You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை, வங்கதேசம் வரிசையில் நேபாளமா? - இந்தியாவின் அண்டை நாடுகளில் என்ன நடக்கிறது?
- எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாரே
- பதவி, பிபிசி செய்தியாளர்
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் இந்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது.
கடந்த வாரம் நேபாள அரசு 26 சமூக ஊடக தளங்களுக்குத் தடை விதித்தது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற பிரபலமான சமூக ஊடக மற்றும் மெசேஜிங் தளங்களும் இதில் அடங்கும்.
சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இளைஞர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
நேபாளத்தில் திங்கள்கிழமை நடந்த போராட்டத்தின் காட்சிகள், கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த போராட்டத்தை நினைவூட்டின.
இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டில் இலங்கையிலும் மக்கள் அரசுக்கு எதிராக பெரிய போராட்டங்களை நடத்தினர்.
சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவின் அண்டை நாடுகளில் உள்ள இளைஞர்கள் போராட்டங்கள் மூலம் பல வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.
தெற்காசியப் புவிசார் அரசியல் நிபுணரும், தெற்காசியப் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியருமான தனஞ்சய் திரிபாதி, "இந்த தெற்காசியப் பகுதி இளைஞர்கள் நிறைந்த பகுதி, ஆனால் அரசுகளால் இந்த இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியவில்லை. இந்த மூன்று நாடுகளின் போராட்டங்களிலும் இதுதான் பொதுவான ஒற்றுமை" என்கிறார்.
தனஞ்சய் திரிபாதியின் கூற்றுப்படி, நேபாளத்தில் 15 முதல் 24 வயது வரையிலான இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகம், ஆனால் இவர்களுக்கு வேலைவாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளன.
"நேபாளத்தில் மற்றொரு நெருக்கடி என்னவென்றால், முடியாட்சி முடிந்த பிறகு எந்த ஒரு அரசாங்கமும் ஐந்து ஆண்டுகள் முழுமையாகப் பதவியில் இல்லை. இதன் காரணமாக நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை நிலவுகிறது, மேலும் ஊழல் குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து எழுகின்றன. இப்போது, அரசு இளைஞர்களிடையே பிரபலமான செயலிகளையும் தடை செய்துவிட்டது," என்று அவர் கூறுகிறார்.
நேபாளத்தில் இருந்து பெருமளவிலான மக்கள் இந்தியா உட்படப் பல நாடுகளுக்கு வேலை தேடிச் செல்கின்றனர்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லாதது ஒருபுறம் இருக்க, சமீபத்திய தடைகளுக்குப் பிறகு அவர்களால் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ளக்கூட முடியவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இளைஞர்களின் பங்கு
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த போராட்டத்தில் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. அதேசமயம், இலங்கையின் போராட்டத்தில் பொருளாதாரப் பிரச்னைகள் ஆதிக்கம் செலுத்தின.
டெல்லியில் உள்ள அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் அமைப்பின் ஆய்வு மற்றும் வெளியுறவுக் கொள்கைப் பிரிவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஹர்ஷ் பந்த் கூறுகையில், "இலங்கை, வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய மூன்று நாடுகளின் போராட்டங்களுக்கான காரணங்கள் வேறுபட்டிருந்தாலும், மக்கள் எதிர்பார்ப்புகளுக்கும் அரசின் செயல்பாடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளிதான் இந்த போராட்டங்களுக்குப் பொதுவான காரணம்."
அவரது கூற்றுப்படி, "இந்த மூன்று போராட்டங்களிலும் 'இளைஞர்கள்' தான் மிகப் பெரிய காரணி. ஆட்சி மாற்றத்தின் மிகப் பெரிய தாக்கம் இளைஞர்கள் மீதே விழுகிறது. இந்த இளைஞர் பிரிவினர்தான் அரசின் மீது கோபமாக உள்ளனர்."
அரசு இளைஞர்களின் கோபத்தைத் தணிக்க முயற்சி செய்யாவிட்டால், இந்த போராட்டம் இன்னும் பெரிதாக வளரக்கூடும் என்று ஹர்ஷ் பந்த் நம்புகிறார்.
இருப்பினும், நேபாளப் போராட்டத்தில் தலைவரோ அல்லது அமைப்போ இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
தனஞ்சய் திரிபாதியும் இந்த கருத்தை ஒப்புக்கொள்வதாகத் தெரிகிறது.
"அரசு புரிதலுடனும் நெகிழ்வுத்தன்மையுடனும் நடந்து கொண்டால், இந்தப் போராட்டத்தை அமைதிப்படுத்த முடியும். இதில் இறந்தவர்களின் மரணம் குறித்து விசாரிக்க ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட வேண்டும். அரசு இளைஞர்களிடம் உணர்வுபூர்வமாக நடந்து கொள்ள வேண்டும், அது தற்போது காணப்படவில்லை," என்று அவர் கூறுகிறார்.
இதற்கு முன்னதாக, வங்கதேசத்தில் அரசு போராட்டக்காரர்களை கடுமையாகக் கையாள முயற்சித்தது, ஆனால் அது இளைஞர்களின் கோபத்தை இன்னும் அதிகரித்தது.
வங்கதேச மாணவர் போராட்டம்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர் போராட்டம், வன்முறை மற்றும் நூற்றுக்கணக்கானோர் இறப்பு ஆகியவற்றிற்கு மத்தியில், வங்கதேசத்தின் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியையும் நாட்டையும் விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
அரசு வேலைகளில் இடஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடங்கிய இந்த மாணவர் போராட்டம், நாடு தழுவிய போராட்டமாக மாறியது. இறுதியில் ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்வதற்கு காரணமாக இருந்தது.
இதன் மூலம் அவரது 15 ஆண்டுகால தொடர் ஆட்சி மற்றும் ஐந்தாவது பதவிக்காலம் திடீரென முடிவுக்கு வந்தது.
கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி தொடங்கிய மாணவர் போராட்டத்திற்குப் பிறகு, ஜூலை 21ஆம் தேதி வங்கதேச உச்ச நீதிமன்றம் அரசு வேலைகளில் இடஒதுக்கீட்டை கிட்டத்தட்ட ரத்து செய்தது.
ஆனால், இந்தத் தீர்ப்பு வந்தபிறகும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் கோபம் தீரவில்லை. ஷேக் ஹசீனாவின் ராஜினாமா கோரிக்கை மேலும் வலுப்பெற்றது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தொடங்கிய போராட்டம், நாட்டின் மூலை முடுக்குகளை அடைந்தது. எதிர்க்கட்சிகளும் வீதியில் இறங்கின.
மாணவர் அமைப்புகள் ஆகஸ்ட் 4 முதல் முழு ஒத்துழையாமைப் போராட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்திருந்தன.
அரசு இந்தப் போராட்டங்களை கடுமையாக ஒடுக்க முயன்றது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, ராணுவம் வீதியில் இறங்கியது, ஆனால் மக்கள் பின்வாங்கவில்லை.
ஆகஸ்ட் 4ஆம் தேதி நடந்த வன்முறையில் குறைந்தது 94 பேர் கொல்லப்பட்டனர்.
மாணவர் போராட்டம் தொடங்கியதில் இருந்து உயிரிழப்புகள் எண்ணிக்கை 300ஐத் தாண்டியது. ஆகஸ்ட் 5ஆம் தேதி ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
2022ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த போராட்டம்
2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையில் பணவீக்கம் வேகமாக அதிகரித்தது.
அந்நிய செலாவணி கையிருப்பு காலியானது. நாட்டில் எரிபொருள், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.
சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்பட்ட இந்த மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில், மக்கள் ஒரு நாளைக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டை எதிர்கொண்டனர்.
இந்த நிலைக்கு அதிபர் கோட்டாபய ராஜபக்சேவையும் அவரது குடும்பத்தினரையும் பலர் குற்றம் சாட்டினர். அவரது மோசமான கொள்கைகள்தான் அந்நிய செலாவணி கையிருப்பு காலியானதற்குக் காரணம் என்று நம்பப்பட்டது.
ராஜபக்சே குடும்பத்தினர் மீது ஊழல் மற்றும் பொதுமக்களின் பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுத்தனர். கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு சுற்றுலா வருவாய் குறைந்தது மற்றும் யுக்ரேன் போரால் எண்ணெய் விலைகள் உயர்ந்ததால் இந்த நெருக்கடி ஏற்பட்டதாக அவர்கள் வாதிட்டனர்.
அப்போது, போராட்டங்கள் இரவும் பகலும் தொடர்ந்து நடந்தன. மாலையில் கூட்டம் அதிகரித்தது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் முதல் பாதிரியார்கள் மற்றும் புத்த பிக்குகள் வரை அனைவரும் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் "கோட்டா கோ ஹோம்" (கோட்டா வீட்டுக்கு போ) என்ற கோஷம் எதிரொலித்தது.
இந்தப் போராட்டங்கள் சிங்களர், தமிழர் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய மூன்று முக்கிய சமூகங்களை ஒன்றிணைத்தன.
சில வாரங்களுக்குப் பிறகு, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தபோது, இந்தப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது.
சில நாட்களுக்குப் பிறகு, கோட்டாபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி, சிங்கப்பூரிலிருந்து தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்.
இந்த நிகழ்வு "அரகலய" அல்லது மக்கள் போராட்டத்தின் வெற்றியாகப் பார்க்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு