனைத்தும் ஆழமாக பின்னிப் பிணைந்தவை என்றும் கூறினார்.
தேடப்படும் நபர்கள் பலரை தம்மிடம் ஒப்படைக்குமாறு கனடாவிடம் இந்தியா கேட்டுள்ளதாகவும், பயங்கரவாதத் தலைவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசியல், பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் நிபுணரான முனைவர் சுவ்ரோகமல் தத்தா, இன்றைய இந்தியாவின் பிம்பத்தை 20 ஆண்டுகளுக்கு முந்தைய பிம்பத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், பெரிய வித்தியாசம் உள்ளது, என்கிறார்.
“முன்னதாக, இந்தியாவை யார் வேண்டுமானாலும் குறிவைக்கலாம். கனடாவில் ஏர் இந்தியா விமானம் கடத்தப்பட்டபோது என்ன நடந்தது என்பதையும் நாம் பார்த்தோம். அதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை," என்கிறார்.
"ஏனென்றால் இந்தியா மிகவும் பலவீனமான நாடாக கருதப்பட்டது. அது இந்தியாவின் பிம்பமாக இருந்தது. ஆனால் மோதி அரசாங்கம் வந்த பிறகு, இந்த பிம்பம் முற்றிலும் மாறிவிட்டது. இப்போது பிரச்சினைகளை இந்தியா தெளிவாக எதிர்கொள்கிறது,” என்கிறார்.
என்னென்ன சிக்கல்கள் எற்படலாம்?
காலிஸ்தான் பிரச்சினையைத் தவிர்த்து இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் பெரும்பாலும் சுமூகமானவை.
சமீபத்திய மோதல் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரிக்கலாம். இது வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இந்தச் சர்ச்சையை சமாளிக்க, உலகெங்கிலும் உள்ள நாடுகள் தனது தலைமையை எவ்வாறு உணர்கின்றன என்பதையும் பிரதமர் மோதி கண்காணித்து வருகிறார்.
கனடாவில் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் வாழ்கின்றனர். இதுபோன்ற மோதல் இச்சமூகத்தின் உணர்வுகளை பாதிக்கும்.
இது பிரதமர் மோதிக்கும் கவலை அளிக்கும் விஷயமாக இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
நிலஞ்சன் முகோபாத்யாயின் கூற்றுப்படி, இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே நடந்து வரும் சர்ச்சை ‘பஞ்சாபில் சீக்கியர்கள் மற்றும் சீக்கியர்கள் அல்லாதவர்களுக்கு இடையே ஒருவித உள்நாட்டு அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடும் கவலைக்குரிய விஷயம்’ என்கிறார்.
அப்படி ஏதாவது நடந்தால், அது மோதியின் இந்து வாக்கு வங்கியை பலப்படுத்த உதவும், என்கிறார் அவர்.
‘மோதியின் பிம்பத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை’
இப்பிரச்னையால் உள்நாட்டு அரசியலில் பிரதமர் மோதிக்கு பெரிய சிக்கல்கள் இல்லை என்று அரசியல் நோக்கர் சுவ்ரோகமல் தத்தா கூறுகிறார்.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான சர்ச்சை பிரதமர் மோதியின் பிம்பத்தை எந்த விதத்திலும் பாதிக்கப் போவதில்லை என்று அவர் கூறுகிறார்.
பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனைக் கொன்றதை உதாரணமாகக் காட்டி, மேற்கத்திய நாடுகளின் இரட்டை நிலைப் பிரச்சினையையும் டாக்டர் தத்தா எழுப்புகிறார்.
டாக்டர் தத்தாவின் கூற்றுப்படி, ‘இந்தியா இன்று உலகளாவிய தெற்கின் மறுக்கமுடியாத தலைவராக உள்ளது. தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையில் இந்தியாவை புறக்கணிக்க முடியாது என்பதை அனைத்து பெரிய மேற்கத்திய நாடுகளும் அறிந்திருக்கின்றன. "அவர்கள் இந்தியாவைப் புறக்க்ணித்தால் அது அவர்களின் சொந்த அரசியல் மற்றும் பொருளாதார நலன்களுக்கு மிக மோசமானதாக அமையும். அதனால்தான் ட்ரூடோ தனிமைப்படுவதைப் பார்க்கிறோம்," என்கிறார்.
'இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் சரிவு'
நிலஞ்சன் முகோபாத்யாய், சீனாவைக் கட்டுப்படுத்த இந்தியா தேவைப்படுவதால், இந்தியாவிடமிருந்து அமெரிக்கா தன்னை முழுமையாக விலக்கிக்கொள்ளாது என்பது இந்தியாவுக்குத் தெரியும், என்று கூறிகிறார்.
மேலும் அவர் கூறுகையில், "இந்த விசாரணையில் அவர்களுடன் ஒத்துழைக்க இந்தியா ஒப்புக் கொள்ளாத வரை, இந்த சூழ்நிலையை சமாளிப்பது கடினம். இந்தியா அப்படி ஒப்புக்கொள்ளச் சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. ஏனெனில் இது அவரது Five Eyes கொடுத்த உளவு என்று அமெரிக்கா கூறுகிறது. அதனால் ட்ரூடோ இந்த குற்றச்சாட்டை முன்வைக்க முடிந்தது,” என்கிறார்.
இந்தச் சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம் என்கிறார் முகோபாத்யாய்.
அவர் கூறுகிறார், "இந்தியா-கனடா உறவுகள் பாதிப்படையப் போகிறது. மக்களுக்கிடையான உறவுகளில் சிக்கல் ஏற்படும். இந்தியாவிற்கு எதிரான காலிஸ்தானி சக்திகளை கனடா வலுப்படுத்துவதாகக் கூறப்பட்டாலும், உள்நாட்டில் மோதியின் பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கும்.”
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்