ரஷ்யாவிடம் அதிக எண்ணெய் வாங்கும் சீனாவை விட்டு, இந்தியாவை டிரம்ப் குறி வைப்பது ஏன்?

காணொளிக் குறிப்பு, சீனாவை டிரம்ப் குறி வைக்காதது ஏன்?
ரஷ்யாவிடம் அதிக எண்ணெய் வாங்கும் சீனாவை விட்டு, இந்தியாவை டிரம்ப் குறி வைப்பது ஏன்?

இந்தியா மீது கூடுதலாக 25 சதவிகித இறக்குமதி வரி விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டதை அடுத்து, இந்தியா மீதான அமெரிக்காவின் வரி 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த புதிய வரி ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வர உள்ளது.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம், யுக்ரேனில் ரஷ்யா நடத்தும் போரை இந்தியா ஊக்குவிக்கிறது என்றும், அதனால் தான் கூடுதல் வரி விதிப்பதாக டிரம்ப் கூறுகிறார். ஆனால், இது அடிப்படையற்றது என கூறும் இந்தியா, அமெரிக்காவும், பல ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவுடன் வணிகம் செய்து வருவதையும் சுட்டிக்காட்டுகிறது.

மேலும், இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சீனாவும் ரஷ்யாவின் பெரிய வர்த்தக கூட்டாளியாக இருக்கும் நிலையில் சீனாவை விட இந்தியா மீது அதிக அளவிலான வரியை டிரம்ப் விதித்துள்ளார்.

சீனாவைவிட இந்தியா மீது அதிக வரியை டிரம்ப் விதித்தது ஏன்?

ப்ளூம்பெர்க்கின் மூத்த உலகளாவிய விவகார ஆய்வாளர் கரிஷ்மா வாஸ்வானி, பிபிசிக்கு அளித்த பேட்டியில், வரி விஷயத்தில் சீனா மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டதாகக் கூறினார்.

டிரம்ப் வரிகள் மீதான சீனாவின் ராஜதந்திரம் மிகவும் முதிர்ச்சியடைந்ததாக உள்ளது. வளர்ச்சியடையாத வர்த்தக கூட்டாளி நாடுகள் சிலவற்றுக்கு சீனா வரிகளை பூஜ்ஜியமாக்கியுள்ளது. மேலும், ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து பொருட்களுக்கான சீரான தேவையை ஏற்படுத்தியது போன்ற நடவடிக்கைகளை எடுத்து, சீனா ஒரு அனுபவம் வாய்ந்த நாடு என்பதை நிரூபித்துள்ளது என்று கரிஷ்மா கூறுகிறார்.

அமெரிக்காவை சேர்ந்த தெற்காசிய ஆய்வாளர் மைக்கேல் குகல்மேன், இந்தியா மீதான அமெரிக்காவின் அதிக வரி மற்றும் சீனா மீதான குறைந்த வரிகள் பற்றி பேசுகையில், சீனா அமெரிக்காவை அதிகம் கோபப்படுத்தவில்லை என்றார்.

சண்டை நிறுத்தத்தில் தனது பங்கை குறிப்பிட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் தனக்கு பெருமை சேர்ப்பதைத் தடுக்க சீனா எதுவும் செய்யவில்லை. எந்த சீனத் தலைவரும் தொலைபேசியில் நீண்ட நேரம் டிரம்புடன் பேசி, எது சரி, எது தவறு என்பதை அவருக்குச் சொல்லவில்லை. ஆனால் இந்தியா இதை செய்தது என்கிறார் குகல் மேன்.

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் குறித்த டிரம்பின் கூற்றை இந்தியா மறுத்து வருவதை சுட்டிக்காட்டும் குகல்மேன், வர்த்தகம் மற்றும் வரி பிரச்னையில் இந்தியா மற்றும் இந்திய அரசாங்கத்தின் மீது டிரம்ப் அதிக கோபத்தை வெளிப்படுத்த இதுவே காரணமாக இருக்கலாம் என்கிறார்.

இது டிரம்பின் இரட்டை நிலைப்பாடு மற்றும் பாசாங்குத்தனமான செயல் என்கிறார் குகல்மேன்.

இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலாளர் கன்வல் சிபலும், டிரம்பின் அணுகுமுறையைப் பற்றி கேள்வி எழுப்புகிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்தியாவை வரிகளின் மன்னன் என்று டிரம்ப் தொடர்ந்து குறிவைக்கலாம், வரிகளை விதிக்கப் போவதாக மிரட்டலாம், காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய விருப்பம் தெரிவிக்கலாம், ஆனால் எது சரி, எது தவறு என்று கூட அவரிடம் மோதி சொல்லக்கூடாதா. அமெரிக்காவை ஒவ்வொரு நாளும் சீனாவின் செய்தித் தொடர்பாளர் விமர்சிக்கிறார், வெளிப்படையாக எதிர்க்கிறார். இருந்தபோதிலும், சீனா மீது வரி விதிப்பதை டிரம்ப் தாமதப்படுத்துகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

2022 டிசம்பர் 5 மற்றும் 2025 ஜூன் மாதத்துக்கு இடையில், ரஷ்யாவின் மொத்த நிலக்கரி ஏற்றுமதியில் சீனா 44 சதவீதத்தை வாங்கியது. அதே காலக்கட்டத்தில் இந்தியா 19 சதவீதத்தை வாங்கி உள்ளது.

கச்சா எண்ணெயை பொறுத்தவரை, ரஷ்யாவின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சீனா 47 சதவீதத்தை வாங்கி முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 38% வாங்கி இரண்டாவது இடத்தில் உள்ளது.

சரி, டிரம்பின் கோபத்துக்கு வர்த்தக ஒப்பந்தம்தான் காரணமா?

ஒரு காலத்தில் மோதியுடன் அன்பாக கைகுலுக்கிய டிரம்ப், இப்போது அவருக்கு எதிராகத் திரும்பியது ஏன்?

கடந்த காலத்தைப் பார்த்தால், அதன் அறிகுறிகள் ஏற்கெனவே தோன்றத் தொடங்கிவிட்டன. பரஸ்பர உறவுகளை விட தனிப்பட்ட 'கெமிஸ்ட்ரி'க்கு முன்னுரிமை கொடுக்கப்படக்கூடாது என்று ராஜீய விவகார நிபுணர்கள் முன்னரே எச்சரித்திருந்தனர்.

மோதிக்கும் டிரம்புக்கும் இடையிலான நட்பை பற்றிய ஊடக செய்திகள் நன்றாக தோன்றலாம், ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் சிக்கல்களை அது வெளிக்காட்டவில்லை. அதுமட்டுமல்ல, தனிப்பட்ட உறவுகள் அரசியலில் கைகொடுக்காது.

டிரம்பின் அரசியலில் உணர்ச்சிகள் ஒரு பொருட்டல்ல. எண்ணெய் அல்லது வர்த்தகப் பிரச்னையில் டிரம்புடன் இந்தியா உடன்படவில்லை என்றும், அதனால்தான் இதெல்லாம் நடக்கிறது என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், இதுவரை ஒப்பந்தம் இறுதிகட்டத்தை எட்டப்படவில்லை. விவசாயம் மற்றும் பால் துறையில் அமெரிக்காவுக்கு இந்தியா சலுகைகளை வழங்காததே இதற்குக் காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு