இலங்கையில் அனர்த்தம் நீங்கியும் அவசர கால சட்டத்தை நீட்டிப்பதா? எதிர்ப்பும் அரசு விளக்கமும்

    • எழுதியவர், ஆர்.யசிஹரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை அனர்த்தங்களில் ஒன்றான 'திட்வா' சூறாவளியின் தாக்கத்தினால், நாடு முழுவதும் ஏற்பட்ட பரவலான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் காரணமாக 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்களை பாதுகாக்கவும் அனர்த்தங்களைக் கையாளவும் திருத்தப்பட்ட பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 40) கீழ், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அனர்த்தம் ஏற்பட்ட வேளையில், அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தி பொதுமக்களை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற அழுத்தம் எதிர்க்கட்சிகளால் கொடுக்கப்பட்டதை அடுத்து, கடுமையான பாதிப்புகளுக்கு மத்தியில், ராணுவத்தினரை மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தவும், நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் மற்றும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றிப் பேணவும் இத்தகைய அசாதாரண நடவடிக்கைகள் அவசியமானவை என்று அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

எனினும் அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை நீட்டிப்பதா இல்லையா என்பது குறித்து தற்போது விவாதங்கள் எழுந்துள்ளன. சூறாவளி நாட்டைவிட்டு நகர்ந்து சில வாரங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது நிவாரண முகாம்கள் மூடப்பட்டு வருகின்றன. போக்குவரத்துத் தொடர்புகள் பெருமளவு சீரமைக்கப்பட்டு, மறுசீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இச்சூழ்நிலையில், அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்து அமல்ப்படுத்துவது எந்த வகையில் நியாயமானது என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இது அனர்த்த கால அவசரத் தேவைகளையும் தாண்டி, அரசாங்கம் தனது அதிகாரங்களைத் தக்கவைத்துக்கொள்ள எடுக்கும் முயற்சியோ என்ற அச்சத்தையும் விமர்சகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

உலகளாவிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு கரிசனை

தற்போதும் தொடரும் அவசரகால வழிகாட்டல்கள் மனித உரிமைகளுக்கு ஒவ்வாத மிகமோசமான கூறுகளை உள்ளடக்கியிருக்கின்றன என உலகளாவிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் ஆசியப்பிராந்திய ஆய்வாளர் ரொபேர்டா மொய்ஸக் கரிசனை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டிருந்த அறிக்கையில், தற்போது பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசர கால நிலையின் கீழான விதிகள் இதற்கு முன்னைய சில சந்தர்ப்பங்களில் முன்னைய அரசாங்கங்களினால் பயன்படுத்தப்பட்டதாகவும், அவற்றில் சில விதிகள் நாட்டின் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பான சரத்துக்கும், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச நியமங்களுக்கும் முரணானவையாகக் காணப்படுவதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அதுமாத்திரமன்றி ஜனாதிபதியையோ அல்லது அரசாங்கத்தையோ விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலப் பிரகடன விதிகள் பிரயோகிக்கப்படும் என அரசாங்கத்தின் பிரதிநிதிகளால் விடுவிக்கப்பட்ட பொது அறிவிப்புகள் குறித்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.

அத்தோடு அரச அதிகாரிகளுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைப்பது என்பது அரசியலமைப்பின் 14(1)(ஏ) பிரிவின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் ஓரங்கமாகும் எனவும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அதிகாரம் அநுரவின் கண்ணை மறைக்கிறது - ஐங்கரன் குகதாசன்

தற்போது மேலும் ஒருமாத காலத்திற்கு அவசரகால சட்டம் நீட்டிக்கப்பட்டிருப்பது குறித்து மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான ஐங்கரன் குகதாசன் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவசர கால நிலையைப் பிரகடனப்படுத்துவதற்கான அவசியமே இருக்கவில்லை என்றும், அப்பிரகடனத்தில் மனித உரிமைக் கோட்பாடுகளை மீறுகின்ற, மிதமிஞ்சிய அதிகாரத்தினை வழங்குகின்ற ஏற்பாடுகள் உள்ளன என்றும் கூறப்படுகின்ற சந்தர்ப்பத்தில், அப்பிரகடனம் நீடிக்கப்பட்டிருப்பது மிகுந்த கரிசனைகளைத் தோற்றுவித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

"எதிர்க்கட்சியாக இருந்தபோது, இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் குரலெழுப்பி வந்த அநுரகுமார திஸாநாயக்க, இன்று அதனையே செய்வது 'மாற்றம்' தொடர்பில் இருந்த சொற்ப அளவு நம்பிக்கையையும் தவிடுபொடியாக்குகின்றது. அதேபோல் அதிகாரம் அநுரவின் கண்ணை மறைக்கின்றது" எனவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு

எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகளும் அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டை கண்டித்துள்ளனர். குறிப்பாக இந்த நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, "அரசாங்கம் தற்போது செயற்படுத்தியுள்ள அவசரகால சட்டமானது, அனர்த்தத்தை கையாள நடைமுறைப்படுத்தியதாக தெரியவில்லை. மாறாக அரசாங்கம் தமக்கு எதிரான விமர்சனங்களை தடுக்க பயன்படுத்தும் கருவியாக இது கையாளப்படுகின்றது" என குற்றம் சுமத்தியிருந்தார்.

அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் கூறுகையில், "கடந்த காலங்களில் அவசரகால சட்டத்தின் கீழ் பல ஊடகவியலாளர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு காணாமலாக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்படவில்லை. பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதி கிடைக்கவும் இல்லை. இந்த நாட்டில் நீதி என்பது தகுதி தராதரம் பார்த்தே கையாளப்படுகின்றது. வடக்கு கிழக்கில் இன்றும் இராணுவ அடக்குமுறை நிலைமையே காணப்படுகின்றன. இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகள் எப்போதும் அவசரகால சட்டத்தின்கீழ் தான் உள்ளன. இந்த நிலைமைகளை மாற்றும்வரை தமிழர்களுக்கு விடிவுகாலம் இருக்காது" என்று தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கூறுகையில், "அனர்த்தத்தை கையாள நடைமுறைக்கு வந்துள்ள அவசரகால சட்டத்தில் தேடுதல் மற்றும் கைதுகள் என்பன எதற்காக உள்வாங்கப்பட்டுள்ளன? தடுப்புக்காவல் என்ற விடயம் எதற்காக உள்வாங்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எம்மத்தியில் உள்ளது. அனர்த்த முகாமைத்துவத்திற்காக அவசரகால சட்டம் என்றால் அது பொதுமக்களை பாதுகாக்க மட்டுமே கையாள வேண்டும். மாறாக அதனை கையாண்டு யாரையும் கைதுசெய்யவோ அல்லது தண்டிக்கவோ முடியாது. ஆனால் அதனையே அரசாங்கம் செய்ய நினைக்கின்றது" எனக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் விளக்கம்

இந்த குற்றச்சட்டுக்களை முழுமையாக நிராகரிக்கும் அரசாங்க தரப்பினர், அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தியதற்கான காரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ளது. அந்தவகையில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர இது குறித்து தெரிவிக்கையில், "இதற்கு முன்னர் நாட்டில் பல அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்த போதிலும் அவற்றைவிட மிக மோசமான அழிவொன்றை இம்முறை நாம் சந்தித்துள்ளோம்.

நாட்டில் 22 மாவட்டங்களிலும் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இன்று வரை முகாம்களில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆகவே இந்த நிலைமைகளை கருத்தில்கொண்டே அனர்த்த நிலைமைகளை கையாள ஜனாதிபதியினால் நடைமுறைக்கு கொண்டுவந்த அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதுகுறித்த நாடாளுமன்ற அனுமதியையும் நாம் பெற்றுக்கொண்டுள்ளோம்" என்றார்.

"இந்த அவசரகால சட்டத்தை பயன்படுத்தி ஊடக அடக்குமுறைகளை கையாளவோ அல்லது யாரையும் தண்டிக்கவோ அரசாங்கம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் செயற்படாது. மாறாக பொதுமக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்ய அரசு இயந்திரத்தை விரைவாக பயன்படுத்தி துரிதமாக சேவையாற்றவே கையாளப்படுகின்றது" எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சட்டம் குறித்து பொதுமக்கள் எந்த விதத்திலும் அச்சம் கொள்ளத்தேவையில்லை-பிரதமர்

அதேபோல் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறுகையில், 'திட்வா' சூறாவளியின் தாக்கத்தினால், நாடு முகங்கொடுத்த அழிவில் இருந்து இன்னமும் மீளவில்லை. மத்திய மலைநாட்டின் பொதுமக்கள் வாழும் பல பகுதிகளில் இன்னமும் அனர்த்த அச்சுறுத்தல்கள் உள்ளன. அவர்களை பாதுகாப்பான பகுதிகளில் மீள் குடியேற்ற வேண்டும். இவற்றை கையாளும் விதமாக அரச அதிகாரிகள் விரைவாக செயற்படவும், அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது என தெரிவித்தார்.

பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை முறையாக வழங்கவே அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது எனக் கூறிய அவர் இந்த சட்டத்தை தவறாக ஒருபோதும் கையாள மாட்டோம் என்றார்.

மேலும், நீண்ட காலத்திற்கு அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும் எந்த நோக்கமும் அரசாங்கத்திற்கு இல்லை. நாட்டில் சகல பகுதிகளிலும் பொதுமக்கள் வழமையான சாதாரண வாழ்கையை வாழ வேண்டும் என்பதே எமதும் எதிர்பார்ப்பாகும். அதுவரையில் மிகக்குறுகிய காலத்திற்கு இந்த சட்டம் நடைமுறையில் இருக்கும் எனவும் பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு