You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுறா துடுப்பு கடத்தல்: இந்தியாவில்தான் கழிவு, வெளிநாடுகளில் எகிறும் விலை - ஏன் தெரியுமா?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவில் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட சுறா மீன்களின் உடல் பாகங்களில் 65 சதவிகிதம் தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, உலக காட்டுயிர் நிதியம் (WWF) கூறியுள்ளது.
இந்தியாவில் கழிவாகப் பார்க்கப்படும் சுறா துடுப்புகளுக்கு உலக சந்தையில் வரவேற்பு கிடைப்பதால் கடத்தல் தொடர்வதாக, காட்டுயிர் குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறுகிறார். சுறா துடுப்பு கடத்தல் அதிகரிப்பது ஏன்?
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு யானைத் தந்தத்தைக் கடத்த முயன்றதாக, டிசம்பர் 7-ஆம் தேதியன்று மூன்று பேரை கடலோர பாதுகாப்புப் பிரிவு (Coastal security group) கைது செய்தது.
இவர்களில் ஒருவர் கடல் வழியாக யானைத் தந்தம், சுறா துடுப்பு ஆகியவற்றைக் கடத்தும் முகவராகச் செயல்பட்டு வந்ததாக, கடலோர பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக நாளேடுகளில் செய்தி வெளியாகியுள்ளது.
'15 மூட்டைகளில் சுறா துடுப்புகள்'
சுறா துடுப்பு கடத்தல் தொடர்பான மற்றொரு சம்பவம் கடந்த மே மாதம் ராமநாதபுரத்தில் நடந்தது. கொலை வழக்கு தொடர்பாக மரைக்காயர் பட்டினம் பகுதியில் உள்ள ஒரு நபரிடம் விசாரணை நடத்துவதற்காக திருப்புல்லாணி காவல் நிலைய போலீசார் சென்றுள்ளனர்.
அப்போது கடற்கரையோரம் இருந்த குடிசை வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். அங்கு 23 சாக்கு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 15 மூட்டைகளில் சுறா துடுப்புகள் (Shark Fin) இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுறா துடுப்புகள் பறிமுதல் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. திருப்புல்லாணி சல்லித்தோப்பு கடற்கரைப் பகுதியில் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் சுமார் 200 கிலோ எடையுள்ள சுறா துடுப்புகளை கியூ பிரிவு காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2012-13, 2013-14 ஆகிய ஆண்டுகளில் சுறா துடுப்புகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. சுறாக்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதால் கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதியன்று சுறா துடுப்புகளை ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டது.
'அதிகரிக்கும் சட்டவிரோத கடத்தல்'
ஆனால், அதையும் மீறி சுறா துடுப்புகளை சட்டவிரோதமாகக் கடத்துவது தொடர்வதாகக் கூறுகிறார், காட்டுயிர் ஆராய்ச்சியாளர் சங்கர் பிரகாஷ். "சீனா, இந்தோனீசியா, வியட்நாம், தாய்லாந்து நாடுகளில் சுறா துடுப்பு சூப் (Shark Fin soup) என்பது மிகவும் பிரபலமான உணவாக உள்ளது." என்கிறார் அவர்.
தென்னமெரிக்க நாடுகளிலும் இது உணவாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறும் சங்கர் பிரகாஷ், "மீனவர்களின் வலையில் சுறா சிக்கும்போது சிலர் வலையை அறுத்து கடலில் விட்டுவிடுவார்கள். சிலர் அதன் துடுப்புகளை கரைக்குக் கொண்டு வந்து விற்கின்றனர்." என்கிறார்.
பாதுகாக்கப்படும் உயிரினங்களின் பட்டியலில் அரிய வகை சுறாக்கள் இருப்பதால், அது தேவைப்படுவதாக நினைக்கும் நபர்கள் அதிக விலை கொடுத்து வாங்குவதற்குத் தயாராக உள்ளதாகவும் சங்கர் பிரகாஷ் தெரிவித்தார்.
உலகளாவிய சுறா விற்பனையில் அவற்றின் துடுப்புகள், மிக முக்கியப் பங்கு வகிப்பதாக உலக காட்டுயிர் நிதியம் கூறுகிறது. சுறா துடுப்பு சூப் என்பது மிகவும் விரும்பப்படும் உணவுப் பொருள்களில் ஒன்றாக உள்ளதாக, காட்டுயிர் கடத்தல்களைக் கண்காணிக்கும் டிராபிஃக் அமைப்பின் இந்தியாவுக்கான இணை இயக்குநர் மெர்வின் ஃபெர்னாண்டஸ் கூறியுள்ளார்.
'மீனவர்களைப் பயன்படுத்தும் முகவர்கள்'
தமிழ்நாட்டில் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி ஆகிய கடற்பரப்புகளில் கலங்கு சுறா, கணவாய் சுறா, கொண்டையன் சுறா, கொம்பன் சுறா, பால் சுறா எனப் பல வகையான சுறாக்கள் காணப்படுவதாகக் கூறுகிறார், செந்தில்வேல். இவர் ஏஐடியூசி மீனவர் சங்கத்தின் தேசிய துணைத் தலைவராக இருக்கிறார்.
ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை மூலமாக சுறா துடுப்புகள் கடத்தப்படுவதாகக் கூறும் அவர், "ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈடுபடும் நபர்கள் கடலிலேயே சுறா துடுப்புகளை வெட்டி எடுக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன" என்கிறார்.
சுறா துடுப்பை ராமநாதபுரம் பகுதியில் சுறா பீலி என அழைப்பதாகக் கூறும் செந்தில்வேல், "சுறா துடுப்பு பல ஆயிரம் ரூபாய்களுக்கு விற்கப்படுகிறது. துடுப்பின் அளவுக்கேற்ப விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கென சில முகவர்கள் மீனவர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்." எனவும் குறிப்பிட்டார்.
'இந்தியாவில் 160 சுறா இனங்கள்'
இந்திய காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தின்படி, தடை செய்யப்பட்ட சுறாவின் துடுப்பாக இருந்தால் குறைந்தது 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்தியாவில் 160 சுறா இனங்கள் பதிவாகியுள்ளதாக உலக காட்டுயிர் நிதியத்தின் தரவுகள் கூறுகின்றன. இவற்றில் 26 சுறா இனங்கள் காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை 1 மற்றும் 2இல் வைக்கப்பட்டுள்ளன.
"இந்தியாவில் திமிங்கில சுறா உள்பட சில வகையான சுறாக்களை மட்டும் பிடிப்பதற்கு அனுமதியில்லை. மற்ற சுறாக்களை உணவுக்காகப் பிடிக்கலாம்," என்கிறார், இந்திய காட்டுயிர் குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர்.
பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சுறாக்களின் துடுப்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. துடுப்பை வெட்டிவிட்டால் அது தடை செய்யப்பட்டதா, இல்லையா என்பதை எளிதில் கண்டறிய முடியாது" என்கிறார்.
மேலும், "அரியவகை சுறாக்கள் தவிர்த்து மற்ற சுறா மீன்களைப் பிடிப்பது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அதன் துடுப்பு இங்கு கழிவாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால், உலக சந்தையில் அதற்கான வரவேற்பு அதிகம்." என்றும் குறிப்பிட்டார் அந்த அதிகாரி.
ஹாங்காங் மூலமாக உலகம் முழுவதும் இவை செல்வதாகக் கூறும் அவர், "கடந்த வாரம் சென்னை விமான நிலையத்தில் ஒருவர் பிடிபட்டார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுறா துடுப்புகள் பறிமுதல் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவாகியுள்ளன." என்கிறார்.
சட்டவிரோத சுறா வர்த்தகம் என்பது இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் சுறாக்களுக்கு கடும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளதாகக் கூறும் உலக காட்டுயிர் நிதியம், "போதுமான கண்காணிப்பு வழிமுறைகள் இல்லாததால், இந்த விஷயத்தில் சட்டபூர்வமான மற்றும் சட்டத்திற்கு விரோதமான வர்த்தகத்தை வேறுபடுத்துவது சவாலானதாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அரிய வகை சுறா மீன்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து மீனவர்கள் மத்தியில் ஓரளவு விழிப்புணர்வு உள்ளதாகக் கூறுகிறார், ஏஐடியூசி மீனவர் சங்கத்தின் தேசியத் தலைவர் செந்தில்வேல்.
ஆனால், அதையும் மீறி சுறாவை வெட்டி விற்பனை செய்த சம்பவம், சென்னையில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்துள்ளது.
சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் சுறாக்களை வெட்டி மீனவர்கள் சிலர் விற்பது தொடர்பான காணொளி ஒன்று வெளியானது. அது தடைசெய்யப்பட்ட கொம்பன் சுறா (Hammerhead shark) என்பது தெரிய வந்தது.
காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை 2இன்கீழ் பட்டியலிடப்பட்ட ஒன்றாக இது உள்ளது. "தடை செய்யப்பட்ட உயிரினத்தைப் பிடிப்பதும் விற்பனை செய்வதும் சட்டவிரோதம். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மீனவருக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டது" என்கிறார், பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய காட்டுயிர் குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரி.
ஆனால், இதுதொடர்பான விவரங்களை பிபிசி தமிழால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை.
சுறா துடுப்புகளைக் கடத்தும் நபர்கள் மீது காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தின்படி போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறுகிறார், இந்திய அரசின் காட்டுயிர் குற்றத் தடுப்புப் பிரிவினுடைய தென்மண்டல துணை இயக்குநர் தேன்மொழி.
"குற்றங்களைத் தடுப்பது தொடர்பாக மாநில வனத்துறையுடன் இணைந்து செயல்படுகிறோம். கடத்தல் பின்னணி, எதற்காகக் கடத்தினார்கள் என்பது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது" என்று மட்டும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
'12 ஆண்டுகளில் 16 ஆயிரம் கிலோ' - உலக காட்டுயிர் நிதியம்
உலக காட்டுயிர் நிதியம் மற்றும் அதனுடனான கூட்டாண்மையில் செயல்பட்டு வரும் சட்டவிரோத காட்டுயிர் வர்த்தகங்களைக் கண்காணித்து வரும் அமைப்பான டிராஃபிக், இணைந்து கடந்த 2024ஆம் ஆண்டு சுறா துடுப்பு தொடர்பாகச் சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2010 ஜனவரி முதல் டிசம்பர் 2022 டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 16 ஆயிரம் கிலோ சுறா துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் கணிசமான அளவு சுறாவின் குருத்தெலும்புகளும் (cartilage) பற்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், "சட்டவிரோத சுறா துடுப்பு பிடிபட்ட மாநிலங்களில் தமிழ்நாடு பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 65 சதவிகிதம் அளவுக்கு சுறா துடுப்புகள் பிடிபட்டுள்ளன." என்று உலக காட்டுயிர் நிதியம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டைத் தொடர்ந்து கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சுறா துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை சிங்கப்பூர், ஹாங்காங், இலங்கை, சீனா ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
உணவாக உட்கொள்வது மட்டுமின்றி தோல் பொருட்கள், எண்ணெய், வைட்டமின் ஏ மூலமாக அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு, மருந்து தயாரிப்பு ஆகியவற்றுக்கு சுறாவின் உடல் பாகங்கள் பயன்படுவதாகவும் இதுகுறித்த அறிவிப்பில் டிராஃபிக் அமைப்பின் இந்தியாவுக்கான இணை இயக்குநர் முனைவர் மெர்வின் ஃபெர்னாண்டஸ் கூறியுள்ளார்.
அதேநேரம், "சூழலியலுக்கு சுறாக்கள் மிகவும் முக்கியமானவை. ஆனால், அவை முதன்மையாக வேட்டையாடப்படுகிறது. அதிகமான மீன்பிடித்தல் காரணமாக அவை அழியும் அபாயத்தில் உள்ளது." என்றும் உலக காட்டுயிர் நிதியம் எச்சரித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு